பயங்கரவாதி பைரன்சிங்கின் ஒப்புதல் வாக்குமூலம்!

இந்தியாவையே கொந்தளிக்க வைத்த, இரண்டு குக்கி இனப் பெண்கள் நிர்வாணமாக அடித்து இழுத்துச் செல்லப்பட்ட கொடூரத்தை எப்படி திட்டமிட்டு மறைத்திருக்கலாம் என பைரன் சிங் அருவருக்கத்தக்க வகையில் பேசியிருப்பதும் ஆடியோவில் உள்ளது.

கடந்த ஆண்டு மே மாதத்தில் பற்றி எரியத் தொடங்கிய மணிப்பூர் தற்போது வரை அணையவில்லை. வன்முறைக்கு தொடக்கப்புள்ளியாக அமைந்த மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை பொறுப்பு நீதிபதி முரளீதரனின் நீர்ப்பு திரும்பப்பெறப் பட்டிருந்தாலும், வன்முறை சம்பவங்களும் குக்கி பழங்குடியின மக்கள் மீதான தாக்குதல்களும் இன்னமும் தொடர்ந்துக் கொண்டிருக்கின்றன.

ஓராண்டுக்கு மேலாக நடந்துவரும் வன்முறையால், அரசின் புள்ளிவிவரப்படி இதுவரை 226 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். முகாம்களில் தஞ்சம் புகுந்த மக்கள் இன்றளவும் தங்களது வீடுகளுக்கு திரும்பவில்லை. சிறுவர். சிறுமிகள் பள்ளி படிப்பை இழந்து நிற்கின்றனர். இவர்களில் ஆகப் பெரும்பான்மையானோர் குக்கி இன மக்களே. கல்லூரிக்கு செல்ல வேண்டிய குக்கி இன இளைஞர்கள் தங்களது நிலங்களை பாதுகாப்பதற்காக ஆயுதமேந்தியுள்ளனர். இந்த பேரழிவிலிருந்து எப்போது இயல்புநிலைக்கு திரும்புவோம் என்பதே ஒட்டுமொத்த மணிப்பூர் மக்களின் மனநிலையாக உள்ளது.

மணிப்பூர் வன்முறை தொடங்கியபோதே. இது மணிப்பூர் காடுகளை அம்பானி – அதானிகளுக்கு தாரைவார்ப்பதற்காகவும் மெய்தி இன மக்களை தங்களது அடித்தளமாக மாற்றிகொள்வதற்காகவும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலால் குக்கி பழங்குடியின மக்கள் மீது நடத்தப்படும் திட்டமிட்ட இன அழிப்பு கலவரம் என்பதை “எரிகிறது மணிப்பூர்: பற்றவைத்தது காவி!” என்ற கட்டுரையில் புதிய ஜனநாயகம் அம்பலப்படுத்தியிருந்தது.

இந்நிலையில் “மணிப்பூரில் குக்கி இனமக்கள் மீதான இனஅழிப்பை தொடங்கியது நான்தான்” என மணிப்பூர் மாநில பா.ஜ.க. முதல்வர் பைரன் சிங் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கும் ஆடியோ (Audio) ஒன்று மணிப்பூர் மக்களிடையே பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தி, மெய்திலோன் ஆகிய இரு மொழிகளிலும் கலந்து பேசப்படும் 48 நிமிட முழு ஆடியோவையும் “தி வயர்” (The Wire) செய்தி இணையதளம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து காணொளியாகவும் தொடர் கட்டுரைகளாகவும் வெளியிட்டுள்ளது.

அந்த ஆடியோவில் பைரன் சிங், குக்கி இன மக்களை அழித்தொழிப்பதற்காக செய்த அக்கிரமங்களையும் அட்டூழியங்களை யும் ‘பெருமையாக’ எடுத்துரைக்கிறார்.

பைரன் சிங்கை முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தபோது, பைரன் சிங் ஒன்றிய அரசுக்கு ஒத்துழைப்பு தருவதால் அவரை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார். ஆனால், 2023-ஆம் ஆண்டு மே மாதத்தில் அமித்ஷா மூன்று நாள் பயணமாக மணிப்பூருக்கு சென்றிருந்தபோது, “பைரன் இனி குண்டுகளை உபயோகிக்கக் கூடாது” என உத்தரவிட்டதாகவும், ஆனால் அவர் வெளியேறிய பின் பைரன் சிங் அதிகாரிகளை அழைத்து “குண்டுகளை வெளிப்படையாக உபயோகிக்கக் கூடாது. ரகசியமாக உபயோகிக்க வேண்டும் என்று உத்தரவிட்டதாகவும் ஆடியோவில் பதிவாகியுள்ளது. இதனை பைரன் சிங் சொல்லும்போது பின்னால் சிரிப்பு சத்தமும் கேட்கின்றன.

அதேபோல். “தற்போதுவரை 4000-5000 துப்பாக்கிகள் திருடப்பட்டுள்ளன. ஆனால், யாராவது கைது செய்யப்பட்டுள்ளனரா? கைது செய்ய வேண்டுமெனில் அவர்கள் முதலில் முதல்வரைத்தான் கைது செய்ய வேண்டும். ஆனால், முதல்வரை கைது செய்ய முடியாது” என்று போலீசு நிலையங்களிலிருந்து மெய்தி இனவெறியர்கள் ஆயுதங்களை சூறையாடியதற்கு தான்தான் காரணம் என்பதை திமிர்த்தனமாக கூறியிருக்கிறார்.

