பிரபல தகவல் சரிபார்க்கும் தளமான “ஆல்ட் நியூஸ்” இணை நிறுவனர் முகமது ஜுபைர் (Mohammed Zubair), உத்தரப்பிரதேச இந்துத்துவா சாமியார் நர்சிங்கானந்த் முகமது நபி குறித்து அவதூறாகப் பேசிய காணொளியைத் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். முஸ்லீம் வெறுப்பை வெளிப்படுத்தும் வகையிலான நர்சிங்கானந்தின் பேச்சை “வெறுப்பு பேச்சு” என ஜுபைர் குறிப்பிட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து, உதித்த தியாகி (Udita Tyagi) என்பவர் கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி அளித்த புகாரின் பேரில், காசியாபாத் போலீசு முகமது ஜுபைர் மீது கடந்த அக்டோபர் 8-ஆம் தேதி, பி.என்.எஸ் 196, 228, 299, 356(3) மற்றும் 351(2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி முகமது ஜுபைர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். அப்போது, முகமது ஜுபைர் மீது BNS சட்டப் பிரிவு 152 (இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு ஆபத்தை விளைவிக்கும் செயல்கள்) மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 66 ஆகிய 2 பிரிவுகளும் சேர்க்கப்பட்டுள்ளதாக உத்தரப்பிரதேச போலீசு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது. BNS சட்டப் பிரிவு 152 என்பது இ.பி.கோ 124A என்ற தேசத் துரோகத்துக்கான சட்டப் பிரிவின் புதிய வடிவம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதைத் தொடர்ந்து பத்திரிகைகள் மற்றும் அரசியல் தலைவர்கள் முகமது ஜுபைருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகின்றனர். ஜுபைருக்கு ஆதரவு தெரிவித்து திரைக்கலைஞர் பிரகாஷ்ராஜ் தனது எக்ஸ் பக்கத்தில், “ஜுபைரை நான் ஆதரிக்கிறேன். #IStandWithZubair பேச்சு சுதந்திரம் மற்றும் ஊடக சுதந்திரம் ஆகியவற்றுக்கு நீங்களும் ஆதரவு கொடுக்க வேண்டுகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
அதேபோல், பிரஸ் கிளப் ஆஃப் இந்தியா நவம்பர் 28 அன்று உத்தரப்பிரதேச போலீசின் நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது.
படிக்க: Alt News இணையதளத்தை முடக்கத் துடிக்கும் சங் பரிவார கும்பல்!
அக்டோபர் 3 ஆம் தேதி ஜுபைர் தனது முதல் ட்வீட்டில், செப்டம்பர் 29 அன்று காசியாபாத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் தஸ்னா தேவி கோயிலின் பூசாரி யதி நரசிங்கானந்த், முகமது நபி குறித்துப் பேசிய காணொளியைப் பதிவு செய்திருந்தார். நபியின் உருவ பொம்மைகளை எரிக்குமாறு மக்களிடையே வெறுக்கத்தக்க வகையில் வெறுப்பு பேச்சை அவர் பேசியிருந்ததைப் பதிவிட்டிருந்தார் ஜுபைர்.
ஜுபைர் தனது இரண்டாவது ட்வீட்டில், அரசியலில் உள்ள பெண்கள் குறித்து, குறிப்பாக அரசியலில் உள்ள பா.ஜ.க பெண் தலைவர்கள் குறித்து 2021 ஆம் ஆண்டு யதி நரசிங்கானந்த் பேசி இருந்த மோசமான கருத்துக்களின் காணொளியைப் பதிவு செய்திருந்தார். யதி நரசிங்கானந்தை ஆதரிக்கும் நபர்களுக்குப் பதிலளிக்கும் வகையில் அந்த காணொளியை அவர் பதிவு செய்திருந்தார்.
மேலும், 2022 ஆம் ஆண்டில் யதி நரசிங்கானந்த் பிருத்விராஜ் சவானைப் பற்றி இழிவான கருத்துக்களைக் கூறியிருந்த காணொளியையும் ஜுபைர் பதிவு செய்திருந்தார்.
இவைதான் உத்தரப்பிரதேச யோகி ஆதித்யநாத் அரசைப் பொறுத்த வரையில் தேசத் துரோக நடவடிக்கைகள்; இவற்றைச் செய்த ஜுபைர் ஒரு ‘தேசத் துரோகி’. யோகி அரசுக்கு இந்து மதவெறி முற்றிப்போன சாமியார் யதி நரசிங்கானந்த் ஒரு தேச பக்தர்.
ஜுபைர் மீதான தேசத் துரோக வழக்கு என்பது ஒரு பாசிச நடவடிக்கையாகும். எனவே, இதை எதிர்த்து அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்.
ராஜேஷ்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram