தனது இந்துராஷ்டிர கொடுங்கனவிற்காக இஸ்லாமிய மக்களை இரண்டாந்தர குடிமக்களாக்கும் நோக்கத்துடன் பல்வேறு பாசிச நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் பாசிச மோடி கும்பல், அதன் ஒரு அங்கமாக ‘‘வக்ஃப் வாரிய திருத்த மசோதா 2024-ஐ’‘ கொண்டுவந்துள்ளது.
ஆகஸ்ட் 8 அன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் ‘‘ஒருங்கிணைந்த வக்ஃப் மேலாண்மை, அதிகாரமளித்தல், திறன் மற்றும் மேம்பாட்டு சட்டம்’‘ (UMEED – Unified Waqf Management, Empowerment, Efficiency and Development Act) என்ற பெயரில் இம்மசோதாவை தாக்கல் செய்துள்ள பா.ஜ.க. கும்பல், வக்ஃப் வாரியங்கள், இஸ்லாமிய அமைப்புகள், கல்வியாளர்கள் என யாருடனும் கலந்தாலோசிக்காமல் தனக்கே உரிய பாசிச வழிமுறையில் இம்மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளது.
பொதுவாக, சட்டத்திருத்தங்களை செய்யும்போது ஏற்கெனவே உள்ள சட்டத்தில் ஒன்று முதல் பத்து திருத்தங்கள் வரை மேற்கொள்ளப்படும் நிலையில், பாசிச மோடி அரசோ இம்மசோதாவில் 44 திருத்தங்களை முன்மொழிந்துள்ளது. இத்திருத்தங்கள் அனைத்துமே இஸ்லாமிய மக்களுக்கு அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள மத உரிமைகளை பறித்து வக்ஃப் சொத்துகளை அபகரிக்கும் வகையிலேயே முன்மொழியப்பட்டுள்ளன.
இதனையடுத்து இம்மசோதாவிற்கு நாடு முழுவதுமுள்ள இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் பாசிச எதிர்ப்பு சக்திகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இம்மசோதா இஸ்லாமிய மக்களின் வக்ஃப் சொத்துகளை அபகரிக்கும் வகையில் உள்ளதையும் அரசியலமைப்பு சட்டப்பிரிவுகள் 14, 15, 25, 26, 30-களுக்கு எதிராக உள்ளதையும் அம்பலப்படுத்தி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்தனர். பா.ஜ.க-வின் கூட்டணிக் கட்சிகளான தெலுங்கு தேசம் மற்றும் லோக் ஜனசக்தியின் எம்.பி-க்களும் வக்ஃப் மசோதாவை அவசரமாக நிறைவேற்றக் கூடாது, நாடாளுமன்றக் கூட்டுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்றனர். இதனையடுத்து, பா.ஜ.க. எம்.பி. ஜகதாம்பிகா பால் தலைமையிலான 31 பேர் அடங்கிய நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் பரிந்துரைக்கு மசோதா அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
சட்டத்திருத்தத்திற்கு பின்னாலிருக்கும் பாசிஸ்ட்டுகளின் சதித் திட்டம்
இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த மக்கள் இறையருளை நாடி நன்கொடையாக வழங்கப்படும் அசையும், அசையா சொத்துகளே வக்ஃப் சொத்துகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த சொத்துகளை நிர்வகிப்பதற்காக 1913-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் வக்ஃப் வாரியம் உருவாக்கப்பட்டது. 1954-ஆம் ஆண்டு நேரு ஆட்சியில் வக்ஃப் வாரிய சட்டம் உருவாக்கப்பட்டது. பின்னர் 1995-ஆம் ஆண்டில் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டு 2013-ஆம் ஆண்டில் அதில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
தற்போது, வக்ஃப் சொத்துகளை நிர்வகிப்பதற்கு நாடு முழுவதும் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட வக்ஃப் நிறுவனங்கள் உள்ளன. இவை ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டின் கீழுள்ள ஒன்றிய மற்றும் மாநில வக்ஃப் வாரியங்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன.
2022-ஆம் ஆண்டின் புள்ளிவிவரப்படி, நாடு முழுவதும் உள்ள வக்ஃப் நிறுவனங்களிடம் 7.8 லட்சத்திற்கும் மேற்பட்ட அசையா சொத்துகளும் ஒன்பது லட்சம் ஏக்கருக்கும் அதிகமான நிலங்களும் உள்ளன. இந்தியாவில் பாதுகாப்பு மற்றும் இரயில்வே துறைகளுக்கு அடுத்ததாக வக்ஃப் வாரியங்களிடமே அதிக சொத்துகள் இருக்கின்றன. இச்சொத்துகள் மூலம் கல்வி, மருத்துவம் போன்ற தேவைகளை இஸ்லாமிய மக்கள் பூர்த்தி செய்துகொள்வதோடு தங்களை தாங்களே சுயேட்சையாக நிர்வகிக்கும் அதிகாரம் கொண்டவர்களாகவும் உள்ளனர்.
