நாட்டின் அனைத்து பொதுத்துறை, அரசுத்துறை நிறுவனங்களையும் கார்ப்பரேட் குழும முதலாளித்துவ கும்பலுக்கு காணிக்கையாக்க ஒன்றிய அரசு முழுவீச்சில் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்திய துணைக் கண்டத்தின் தொழில்துறை வளர்ச்சிக்கும் பொருளாதாரத்திற்கும் அடித்தளமாக திகழ்ந்த பொதுத்துறை நிறுவனங்களை ஒவ்வொன்றாக காவு கொடுத்து வருகிறது ஒன்றிய அரசு. இந்திய தொழிலாளர்களின் உரிமைக் குரலை நசுக்க பல்வேறு அடக்குமுறை சட்டங்கள் இருந்தபோதும் புதிதாக ஒரு அடிமை சாசனத்தை நிறைவேற்றியுள்ளது ஒன்றிய அரசு.

ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும் அத்தியாவசிய பராமரிப்பு சட்டத்தை ESMA போல், ஒரு கொடிய சட்டத்தை பாதுகாப்பு சேவை அவசர சட்டம் – 2021 என்ற பெயரில் கொண்டு வந்துள்ளனர் (Essential Defence Service Bill). இந்திய பாதுகாப்புத் துறையின் நேரடி கட்டுப்பாட்டில் நாடு முழுவதும் 41 ஆயுதத் தளவாட உற்பத்தித் தொழிற்சாலைகள் உள்ளன. இந்நிறுவனங்களில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்ட இந்த ஆயுதத் தொழிற்சாலைகளின் மீது ஆயுத தளவாட உற்பத்தித் துறையின் மீது கார்ப்பரேட் குழும முதலாளிகளின் கழுகுப் பார்வை விழுந்துவிட்டது.

படிக்க :
♦ அரியானா : உச்சநீதிமன்ற ஆசியோடு விரட்டியடிக்கப்படும் தொழிலாளர்கள் !
♦ கர்நாடகா : டொயோட்டாவின் லாபவெறிக்கு எதிராக தொழிலாளர்கள் தொடர் போராட்டம் !

கார்ப்பரேட்டுகளுக்கு பொதுத்துறை நிறுவனங்களை தாரைவார்ப்பதில் மோடிக்கு முன்னோடியான அடல் பிஹாரி வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில், இந்திய தொலைத் தொடர்பு துறை பி.எஸ்.என்.எல் என்கின்ற கார்ப்பரேட் நிறுவனமாக மாற்றப்பட்டது. இந்திய தொலைத் தொடர்பு சந்தையை அம்பானியும் சுனில் மிட்டலும் முழுவதுமாக கைப்பற்றும் விதமாக, பி.எஸ்.என்.எல்-இன் வளர்ச்சி திட்டமிட்டு முடக்கப்பட்டது. கடுமையான வர்த்தகப் போட்டியை சமாளிக்க முடியாமல் பி.எஸ்.என்.எல் நிறுவனம் சிக்கித் திணறிக் கொண்டிருக்கிறது. எதிர்காலம் குறித்த அச்சத்தை தொழிலாளர்களுக்கு ஏற்படுத்தி, 85 ஆயிரம் பி.எஸ்.என்.எல். ஊழியர்களை விருப்ப ஓய்வு திட்டத்தின் அடிப்படையில் நிறுவனத்தை விட்டு வெளியேற்றியது. அடல் பிகாரி வாஜ்பாய் கால்கோல் விழா எடுத்ததை, இன்றைய ஒன்றிய அரசு முன்னெடுத்துச் சென்று பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை இழுத்து மூடும் திருப்பணியை நிறைவேற்றும்.

அதே போல, படைக்கல தொழிலக வாரிய (Ordanace factories Board)  நிர்வாகத்தின் கீழ் நாற்பத்தியொரு ஆயுத தளவாட உற்பத்தி ஆலைகள் இருக்கின்றன. மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கி வந்த இந்த ஆலைகளை கார்ப்பரேட் நிறுவனமாக மாற்றப் போவவதாக இந்த ஆண்டு ஜூன் 16-ம் தேதி பாதுகாப்புத்துறை அமைச்சர் அறிவித்தார்.

அதிக திறன் மிகுந்த, தரமான, தடையற்ற உற்பத்தி நடக்க வேண்டும் என்ற காரணத்தால் கார்ப்பரேட் நிறுவனமாக மாற்றப்படுவதாக கூறுகிறார்கள். 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள், துணையான தொழிலகங்களில் பணிபுரிபவர்கள் அனைவரும் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர். பணிப் பாதுகாப்பு மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறி இருக்கிறது.

மாதம் மாதம் ஊதியம் வழங்கக் கூடத் தடுமாறும் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் நிலைமை நமக்கு வந்துவிடும் என்று கவலைப்படுகிறார்கள். பணிப் பாதுகாப்பு – ஓய்வூதிய நடைமுறைகள் – ஓய்வூதியம் பற்றி யாரும் கவலைப்பட வேண்டியது இல்லை என்கிறார் பாதுகாப்புத் துறை அமைச்சர்.

இப்படி கார்ப்பரேட் நிறுவனமாக மாற்றுவதன் பின்னணியில் இருக்கும் நோக்கம் ஒன்றுதான். இந்நிறுவனத்தைப் படிப்படியாக தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அடிமாட்டு விலைக்கு விற்றுவிடுவதுதான் இதன் நோக்கம்.

