பொதுத்துறைகளை கார்ப்பரேட்டுகளுக்குத் தாரைவார்ப்பது, பெட்ரோல் டீசல் விலை உயர்வு ஆகியவற்றை எதிர்ப்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து மத்தியத் தொழிற்சங்கங்கள் 2 நாள் நாடுதழுவிய வேலைநிறுத்தத்தை நடத்தி வருகின்றன. போராட்டம் தொடங்குவதற்கு முன்னதாகவே, விலைபோகும் பத்திரிகைகளும் ஊடங்களும் வழக்கம்போலவே தங்கள் தொழிலாளர் விரோதப் பிரச்சாரத்தை நடத்த ஆயத்தமாகிவிட்டன.
தமிழகத்தின் எல்லா மாவட்டங்களின் பேருந்து நிலையங்கள், சென்னை மாநகரின் முக்கிய பேருந்து நிலையங்கள், பணிமனைகள் – ஆகியவற்றிலிருந்து பேருந்துகள் கிடைக்காமல் மக்கள் ‘அவதிப்படும்’ ‘செய்தியை’ நேரலையாக வழங்கி வருகிறார்கள் செய்தியாளர்கள். மக்கள் ‘அவதிப்படவிருப்பதை’ முன்கூட்டியே அவதானித்து ‘பொறுப்புணர்வுடன்’ அதிகாலை 6 மணிக்கே அங்கே படையெடுத்துவிட்டனர் போலும்.
“70% பேருந்துகள் ஓடவில்லை”, “மக்கள் நீண்ட நேரம் காத்துக் கிடக்கும் அவலம்”, “இயல்புநிலை பாதிப்பு”, “பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் செல்ல முடியாமல் அவதிப்படும் மாணவர்கள்”, “வேலைக்குச் செல்லமுடியாமல் வீட்டுக்கும் திரும்ப முடியாமல் அவதிப்படும் மக்கள்”, “2-3 மணி நேரத்துக்கும் மேல் காத்துக்கிடக்கும் அவலம்”, “கட்டணக் கொள்ளையடிக்கும் ஆட்டோ ஓட்டுனர்கள்”, “கிடைக்கும் பேருந்துகளில் தொங்கிக் கொண்டும் கூரைகளில் ஏறியும் பயணம் செய்யும் அவலம்”, “ஓடும் பேருந்துகளையும் நிறுத்தி அடாவடி செய்யும் தொழிற்சங்கத்தினர்”, “வங்கி சேவைகள் முடங்கும் அபாயம்” – இப்படிப் பலவாறாக இடைவெளியின்றி தொடர்ந்து ஒளிபரப்பப்படுகிறது இவர்களின் தொழிலாளர் விரோதப் பிரச்சாரம். முதல்வன் திரைப்பட பாணியில் ஒளிபரப்படும் இந்த அவதூறு பிரச்சாரத்திற்கு மக்களில் பெரும்பகுதி பலியாகமல் இருப்பதும் இல்லை.
படிக்க :
மார்ச் 28, 29 – அகில இந்திய வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச்செய்வோம் ! | புஜதொமு
மார்ச் 28, 29 நாடு தழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டம் !
ஆளும் வர்க்கங்களின் கோரச் சுரண்டாலால் மக்கள் பாதிக்கப்படும் எந்தப் பிரச்சனையிலும் ‘அவலம்’ ‘அபாயம்’ போன்ற கடுமையான பதங்களை மறந்தும் பயன்படுத்தாத இந்த ஊடகங்களோ, மக்களும் தொழிலாளர்களும் இத்தகைய வேலைநிறுத்தங்கள், ஆர்ப்பாட்டங்கள், மறியல்களில் ஈடுபடுபடும்போது மட்டும் வரிந்து கட்டிக் கொண்டு வந்துவிடுகின்றன.
4 மணி நேர அவகாசத்தில் அறிவிக்கப்பட்ட கொரோனா ஊரடங்கைத் தொடர்ந்து இந்தியாவின் புலம்பெயர் தொழிலாளர்கள் குறுக்கும் நெடுக்குமாக பல்லாயிரம் மைல்களை நடந்தே கடந்தனர். சோறின்றி, தண்ணீரின்றி கிடைக்கும் லாரிகளிலும் கண்டெய்னர்களிலும் மூச்சுத் தினற பயணம் செய்தனர். அவ்வளவு ஏன், சென்னை உள்ளிட்ட அனைத்து பெருநகரங்களிலும் மின்சார இரயில், பேருந்து பயணம் என்பதே அன்றாட சாகசத்திற்கு ஒப்பானது. நெரிசலிலும், படியில் தொங்கிக் கொண்டும்தான் தங்கள் அன்றாட வாழ்வைக் கழித்து வருகிறார்கள் மக்கள். வடமாநிலங்களுக்குச் செல்லும் தொழிலாளர்கள் முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் ஒருவர் கால்மேல் ஒருவர் நின்றுகொண்டும், கழிவறைகளிலும், மேற்கூரைகளிலும் பயணித்துக் கொண்டும் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றுவரும் அவலத்தை காணாதவர்கள் யாரும் இல்லை என்றே சொல்லாலாம்.
நாட்டின் பெரும்பாலான கிராமப் பகுதிகளுக்கு ஒழுங்கான சாலை வசதிகளோ, பேருந்து வசதிகளோ, ஏன் மின்சார வசதியோ கூடக் கிடையாது. அவசர மருத்துவத் தேவைக்கும் பிரசவத்திற்கும் கூட நகரத்தை நோக்கிச் செல்ல முடியாமல் அவர்கள் தினம் தினம் அவதியுற்று வருகின்றனர். அவ்வளவு ஏன், சென்னையின் மையப்பகுதியான தரமணிக்கு அருகிலுள்ள கல்லுக்குட்டை என்ற பகுதியைச் சென்று பாருங்கள், குண்டும் குழியுமாக ஒழுங்கான சாலை கூட இல்லாமல் ஆண்டுக்கணக்கில் மக்கள் அவதியுற்று வருகிறார்கள். பிரசவத்திற்குச் செல்லும் வழியிலேயே குழந்தை பிறந்துவிடும் அளவுக்கு கொடூரமான பகுதி அது.
இவற்றையெல்லாம் “அபாயம்” “கொடூரம்” “அவலம்” என்று ஒளிபரப்பாத ஊடகங்கள். இன்னும் சொல்லப்போனால் கொரோனா ஊரடங்கின்போது, பலநூறு கி.மீ தொலைவில் உள்ள தனது ஊருக்கு தன் தந்தையுடன் சைக்கிளில் சென்ற சேர்த்த சிறுமியின் “அவலத்தை” கூச்சமேயின்றி “சாதனையாக” ஒளிபரப்பின. இன்று கிடைக்கும் பேருந்துகளில் கூரையில் ஏறிப் பயணிப்பதை ஓடி ஓடிப் படம் பிடிக்கும் தொலைக்காட்சிகள், வடமாநிலங்களில் இவை அன்றாட நிகழ்வாக இருப்பதை மறந்தும் ஒளிபரப்பியதில்லை. மோடி அரசின் பணமதிப்பழிப்பால் தங்கள் சொந்தப் பணத்தை எடுக்க முடியாமல் மக்கள் வீதிகளில் அலைந்து செத்த ‘அவலத்தையும்’ வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடி உயிர்துறந்த விவசாயிகளின் ‘அவலத்தையும்’ இதில் பாதியளவுக்குக் கூட ஒளிபரப்பவில்லை.
மக்களின், தொழிலாளர்களின் நியாயமான வேலை நிறுத்தங்களின்போது ஏற்படும் பாதிப்புகளை ஒளிபரப்ப வரிந்துகட்டிக் கொண்டுவரும் விலைபோகும் ஊடகங்கள், அதில் கால்வாசியளவுக்குக் கூட மேற்கண்ட ‘அவலங்களை’ ஒளிபரப்பியதில்லை.
மேலும் மார்ச் 28 அன்று காலையிலிருந்து எல்லாத் தொலைக்காட்சிகளும் பேருந்து நிலையங்களில் நின்று மக்கள் ‘அவதிப்படுவதை’ படம்பிடிப்பதைத்தான் ஓடி ஓடிச் செய்கின்றன. மாறாக, போராடும் தொழிலாளர்களிடம் சென்று அவர்களின் கோரிக்கைகளையும் அதன் நியாயத்தன்மையையும் கேட்பதையோ, பேட்டியெடுப்பதையோ, ஒளிபரப்புவதையோ ஒப்புக்குச் செய்வதுடன் முடித்துக் கொண்டன.
மக்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்காகவும், உரிமைக்காவும் போராடுவதை பெரும்பாலான ஊடகங்கள் செய்தியாகக் வெளியே கொண்டுவருவது கூடக் கிடையாது. நாட்டை பாதிக்கும் அதிமுக்கியமான பிரச்சினைகள் பெரும்பாலானவற்றை தங்கள் ‘விவாதக் களத்தில்’ விவாதிப்பதும் கிடையாது. உதாரணமாக திருவண்ணாமலை பாலியப்பட்டு பகுதியில் சிப்காட் அமையவுள்ளதை எதிர்த்து 100 நாட்களுக்கும் மேலாக அப்பகுதி மக்கள் போராடி வருவதை இந்த விலைபோகும் ஊடகங்கள் செய்தியாகக் கூட வெளியே கொண்டுவரவில்லை.
