18.05.2022
மாபெரும் மக்கள் போராட்டத்தின் நான்காம் ஆண்டு !
தமிழக அரசே ஸ்டெர்லைட்டை மூட தனிச்சட்டம் இயற்று !
கொலைகார போலீசை கைது செய் !
கார்ப்பரேட் வேதாந்தாவை எதிர்த்து நடக்கும் மாபெரும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் போராட்டத்தின் நான்காம் ஆண்டு இது. ஸ்டெர்லைட் நிறுவனம் தொடர்ந்து மக்களை பிளவு படுத்த பல வழிகளில் முயலும் போதும் மக்களின் தொடர்ச்சியாக போராட்டங்களால் இன்று வரை ஸ்டெர்லைட் கம்பெனி திறக்கப்படவில்லை.
2018-ம் ஆண்டு ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் தமிழ்நாட்டுப் போலீசால் மக்கள் அதிகாரம் தோழர் ஜெயராமன், புரட்சிகர இளைஞர் முன்னணி தோழர் தமிழரன் உள்ளிட்ட 15 பேர் கொடூரமாக நெஞ்சிலும், தலையிலும் குறி வைத்து சுட்டுக்கொல்லப்பட்டனர். ஸ்டெர்லைட் எதிர்ப்பு முழக்கங்களை தீரமாய் முழங்கிய இளம்பெண் ஸ்னோலின் வாயிலேயே சுட்டுக்கொல்லப்பட்டார் என்றால் போலீசின் கார்ப்பரேட் ஆதரவு வெறியை நாம் உணரமுடியும்.
தூத்துக்குடி மக்கள் மீது கடும் அரச வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. அடுத்த நாள் வீடு வீடாக வேட்டையாடியது போலீசுத்துறை. எவ்வளவு அடக்கு முறைகள் இருப்பினும் ஸ்டெர்லைட்டை மூடாமல் இறந்தவர்களின் உடல்களை வாங்க முடியாது என்பதில் மக்கள் உறுதியாக இருந்தனர். அந்த உறுதியே ஸ்டெர்லைட்டை மூடியது.
வரைமுறையின்றி தூத்துக்குடி முதல் மதுரை வரையில் எமது மக்கள் அதிகாரம் தோழர்கள் போலீசால் தேடித்தேடி கைது செய்யப்பட்டு கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். மக்கள் துணையோடு அனைத்து அடக்குமுறைகளையும் எதிர்கொண்டோம். ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தை நடத்திய ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்புக்கு உறுதியான ஆதரவைத் தந்தோம். மக்கள் மன்றத்திலும் நீதிமன்றத்திலும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டங்களை மக்கள் அதிகாரம் மேற்கொண்டது.
படிக்க :
ஸ்டெர்லைட்டின் ஆணிவேரை அறுக்காமல் விடமாட்டோம் : தூத்துக்குடி மக்கள் போராட்டம் !
நாசகார ஸ்டெர்லைட் ஆலையின் சதித்தனத்தை முறியடிப்போம் ! | மக்கள் அதிகாரம் நெல்லை மண்டலம்
ஸ்டெர்லைட் வழக்கை சி.பி.ஐ.யின் வசம் ஒப்படைத்தது என்பதே தமிழ்நாட்டு போலீசின் குற்றச்செயலை மூடி மறைக்கும் நாடகம் என்று நாங்கள் அப்போதே கருத்து தெரிவித்ததை மெய்ப்பிக்கும் விதமாகத்தான் இப்போது சி.பி.ஐ.யின் செயல்பாடுகள் இருக்கின்றன. ஆண்டுகள் நான்கு ஆன பின்னரும் எந்த ஒரு போலீசின் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. ஆனால், போராடிய மக்கள் மீதுதான் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
துப்பாக்கிச்சூடு நடந்ததே எனக்குத் தெரியாது, டிவியைப் பார்த்துதான் தெரிந்து கொண்டேன் எனக்கூறிய எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக நீடித்திருப்பதும் துப்பாக்கிச்சூட்டை நியாயப்படுத்திய தமிழிசை செளந்திரராஜன் ஆளுனராக இருப்பதுமே, இந்த அரசமைப்பே மக்களுக்கு எதிரானது என்பதற்கு சான்றாகும்.
அதிமுக அரசு இறுதிவரை தனிச்சட்டம் இயற்றக் கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்து கார்ப்பரேட் சேவை செய்தது மட்டுமல்ல; துப்பாக்கிச்சூட்டிலும் அடக்குமுறையிலும் ஈடுபட்ட போலீசுக்காரர்களையும் அதிகாரிகளையும் பாதுகாத்தது.
ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் என்பது தமிழக போராட்ட வரலாற்றில் ஒரு மைல்கல் ஆகும். அந்தப் போராட்ட உறுதியை நாம் பின்பற்ற வேண்டும்.
தமிழ்நாட்டு அரசு, ஸ்டெர்லைட்டை மூட உடனே சட்டமன்றத்தில் தனிச்சட்டம் இயற்றப்பட வேண்டும். ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் மக்களை குருவிகளைப் போல் சுட்டுக்கொன்ற போலீசு அதிகாரிகளும் போலீசும் இதுவரை சுதந்திரமாக உலாவுகின்றனர். அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. அவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராளிகளுக்கு தமிழ்நாட்டு அரசு சார்பில் நினைவுச் சின்னம் அமைக்கப்பட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
தோழமையுடன்,
தோழர் வெற்றிவேல் செழியன்
மாநிலச்செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
9962366321.