privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புதலைப்புச் செய்திராஜீவ் கொலை வழக்கில் எழுவரை விடுதலை செய் ! சீர்காழி மக்கள் அதிகாரம் தோழர்களை மிரட்டும்...

ராஜீவ் கொலை வழக்கில் எழுவரை விடுதலை செய் ! சீர்காழி மக்கள் அதிகாரம் தோழர்களை மிரட்டும் போலீசு !

சீர்காழி மக்கள் அதிகாரம் தோழர்களைக் கடத்திக் கைது செய்ய விரட்டும் போலீசு ! இராஜீவ் காந்தி கொலை வழக்கில் பொய்க்குற்றச்சாட்டில் தண்டனை பெற்ற எழுவரை விடுதலை செய்ய மத்திய அரசு மறுப்பு !

-

பத்திரிகை செய்தி

17-06-2018

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருபத்தேழு ஆண்டுகளாக ஆயுள்தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசு அனுப்பி இருந்த கோரிக்கை மனுவை மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின்பேரில் குடியரசுத் தலைவர் நிராகரித்துள்ளார்.

ராஜீவ் கொலையில் குற்றவாளிகளை மன்னித்து விட்டதாக ராகுல்காந்தி கூறிவிட்டார். அரசுகள் விரும்பினால் குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவுகள் 432, 433 ஆகியவற்றின்படி இவர்களை விடுதலை செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் சொல்லிவிட்டது. ராஜீவ் கொலை வழக்கில் தீர்ப்பு எழுதிய ஓய்வு பெற்ற நீதிபதி தாமஸ், இவர்களை விடுவிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார். வழக்கு விசாரணையை மேற்கொண்ட கார்த்திகேயனும் கருணை அடிப்படையில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டால் மகிழ்ச்சி எனத் தெரிவித்துள்ளார். எட்டு கோடி தமிழ்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றமும் ஒருமித்த குரலில் எழுவரின் விடுதலைக்காகத் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. இத்தனை பேரும் 27 ஆண்டுகள் சிறையில் வாடிய தமிழர்களை விடுவிக்கக் கோரும்போது குடியரசுத்தலைவர் கருணை மனுவை நிராகரிக்கிறார். அதற்கு முழுவதும் ஆளும் பாஜகவின் தமிழர் மீதான வெஞ்சினமே காரணமாகும்.

இந்த ஏழு பேரில் ஒருவரான பேரறிவாளன் கொடுத்திருந்த வாக்குமூலத்தில் முக்கியமான விஷயமான, ‘பேட்டரி எதற்காக வாங்க சொல்லப்பட்டது என்பது எனக்குத் தெரியாது” எனக் கூறிய அவரின் வாக்குமூலத்தை எழுதாமல் விட்டு விட்டேன் என்று அப்போதைய விசாரணை அதிகாரி தியாகராஜன் வெளிப்படையாக ஒப்புக் கொண்டு, தன்னுடைய தவறால், பேரறிவாளன் தண்டனை அனுபவிப்பதை வாக்குமூலமாகவும் தந்துவிட்டார். தண்டனைக்கு அடிப்படையே தகர்ந்துவிட்ட இந்த வழக்கில் 27 ஆண்டுகள் தண்டனை அனுபவித்து விட்ட பின்னரும் இவர்களை “முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் சிக்கியவர்களை எந்தக் காரணத்தைக் கொண்டும் சுதந்திரமாக நடமாட விட முடியாது” என எந்த ஒரு நாகரிக அரசும் அறிவிக்காது. ஆனால் ஆளும் மோடி அரசு இதை சொல்கிறதென்றால் அதற்கு தமிழ் மக்கள் மீதான வெறுப்பே காரணமாகும்.

தமிழகத்தை நாசமாக்கும் மீத்தேன், நியூட்ரினோ, ஹைட்ரோகார்பன், அணு உலை போன்ற  அழிவுத் திட்டங்களைத் திணிப்பதும், தமிழர்களை ஒடுக்க நீட், சம்ஸ்கிருத திணிப்பு என எல்லா வகைகளிலும் வஞ்சிக்கும் மத்தியில் ஆளும் பாஜக கும்பல் காவிரியில் வெளிப்படையாகவே தமிழகத்தை வஞ்சித்தது. இந்தியையும் சமஸ்கிருதத்தையும் ஏற்றுக் கொள்ளாத சுயமரியாதை, பகுத்தறிவு பாரம்பரியம் கொண்ட தமிழ் மீதான, தமிழர் மீதான வெறுப்பினைத்தான்  தற்போது எழுவர் விடுதலையை மறுப்பதன் மூலம் காட்டியுள்ளது.