இதனை சகித்துக்கொள்ள முடியாமல்தான் வக்ஃப் சட்டத்தை திருத்துவதன் மூலம், வக்ஃப் வாரியத்தின் அதிகாரங்களை பறித்து, பாசிசக் கும்பல் கட்டுப்படுத்தும் வகையில் அதன் நிர்வாகமுறை மாற்றியமைக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் இம்மசோதாவில் பல திருத்தங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
படிக்க: இஸ்லாமியரின் மத உரிமைகளைப் பறிக்கும் வக்ஃபு சட்டம் (திருத்தம்)!
சான்றாக, வக்ஃப் சொத்துகளின் மீது அரசு அல்லது தனிநபர் உரிமை கோரினாலோ; அரசு அல்லது தனிநபர் சொத்துகளின் மீது வக்ஃப் உரிமை கோரினாலோ, அந்த கோரிக்கைகளின் மீது இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் மாவட்ட ஆட்சியருக்கே உள்ளது என திருத்தம் முன்மொழியப்பட்டுள்ளது. இதுநாள்வரை வக்ஃப் வாரியத்திடம் உள்ள இந்த உச்சபட்ச அதிகாரத்தை வக்ஃப் வாரிய நிர்வாகத்தில் எந்த தொடர்பும் இல்லாத மாவட்ட ஆட்சியருக்கு வழங்குவதன் மூலம் வக்ஃப் வாரியத்தின் அதிகாரங்களை முற்றிலுமாக பறித்து அதனை வெறுமனே அலங்கார அமைப்பாக்கத் துடிக்கிறது, பாசிசக் கும்பல். மேலும், வக்ஃப் வாரியம் உரிமை கோரும் சொத்துகளை கணக்கெடுக்கும் ஆணையருக்கு உள்ள அதிகாரத்தையும் பறித்து மாவட்ட ஆட்சியருக்கு வழங்குகிறது.
ஏற்கெனவே உள்ள சட்டப்பிரிவு 40-இன் படி, ஒரு சொத்து வக்ஃபுக்கு சொந்தமானதா? இல்லையா? என்பதை நிர்ணயிப்பதில் “மாநில வக்ஃப் வாரியம்” தவறான தீர்ப்பு கொடுத்தால் வக்ஃப் வாரிய தீர்ப்பாணையத்திலும் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்திலும் எந்தவொரு நபரும் மேல்முறையீடு செய்வதற்கான வழிகள் உள்ளன. அப்படியிருக்கையில், மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் வழங்குவது என்பது மாவட்ட ஆட்சியர் என்ற பெயரில் சுற்றித்திரியும் ஆர்.எஸ்.எஸ். சங்கிகள் மூலம் வஃக்ப் சொத்துகளை அபகரிப்பதற்கான திட்டமிட்ட சதியாகும்.
அதேபோல், வக்ஃப் பத்திரம் இல்லாத சொத்துகளை வக்ஃப் சொத்துகளாக கருத இயலாது என்ற திருத்தம் மசோதாவில் முன்மொழியப்பட்டுள்ளது. 1900-களின் முற்பகுதியிலிருந்தே வக்ஃப் சொத்துகளை நிர்வகித்துவரும் வக்ஃப் வாரியத்திடம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளுக்கு முறையான சான்றிதழ்கள் இருப்பதற்கான அடிப்படையில்லை. இதனை மோப்பம் பிடித்தே அச்சொத்துகளை அபகரிப்பதற்காக இத்திருத்தத்தை முன்மொழிந்துள்ளது பாசிசக் கும்பல்.
மேலும், ஒன்றிய மற்றும் மாநில வக்ஃப் வாரியங்களுக்குள் இஸ்லாமியர் அல்லாத இருவரை உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும் என்ற திருத்தத்தையும் மசோதாவில் மோடி அரசு மேற்கொண்டுள்ளது. இதன்மூலம், இஸ்லாமியர் அல்லாதோர் என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ். கருங்காலிகளை வக்ஃப் வாரியத்திற்குள் நியமிப்பதன் மூலம் ஒன்றிய மற்றும் மாநில வக்ஃப் வாரியங்களை ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து வக்ஃப் வாரிய சொத்துகளை ஒட்டுமொத்தமாக கொள்ளையடிக்கப் பார்க்கிறது, காவிக் கும்பல்.
