மத்தியப் பிரதேசம்: காவிகளின் கலவர நோக்கத்தை மறுத்ததால் போலீசு அதிகாரி பணியிட மாற்றம்

மோச்சிபுரா பகுதிக்குள் ஊர்வலம் சென்ற போது முஸ்லீம் மக்கள் விநாயகர் சிலையின் மீது கற்களை வீசியதாகக் கூறி அப்பகுதியின் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கியுள்ளது காவிக் கும்பல்.

செப்டம்பர் 11 அன்று அராஜகமாகப் போராட்டத்தில் ஈடுபட்ட சமஸ்த் இந்து சமாஜ் – ரத்லாம் என்கிற சங்கப் பரிவார அமைப்பினர்

டந்த செப்டம்பர் 7 ஆம் தேதி, மத்தியப் பிரதேசம் இந்தூர் மாவட்டத்தில் உள்ள ரத்லம் (Ratlam) என்ற பகுதியிலிருந்து நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளைக் கரைப்பதற்காக ஊர்வலமாக எடுத்துச் சென்ற காவிக்குப்பல், மோச்சிபுரா என்ற முஸ்லீம் மக்கள் வாழும் பகுதிக்குள் ஊர்வலத்தை நடத்திச் சென்று அப்பகுதியில் திட்டமிட்டு கலவரத்தில் ஈடுபட்டுள்ளது.

மோச்சிபுரா பகுதிக்குள் ஊர்வலம் சென்ற போது முஸ்லீம் மக்கள் விநாயகர் சிலையின் மீது கற்களை வீசியதாகக் கூறி அப்பகுதியின் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கியுள்ளது காவிக் கும்பல். மேலும், முஸ்லீம் மக்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசு நிலையத்திலும் புகாரளித்தது.

அந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்துவதற்காகப் போலீசு கண்காணிப்பாளர் ராகுல் குமார் தலைமையில் போலீசானது கலவரம் நடந்த பகுதிக்குச் சென்றது. போலீசைப் பின்தொடர்ந்து சென்ற 500-க்கும் மேற்பட்ட காவிக் குண்டர்கள் போலிசு வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தினர். வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்தனர். அதனால் வன்முறையைக் கட்டுப்படுத்த போலீசு, தடியடி நடத்தியும் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும் காவிக் கும்பலைக் கலைத்தது.


படிக்க: கர்நாடகா: விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தைக் கலவரமாக மாற்றிய காவிக் கும்பல்


மேலும், சி.சி.டி.வி. காட்சிகளை ஆராய்ந்து பார்த்த போலீசானது முஸ்லீம் மக்கள் தான் திட்டமிட்டு விநாயகர் சிலைகள் மீது கற்களை எறிந்து கலவரத்தில் ஈடுபட்டார்கள் என்பதற்கான எந்தவொரு ஆதாரமும் இல்லாததால் கலவரத்தில் ஈடுபட்ட காவிக் குண்டர்களிடம் அமைதியாகக் கலைந்து போகும்படி தெரிவித்துவிட்டு முகம் அறியாத மூன்று நபர்கள் மீது மட்டும் வழக்குப் பதிவு செய்தது.

ஆனால் காவிக் கும்பல் கலைந்து செல்வதாக இல்லை. முஸ்லீம் மக்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசு நிலையத்தின் முன்பு “ஜெய் ஸ்ரீராம்” என்று முழக்கமிட்டபடி தர்ணாவில் ஈடுபட்டது. எனவே, போலீசானது பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா (BJYM ) அமைப்பின் மாவட்ட துணைத்தலைவர் உள்பட 150 பேர் மீது வழக்குப் பதிவு செய்தது.

மேலும், செப்டம்பர் 10 ஆம் தேதி, சமஸ்த் இந்து சமாஜ் – ரத்லாம் என்கிற இந்து சங்கப் பரிவார அமைப்பு இந்தூர் மாவட்ட ஆட்சியர் ராஜேஷை சந்தித்து விநாயகர் ஊர்வலத்தில் முஸ்லீம்கள் தாக்குதல் நடத்தியுள்ளதற்கான ஆதாரங்களைப் போலீசு கண்காணிப்பாளரிடம் சமர்ப்பித்த பிறகும் அவர் முஸ்லீம்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று புகாரளித்தது. மேலும் போலீசு கண்காணிப்பாளர் மீது 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கவும் செய்தது.


படிக்க: காவி-கார்ப்பரேட் கும்பலுக்கு படையலிட அபகரிக்கப்படும் வக்ஃப் சொத்துகள்!


அதனைத் தொடர்ந்து போலீசு கண்காணிப்பாளர் ராகுல் குமார் அன்றிரவே போபால் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார். காவிக் கும்பலின் மிரட்டலுக்குப் பணிந்து மாவட்ட ஆட்சியர் போலீசு கண்காணிப்பாளரை பணியிட மாற்றம் செய்துள்ளார் என்று நாம் கருதக் கூடாது. அதிகாரத்தில் இருந்துகொண்டு காவிக் கும்பலுக்குச் சாதகமாகச் செயல்படாத காரணத்தினாலேயே அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

விநாயகர் சதுர்த்தியின் போது மட்டுமல்ல, பல சமயங்களிலும் முஸ்லீம் மக்கள் மீது திட்டமிட்டுத் தாக்குதலில் ஈடுபட்டுவரும் காவிக் கும்பலானது அதிகார வர்க்கத்தின் துணையோடே அத்தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. எனவே தான் தங்களுடைய பாசிச நோக்கத்திற்கு இடைஞ்சலாக உள்ள அதிகாரிகளை அவர்களுடைய பதவிகளிலிருந்து வெளியேற்றுகிறது; ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டவர்களையும் தங்களுக்குக் கைப்பாவையாகச் செயல்படக் கூடியவர்களையும் இட்டு நிரப்புகிறது. அதற்கு மேற்கண்ட நிகழ்வு சிறந்த சான்றாகும்.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க