ஓடும் பேருந்துகளை நிறுத்தச் சொல்லி தொழிற்சங்கத்தினர் அடாவடியில் ஈடுபடுவதாக சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி. சங்கத்தின் பெயர்களைக் கூறி இழிவுபடுத்துகின்ற இந்த ஊடகங்கள், கார்ப்பரேட்டுகள், அதிகார வர்க்கம் தவறு செய்யும் போதெல்லாம் அவர்களின் பெயர்களைக் குறிப்பிடாமல் “ஒரு தனியார் நிறுவனம்” “பிரபல தனியார் நிறுவனம்” என்றும் “அதிகாரி” என்றும் குறிப்பிட்டே செய்திகளை வெளியிட்டு அவர்களைக் காப்பாற்றுகின்றன. உதாரணமாக, பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறப்பு டி.ஜி.பி. ராஜேஸ்தாஸை பெயர் குறிப்பிடாமலேயே பல பத்திரிகைகள் எழுதின. திருவண்ணாமலையில் வன்னிய சாதி வெறியர்கள் அருந்ததியர் குடியிருப்புகளைச் சூறையாடியபோது அதை, “இருபிரிவினரிடையே மோதல்” என்று அயோக்கியத்தனமாக செய்தியை வெளியிட்டு சாதி வெறியர்களுக்குச் சேவை செய்தன. இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.
வேளாண் சட்டங்கள் இரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து துக்ளக் இதழில் வெளியான கேலிச்சித்திரம் நம்மிடையே ஆத்திரத்தை கிளப்பிவிட்டது. ஆனால், இதுபோல தொடர்கதையாகிவரும் விலைபோகும் ஊடகங்கள், பத்திரிகைகளின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோதப் பிரச்சாரங்கள் இயல்பாக சமூகத்தில் பொதுக்கருத்தை உருவாக்கி வருகின்றன. போக்குவரத்து ஊழியர்கள், ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் போன்றோர் தங்கள் நியாயமான கோரிக்கைகளுக்குப் போராடும்போதும் இவ்விலைபோகும் ஊடகங்கள் இதையே செய்தன.
படிக்க :
இரயில்வே பணிக்காக தேர்வெழுதிய மாணவர்கள், போராட்டம்! தீவிரமடையும் வேலையில்லாத் திண்டாட்டம்!!
வேலையில்லா திண்டாட்டம் : 15 பணியிடங்களுக்கு 11000 பேர் விண்ணப்பம் !
நாட்டில் பெரும்பாலான சிறுவர்கள் கல்வி கற்க வாய்ப்பற்று குழந்தைத் தொழிலாளிகளாக வேலைக்குச் செல்வதை ஒளிபரப்பத் துப்பில்லாத இந்த ஊடகங்கள், ஜாக்டோ – ஜியோ ஆசிரியர் போராட்டத்தால் மாணவர்களின் கல்வி ஒரே அடியாக ஒழிந்துவிட்டத்தைப் போன்று கூச்சலிட்டதை நாம் மறந்திருக்க மாட்டோம். “ஆசிரியர்கள் பல பத்தாயிரங்கள் சம்பளம் வாங்கிக் கொண்டு இன்னும் கேட்கிறார்கள் பாருங்கள்” என்ற பொய்யான கருத்தை வெற்றிகரமாக மக்களின் மனங்களில் விதைத்து, அரசுக்கும் ஆளும் வர்க்கங்களுக்கும் சேவை செய்து அவர்களின் பாதத்தைக் கழுவிக் குடித்தன.
அவர்களுக்கு நாம் சொல்ல விரும்பவது இதைத்தான். விலைபோகும் ஊடகங்களே! உங்களின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோதப் பிரச்சாரத்தை இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.
ஊடகவியலாளர்களே! பத்திரிகையாளர்களே! மக்களின், தொழிலாளர்களின் நியாயமான போராட்டங்களுக்கு உறுதுணையாக நில்லுங்கள். பணத்திற்காகவும், டி.ஆர்.பி.க்காவும், அரசியல் ஆதாயத்திற்காகவும் உங்களின் ஊடக முதலாளிகள் இடும் உத்திரவுகளை எதிர்த்து நில்லுங்கள்.
அவர்கள் போராடுவது உங்களுக்கும் சேர்த்துதான்.
தீரன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க