திவால் சட்டத்தின் (IBC) மூலம் பொதுத்துறை வங்கிகளை கொள்ளையடிக்கும் முதலாளிகள் !  – பாகம் 2

பாகம்  1
63,500 கோடியை விடியோக்கானும் வேதாந்தாவும் ஏப்பம் விட்ட கதை !
ஜூன், 2021-ல் பொருளாதாரப் பத்திரிகைகளில் ஒரு செய்தி பேசுபொருள் ஆனது. அது, வேதாந்தா குழுமத்தை சேர்ந்த ட்வின் ஸ்டார் நிறுவனம், திவாலாகி ஏலத்திற்கு வந்துள்ள வீடியோகான் நிறுவனத்தை ஏலத்தில் எடுத்துள்ளது என்ற செய்தி. வீடியோகான் நிறுவனத்தின் மொத்தக் கடன் தொகையில் வெறும் 5 சதவீதத் தொகைக்கு அந்நிறுவனத்தை கையகப்படுத்தியுள்ளது ட்வின் ஸ்டார் நிறுவனம்.
உதாரணமாக, வீடியோகான் நிறுவனம் வங்கிகளிடம் ரூ.100 கோடி கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாமல் விட்டுவிட்டது என்று வைத்துக்கொள்வோம். கடன் கொடுத்த வங்கிகள் அந்நிறுவனத்தை திவால் என அறிவித்து ஏலத்தின் மூலம் கடன் தொகையை வசூலிக்கும். ஏலத்தில் ரூ.5 கோடிக்கு வீடியோகான் நிறுவனத்தை வேதாந்தா வாங்குகிறது எனக் கொண்டால் கடன் கொடுத்த வங்கிகளுக்கு ரூ.95 கோடி நட்டம்.
வீடியோகான் வங்கிகளுக்கு திருப்பிச் செலுத்த வேண்டிய கடன் ரூ.63,500 கோடி. அதில், ரூ.3000 கோடி ஏலத் தோகைக்கு வீடியோகான் நிறுவனத்தை வேதாந்தா வாங்கியுள்ளது. வங்கிகள், தங்களிடம் வாங்கிய ரூ.63,500 கோடி கடன் தொகைக்கு பதிலாக அதில் 5% மட்டும், ஏலத்தொகையான ரூ.3000 கோடியை மட்டும், திருப்பிச் செலுத்தினால் போதும் என்று ஆரம்பத்தில் ஒப்புக்கொண்டனர். இவ்வாறு கொடுத்த கடனை விட குறைவான தொகையை திரும்ப பெறுவதை ‘hair cut’ என்கின்றனர்.
படிக்க :
இராணுவத் தளவாடங்கள் உற்பத்தி : தனியார்மயமாக்கும் மோடி அரசு !
இல்லம் தேடி வரும் ஆர்.எஸ்.எஸ்-ன் கல்விக்கொள்கை !
ட்வின் ஸ்டார் நிறுவனம் ஏலத் தொகையான ரூ.3000 கோடியையும் உடனே வங்கிகளிடம் கொடுத்துவிடாது. ரொக்கமாக ரூ.500 கோடி மட்டுமே கொடுக்கும். மீதி தொகைக்கு கடன் பத்திரங்களை வழங்கும். வங்கிகள் அந்த கடன் பத்திரங்களுக்கு உண்டான வட்டியை ட்வின் ஸ்டார் நிறுவனத்திடமிருந்து வசூல் செய்ய வேண்டும். சில ஆண்டுகள் கழித்து அசல் தொகையை ட்வின் ஸ்டார் நிறுவனம் வங்கிகளுக்கு செலுத்தும்.
வீடியோகான் வழக்கு பற்றி மேலும் தகவல்களை தெரிந்துக் கொள்ளும்போதுதான், இவர்கள் என்ன என்ன கூத்துகள் செய்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும்.
2016-ஆம் ஆண்டு Insolvency and Bankruptcy Code (IBC) என்ற கூறப்படும் திவால் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இச்சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பு, கடனை திருப்பிச் செலுத்தாத நிறுவனங்களிடமிருந்து வங்கிகள் கடன் தொகையை வசூல் செய்ய பல சட்டங்களும் விதிகளும் இருந்தன. இச்சட்டங்கள் கடனை வசூலிக்க அவை எதுவும் பெரிதாக பயன்படவில்லை என்று காரணத்தை முன்வைத்தே IBC கொண்டுவரப்பட்டது.
