திவால் சட்டத்தின் (IBC) மூலம்
பொதுத்துறை வங்கிகளை கொள்ளையடிக்கும் முதலாளிகள் !

பதஞ்சலி ருச்சி சோயாவை கைப்பற்றியக் கதை

பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் மொத்த வருவாய் 2021 நிதியாண்டில் (FY21) 30,000 கோடியை எட்டியுள்ளது. இதில் ருச்சி சோயாவின் மூலம் பெற்ற வருமானம் மட்டும் 16,000 கோடியாகும். பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் சமையல் எண்ணெய் உற்பத்தி செய்யும் ருச்சி சோயா நிறுவனத்தை திவால் சட்டத்தின் கீழ் 2020-ஆம் ஆண்டில் கையகப்படுத்தியது.

இந்திய சமையல் எண்ணெய் தேவையில் மூன்றில் ஒரு பகுதியை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட ருச்சி சோயா நிறுவனத்தை பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் கைப்பற்றியதின் மூலம் இந்திய FMCG சந்தையில் முன்னிலை பெறுவதற்கான போட்டியில் இறங்கியுள்ளது.

பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் சமையல் எண்ணெய் உற்பத்தி செய்யும் ருச்சி சோயா நிறுவனத்தை ரூ.4,350 கோடிக்கு திவால் சட்டத்தின் (Insolancy and Bankruptcy Code-IBC) மூலம் 2020-ஆம் ஆண்டில் வாங்கியது. ருச்சி சோயாவை கைப்பற்றுவதில் அதானிக்கும் ராம் தேவ்-க்கும் இடையே நடந்த போட்டியில் மோடியின் கடைகண் பார்வை ராம்தேவ் மீது விழுந்ததினால் பதஞ்சலிக்கு ஆதரவாக இந்த ஒப்பந்தம் முடிந்தது.

படிக்க :
♦ UGC -ன் புதிய வகை கற்றல் – கற்பித்தலுக்கான வழிகாட்டுதலைப் புறக்கணிக்கப்போம் || CCCE
♦ RSS – BJP ன் அறிவியல் புறக்கணிப்பும் இந்துராஷ்ட்ரா வெறியுமே கொரோனா பேரழிவிற்கு காரணம் || CCCE

ருச்சி சோயா நிறுவனம் வங்கிகளிடமிருந்து வாங்கியக் கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் 2017-ம் ஆண்டில் திவால் நிலையை அறிவித்தது. கடன் கொடுத்த வங்கிகள் கடனைத் திரும்பப் பெறுவதற்காக தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திடம் (National Company Law Tribunal-NCLT) முறையிட்டன. தீர்ப்பாயம், திவால் சட்டத்தின்படி கடன் வாங்கி கட்டாமல் இருக்கும் நிறுவனத்தை ஏலம் விட்டு கடன் தொகையை திரும்ப பெரும் நடைமுறையை துவங்கியது.

இந்த ஏலத்தில் அதானி வில்மர் மற்றும் பதஞ்சலி நிறுவனங்கள் போட்டியிட்டு அவைகளின் resolution திட்டங்கள் கடன் வழங்குநர்கள் கமிட்டியின் (Committee of Creditors-CoC) முன் வைக்கப்பட்டது. இறுதியாக பதஞ்சலி நிறுவனத்தின் resolution திட்டத்தினை கமிட்டி ஏற்றுக் கொண்டது. இதன்படி ரூ.4,350 கோடிக்கு ருச்சி சோயா நிறுவனம் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்திடம் விற்கப்பட்டது.

வங்கிகளிடமிருந்து ருச்சி சோயா ரூ.12,000 கோடியை கடனாகப் பெற்றுள்ளது. இதில் அதிக அளவிலானக் கடன்கள் பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து வாங்கியுள்ளது. NCLT மற்றும் கடன் வழங்குநர்கள் கமிட்டி ஏற்றுக் கொண்ட அதிகபட்ச ஏலத் தொகையான ரூ.4,350 (36%) கோடியை பதஞ்சலி நிறுவனம் வங்கிகளுக்கு செலுத்திவிடும்; இது மொத்த கடன் தொகையில் மூன்றில் ஒரு பங்கே ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை வங்கிகள் பிரித்துக் கொள்ள வேண்டும். வங்கிகளுக்கு வரவேண்டிய மீதமுள்ள ரூ.7,650 (64%) கோடி கடனானது வங்கிகளின் நட்டக் கணக்கில் சேர்க்கப்பட்டுவிடும். உதாரணமாக, ரூ.1,816 கோடி கடன் கொடுத்த SBI ரூ.883 கோடியை மட்டுமே திரும்பப் பெறும், மீதமுள்ள ரூ.933 கோடியை காந்தி கணக்கில் எழுதிவிட்டனர்.

இதற்கு ஆங்கிலத்தில் இவர்கள் வைத்துள்ள பெயர் “haircut”, அதாவது மயிர் வெட்டிக் கொள்வது; ரூ.7,650 கோடி செலவு செய்து கடன் கொடுத்த வங்கிகள் மயிர் வெட்டிக் கொள்கிறார்கள்.

இதுபோலவே வீடியோகான் நிறுவனம் வங்கிகளிடமிருந்து பெற்ற கடனான 56824.3 கோடியை கட்டமுடியாமல் திவால் நிலையை அறிவித்தது. திவால் சட்டத்தின் மூலம் இந்நிறுவனத்தினை 5% கடன் தொகைக்கு (ரூ.2,777 கோடிக்கு) வேதந்தாவின் துணை நிறுவனமான Twin Sister நிறுவனத்திற்கு விற்க ஒப்புதல் அளித்துள்ளது NCLT. வீடியோகான் வங்கிகளுக்குத் செலுத்த வேண்டிய 95% கடனை வங்கிகளின் வாராக்கடன் கணக்கில் எழுதிவிட்டனர்.

இதுபோல கடந்த 6 ஆண்டுகளில் 4,540 நிறுவனங்கள் திவால் நிலையை அறிவித்துள்ளன. இதில், அதிகளவு கடன்கள் பொதுத்துறை வங்கிகளிடமிருந்தே பெறப்பட்டுள்ளது. இந்நிறுவனங்களுக்கு கடன் கொடுத்த வங்கிகளோ கொடுத்தக் கடனில், NCLT-ல் தள்ளுபடி செய்ததுபோக, மிகக் குறைந்த அளவு தொகையையாவது திரும்பப் பெறுவதே வெற்றி எனக் கருதுகின்றனர்.

தொழில் வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம் என்ற போர்வையில் பொதுத்துறை வங்கிகளில் உள்ள மக்களின் சேமிப்பான பல லட்சம் கோடிகளை முதலாளிகள் கூட்டத்திற்கு தாரை வார்த்தது மட்டுமல்லாமல், வராக்கடன் பிரச்சனையால் நிதி நெருக்கடியில் இருக்கும் பொதுத்துறை வங்கிகளுக்கு மூலதனத்தை அதிகரிக்கிறோம் (capital infusion) என்ற பெயரில் மக்களின்  வரிப்பணத்தையும் அள்ளி கொடுத்துள்ளனர்.

உதாணமாக மோடி ஆட்சிக்கு வந்த கடந்த ஏழு ஆண்டுகளில் மட்டும் haircut, writeoff என்று ரூபாய் 8 லட்சம் கோடியை பொதுத் துறை வங்கிகளிலிருந்து முதலாளிகளுக்கு கொடுத்துள்ளனர். இவ்வங்கிகள் தான் பொதுமுடக்கத்தால் நசிந்துபோய் இருக்கும் சிறு மற்றும் குறு தொழில்களுக்கும் டாக்ஸி போன்ற வாகன கடன்களுக்கும் வட்டியை கூட தள்ளுபடி செய்ய மறுக்கிறது.

அதேபோல் இவர்களுக்கு கடன் கொடுக்க சொன்ன ஒன்றிய அரசு மக்களுக்கு நிவாரணம் வழங்கவோ கடனில் வட்டியை தள்ளுபடி செய்யவோ நிதி இல்லை என்று சொல்கிறார்கள். தற்போது ராம்தேவ்-க்கு வருவோம்.

