privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கபேரறிவாளன் தூக்கு – சிபிஐயின் பொய் பித்தலாட்டம் அம்பலம் !

பேரறிவாளன் தூக்கு – சிபிஐயின் பொய் பித்தலாட்டம் அம்பலம் !

-

ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் ஆரம்ப கட்ட விசாரணையின் போது கொடுத்த வாக்குமூலத்தின் சில பகுதிகளை தான் வேண்டுமென்றே பதிவு செய்யாமல் விட்டு விட்டதாகவும், முழுமையாக பதிவு செய்திருந்தால் வழக்கின் போக்கே மாறி இருக்கும் என்றும் இந்த வழக்கு விசாரணையில் பணியாற்றிய சி.பி.ஐ எஸ்.பி தியாகராஜன் தற்போது தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தை வைத்து தான் பேரறிவாளனுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பேரறிவாளன்
பேரறிவாளன்

உயிர்வலி என்ற ஆவணப்படத்திலும் அதன் பின் பல்வேறு பத்திரிகைகளுக்கும் பேட்டியளித்துள்ள தியாகராஜன், பேரறிவாளன் கொடுத்த வாக்குமூலத்தில் “தான் சிவராசனுக்கு பாட்டரி வாங்கித் தந்ததாகவும், ஆனால் அந்த பாட்டரிகளை எதற்காக வாங்கி வரச் சொன்னார் என்று தனக்குத் தெரியாது” என்று தெரிவித்ததாக கூறுகிறார். பேரறிவாளனின் வாக்குமூலத்தை அப்படியே பதிவு செய்தால் அது ஒப்புதல் வாக்குமூலமாக இல்லாமல் பேரறிவாளின் விடுதலை வாக்குமூலமாக அமைந்துவிடும் என்பதால் “எதற்காக வாங்கி வரச் சொன்னார் என்று தெரியாது” என்ற வாசகத்தை நீக்கிவிட்டதாக அந்த பேட்டிகளில் கூறுகிறார்.

வாக்குமூலத்தை ஆய்வு செய்து அதை ‘சரியானதாக’ மாற்றி அமைப்பது காவல் துறையின் தர்மம் என்று அவர் வாதாடுகிறார். குற்றவாளிகள் சொல்வதை வார்த்தைக்கு வார்த்தை வாக்குமூலமாக பதிவு செய்வது காவல்துறையின் வேலை அல்ல என்றும் கூறுகிறார். தாங்கள் கண்டறிந்த ‘உண்மையான’ முடிவை பலப்படுத்தும் வகையில் வாக்குமூலத்தை மாற்றியமைப்பது என்ற வழமையான நடவடிக்கையின் அடிப்படையில் பேரறிவாளனின் வாக்குமூலத்தை மாற்றி பதிவு செய்கிறார், பின்னர் ஆறு மாதங்களுக்குப் பின்னர் குற்றப் பத்திரிகை தாக்குதல் செய்யபட்ட  பிறகு சிவராசனின் வயர்லெஸ் கைப்பற்றப்படுகிறது, அதில் இந்தக் கொலை குறித்து யாருக்கும் தெரியாது என்று அவர் பேசியது பதிவானதை கேட்ட பிறகுதான் பேரறிவாளன் கூறியது உண்மை என்று தெரிய வந்ததாக கூறுகிறார். அதனால் தான் தெரிந்தே தவறு செய்யவில்லை என்கிறார்.

தான் சரியாக பதிவு செய்திருந்தால் இது ஒப்புதல் வாக்குமூலமாக இருந்திருக்காது என்றும் எனவே அது நீதிபதிக்கு அனுப்பப்பட்டிருக்காது என்றும் அதன் அடிப்படையில் இவர்களுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள இந்த மரண தண்டனை வழங்கப்பட்டிருக்க வாய்பில்லை என்றும் தெரிவிக்கிறார். மேலும் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தவர்கள் பேரறிவாளன் பாட்டரி வாங்கிய காரணத்தை அறிவார் என்பதாக தவறாக மொழி பெயர்த்து விட்டார்கள் என்றும் கூறுகிறார். இவர்களது மொழி விளையாட்டிற்கு ஒரு உயிர் பலியாகப் போகிறது என்ற குறைந்த பட்ச மனிதாபிமானம் கூட இந்த போலீசு கூட்டத்திற்கு இல்லை என்பது தெளிவு.

தியாகராஜன்
வாக்குமூலத்தை மாற்றி எழுதிய தியாகராஜன்.

தற்போதும் கூட பேரறிவாளனது வாக்குமூலத்தை வைத்து மட்டும் மரணதண்டனை வழங்கப்படவில்லை. மற்ற சாட்சிகள், நிரூபிக்கப்பட்ட‘சதித் திட்டங்கள், காரணமாகவும்தான் தூக்கு விதிக்கப்பட்டிருக்கிறது என்று கார்த்திகேயன் உள்ளிட்ட பல அரசு தரப்பு ஆதரவாளர்கள் கூறுகின்றனர். எனில் பேரறிவாளனது வாக்குமூலத்தை பொய்யாக தயார் செய்ய வேண்டிய அவசியம் என்ன? மற்ற சாட்சிகள் வலுவாக இருக்கும் பட்சத்தில் இந்த அழுகுணி ஆட்டம் ஏன்? இதிலிருந்தே இவர்களது வழக்கு முழுமையும் பொய்கள், சதிகளால் அரசால் திட்டமிடப்பட்டு செய்யப்பட்டது என்பதையும், விசாரணை என்பதே எவ்வளவு மோசடியானது என்பதை அம்பலப்படுத்துவதாக உள்ளது.

இந்த வழக்கு தடா சட்டத்ததின் கீழ் விசாரிக்கப்பட்டு,  தடா சிறப்பு நீதிமன்றம் 26 பேருக்கு மரண தண்டனையும் 19 பேருக்கு கடுங்காவல் தண்டனையும் கொடுத்தது. தடா சட்டத்தின் கீழ் எஸ்.பி அந்தஸ்து உடைய போலீசு அதிகாரி முன்பு அளிக்க்ப்படும் ஒப்புதல் வாக்குமூலம் நீதிமன்ற ஆதாரமாக ஏற்றுக்கொள்ளப்படும். தடா வழக்கு விசாரணை அதிகாரிகள் எத்தகைய முறைகளை கையண்டு இந்த வாக்குமூலங்களை பெற்றார்கள் என்பது ஏற்கனவே அம்பலமாகி இருக்கிறது.

குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கு பதில் தன் கையில் கிடைத்தவனை சித்திரவதை செய்து குற்றவாளி என ஒப்புக்கொள்ள வைப்பதுதான் காவல் துறையின் ‘அறம்’. அதன்படி பலர் குற்றத்தை ஒப்புக் கொள்ள வைக்கப்பட்டன்ர். ராஜீவ் கொலையில் சம்பந்தமுள்ளவர்கள் எனக் கோர்ட்டில் நிறுத்தப்பட்டவர்கள் தவிர பலர் சி.பி.ஐ.யின் ‘மல்லிகை’ மாளிகையில் வைத்து சித்திரவதை செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். தடா போன்ற கொடிய அடக்குமுறை சட்டத்தை கையில் வைத்துக் கொண்டு அவர்கள் ஆடிய ஆட்டத்தை அவர்களின் அதிகாரத் திமிரை அன்றைய புதிய ஜனநாயகம் பின்வருமாறு பதிவுசெய்திருக்கிறது.

“அவர்களது அடையாள அட்டையை மூக்கு நுனியிலே முட்டுமாறு நீட்டும் போது எவரானாலும் காலோடு மூத்திரம் பெய்துவிட வேண்டும் என்கிற அதிகாரத் திமிரோடு அலைவதைக் கண்டோம்.”

ராஜீவ் கொலைக்குப் பிறகு அதைக் காட்டி ஆட்சிக்கு வந்த ஜெயா-வாழப்பாடி-பார்ப்பன கும்பல் அடக்குமுறையை தீவிரமாக நடத்தியது. சிவராசன் -சுபா சாவுக்கு பழி தீர்க்க புலிகள் வந்துள்ளார்கள், குண்டு வைக்கப் போகிறார்கள் என்று பத்திரிகைகள் பீதியூட்டின. இன்றைய ஈழத்தாய் அன்று  ஈழ அகதிகளை நாடுகடத்தினார். இதை எதிர்த்தவர்கள் மீது கொடிய அடக்குமுறை சட்டங்கள் பாய்ச்சப்பட்டன. ஈழ ஆதரவு என்று பேசியவர்கள் மீது அடக்குமுறை பாய்ந்தது.

பேரறிவாளன்
பேரறிவாளன்

சுவரொட்டி, தெருமுனைக் கூட்டம் உள்ளிட்டவை கூட தண்டனைக்கு உரிய குற்றமாகின. மக்கள் கலை இலக்கிய கழக தோழர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம், தடா உள்ளிட்ட அடக்குமுறை சட்டங்கள் பாய்ந்தன. ஈழவிடுதலை பாடலை டேப்ரிக்கார்டரில் ஒலிபரப்பியதாக திருச்சியில் ம.க.இ.க வினர் கைது செய்யப்பட்டனர். போஸ்டர் ஒட்டியது, பிரச்சரம் செய்தது என்ற வகையில் பல் தோழர்கள் சிறை வைக்கப்பட்டனர். “இவர்கள் ராஜீவுக்காக அழ மாட்டார்கள்“,”ராஜீவ் கொலை பழிக்குப்பழிதான்“, “ஒண்டவந்த பிடாரியே ஈழத்தமிழரை விரட்டாதே” என்று பகிரங்கமாக எழுதிய புதிய ஜனநாயம், புதிய கலாச்சாரம் பத்திரிகைகளின் மீது அடக்குமுறை ஏவப்பட்டது. அச்சகத்தாரை மிரட்டி பு.ஜ வெளிவருவதை தடுக்க்க முயன்றது அரசு. ஒரு மாதம் மட்டுமே பு.ஜ வெளிவராமல் தடுக்க முடிந்தது.

ஈழ ஆதரவு சக்திகள் மீதே இவ்வளவு அடக்கு முறை என்றால் ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மீது செலுத்தப்பட்ட அடக்குமுறை பயங்கரமானது. அவர்கள் மல்லிகை மாளிகையில் வைத்து கொடிய சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு  வாக்குமூலங்கள் பெறப்பட்டன. இந்த வாக்குமூலங்களை ஆதாரமாக கொண்டே அனைவருக்கும் தண்டனை விதிக்கப்பட்டது.

உச்சநீதிமன்ற மேல்முறையீட்டில் இவர்கள் தடா சட்டத்தின் கீழ் எவ்வித குற்றமும் புரியவில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு கூறியது. ராஜீவ் கொலை பயங்கரவாதத்தை நோக்கமாக கொண்டிருக்கவில்லை என்பதால் தடா பொருந்தாது என்று தீர்ப்பு கூறியது. (இருப்பினும், இன்று வரை ராஜீவ் இறந்த நாளை பயங்கரவாத எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கிறது அரசு) ஆயினும் தடா சட்டத்தின் கீழ் பெறப்பட்ட வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு  நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய நான்கு பேருக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது. மற்றவர்களின் தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. நளினியின் மரண தண்டனை தமிழ்நாடு ஆளுநரால் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரின் கருணை மனுவை அப்போதைய ஜனாதிபதி பிரதீபா பட்டீல் 2011-ம் ஆண்டு நிராகரித்தார். அதைத் தொடர்ந்து மூவர் தூக்குக்கு எதிராக தமிழ்நாட்டில் பெருமளவிலான மக்கள் போராட்டங்கள் நடந்தன. ‘கருணை மனுவின் மீது முடிவெடுப்பதில் நீண்ட தாமதம் ஏற்பட்டதாலும், ஏற்கனவே 20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் கழித்து விட்டதாலும் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும்’ என்ற வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தண்டனையை நிறைவேற்ற இடைக்காலத் தடை விதித்தது. இதே மாதிரியான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருவதால் மூவர் தூக்கு தொடர்பான வழக்கும் உச்சநீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு நடைபெறுகிறது.