IBC நடைமுறைப்படி, ஒரு நிறுவனம் ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு கடன் தவணைகளை கட்டவில்லையென்றால் கடன் கொடுத்த வங்கிகள் அந்த நிறுவனத்துக்கு எதிராக தேசிய நிறுவனங்கள் தீர்ப்பாயத்தில் (National Company Law Tribunal-NCLT) திவால் சட்ட நடைமுறைக்காக முறையீடு செய்வார்கள். NCLT-ல் வழக்கு ஏற்கப்பட்ட உடன் இதற்கென தீர்வு காணும் நிபுணர் ஒருவர் (resolution professional) பணியமர்த்தப்படுவார். ஏல நடைமுறை முடியும்வரை திவால்-ஆன நிறுவனத்தை நடத்துவதும் ஏலத்தினை நடத்துவதும் இந்த தீர்வு காணும் நிபுணரின் வேலை.
திவால்-ஆன நிறுவனம் இந்த தீர்வு காணும் நிபுணரால் ஏலம் விடப்பட்டு, ஏலத்தின் மூலம் கிடைக்கும் தொகையை கடன் கொடுத்த வங்கிகள் பங்கிட்டுக் கொள்ளும். இந்த ஏல நடைமுறை வழக்கு பதிவு செய்த 180 நாட்களில் முடிந்துவிட வேண்டும். ஆனால், பெரும்பாலான வழக்குகள் அவ்வாறு முடிவது கிடையாது. திவால் சட்டம் அமலுக்கு வந்த உடன் கடனை செலுத்தாத 12 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தேசிய நிறுவனங்கள் தீர்ப்பாயத்துக்கு, ரிசர்வ் வங்கி பட்டியலை அனுப்பியது. அந்தப் பட்டியலில் வீடியோகானும் இடம் பிடித்திருந்தது.
வீடியோகான் நிறுவனம் முறைகேடான வழிகளில் கடனைப் பெற்றுள்ளது. உதாரணமாக, ICICI வங்கித் தலைவர் சந்தா கோச்சர் வீடியோகான் நிறுவனத்திற்கு கடன் கொடுக்க லஞ்சம் வாங்கியதாக புகார்கள் எழுந்தன. இதன் விளைவாக சந்தா கோச்சார், ICICI வங்கியின் தலைவர் பதவியிலிருந்தே விலகனார். அதேபோல், வெளிநாடுகளில் எண்ணெய் கிணறுகளில் முதலீடு செய்ய வேண்டிய பணத்தை வீடியோகான் நிறுவனம் சட்டத்திற்கு புறம்பாக வேறு வேலைகளுக்கு திருப்பிவிட்டதாகவும் புகார்கள் உள்ளன.
வீடியோகான் குழுமத்தின் தலைவர் வேணுகோபால் தூத்
2018-ஆம் ஆண்டு நிலவரப்படி, வீடியோகான் குழுமத்தை சேர்ந்த வீடியோகான் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் கடன் ரூ.20 ஆயிரம் கோடி என்றே பேசப்பட்டது. பிறகு, வீடியோகான் குழுமத்தை சேர்ந்த 15 நிறுவனங்கள் கடனை கட்டாமல் திவால் சட்ட நடைமுறையில் இருப்பதை கருத்தில் கொண்டு, தேசிய நிறுவனங்கள் தீர்ப்பாயம் இந்த 15 நிறுவனங்களையும் ஒரே வழக்காக மாற்றியது. 2020-ம் ஆண்டில், மேலே கூறிய 15 நிறுவனங்களில் 13 நிறுவனங்கள் தர வேண்டிய கடன் தொகை முழுவதையும், தான் திருப்பி செலுத்திவிடுவதாகவும், இந்த நிறுவனங்களை கடனிலிருந்து மீட்க தன்னிடம் திட்டம் இருப்பதாகவும் வீடியோகான் குழுமத்தின் தலைவர் வேணுகோபால் தூத் மனு தாக்கல் செய்தார்.