ஒருபுறம், வக்ஃப் வாரியங்களிடம் ஏற்கெனவே உள்ள சொத்துகளை அபகரிக்க திட்டம் தீட்டும் பாசிசக் கும்பல் இன்னொருபுறம் வருங்காலங்களில் வக்ஃப் வாரியத்திற்கு சொத்து சேரவிடாமலும் ஒடுக்குகிறது. சான்றாக, எந்தவொரு நிலத்தையும் வக்ஃபுக்கு சொந்தமானது என்று அறிவிக்கும் முன், வருவாய், கிராம நிர்வாகம் போன்ற அரசுத்துறைகளுக்கு ஆட்சேபணைகள் இருந்தால் அவற்றுக்கு தீர்வு காணப்பட்ட பிறகே அந்த நிலங்களை வஃக்புக்கு வழங்கவேண்டும் என்ற திருத்தத்தை மேற்கொண்டுள்ளது. இதன்மூலம், பாசிசமயமாகியுள்ள அரசுக்கட்டமைப்பை பயன்படுத்தி வருங்காலங்களில் வக்ஃபுகளுக்கு வழங்கப்படும் நிலங்களையும் அபகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதே பாசிச நோக்கத்திலிருந்துதான் ஐந்து ஆண்டுகளுக்கு இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றுபவர்கள் மட்டுமே வக்ஃபுக்கு சொத்துகளை வழங்க முடியும் என்றும் திருத்தத்தை முன்மொழிந்துள்ளது.
இத்தகைய இஸ்லாமிய விரோத மசோதாவை தாக்கல் செய்துவிட்டு, மறுபுறம் ஒன்றிய மற்றும் மாநில வக்ஃப் வாரியங்களில் இஸ்லாமிய பெண்கள் இருவர் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவர் என்ற திருத்தத்தையும் மேற்கொண்டு, இஸ்லாமிய பெண்களின் உரிமைக்காக போராடுவதாக நாடகமாடுகிறது காவிக் கும்பல். ஆனால், வக்ஃப் வாரியத்தின் உறுப்பினர்களாகவும் உயர் பொறுப்புகளிலும் இஸ்லாமிய பெண்கள் ஏற்கெனவே இருப்பதை சுட்டிக்காட்டி, காவிக் கும்பலின் வெறுப்பு பிரச்சாரத்தை பலரும் முறியடித்துள்ளனர்.
மேலும், இந்தியாவில் சிறுபான்மை மக்களாக உள்ள இஸ்லாமிய மக்களிடமுள்ள வக்ஃப் சொத்துகளை அவர்களிடமிருந்து பறிப்பதன் மூலம் இஸ்லாமிய மக்களை அதிகாரமற்றவர்களாக மாற்றி இரண்டாந்தர குடிமக்களாக்கத் துடிப்பதுடன் அச்சொத்துக்களை கார்ப்பரேட் கும்பலுக்கு படையலாக்கவும் பாசிசக் கும்பல் திட்டமிட்டுள்ளது.
வக்ஃப் சொத்துகளை சூறையாடத் துடிக்கும் காவி–கார்ப்பரேட் கும்பல்
நடைமுறையிலுள்ள வக்ஃப் வாரிய சட்டத்தின்படி, வக்ஃப் சொத்துகளை யாரும் வாங்கவோ விற்கவோ முடியாது. மாறாக, வாடகைக்கோ அல்லது குத்தகைக்கோதான் கொடுக்க முடியும். ஆனால் மோடி-அமித்ஷா கும்பலானது, ‘‘வக்ஃப் திருத்த மசோதாவில் 12 ஆண்டுகளுக்கு மேல் ஒருவர் வக்ஃப் சொத்துகளை வைத்திருந்தால் அவர் அந்த சொத்துக்கு உரிமையாளராக முடியும்’‘ என்ற திருத்தத்தை கொண்டுவந்துள்ளதன் மூலம் தனது நோக்கத்தை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியுள்ளது. ஏற்கெனவே, வக்ஃப் வாரியத்துக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை அம்பானி-அதானி கார்ப்பரேட் கும்பல், கோடீஸ்வரர்கள், தொழிலதிபர்கள், ரியல் எஸ்டேட் மாஃபியாக்கள் என பல கிரிமினல் கும்பல் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வைத்துள்ளது. சான்றாக, அம்பானியின் அண்டிலியா வீட்டின் நிலமும் வக்ஃப் வாரியத்திற்கு சொந்தமானது என்று குற்றச்சாட்டு உள்ளது.