இவற்றையெல்லாம் விட, இந்தியாவையே கொந்தளிக்க வைத்த, இரண்டு குக்கி இனப் பெண்கள் நிர்வாணமாக அடித்து இழுத்துச் செல்லப்பட்ட கொடூரத்தை எப்படி திட்டமிட்டு மறைத்திருக்கலாம் என பைரன் சிங் அருவருக்கத்தக்க வகையில் பேசியிருப்பதும் ஆடியோவில் பதிவாகியுள்ளது. “இரண்டு பெண்கள் நிர்வாணமாக இழுத்து செல்லப்பட்ட விவகாரத்தில் நாம் எவ்வளவு மோசமாக கேவலப்படுத்தப்பட்டோம். நாம்தான் அந்த பெண்களை காப்பாற்றினோம் என்று கூறியிருக்க வேண்டும். அந்தப் பெண்ணின் அண்ணனும் மாமாவும் கொல்லப்பட்டுவிட்டனர். அதனால், அவர்களால் உண்மையை நிரூபிக்க முடியாது. காணொளியில், பெண்கள் மீது கைகள் அங்கும் இங்கும் வைக்கப்பட்டுள்ளன, ஆனால் அதை உண்மையில்லை என்று மறுத்திருக்க முடியும்” என்று துளியும் மனிதத்தன்மையே இல்லாத இனவெறிப்பிடித்த பைரன் சிங் பேசியிருப்பது கேட்போரின் ரத்தத்தை கொதிப்படையச் செய்கிறது.

மேலும், இவ்விவகாரத்தை மூடி மறைப்பதற்காக ஜூலை மாதத்தில் தொலைந்துபோன இரண்டு மெய்தி சிறுவன் சிறுமியின் இறந்த உடல்களின் புகைப்படங்களை ஊடகங்கள் மூலம் திட்டமிட்டு பரப்பியதும், அதற்காகவே செப்டம்பர் மாதத்தில் தற்காலிகமாக இணைய சேவை வழங்கப்பட்டதும் இந்த ஆடியோ மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மேலும் அந்த ஆடியோவில், “குக்கி இன மக்கள் அதிக நிலம் வைத்துள்ளனர், அதிகளவில் படிக்கின்றனர், ஒதுக்கீட்டினால் ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ். பணிகளில் உள்ளனர். இவை அனைத்தையும் நான் பார்த்தேன், பார்த்ததும் செயல்பாடுகளைத் தொடங்கினேன். குக்கி இன மக்கள் மீது தாக்குதல் தொடுப்பதற்காக பாதுகாக்கப்பட்ட வன நிலத்தில் அரசு நிலத்தை தேட ஆரம்பித்தேன்” என இந்த இன அழிப்பு கலவரத்திற்கு தொடக்கப்புள்ளியாக இருந்ததை பைரன் சிங் பகிரங்கமாக ஒப்புக் கொள்கிறார்.

2002-ஆம் ஆண்டு குஜராத்தில் மோடியின் தலைமையில் இஸ்லாமிய மக்கள் கொன்றொழிக்கப் பட்டார்கள் எனில், மணிப்பூரில் பைரன் சிங்கின் தலைமையில் குக்கி இன மக்கள் அழித்தொழிக்கப் படுகின்றனர்.

தற்போது வெளியாகியுள்ள இந்த ஆடியோ பைரன் சிங்கின் வீட்டில் நடந்த கூட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்களிடம் தனிப்பட்ட ரீதியில் விசாரித்து, இதனை பேசியது பைரன் சிங்தான் என்பதையும், ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் லம்பா தலைமையில் ஒன்றிய உள்துறை அமைச்சகம் அமைத்த ஆணையத்திடம் இந்த முழு ஆடியோ சமர்ப்பிக்கப்பட்டுள்ளதையும் “தி வயர்” இணைய தளம் உறுதி செய்துள்ளது. ஆனால், தற்போதுவரை பைரன் சிங் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப் படாமல் இருப்பதே இந்த ஆணையம் வெறும் கண் துடைப்புதான் என்பதைக் காட்டுகிறது.

2002-ஆம் ஆண்டு குஜராத்தில் மோடியின் தலைமையில் இஸ்லாமிய மக்கள் கொன்றொழிக்கப் பட்டார்கள் எனில், மணிப்பூரில் பைரன் சிங்கின் தலைமையில் குக்கி இன மக்கள் அழித்தொழிக்கப் படுகின்றனர். அதற்கு மோடி-அமித்ஷா தலைமை யிலான ஒன்றிய பாசிச அரசு துணை நிற்கிறது. எதிர்க்கட்சிகளும் இவ்வளவு பெரிய உண்மை வெளி வந்தும் அதுகுறித்து வாய்திறக்காமல் மணிப்பூர் மக்களுக்கு துரோகமிழைக்கின்றன.

எனவே, மணிப்பூர் மக்கள் வாழ்க்கையை நரவேட்டையாடிய, இக்கலவரத்தை முன்னின்று நடத்திய பைரன் சிங்கிற்கும் அதற்கு பக்கபலமாக நிற்கும் மோடி அமித்ஷா கும்பலுக்கும் எதிராக மணிப்பூர் மக்கள் ஒன்றிணைந்து போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். அதேபோல் இந்தியாவில் ஜனநாயகத்தை நேசிக்கும் ஒவ்வொருவரும் மணிப்பூர் மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டிய தருணம் இது!


தலையங்கம்

(புதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க