இந்திய நாட்டின் இறையாண்மைக்கு ஆபத்தை விளைவிக்கும், இந்திய நாட்டின் பாதுகாப்பை கார்ப்பரேட் குழும முதலாளித்துவ கும்பலிடம் ஒப்படைக்கும் அரசின் முடிவை எதிர்த்து காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள் அறிவித்துள்ளன. 70,000 ஊழியர்களின் வாழ்வோடு விளையாடும் ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்துதான் இந்த வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இந்தப் பின்னணியில் தான் அவசர அவசரமாக பாதுகாப்பு சேவை அவசர சட்டம் – 2021-ஐ ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது.

அரசு கொண்டுவந்துள்ள பாதுகாப்பு சேவை அவசர சட்டத்தில் இதற்கு முன்னர் கொண்டு வரப்பட்ட தொழிலாளர் விரோத சட்டங்களை விட மிகவும் ஆபத்தான சரத்துக்கள் உள்ளன. தொழில் தகராறு சட்டம் 1947; அண்மையில் ஒன்றிய அரசு நிறைவேற்றிய தொழிலுறவு தொகுப்புச் சட்டம் – 2020 ஆகியவற்றுக்கு இச்சட்டம் புறம்பாக உள்ளது.

இந்த அவசர சட்டத்தில் அத்தியாவசிய பாதுகாப்பு பணிகள் என்பதற்கான வரையறை அனைத்து தொழிலாளர் உரிமைகளை நசுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின்படி வேலை நிறுத்தம் சட்டவிரோதமானது என்று ஒன்றிய அரசு அறிவித்துவிட்டால், தொழிலாளர் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு பணி நீக்கம் செய்யப்படலாம். தடையையும் மீறி வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது பிணையில் வெளிவர முடியாத பெரும் குற்றமாகும்.

தொழிலாளி வர்க்கத்தின் எதிர்ப்புக் குரலை நசுக்கிவிட்டு எத்தகைய எதிர்ப்பும் இல்லாமல் கார்ப்பரேட் முதலாளித்துவத்தின் கரங்களில் இந்திய ராணுவ ஆயுத தளவாட உற்பத்தியை ஒப்படைக்கும் ‘தொலைநோக்குப்’ பார்வையோடு ஒன்றிய அரசு இந்த சட்டத்தை உருவாக்கியுள்ளது. தனியார்மயத்துக்கு எதிராகப் போராட்டத்தை ஒடுக்கவும் எதிர்ப்புக் குரலை நசுக்கவும், கொடிய சட்டத்தின் மூலம் தொழிலாளி வர்க்கத்தின் உணர்வுகளை மழுங்கடிக்கச் செய்யவும் இந்த அவசர சட்டம் போடப்பட்டுள்ளது. கொண்டு வந்துள்ள இந்த அவசர சட்டம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது.

இந்திய தொழிலாளி வர்க்கம் உரிமைகளைப் வென்றெடுக்க நடத்தியப் போராட்டக் களங்கள் வீரஞ்செறிந்தவை. அரசு ஏவிவிட்ட அத்துனை அடக்குமுறைகளையும் நெஞ்சுரத்தோடு எதிர்கொண்ட வீர வரலாற்று காவியங்கள். போலீசின் குண்டாந்தடி உடம்பை பதம் பார்த்த போதும், துப்பாக்கி ரவைகள் நெஞ்சைத் துளைத்த போதும் சாவுக்கு அஞ்சாமல் சமர் புரிந்த போராளிகள் பெற்றுத்தந்த உரிமைகள். வேலை நிறுத்தம் என்பது தொழிலாளி வர்க்கத்தின் போராட்ட ஆயுதம்.

சங்கம் வைப்பது, கோரிக்கைகளை வென்றெடுக்க போராட்டம் நடத்துவது ஆகியவை எல்லாம் அடிப்படை உரிமைகள். கருப்புச் சட்டத்தின் மூலம் இந்த உரிமைகளைப் பறிக்கும் ஒன்றிய அரசின் செயல்பாடு, பாதுகாப்புத் தளவாட உற்பத்தி தொழிலகத்தோடு மட்டும் நின்று விடக்கூடியது அல்ல.

ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள இந்த அடிமை சாசனத்தை கிழித்தெறிய ஆர்த்தெழுந்து களம் காண வேண்டும். அரசுத் துறையை கார்ப்பரேட் மயமாகி முதலாளித்துவ கொள்ளை கும்பலுக்கு தாரைவார்க்கும் முயற்சிகளை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும்.

படிக்க :
♦ தொழிலாளர்களை வஞ்சிக்கும் தொழிலாளர் நலச் சட்டத் திருத்தம் !
♦ தொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு !

கார்ப்பரேட் கும்பலின் நலன் காக்க கொண்டுவரப்படும் இத்தகைய கருப்புச் சட்டங்களை எதிர்த்து முறியடிக்க, அனைத்து வகையான தொழிலாளர்களையும் ஒன்று படுத்துவது, அணிதிரட்டுவது முதன்மையான கடமையாகும். அடக்குமுறைச் சட்டத்தை தூள்தூளாக்க போராடும் ஆயுத தளவாட தொழிலாளர்களுக்கு அரண் அமைத்துப் பாதுகாக்க வேண்டியது இந்திய பாட்டாளி வர்க்கத்தின் உடனடி கடமையாகும்.


இரணியன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க