ஆகவே, அரசு சொத்துகள் என்ற பெயரில் மாவட்ட ஆட்சியர் துணையுடன் அபகரிக்கப்படும் வக்ஃப் சொத்துகளும் கடந்த காலங்களில் பொதுத்துறை சொத்துகள் கார்ப்பரேட் கும்பலுக்கு தாரைவார்க்கப்பட்டது போலவே அம்பானி-அதானி கும்பல்களுக்கே விற்கப்படும்.
படிக்க: பயங்கரவாதி பைரன்சிங்கின் ஒப்புதல் வாக்குமூலம்!
இன்னொருபுறம், பல ஆண்டுகளாகவே வக்ஃப் வாரியத்தின் மீது பொய்-வெறுப்பு பிரச்சாரங்களை பரப்பிவரும் ஆர்.எஸ்.எஸ்-விஷ்வ ஹிந்து பரிஷத் கும்பலின் பாசிச நோக்கமும் இச்சட்டத்திருத்தத்தில் உள்ளடங்கியுள்ளது. வக்ஃப் வாரியத்தால் வெறுமனே நிலங்கள் மட்டுமின்றி மசூதிகள், தர்காக்கள், மதரசாக்கள் என பல்வேறு அமைப்புகளும் நிர்வகிக்கப்படுகின்றன. ஒருவேளை வக்ஃப் வாரிய திருத்த மசோதா சட்டமானால் பொய் பிரச்சாரங்களை கட்டவிழ்த்துவிட்டும், மாவட்ட ஆட்சியரின் துணையுடனும் இஸ்லாமிய மக்களின் வீடுகளும் வழிபாட்டுத்தலங்களும் இடிக்கப்படுவது நடந்தேறும்.
ஏற்கெனவே, உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், அசாம் போன்ற பா.ஜ.க. கும்பல் ஆளும் மாநிலங்களிலும் பசுவளைய மாநிலங்களிலும் இஸ்லாமிய மக்களின் வீடுகளும் வழிபாட்டுத்தலங்களும் சட்டவிரோதமாக அரசு நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக கூறி புல்டோசரால் இடிக்கப்படும் பயங்கரவாதம் தினந்தோறும் அரங்கேறிவரும் நிலையில் இச்சட்டத்தால் அது புதிய உச்சநிலைக்கு செல்லும். எனவே, பாபர் மசூதியை இடித்து ஆயிரக்கணக்கான இஸ்லாமிய மக்களை இனப்படுகொலை செய்த ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலானது இச்சட்டத்திருத்தத்தின் மூலம் நாடு முழுவதும் இனக்கலவரங்களை கட்டவிழ்த்துவிடும் சதித்திட்டத்தையும் கொண்டுள்ளது. இந்த இந்துமுனைவாக்க நோக்கத்திலிருந்தே மகாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் இம்மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இச்சட்டத்திருத்தமானது, மாவட்ட ஆட்சியர் என்ற பெயரில் சுற்றித்திரியும் ஆர்.எஸ்.எஸ். சங்கிகள் மூலம் வஃக்ப் சொத்துகளை அபகரிப்பதற்கான திட்டமிட்ட சதியாகும்.
இத்தகைய பாசிச நோக்கத்துடன் கொண்டுவரப்படும் மசோதாவை நிறைவேற்றவிடாமல் தடுப்பது இந்தியாவில் உள்ள பாசிச எதிர்ப்பு சக்திகளின் கடமையாகும். ஆனால், கடும் எதிர்ப்பின் காரணமாக பா.ஜ.க. இம்மசோதாவை நாடாளுமன்றக் கூட்டுக் குழுவிற்கு அனுப்பியதனாலேயே பாசிசக் கும்பல் பயந்துவிட்டது, பணிந்துவிட்டது, சட்டத்தை நிறைவேற்ற முடியாது என்றெல்லாம் இந்தியா கூட்டணி ஆதரவாளர்களும் பாசிச எதிர்ப்பாளர்கள் சிலரும் கருதுகின்றனர்.
ஆனால், கூட்டு குழுவால் மசோதாவின் மீது பரிந்துரைகள் வழங்க முடியுமே ஒழிய திருத்த முடியாது. எனவே, வருகின்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் இம்மசோதா நிறைவேற்றப்படுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன. எனவே, எதிர்க்கட்சிகளுக்கு துளியும் ஜனநாயகம் வழங்காத நாடாளுமன்ற மரபுகளை மதிக்காத பாசிசக் கும்பலுக்கு எதிராக இஸ்லாமிய மக்களுடன் இணைந்து களத்தில் போரட்டத்தை கட்டியமைப்பதன் மூலமே நாடாளுமன்றத்தில் மசோதாவை நிறைவேற்றவிடாமல் தடுக்க முடியும்.
சிவராமன்
(புதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2024 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram