22.5.2021

பு.மா.இ.மு கண்டனம் !

மாநிலங்களின் உரிமையை பறித்து கொரோனா காலத்திலும் புதிய கல்விக் கொள்கையை  அமல்படுத்த துடிக்கும் மோடி அரசு!

மாணவர்கள், இளைஞர்களே !

இந்தியாவில் மக்கள் கொரோனாவின் இரண்டாவது அலையில் கொத்துக் கொத்தாக செத்துக் கொண்டிருக்கின்றனர். அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் மோடி அரசானது மாநிலங்களின் உரிமையை பறித்து புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த துடித்துக் கொண்டிருக்கிறது.

புதிய கல்விக் கொள்கை மீது மாநிலங்களுக்கு இடையே மே 17-ஆம் தேதி விவாதம் நடத்தப்போவதாக மத்திய அரசு அறிவித்து அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் அனுப்பியது. அக்கடிதத்தில் கொரோனா தொற்று காலத்தில் கல்வி அமைப்பு மேலாண்மை, பள்ளிகளில் இணையவழி மூலம் கல்வியை தொடர்வதற்கான வழிமுறைகள், புதிய தேசிய கொள்கையை நடைமுறைப்படுத்துவது ஆகியவை குறித்து அந்தந்த மாநில செயலாளர்களுடன் மத்திய கல்வித்துறை அமைச்சர் கலந்துரையாட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

படிக்க :
♦ சென்னை பல்கலை : உரிமைக்காகப் போராடிய தொல்லியல் துறை மாணவர்களை கைது || புமாஇமு கண்டனம்
♦ கொரோனா : பாசிஸ்டுகளின் பிடியை வெட்டியெறியத் தவறினால் மூன்றாம் அலையில் பேரழிவு உறுதி !!

இந்த கலந்துரையாடலில் தமிழக அரசு கலந்து கொள்ளாததையும், புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாட்டில் அமல்படுத்தவிட மாட்டோம் என்று கூறுவதையும் பு.மா.இ.மு வரவேற்கிறது.

தற்போது, இந்தியாவில் கொரோனாவால் நாள் ஒன்றுக்கு 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இறப்பதாக அரசு தரப்பில் இருந்து கூறப்படுகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் அனைத்து மாநிலங்களும் தடுமாறி வருகின்றன. ஒருபுறம் ஆக்சிஜன் கூட இல்லாமல் மருத்துவமனைகளில் மக்கள் மூச்சுத்திணறி இறக்கும் சம்பவங்கள் நடக்கின்றன. படுக்கைவசதி இல்லாமல் மருத்துவமனைகளுக்கு வெளியே நீண்ட வரிசையில் ஆம்புலன்சில் வைத்து சிகிச்சை அளிக்கப்படும் அவலநிலை நிலவுகிறது.

மறுபுறமோ கொரோனாவால் இறந்தவர்களின் உடலை எரிக்கக்கூட இடமில்லாமல் கங்கைக் கரையில் புதைக்கப்பட்டு, அவை பீகாரில் அழுகிய நிலையில் கரை ஒதுங்குகின்றன. கிட்டத்தட்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட  உடல்கள் கங்கை நதிக்கரையில் புதைக்கப்பட்டுள்ளன. இவ்வுடல்களை நாய்கள் கடித்துக் குதறும் கொடூரமான சம்பவங்களும் நடக்கின்றன.

ஆனால் வாஷிங்டன் insititute of health metrics and evaluation நடத்திய ஆய்வில் உண்மையில் இந்தியாவில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 6,54,395-ஆக இருக்க வேண்டும். ஆனால், அரசினால் காட்டப்படுவது 2,21,181 என்று கூறியுள்ளது. அதாவது, இந்தியாவில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 3 மடங்கு அதிகமாக இருக்கும் என்று கூறியுள்ளது.

இப்படிப்பட்ட மோசமான நிலைமைகளில் தடுப்பூசி தான் கொரோனாவை கட்டுப்படுத்த ஒரே வழி என்று எல்லா ஆய்வாளர்களும் கூறுகின்றனர். தடுப்பூசி உற்பத்திக்கு அதிகப்படியான நிதி ஒதுக்கி, காப்புரிமையை ரத்து செய்து, எல்லா தொழில் நிறுவனங்களையும்  தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்காமல் இந்திய அரசானது கார்ப்பரேட்டுகளின் இலாபத்திற்காக திறந்து விடுகிறது.

மக்களுக்கான சுகாதாரக் கட்டமைப்பை மேம்படுத்துவதில் அக்கறை செலுத்தாமல், தனது காவி, கார்ப்பரேட் பாசிச செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. அதன் ஒரு பகுதியாகவே புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தத் துடிக்கிறது.

கொரோனா காலத்து ஆன்லைன் கல்வி நடைமுறையைத் தான் இந்தியா முழுவதும் அமல்படுத்தத் துடித்துக் கொண்டிருக்கிறது புதிய கல்விக் கொள்கை. கொரோனா காலக் கல்வி நிலைமையிலிருந்தே இக்கொள்கையின் யோக்கியதையை புரிந்துக் கொள்ளலாம்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் மார்ச் முதல் 10 மாதங்களில் சென்னையில் சாலையோரம் வசிப்பவர்களின் குழந்தைகளில் 71 சதவீதம் பேர் கல்வி கற்கும் வாய்ப்பை இழந்துள்ளதாக நகர்ப்புற ஏழைகளுக்கான தகவல் மற்றும் ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த வெனிசா பீட்டர் நடத்திய ஆய்வு கூறுகிறது. அடிப்படை உரிமைகளில் ஒன்றான கல்வி, உழைக்கும் அடித்தட்டு மக்களிடம் இருந்து பறிக்கப்படுவதை இந்த ஆய்வு வெளிப்படுத்துகிறது.

ஒப்பீட்டளவில் வளர்ச்சி அடைந்த மாநிலமாக கருதப்படும் தமிழகத்தின் தலைநகரான சென்னையிலேயே இந்த நிலை என்றால், இந்தியா முழுவதும் பிற மாநிலங்களில் உள்ள ஏழை மாணவர்களின் கல்வி இடைநிற்றலைப் பற்றி புரிந்துகொள்ள முடியும்.

ஏழைகளுக்கு கல்வியை எட்டாக்கனியாக்குவது, கல்வியில் பார்ப்பன வருணாசிரமக் கருத்துகளை புகுத்துவது என்ற காவி – கார்ப்பரேட் பாசிசத்தின் செயல்திட்டம் தான் புதிய கல்விக் கொள்கை.

இப்படிப்பட்ட புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த துடிக்கும் மோடி அரசை பு.மா.இ.மு வன்மையாக கண்டிக்கின்றது.

  • கொரோனா பேரிடரை பயன்படுத்தி கொள்ளைப் புறமாக புதிய கல்விக் கொள்கையை திணிக்கும் மோடி அரசின் சதியை முறியடிப்போம் !
  • நீட், புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய தமிழக சட்டமன்றத்தில் சிறப்புத் தீர்மானம் இயற்றப் போராடுவோம் !


இவண்,
இரா. துணைவேந்தன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
பு.மா.இ.மு, தமிழ்நாடு.
94448 36642.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க