ரு நாடு மற்றொரு நாட்டை ஆக்கிரமிக்கவும், ஆக்கிரமிப்பிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ளவும் ஒவ்வொரு நாடும் ஆயுதங்களை வைத்துள்ளன. நவீன ஆயுதங்களின் மூலமாக, வலிமை அடைந்த நாடுகள் வலிமைக் குன்றிய நாடுகளை வென்றன. இப்படித்தான் நமது நாடும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் நவீன ஆயுத பலத்தால் வெல்லப்பட்டு காலனியாக்கப்பட்டது.
பிரிட்டிஷ் காலனியாக்க காலகட்டத்திற்கு முன்பிருந்தே ஆயுத தளவாட உற்பத்தி நிறுவனங்கள் நமது நாட்டில் இருக்கின்றன. முதன் முதலில் 1712-ம் ஆண்டு டட்சுக்காரர்கள் இங்கு ஆயுத உற்பத்தி நிலையத்தை அமைத்தனர். படிப்படியாக பிரிட்டிஷ் ஆட்சியிலும் ஆயுத தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டன. பிரிட்டிஷ் இந்தியாவில், இங்கு தயாரிக்கப்படும் ஆயுதங்களை முறைப்படுத்துவதற்கு இந்திய ஆயுத சேவை நிறுவனம் 1935-ம் ஆண்டு துவங்கப்பட்டது. 
இந்தியா ‘சுதந்திரம்’ அடைந்த பிறகு, 1954-ம் ஆண்டு மேற்கூறிய ஆயுத சேவை நிறுவனம், இந்திய ஆயுத சேவை தொழிற்சாலைகள் நிறுவனமாக பெயர் மாற்றப்பட்டது. அதன் பின்னர் 1979-ம் ஆண்டு ஏப்ரல் 2-ம் நாளில், ஆயுதத் தொழிற்சாலை வாரியம் தொடங்கப்பட்டது. இந்த வாரியத்தின் கீழ் 41 பாதுகாப்புத் துறை நிறுவனங்கள் தமிழ்நாடு, உத்திரப்பிரதேசம், ஒரிசா, மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் செயல்பட்டு வருகின்றன. தற்போது தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பதற்கேற்ப இவற்றை 7 நிறுவனங்களாக மாற்றியமைத்துள்ளது பாசிச மோடி அரசு.
அட்வான்ஸ்ட் வெப்பன்ஸ் அண்ட் எக்யுப்மண்ட்ஸ் இந்தியா லிமிடெட், (Advanced Weapons and Equipment India Limited, Kanpur), ஆர்மர்ட் வெகிக்கிள்ஸ் நிகாம் லிமிடெட் (Armoured Vehicles Nigam Limited, Chennai), க்ளைடர்ஸ் இந்தியா லிமிடெட் (Gliders India Limited, Kanpur), இந்தியா ஆப்டெல் லிமிடெட் (India Optel Limited, Dehradun), ம்யுனிசன்ஸ் இந்தியா லிமிடெட் (Munitions India Limited, Pune) ட்ரூப் கம்ஃபோர்ட்ஸ் லிமிடெட் (Troop Comforts Limited, Kanpur), யந்த்ரா இந்தியா லிமிடெட் (Yantra India Limited, Nagpur) ஆகியவைதான் இப்போது உருவாக்கப்பட்டுள்ள ஏழு நிறுவனங்கள்.
படிக்க :
101 இராணுவத் தளவாடங்கள் இறக்குமதி ரத்து : ஆத்மநிர்பாரா ? கார்ப்பரேட் நிர்பாரா ?
ஆயுதத் தளவாட உற்பத்தியை தனியாருக்குத் தாரைவார்க்க ஒரு அவசரச் சட்டம் !
அரசின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிவந்த 41 நிறுவனங்களை, 7 பொதுத்துறை நிறுவனங்களாக மோடி அரசு அறிவித்ததன் நோக்கமே படிப்படியாக பங்கு விற்பனை மூலமாகவும், நட்டத்தில் ஓடுவதாக கணக்குக் காட்டி மொத்தமாக விற்பனை செய்வது மூலமாகவும், இவற்றை தனியாருக்கு தாரை வார்க்கவே என்பதில் எவ்வித ஐய்யமும் இல்லை.
இராணுவ தளவாட உற்பத்தித் துறையை தனியார்மயமக்குவதற்கு ஏதுவாக அத்தியாவசிய பணிகள் பாதுகாப்பு மசோதா; நடுவன் மன்றங்கள் சீர்த்திருத்த மசோதா, திவால் சட்ட மசோதா போன்றவைகளை கொண்டு வந்துள்ளது. இதை எதிர்த்த MP-க்களை துளியும் மதிக்காமல், விவாதம் நடத்தாமல் அடாவடியாக குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதாக்களை நிறைவேற்றியது.