இந்த பின்னணியில் சிபிஐ எஸ்.பி தியாகராஜனின் இந்த வாக்குமூலம் முக்கியத்துவம் பெறுகிறது. ராஜீவ் கொலைக்கு பழி வாங்கும் நோக்கத்தோடு கையில் கிடைத்தவர்களை எல்லாம் குதறிய வேட்டை நாயாக சி.பி.ஐ யின் சிறப்பு புலனாய்வுக் குழு செயல்பட்டதும் அதன் விசாரணையின் யோக்கியதையும் மேலும் ஒரு முறை அம்பலமாகி இருக்கிறது.

மேலும் ‘தூக்குத் தண்டனை கூடாது’ என்று அரசியலற்ற முழக்கம் பின்னுக்குத் தள்ளப்பட வேண்டியதன் தேவையும் “பேரறிவாளனுக்கு இழைக்கப்பட்டது அநீதி, அதற்கு நியாயம் வேண்டும்” என்ற கோரிக்கையின் அவசியமும் முன்னுக்கு வந்துள்ளது. அப்படியானால், ‘சுபாவும், தனுவும், சிவராசனும் பயங்கரவாதிகளா? அவர்கள் கைது செய்யப்பட்டிருந்தால் தூக்கில் போடலாமா?’ என்பன போன்ற கேள்விகள் எழுகின்றன. உண்மையில் அவர்களும் தண்டிக்கப் படவேண்டியவர்கள் இல்லை. தற்போது தூக்கு மேடையில் நிற்கும் மூவரும் நிரபராதிகள் என்பதோடு ராஜீவ் கொலைக்கான அரசியல் நியாயத்தையும் மக்கள் மத்தியில் பேச வேண்டியிருக்கிறது. இந்திய-இலங்கை ‘அமைதி’ ஒப்பந்தம், அதைத் தொடர்ந்து இந்திய அமைதிப் படை இழைத்த போர்க் குற்றம் குறித்தும் பேச வேண்டிய தேவை இருக்கிறது. முள்ளிவாய்க்காலில் அனைத்தையும் முடித்துப் புதைக்கும் வரையில் இலங்கை இராணுவத்துக்கு இந்திய அரசு துணை நின்றது. இன்னமும் நிற்கிறது.

ராஜீவ் கொலை வழக்கில் இத்தகைய உண்மைகள் பேசப்பட வேண்டும், வழக்காக விசாரணை செய்யப்பட வேண்டும். ஆகவே இந்த வழக்கு வெறுமனே கிரிமினல் வழக்காக இல்லாமல் அரசியல் வழக்காக விசாரிக்கப்பட்டிருக்க வேண்டும். அதைச் செய்தால் இந்த வழக்கில் தற்போது தண்டிக்கப்பட்டவர்கள் யாரும் தண்டிக்கப்பட முடியாது. மாறாக இந்திய அரசு, காங்கிரசு கட்சி, இராணுவம், முதலானோர் கூண்டில் ஏறவேண்டியிருக்கும். அதை மறைக்கத்தான் அப்பாவிகளை தூக்கிலேற்ற அரசு துடிக்கிறது.

தற்போதும் தியாகராஜனது ஒப்புதல் வாக்கு மூலத்தை ஏற்று தண்டனையை நீதிமன்றம் ரத்து செய்யும் என்று சொல்ல முடியாது.  அதற்கும் சட்ட ரீதியாக ஏதாவது ஜால்சாப்பு சொல்வார்கள். நீதி தவறிய சட்டத்தையும், அநீதி செய்யும் அரசையும் வழிக்கு கொண்டுவரும் மக்கள் போராட்டங்கள் தான் தூக்குத் தண்டனையிலிருந்து இந்த மூவரையும் காக்க வல்லது.