த்தியப் பிரதேசத்தின் குவாலியர் மாவட்ட நீதிமன்றத்தில் பியூன், தோட்டக்காரர், ஓட்டுநர், துப்புரவு பணியாளர் ஆகிய 15 பணியிடங்களுக்கு மட்டும் பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள் என மொத்தம் 11,000 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தின் நேர்காணல் மையங்களுக்கு வெளியே உள்ள நீண்ட வரிசைகள் இந்தியா முழுவதும் நீடிக்கும், வேலையில்லாத் திண்டாட்டத்தின் மோசமான நிலையை படம் பிடித்துக் காட்டுகிறது. வரிசையில் நிற்பவர்கள் அனைவரும் பட்டம் பெற்றவர்கள். நல்ல வேலைக்கும், சம்பளத்திற்கும் கனவு கண்டவர்கள். எனினும், அரசு வேலைக்கு பல ஆண்டுகளாக காத்திருக்கிறார்கள். இறுதியாக படிப்பிற்குரிய வேலை கிடைக்காத நிலையில், இந்த இளைஞர்கள் மத்தியப் பிரதேசத்தின் வெவ்வேறு மாவட்ட நீதிமன்றங்களில் பியூன்கள் மற்றும் தோட்டக்காரர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
இந்த வேலைகளுக்குக் கல்வித் தகுதி 8-ம் வகுப்பு மற்றும் ஓட்டுநர் பணிக்கானக் கல்வித் தகுதி 10-ம் வகுப்பு என்று இருந்தாலும், இப்பட்டதாரிகள் தங்கள் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துள்ளார்கள்.
குவாலியர் மாவட்ட நீதிமன்றத்தில் 15 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் பெரும்பாலான இளைஞர்கள் பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள் மற்றும் எல்.எல்.பி, சிவில் நீதிபதி தேர்வுகள், பி.டெக்., எம்.பி.ஏ. மற்றும் பி.எச்.டி.-க்கு தயாராகி வருபவர்கள். இப்போது அவர்கள் நேர்காணலுக்காக காலை 7 மணி முதல் நீதிமன்றத்திற்கு வெளியே வரிசையில் நிற்கிறார்கள்.
படிக்க :
பக்கோடா புகழ் மோடி ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு !
கேள்வி பதில் : வேலையில்லா திண்டாட்டம் தீர்க்க என்ன வழி ?
இதேபோல், நரசிங்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் பியூன்கள், ஓட்டுநர்கள், துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் தோட்டக்காரகள் ஆகிய 16 பணியிடங்களுக்காக 6,973 வேலையற்ற இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்தவர்களில் கரேலியைச் சேர்ந்த அபிநந்தன் கவுரவ் என்பவர் ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். M.Ed. பட்டமும், பி.எஸ்.பி. பட்டமும் பெற்றுள்ளார். இருப்பினும் வேலையில்லாத் திண்டாட்டம் அபிநந்தனை பியூன் வேலைக்கான நேர்காணலுக்கு வரிசையில் நிற்க வைத்துள்ளது.
“வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. மற்ற அலுவலகங்களில் நிரந்தர வேலை இல்லை. ஆனால் அரசு வேலை நிரந்தரம், நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பு வழங்குகிறது” என்கிறார் அபிநந்தன்.
சமூகவியலில் முதுகலைப்பட்டம் பெற்றுள்ள ராஜேஷ், ஓர் மாற்றுத்திறனாளி. அவருக்கு ஒரு கால் மட்டுமே உள்ளது. “நான் நீண்ட நாட்களாக வேலையில்லாமல் இருக்கிறேன். கோவிட் தொற்றுநோய்க்கு மத்தியில் இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. அதேநேரத்தில் தேர்தல்களில் மூன்றாண்டுகள் வீணடிக்கப்பட்டுவிட்டன. இப்போது நான் ஒரு பியூன் வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்” என்று அவர் கூறினார்.
அரசு வெளியிட்ட வேலைவாய்ப்புக்காக பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை விண்ணைமுட்டும் அளவிற்கு குவிந்துள்ளது. அரசின் புள்ளிவிவரம் படி, 2018-ம் ஆண்டில் 7,47,000 பேர் பதிவு செய்துள்ளனர். 2019-ம் ஆண்டில் 8,46,000 பேர் பதிவு செய்துள்ளனர். 2020-ம் ஆண்டில் இறுதியில் மத்தியப் பிரதேசத்தின் வேலைவாய்ப்புக்காக பதிவு செய்தவர்களில் பணி கிடைக்காமல் இருப்பவர்களின் மொத்த எண்ணிக்கை 24,72,000 பேர். ஆனால், 2020-ம் ஆண்டில் 3605 விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே பணி வழங்கப்பட்டுள்ளது என்று அரசாங்கம் கூறுகிறது.
தற்போதுள்ள தரவுகளின் படி, ஆசிரியர்கள், போலீசுத்துறை மற்றும் பட்வாரிகள் (நிலத்தின் உரிமையைப் பற்றிய பதிவுகளை வைத்திருக்கும் ஒரு அரசு அதிகாரி) பணிகளுக்கு சுமார் 80,000 காலியிடங்கள் உள்ளன.
000
மத்தியப் பிரதேசத்தின் பாஜக-வின் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான அரசு, வேலையில்லாத் திண்டாட்டத்தின் காரணமாக கடுமையான விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. இம்மாநிலம் வேலையின்மையின் மையமாக மாறிவருவதாக முன்னால் முதல்வர் பி.சி. சர்மா குற்றம் சாட்டியுள்ளார். “மக்கள் பல ஆண்டுகளாக வேலையில்லாமல் இருக்கிறார்கள். ஒரு சில வேலைகளுக்காக ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பிக்கிறார்கள். அவர்கள் அந்த வேலைகளுக்கு அதிக தகுதிவுடையவர்கள்” என்று அவர் கூறினார்.
மத்தியப் பிரதேசத்தின் வேலையில்லாத் திண்டாட்டம் தீவிரமடைந்து வருகிறது என்பதையே இந்த பட்டதாரி இளைஞர்களின் அவலநிலை நமக்கு உணர்த்துகிறது. இது வெறுமனே மத்திய பிரதேசத்தின் நிலைமை மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியாவின் நிலைமை. ‘56 இஞ்ச்’ மோடிஜி ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்பு உருவாக்குவதாக பொய் கூறி ஆட்சிக்கு வந்துவிட்டு, மக்களை பக்கோட்டா விற்கச் சொன்னகதை நாடறியும் !

சந்துரு
செய்தி ஆதாரம் : இந்தியா டுடே

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க