கொரோனா தொற்றைப் பயன்படுத்தி இந்தியா முழுவதும் மக்கள் விரோத சட்டங்களை அமல்படுத்தி வருகிறது பாஜக. நாம் போராடி பெற்ற உரிமைகள் அனைத்தும் நம் கண் முன்னே பறிக்கப்படுகிறது. அந்த வரிசையில் தொழிலாளர் நலச் சட்டத் திருத்தம் செய்து தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளையும் பறித்து வருகிறது பாஜக.

பாஜக அரசு கொண்டு வரும் தொழிலாளர் நலச் சட்டத் திருத்தத்தைக் கண்டித்து பல்வேறு தொழிற்சங்கங்களும் கட்சிகளும் போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில் இத்தகைய தொழிலாளர் விரோதச் சட்டங்களை எதிர்த்து இந்தியத் தொழிற்சங்க மையங்களின் சார்பில் வருகின்ற 26.11.2020 அன்று மாபெரும் பொது வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலாளிகளின் லாபவெறிக்கு தீனி போட்டு பன்னாட்டு மூலதனத்தை ஈர்ப்பதையே நோக்கமாக் கொண்டு தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்தி, கொத்தடிமை முறையிலான சட்டங்களை இயற்றிவருகிறது பாஜக அரசு. ஏட்டளவிலாவது இருந்த 44 தொழிலாளர் நலச் சட்டங்களில், 15 சட்டங்களை ரத்து செய்து விட்டு, மீதமுள்ள 29 சட்டங்களை 4 தொகுப்புகளாக்கி, தொழிலாளர் உரிமை, நலன், பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்தையும் பறிக்கத் திட்டமிட்டுள்ளது.

படிக்க :
♦ தொழிலாளர் சட்டத் திருத்த மசோதா : ஒரு பார்வை | பா. விஜயகுமார்

♦ ஜனவரி 8 – பொது வேலை நிறுத்தத்தை ஆதரிப்போம் !

சங்கம் சேரக்கூடாது, தொழிற்சாலைக்கு எதிராகப் போராடக்கூடாது, சம்பள உயர்வுக் கேட்கக் கூடாது, போனஸ் கிடையாது, நிரந்த வேலைக்கு உத்திரவாதம் கிடையாது, ஓய்வூதியம் தர முடியாது, ஆட்குறைப்பு, சம்பளக் குறைப்பு, தொழிற்சங்க உரிமை பறிப்பு, தொழிற்சங்க அங்கீகாரத்தைச் சிதைப்பது, குறைந்தபட்ச ஊதியத்திற்கு குந்தகம் விளைவிப்பது என பல்வேறு தொழிலாளர் விரோத நடவடிக்கைகளில் சட்டவிரோதமாக தொழிற்சாலைகள் அரசின் உதவியுடன் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் இதனை கார்ப்பரேட்டுகள் சட்டரீதியாகவே செய்வதற்கு உகந்த வகையில்தான் சட்ட திருத்தங்களை மேற்கொண்டுள்ளது மோடி அரசு.

தனியார்மயம், தாராளமயம், உலகமயம் போன்ற கொள்கைகளின் அடிப்படையில் அனைத்து அரசுத் துறைகளையும் தனியாருக்கு தாரைவார்ப்பது, தொழிலாளர் நலச்சட்டத்தை திருத்துவது, விவசாயிகளுக்கு எதிரான வேளாண் மசோதாக்களை அமல்படுத்துவது, கல்வி, மருத்துவம், போக்குவரத்து தனியார்மயம், இயற்கை வளங்கள் சூறையாடப்படுதல் ஆகியவை அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. தனியார்மயம் தாராளமயத்தின் விளைவாகத்தான் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு, பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரிப்பு, ஏழைகளுக்கு கல்வி மற்றும் மருத்துவம் கிடைக்காமல் போவது ஆகியவை நடைபெறுகின்றன.

எனவே நவம்பர் 26 அன்று நடைபெறவிருக்கும், நாடு தழுவிய பொது வேலை நிறுத்தப் போராட்டத்தை தொழிலாளர்களின் தனிப்பட்ட பிரச்சினையாக பார்க்க முடியாது. தனியார்மயம், தாராளமயம், உலகமயத்தினால் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்படும் நம் ஒவ்வொருவருடைய பிரச்சினையும்தான்.

இந்த போராட்டத்தில் அகில இந்திய சாலைப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் சம்மேளனம் (சிஐடியு), புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி (புஜதொமு), தொமுச, இந்தியத் தொழிற்சங்கக் கவுன்சில் (ஏஐசிசிடியு), ஐஎன்டியுசி, இந்திய சாலைப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் தேசிய சம்மேளனம், போக்குவரத்து மஸ்தூர் யூனியன் (டிஎம்யு-டிஎஸ்), தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம், பெஸ்ட் தொழிலாளர் யூனியன், தமிழ் மாநில பஞ்சாலைத் தொழிலாளர் சம்மேளனம் ஆகிய சங்கங்கள் பங்கேற்கின்றன. மேலும், திமுக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளும் இந்தப் பொது வேலைநிறுத்தத்தை ஆதரித்து அறிக்கைகள் வெளியிட்டுள்ளன.

மக்கள் விரோத சட்டங்களை இயற்றி அமல்படுத்தும் பாசிச பாஜக அரசுக்கு எதிராக அனைவரும் களத்தில் இறங்குவோம்.


சந்துரு
நன்றி :
தீக்கதிர் (09-11-2020)

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க