2019-ம் ஆண்டு ருச்சி சோயாவை கையகப்படுத்துவதற்கான ரூ.4,000 கோடியை பொதுத்துறை வங்கிகளிடமிருந்து கடனாக பெற ராம்தேவ் முயற்சிந்திருந்தார். அச்சமயத்தில் பதஞ்சலி  நிறுவனத்தின் நிதிநிலைமைகள் சரியில்லை எனக் கூறி Brickwork, ICRA, CARE ஆகிய தர நிர்ணய நிறுவனங்கள் பதஞ்சலி நிறுவனம் கடன் வாங்குவதற்கான தரமதிப்பை (+)ல் இருந்து (-)ஆக குறைத்திருந்ததிந்தன. அதனால் பொதுத்துறை வங்கிகள் ராம்தேவ்-க்கு கடன் வழங்க தயக்கம் காட்டின.

2019-ம் ஆண்டு அக்டோபரில் ஒரு கூட்டம் ஒன்றில் பேசிய ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் சுய உதவிக் குழுக்களுக்கும் ஆன்மீகத் தலைவர்கள் நடத்தக் கூடிய நிறுவனங்களுக்கும் கடன் வழங்கப் பொதுத்துறை வங்கிகள் தயக்கம் காட்டக் கூடாது என வெளிப்படையாகவே கூறினார். இதன் விளைவாக SBI உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகள் பதஞ்சலி நிறுவனத்திற்கு கடன் வழங்க ஒப்புக் கொண்டன.

திவாலான ருச்சி சோயாவிற்கு SBI உள்ளிட்ட வங்கிகள் வழங்கிய கடனில் 65% (ரூ.7,650 கோடி) ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. தற்போது திவாலான ருச்சி சோயாவை வாங்குவதற்கு அதே வங்கிகள் ரூ.4,000 கோடியை ராம்தேவ்-விற்கு கடன் கொடுத்திருக்கிறது.

திவால் நிலையில் இருக்கும் தனியார் நிறுவனங்களின் கடன்களை தள்ளுபடி செய்து மறுஉயிர் கொடுக்கும் அரசுகள் கடனில் இருக்கும் பொதுத்துறை நிறுவனங்களை காப்பாற்ற எந்த கடன் தள்ளுபடியையும் கொடுக்க விரும்புவதில்லை.

படிக்க :
♦ தமிழகப் பல்கலைக் கழகங்களில் பறிபோகும் 69 சதவிகித இடஒதுக்கீடு || CCCE
♦ வல்லரசுக் கனவும் மாட்டுச்சாணி ஆய்வும் !! || CCCE

உதாரணமாக கடனில் தத்தளித்து கிட்டத்தட்ட திவாலாகி விடும் நிலையில் இருக்கும் மின்சார வாரியத்தை எடுத்துக் கொள்ளலாம். சமீபத்தில் வந்த தகவல்கள் மூலம் தமிழ்நாடு மின்சார வாரியம் மாதம் நூற்றுக்கு ரூ.1 வட்டி என்கிற அளவில் கூட கடன் வாங்கி உள்ளது என்று தெரிந்து கொண்டோம். நெருக்கடியில் இருக்கும் தனியார் நிறுவனங்களுக்கு வங்கிகள் haircut செய்துகொள்ள முடியும் என்றால் மக்களுக்கு சேவை செய்யும் மின்சார வாரியம் போன்றவற்றுக்கு ஏன் தள்ளுபடி செய்ய முடியாது?

மாறாக, கொரோனா நெருக்கடியால் மாநில அரசுகளுக்கு ஏற்பட்டிருக்கும் நிதி நெருக்கடியை பயன்படுத்தி மின்சார வாரியங்களை தனியார்மயமாக்க வேண்டும் என்றும் மின்சார கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் ஒன்றிய அரசு அழுத்தம் கொடுக்கிறது.

தனியார்மயத்துக்கு இவர்கள் சொல்லும் காரணம், தனியார்மயம் தான் இந்த கடன் பிரச்சனையில் இருந்து மின்சார வாரியங்கள் வெளியே வர ஒரே வழி என்பது தான்.

பாபா ராம்தேவ் போன்ற கார்ப்பரேட் கம்பெனிகளை நடத்தும் கார்ப்பரேட் சாமியார்களுக்கு கிடைக்கும் சலுகைகள் மக்களுக்காக சேவை செய்யும் அரசு நிறுவனங்களுக்கோ, நிதி நெருக்கடியில் இருக்கும் அரசுகளுக்கோ கிடைப்பது இல்லை.

(தொடரும்…)

ராஜன், அருண்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க