ஆங்கிலத்தில் “The devil is in the details” என்று கூறுவார்கள். அதாவது, முக்கியமான தகவல்கள் நுட்பமான தரவுகளில் உள்ளது என்று சொல்லலாம். இது திவால் நடைமுறையில் உள்ள பெரும்பாலான நிறுவனங்களுக்கு பொருந்தும். தூத் முழுமையாக கடனை திருப்பி செலுத்துவதாக சொன்னதன் உள்நோக்கம் கடனை உடனே செலுத்திவிடுவது என்ற அர்த்தத்தில் இல்லை. அவர் கடனைத் திருப்பி செலுத்துவதற்காக சமர்ப்பித்த திட்டப்படி, 10 முதல் 15 ஆண்டுகளில் கடன்களை திருப்பி செலுத்திவிடுவதாக கூறியுள்ளார். அதாவது, கடன் காட்டாமல் திவால் என்று அறிவிக்கப்பட்ட நிறுவனங்களை தன்னிடமே நம்பி கொடுத்துவிட்டால் ஒரு 10-15 ஆண்டுகளில் கடனை திருப்பி செலுத்திவிடுவதாக தூத் கூறுகிறார். “நாதஸ் திருந்திவிட்டதாக நாதஸ்சே சொன்னது”தான் நமக்கு ஞாபகம் வருகிறது.
வீடியோகான் எந்தெந்த வங்கிகளிடமிருந்து கடன் வாங்கியிருந்தது என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அதிகமான கடனாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (State Bank of India)-விடமிருந்து ரூ.11,000 கோடி வாங்கியுள்ளது. IDBI வங்கியிடமிருந்து சுமார் ரூ.9900 கோடி வாங்கியுள்ளது. வீடியோகான் குழுமத்தை சேர்ந்த வீடியோகான் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம் மட்டும் 54 வங்கிகளிடமிருந்து சுமார் ரூ.59,000 கோடிகளை கடன்களாக வாங்கி உள்ளது.
ICICI வங்கி சுமார் ரூ. 4700 கோடி கடன் வழங்கி உள்ளது; இந்த கடனை சந்தா கோச்சார் முறைகேடாக வழங்கி, அதற்கு வழக்குகள் நடந்து கொண்டிருப்பதாக ஏற்கெனவே பார்த்துள்ளோம். மகாராஷ்டிராவை சேர்ந்த லத்தூர் கூட்டுறவு வங்கி வீடியோகான் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்துக்கு ரூ.33 லட்சம் கடன் வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வீடியோகான் நிறுவனத்தில் வேலை பார்த்தவர்களுக்கு கொடுக்க வேண்டிய சம்பள மற்றும் இதர பாக்கிகள் ரூ.2.1 கோடி என்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்னொரு சுவாரஸ்யமான தகவல். வீடியோகான் குழுமத்தை சேர்ந்த வீடியோகான் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் அதே குழுமத்தை சேர்ந்த வீடியோகான் டெலிகாம் நிறுவனத்திடமிருந்தே ரூ. 1786 கோடி கடன் வாங்கி உள்ளது.
வேணுகோபால் தூத்தின் திட்டம் நிராகரிக்கப்பட்டு வீடியோகான் குழுமத்தின் 13 நிறுவனங்கள் ஏலத்திற்கு விடப்பட்டன. ஏலம் விடும்பொழுது ஏலம் கோரும் நிறுவனம் ஏலத் தொகை மற்றும் அதைச் செலுத்துவதற்கான திட்டம் போன்ற விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். உதாரணத்திற்கு, ரூ.100 கோடி கடனிலிருக்கும் ஒரு நிறுவனம் ஏலத்திற்கு வருகிறது என்று வைத்துக் கொள்வோம். ஏலம் எடுக்கும் ஒரு நிறுவனம் ரூ.50 கோடியை உடனே செலுத்துவதாக திட்டம் சமர்ப்பிக்கலாம். இன்னொரு நிறுவனம் ரூ.100 கோடியை 5 ஆண்டுகளில் செலுத்துவதாக திட்டம் சமர்ப்பிக்கலாம். இப்படி சமர்ப்பிக்கப்படும் திட்டங்களை பரிசீலித்து, சரியான ஏலத் தொகைக்கானத் திட்டத்தை கடன் வழங்கிய வங்கிகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழு முடிவு செய்யும்.
வேதாந்த நிறுவனத்தின் அனில் அகர்வால்
திவாலான நிறுவனத்தை ஏலம் விடுவதற்கு முன்னதாகவே அதன் சொத்துக்களை விற்பனை செய்வதன் மூலம் எவ்வளவு நிதி திரட்ட முடியும் என்று மதிப்பீடு செய்வார்கள். ஏலம் கோருபவர்கள் மதிப்பீட்டுத் தொகையைவிட குறைவாக கோரினால், குறைந்தபட்சம் மதிப்பீடு தொகையாவது வங்கிகளுக்கு கிடைக்க, திவாலான நிறுவனத்தின் சொத்துக்கள் விற்பனை செய்யப்படும். ஏலம் கோருபவர்களுக்கு மதிப்பீடு தொகை தெரிந்தால் அந்த தொகையைவிட சிறிய அளவு தொகைக்கு ஏலம் கேட்பார்கள். இதனால் வங்கிகள் பாதிப்படையும் என்பதால் மதிப்பீடு செய்யப்பட்ட தொகை ரகசியமாக வைத்திருப்பார்கள்.
வீடியோகான் விஷயத்தில், ட்வின் ஸ்டார் நிறுவனம் ஏலம் கோரிய தொகையானது அந்நிறுவனத்தின் சொத்துக்களை விற்பனை செய்தால் கிடைக்கும் தொகையை ஒட்டி இருந்தது. இரகசியமாக வைக்கப்பட வேண்டிய மதிப்பீட்டுத் தொகை ட்வின் ஸ்டார் நிறுவனத்திற்கு கசிந்திருப்பதாக சந்தேகங்கள் எழும்பின. வீடியோகான் நிறுவனத்தின் சொத்துக்களை விற்பனை செய்வதன் மூலம் ரூ.2568.13 கோடி திரட்ட முடியும் என மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. ட்வின் ஸ்டார் நிறுவனம் ஏலம் கோரி வென்ற தொகை ரூ.2962.03 கோடி. இது ஆச்சர்யமாக இருப்பதாக தேசிய நிறுவனங்கள் தீர்ப்பாயமே கூறியது.
மேற்சொன்ன நடைமுறைகளின் மூலம் ஏலத்தில் சமர்ப்பிக்கப்பட்ட திட்டங்களில் சிறந்த திட்டத்தை கடன் கொடுத்த வங்கிகளின் குழு தேர்வு செய்து, அதனை தேசிய நிறுவனங்கள் தீர்ப்பாயத்திடம் சமர்பிக்கும். தீர்ப்பாயம் ஒப்புதல் வழங்கினால் திவால்-ஆன நிறுவனம் ஏலத்தை வென்றவரிடம் ஒப்படைக்கப்படும். ஏற்கனவே சொன்னதைபோல, ட்வின் ஸ்டார் நிறுவனம் சுமார் ரூ.3000 கோடிக்கு ஏலத்தை வென்றது. ஏலத் தொகை பிரித்து விற்பனை செய்தால் கிடைக்கும் தொகை அளவே உள்ளது என்றெல்லாம் சொல்லிவிட்டு தேசிய நிறுவனங்கள் தீர்ப்பாயம் ட்வின் ஸ்டார் நிறுவனத்தின் திட்டத்துக்கு ஜூன் 2021-இல் ஒப்புதல் அளித்தது.
கடன் கொடுத்த வங்கிகளில் சில, இந்தத் திட்டத்தில் தாங்கள் பாதிக்கப்படுவதாக தேசிய நிறுவனங்கள் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் (NCLAT – National Company Law Appellate Tribunal) வழக்கு தொடுத்தன. இந்த வழக்கின் மூலம் பல தகவல்கள் வெளிவந்தன. ட்வின் ஸ்டார் நிறுவனம் ரூ.3000 கோடியையும் பணமாக தராது என்றும், வெறும் ரூ.500 கோடியைத் தான் தரப்போகிறது என்றும் முன்பே கூறியிருந்தோம். இந்த ரூ.500 கோடியையும் எப்படி கட்டப்போகிறார்கள் என்பதுதான் மிக முக்கியம்.
வீடியோகான் நிறுவனத்தை ஏலத்தில் வென்றதின் மூலம் அந்நிறுவனத்தின் கையிருப்பில் உள்ள ரூ.200 கோடியை தனதாக்கியுள்ள ட்வின் ஸ்டார் நிறுவனம் மீதமுள்ள ரூ.300 கோடியைதான் முதலீடு செய்யும். இந்த ரூ.300 கோடியையும், 25 மாதங்களுக்குள் தருவது என்பதுதான் ஒப்புக்கொள்ளப்பட்டத் திட்டம். ஆக, ரூ.63,500 கோடி கடனிலிருக்கும் ஒரு நிறுவனத்தை வெறும் ரூ.300 கோடிக்கு, அதுவும் 25 மாதங்களுக்குள் தருவதாகக் கூறி, ட்வின் ஸ்டார் நிறுவனம் ஏலத்தை வென்றுள்ளது.
மீதமுள்ள ரூ.2,500 கோடிக்கு 6 வருடங்களில் முதிர்ச்சி அடையக்கூடிய கடன் பத்திரங்களாக கொடுப்பதாக ட்வின் ஸ்டார் கூறியுள்ளது. இதிலும் ஒரு முக்கிய தகவல் உள்ளது, இந்தக் கடன் பத்திரங்களுக்கு ட்வின் ஸ்டார் கொடுப்பதாக சொன்ன வட்டி 6.65%. அரசு நிறுவனங்கள் நிதிச் சந்தைகளில் தாங்கள் வாங்கும் கடனுக்கு இதைவிட அதிக வட்டி கொடுக்கின்றன. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு ஜூலை 2021-இல் தேசிய நிறுவனங்கள் மேல்முறையீட்டு தீர்ப்பாயம், தேசிய நிறுவனங்கள் தீர்ப்பாயம் கொடுத்த ஒப்புதலுக்கு இடைக்கால தடை விதித்தது.
படிக்க :
நூறு நாள் வேலைத் திட்டம் உண்மையில் பலனளிக்கிறதா ?
ஃபேப் இந்தியாவின் தீபாவளி விளம்பரம் : ‘விளம்பர ஜிகாத்’ என்கிறது பாஜக !
வீடியோகான் நிறுவனங்களை வாங்குவதன் மூலம், வேதாந்தா நிறுவனம் ரவ்வா எண்ணெய் கிணறுகளை முழுமையாக தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என்ற தகவலும், பிரித்து விற்பனை செய்தால் எவ்வளவு பணம் கிடைக்கும் என்று மதிப்பீடு செய்ததில் வீடியோகான் நிறுவனத்தின் பிரேசில் சொத்துக்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் விடுபட்டது பற்றியும் இந்த கட்டுரை விரிவாக பேசவில்லை என்றாலும் அவையும் பேசப்பட வேண்டிய விஷயங்கள்.
கிட்டத்தட்ட இதே அளவு கடன் கொண்ட மக்களுக்கு சேவை செய்யும் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கடன் சுமார் ரூ.1 லட்சம் கோடிக்கு எந்த வித சலுகையும் வழங்கப்படுவது இல்லை. வீடியோகான் நிறுவனத்தை எந்தவித கடனும் இல்லாமல் ட்வின் ஸ்டார் நிறுவனத்திற்கு இலவசமாக கொடுப்பதுபோல் தமிழ்நாடு மின்சார வாரியத்தை புதிய அரசுக்கு கடன் இல்லாமல் ஏன் கொடுக்கக் கூடாது? வீடியோகான் நிறுவனம் கடன் காட்டாமல் போனதற்கு இதற்கு முன் இருந்த நிர்வாகம்தான் காரணம் என்றால் தமிழ்நாடு மின்சார வாரிய கடனிற்கும் முந்தய அரசுதான் காரணம் என்று சொல்லலாமே?
ரூ.63,500 கோடிக்கு முடி வெட்டிக்கொள்ளத் தயங்காத பொதுத்துறை வங்கிகள், கொரோனா ஊரடங்கு சமயத்தில் சிறு நிறுவனங்களுக்கும், தொழில் முனைவோருக்கும், வீட்டு கடன் வாங்கியவர்களுக்கும் வட்டியை மட்டுமல்ல, வட்டிக்கான வட்டியை கூட தள்ளுபடி செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் வாதிட்டன. அவ்வாறு தள்ளுபடி அளித்தால் வங்கித் துறையே கவிழ்ந்துவிடும் என்றெல்லாம் முதலாளித்துவ அறிவு கூலிப்படைகள் பத்திரிகைகளில் எழுதினர். ஆனால், முதலாளிகளிக்காக பல ஆயிரம் கோடி ரூபாய் மக்கள் பணத்தில் ‘முடி வெட்டிக்கொள்ள’ இவர்கள் தயங்குவதில்லை.
கதை தொடரும்…
அருண், ராஜன்