28.10.2022

புதிய மோட்டார் வாகன சட்டம்: ‘சட்டப்படியான’ வழிப்பறி!

பத்திரிகை செய்தி!

ன்றிய அரசின் திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி, புதிய அபராத கட்டணங்களை வசூலிப்பதற்கான அரசாணையை தமிழக அரசு கடந்த 19 ஆம் தேதி வெளியிட்டது.

அதில் முதல் சாலை விதிமீறலுக்கான அபராத கட்டணம், அதே விதிமீறலை மீண்டும் செய்தால் அதற்கு கூடுதல் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹெல்மெட் அணியாதவர்களுக்கு ரூ.100-லிருந்து ரூ.1000 அபராதம், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதற்கு ரூ.10,000 அபராதம் என அறிவித்துள்ளது. லைசென்சு இல்லாமல் வாகனங்களை ஓட்டினால் ரூ.500-லிருந்து ரூ.5000-ஆகவும், போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தினால் ரூ.100-லிருந்து ரூ.500-ஆகவும் அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டினால் ஆயிரம் அபராதமும், இரண்டாவது அதேபோல் ஈடுபடுவோருக்கும் ரூ.10,000 அபராதமும் விதிக்கப்படும். மேலும் ஹெல்மெட் மட்டும் சீருடை அணியாமல் வாகனம் ஓட்டினால் ரூ.1000, இராண்டாவது முறை ரூ.1500, மற்றவர்களை அச்சுறுத்தும் வகையில் பைக் ரேஸில் ஈடுபடுவதற்கு இரண்டாவது முறை ரூ.10,000-யும், சரக்குகளை ஏற்றிச் செல்வதற்கு இரண்டாவது முறை ரூ.1500-யும், மதுபோதையில் வாகனங்களை ஓட்டி செல்பவர்களுக்கும், பின்னால் அமர்ந்து செல்வோர்களுக்கும் தலா ரூ.10,000 அபராதம் விதிப்பு அமலுக்கு வந்ததுள்ளது.

படிக்க : கோவை கார் எரிவாயு உருளை வெடிப்பு வழக்கு | மக்கள் அதிகாரம் கண்டன அறிக்கை!

சென்னையில் ஹெல்மெட் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகளிடம் ரூ.1000 அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிகளை மீறியதாக மக்கள் மீது நூற்றுக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பூந்தமல்லியில் இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு வந்த நபர் ஹெல்மெட் அணியவில்லை. அவரிடம் பணமில்லாத காரணத்தால் லிப்ட் கொடுத்த நபரிடம் ரூ.1000 வசூல் செய்துள்ளது போக்குவரத்து காவல்துறை. பின்னால் உட்கார்ந்து வரும் நபருக்கும் அபராதம் விதிப்பது அநியாயமானதாகும்.

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை ஒட்டி மூன்று நாட்களில் 708 கோடிக்கு டாஸ்மாக்கில் சாராயம் விற்பனை. ஆனால் குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் 10,000 அபராதம். காலையில் 6 மணிக்கே பாரை திறந்து வைத்து சாராயம் விற்க அனுமதிக்கிறது அரசு. டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்துவிட்டு தெருமுனையில் நின்று அபராதம் விதிப்பது கேலிக்கூத்தாகும்.

2019 ஆம் ஆண்டில் ஒன்றிய அரசு கொண்டவந்த புதிய மோட்டார் வாகன சட்டத்தை அப்போது எதிர்த்த திமுக, இன்று புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்த அரசாணை பிறப்பித்திருக்கிறது. ஆட்சிக்கு வருவதற்குமுன் மக்கள் நலனில் இருந்து பேசுவதும், ஆட்சிக்கு வந்தபின்பு மக்கள் நலனை அடகு வைப்பதும் அதிகாரத்தில் இருப்பவர்களின் வாடிக்கையாகிவிட்டது.

இப்படிப்பட்ட கடுமையான சட்டங்கள், மேலும் மேலும் போக்குவரத்து அதிகாரிகளின் கையில் அதிகாரத்தை குவித்து மக்களை கொள்ளை அடிக்கவே பயன்படும். ஏற்கனவே மக்களைவிட தங்களை மேலாக கருதி கொண்டு அதிகார திமிரோடு நடந்தும் கொள்ளும் அதிகாரிகளுக்கு இது ஒரு கூடுதல் வாய்ப்பாகவே அமையும்.

ஏற்கனவே இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு வேலை இழந்து கொஞ்சம் கொஞ்சமாக தேறிவரும் தமிழக மக்களுக்கு பேரிடியாய் இந்த சட்டம் வந்திருக்கிறது. பொது மக்களை பாதிக்கும் அடக்குமுறையை ஏவும், புதிய மோட்டார் வாகன சட்டத்தை தமிழக அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டுமென மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

தோழமையுடன்
தோழர் அமிர்தா,
மாநிலப் பொருளாளர்,
மக்கள் அதிகாரம்.
தமிழ்நாடு – புதுவை.
தொடர்புக்கு ;- 99623 66321.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க