காந்தி படுகொலையில் தொடர்புடைய கோட்சேவின் தம்பி கோபால் கோட்சேவை பதினான்கு ஆண்டுகளிலேயே விடுதலை செய்து விட்டனர். மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் ஆறாண்டு தண்டனை பெற்ற  சினிமா நடிகர் சஞ்சய் தத் தண்டனைக் காலம் முடியும் முன்பே விடுவிக்கப்பட்டார்.  குஜராத்தில் முஸ்லிம்கள் படுகொலையில் பங்கெடுத்த அம்மாநில அமைச்சர் மாயா கோட்னானி உட்பட பல குற்றவாளிகள் சட்டப்படியே ஒவ்வொருவராக விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.

ஆனால் தமிழர் எழுவரை, அதுவும் கால் நூற்றாண்டுக்கும் மேலாகக் கம்பிகளுக்குப் பின்னே வாடும் இவர்களை விடுவிக்க மறுக்கும் அநீதியை ஏற்க மறுப்போம்.  இவர்களில் மூவருக்கு அரசு தூக்கிலிட தேதி குறித்தபோது தமிழகமே பொங்கி எழுந்து மக்கள் திரள் போராட்டங்களை நடத்தியது. அதன் காரணமாகத்தான் மூவரின் தூக்கு ரத்து செய்யப்பட்டது. ஒரு வாரத்துக்கும் மேல் ஒட்டு மொத்த தமிழகத்தையும் ஸ்தம்பிக்க வைத்தே நாம் ஜல்லிக்கட்டு உரிமையை சட்டமாக்கினோம். அதே பாதையில் பெருந்திரள் போராட்டம் ஒன்றை நடத்தி டில்லியின் தமிழர் மீதான வெறுப்பினால் முடங்கிப் போகும் எழுவர் விடுதலையை வென்றெடுப்போம்

*****

மக்கள் அதிகாரம்  தோழர் ரவியை கடத்தி பொய் வழக்கு போட புதுப்பட்டிணம் போலீசு திட்டம்.

டந்த 15-06-2018 அன்று காலை 9 மணியளவில் புதுப்பட்டிணம், மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த தோழர் ரவியின் வீட்டிற்கு 8க்கும் மேற்பட்ட புதுப்பட்டிணம் போலீசும், உளவுப்பிரிவு போலீசும் சென்றுள்ளனர். அவரது வீட்டில் உள்ளோரிடம் ரவி எங்கே எனக் கேட்டு, வந்தால் ஸ்டேசனுக்கு வரச்சொல் என உத்தரவிட்டு மிரட்டிச் சென்றுள்ளனர்.

ஒரு கொலைக்குற்றவாளியைத் தேடுவது போல போலீசும் அரசும் நடந்து கொள்வது, வேடிக்கையாக இருக்கிறது. உச்சநீதிமன்றம் பிடிக்கச் சொன்ன எஸ்.வி. சேகரை பிடிக்க வக்கில்லை. ஆனால், மக்கள் அதிகாரம் தோழர்களை விரட்டிப் பிடிப்பது தொடர்ந்து வருகிறது. கருப்புச் சட்டங்களைக் கொண்டு மக்கள் அதிகாரம் தோழர்களையும் போராடும் மக்களையும் அச்சுறுத்தி வருகிறது எடப்பாடி அரசு.

இந்த அரசு யாருக்காக இருக்கிறது என்பதை தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரத்திலும், சேலம் எட்டுவழிச்சாலை விவகாரத்திலும் மற்றும் பல்வேறு பிரச்சினைகளிலும், மக்கள் உற்று நோக்கி கவனித்து வருகின்றனர். அரசின் நரித் தந்திரங்களையும் மக்கள் அறிந்தே இருக்கிறார்கள். அரசின் இத்தகைய அச்சுறுத்தல்களுக்கும், அடக்குமுறைகளுக்கும் மக்கள் அதிகாரம் அமைப்போ, மக்களோ அஞ்சப் போவதில்லை.

தகவல்:
மக்கள் அதிகாரம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க