வாக்களித்த மக்களையும் அவர்களால் தெரிவு செய்யப்பட்ட MP-க்களையும் இழிவுப்படுத்தி நிராகரிப்பதையே நோக்கமாகக் கொண்டு செயல்படும் காவி – கார்ப்பரேட் பாசிஸ்ட்களிடம் நியாயத்தையும், ஜனநாயகத்தையும் எதிர்பார்ப்பது முட்டாள்தனம் என்பதை ஒவ்வொரு முறையும் நெற்றிப் பொட்டில் அறைந்தார் போல் நிறுவி வருகின்றனர்.
மேலும், அந்நிய நேரடி முதலீட்டைப் பெற்று இராணுவ தளவாடங்களை உற்பத்தி செய்ய 41 நிறுவனங்களுக்கு அனுமதியும் வழங்கியுள்ளது. இதன் மூலம், நிதி மூலதனக் கும்பல், உள்ளூர் கூட்டாளியுடன் இணைந்து சர்வதேச சந்தையின் தேவைக்கு ஏற்ப ஆயுதங்கள் தயாரிக்க உகந்த வகையில், இந்தியப் பாதுகாப்புத் துறையும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.
நாட்டின் பாதுகாப்புத்துறை எந்த அளவிற்கு முக்கியமோ அந்த அளவிற்கு விண்வெளித்துறையும் முக்கியமானது. அதுவும் அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டியது அவசியம். அதன் கட்டுப்பாட்டையும் தனியாருக்கும் தாரைவார்க்கும் வகையில், இந்திய விண்வெளிச் சங்கம் (ஐ.எஸ்.ஏ) மோடி அரசால் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், நேரடியாகவே எல்&டி, நெல்கோ (டாடா),  ஒன் வெப், பாரதி ஏர்டெல், மேப் மை இந்தியா, வால்சந்த் நகர் இண்டஸ்ட்ரீஸ், ஆனந்த் டெக்னாலஜீஸ் லிமிடெட், கோத்ரெஜ், அஜிஸ்டா, பி.எஸ்.டி. ஏரோ ஸ்பேஸ் பிரைவேட் லிமிடெட், செண்டம் எலக்ட்ரானிக்ஸ், மேக்சார் இந்தியா போன்ற தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும் என்றும் அறிவித்துள்ளது.
விண்வெளி தொடர்பான சாதனங்களை உருவாக்கி வரும் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பாக இந்திய விண்வெளிச் சங்கம் இயங்கும். இது விண்வெளிக்கான தொழில்நுட்பத்தை அதிகரிக்கும் வகையில் தனியார்களின் கட்டுப்பாட்டில் செயல்படக் கூடிய தொழில் நிறுவனமாகும்.
நட்டமில்லாமல் இயங்கக் கூடிய பொதுத்துறை நிறுவனங்களில் கூட நட்டத்தை செயற்கையாக உருவாக்கி, தேவையற்ற நிறுவனங்களாக அதனை மாற்றி தனியாருக்கு விற்பனை செய்வதற்காகவே, “தொழில் செய்வது அரசின் வேலை இல்லை” என்ற முழுக்கத்தை வெளிப்படையாகப் பேசி அமல்படுத்தி வருகிறது மோடி அரசு.
ஏன் 7 நிறுவனங்களாக்கி படிப்படியாக தனியாருக்கு தாரைவார்க்க வேண்டும் என்று கேள்வியை யாரும் எழுப்பக் கூடாது என்பதற்காகவும், குறிப்பாக அந்நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் போராட்டத்தை முறியடிப்பதற்காகவும், அதனை முறியடிக்க, அவசரச் சட்டம் ஒன்றையும் இயற்றியிருக்கிறது மோடி அரசு.
போராட்டத்திற்கு தடை; மீறி போராடினால் ஓராண்டு சிறை, ரூ.10,000 அபராதம், பிணை கிடையாது, போராட்டத்தைத் தூண்டினால் உடனடி பணி நீக்கம், 2 ஆண்டு சிறை போன்ற அடக்குமுறைகளை ஏவிவிடும்.
பாதுகாப்புத் துறையை தனியாருக்கு தாரை வார்ப்பதை, அதன் மூலம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பதையும், நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களை தனியாரின் இலாபவெறிக்கு அடமானம் வைப்பதையும் தடுப்போம். இதற்குக் காரணமான காவி – கார்ப்பரேட் பாசிசத்தை – அதன் அதிகாரத்தை வீழ்த்த, களத்தில் இறங்கிப் போராடுவோம்.

கதிரவன்