27.10.2022

கோவை கார் எரிவாயு உருளை வெடிப்பு வழக்கு!
தமிழ்நாடு அரசே! NIA பரிந்துரையை திரும்பப் பெறு!

அசம்பாவிதங்களை பயன்படுத்தி கோவையை மதக்கலவர பூமியாக்க துடிக்கும் அண்ணாமலை உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி.யினரை கைது செய்!

கண்டன அறிக்கை!

கடந்த 23 ஆம் தேதி அதிகாலை கோவை – உக்கடம், கோட்டைமேடு பகுதியில் கார் ஒன்றில் எரிவாயு உருளை வெடித்ததில், அதில் பயணித்த ஜமேஷ் முபின் என்ற இளைஞர் பலியானார்.

இதுதொடர்பான ஜமேஷ் முபின் வீட்டில் வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படும் மூலப் பொருட்கள் இருந்ததாகவும், அதற்கு உதவிய அவருடைய நண்பர்கள் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டதாகவும் போலீஸ் தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பான முழுவிசாரணை முடியும் முன் எந்த ஒரு முழுமையான கருத்தையும் சொல்ல முடியாது என்ற சூழ்நிலை உள்ளது. ஏனெனில், உண்மை முழுவதும் தெரிவதற்கு முன் தெரிவிக்கப்படும் எந்த ஒரு கருத்தும் திட்டமிட்டு மொத்த முஸ்லிம் மக்களையும் குற்றவாளியாக்குவதற்கே பயன்படும்.

படிக்க : ஒடிசா : சட்டவிரோதமாக நிலத்தை கையகப்படுத்தும் டால்மியா! பழங்குடி மக்கள் போராட்டம்!

தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கட்சிகள் பொறுப்புடன் நடந்து கொண்டிருக்கும் இச்சூழலில், இச்சம்பவத்தை பயன்படுத்திக் கொண்டு தமிழ்நாட்டில் மதக் கலவரத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்துவதற்கு இந்துமதவெறி பாசிச சக்திகள் தொடர்ச்சியாக –வழக்கம்போல- முயற்சி செய்கின்றன.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு பேட்டியளித்த பி.ஜே.பி.யின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டு போலீசின் உளவுப் பிரிவில் குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இருப்பதால் இவ்வழக்கு சரியாக நடக்காது என்றும், தமிழ்நாடு அரசுக்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும் இவ்வழக்கு தொடர்பான புலன் விசாரணையில் போலீசுக்கு தெரியாத பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார்.

பில்கிஸ் பானுவை பாலியல் வன்புணர்ச்சி செய்த குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்ட விவகாரம் முதல் பெட்ரோல், எரிபொருள் சிலிண்டர் விலை உயர்வு, கள்ளக்குறிச்சி விவகாரம் வரை வாயை மூடிக்கொண்டு இருந்த அண்ணாமலை தற்போது சாக்குக் கிடைத்துவிட்டது என்று தமிழ்நாட்டில் மதக்கலவரம் ஏற்படுத்துவதற்கு அனைத்து தகிடுதத்தங்களையும் செய்து வருகிறார்.

வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ உள்ளிட்டோர் இவ்வழக்கை NIA-வுக்கு மாற்ற வேண்டும் என்று தொடர்ச்சியாக கூறிவந்தனர்.

இந்த நிலையில் நேற்றைய தினம்(ஆக.26) போலீஸ் உயரதிகாரிகள் மற்றும் தலைமைச் செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்ட கூட்டத்தை கூட்டிய தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இவ்வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்ற பரிந்துரை செய்திருப்பதாகவும், இஸ்லாமிய மக்கள் அடர்த்தியாக வாழக்கூடிய குறிப்பிட்ட பகுதிகளில் மேலும் 3 போலீஸ் நிலையங்களை அமைக்கவும் தமிழ்நாட்டில் இதுபோன்ற அசம்பாவிதங்களை தவிர்க்க தமிழ்நாடு போலீசில் சிறப்புப்படை அமைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்துமதவெறி பாசிஸ்டு அமித்ஷாவின் கூலிப்படையாக செயல்படும் தேசிய புலனாய்வு முகமை, தான் விசாரணை செய்த பல்வேறு வழக்குகளின் மூலம் இஸ்லாமியர்களுக்கும் இஸ்லாமிய சமூகத்துக்கும் எதிராக செயல்பட்டு இருப்பதை நாம் அறிவோம். அப்படிப்பட்ட ஒரு அமைப்பிடம் இந்த வழக்கை அளித்தால் நேர்மையான முறையில் எந்த வகையிலும் விசாரணை நடத்துவதற்கான வாய்ப்பு இல்லை என்பதை மக்கள் அதிகாரம் தெரிவித்துக் கொள்கிறது.

படிக்க : கிருஷ்ணகிரி மாவட்டம் KATERRA  நிறுவனம் – தொழிலாளிகள் மீதான  கொடூரச் சுரண்டல் – தொழிலாளிகள் உள்ளிருப்புப் போராட்டம்!

இஸ்லாமிய மக்கள் அடர்த்தியாக வாழக்கூடிய பகுதிகளில் மூன்று போலீசு நிலையங்களை அமைப்பது, சிறப்பு காவல் படை அமைப்பதன் மூலமாக மட்டுமே பயங்கரவாத செயல்களை ஒழித்துவிட முடியாது. மேற்கண்ட நடவடிக்கைகள் மேலும் சிறுபான்மை மக்களை குற்றவாளியாக சித்தரிப்பதிலேயே கொண்டுபோய் முடியும்.

ஆகவே, தமிழ்நாட்டு முதலமைச்சர் இவ்வழக்கு தொடர்பாக நேற்றைய தினம்(ஆக.26) அறிவித்த நடவடிக்கைகளை திரும்பப்பெற வேண்டும் என்றும் மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.

மேலும் இவ்வழக்கை தமிழ்நாடு போலீஸ் விசாரிப்பதுடன் பிரச்சினையை பயன்படுத்தி தமிழ்நாட்டில் மதக்கலவரம் நடத்திடவும் துணிந்துள்ள அண்ணாமலை உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி பாசிஸ்டுகளை கைதுசெய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும் மேலும் பி.ஜே.பி அறிவித்துள்ள பந்த்-ஐ மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்,
தோழர் சி.வெற்றிவேல்செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
தொடர்புக்கு ;- 99623 66321.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க