கடந்த செப்டம்பர் 11 ஆம் தேதி, கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள பதரிலோப்பூர் என்கிற கிராமத்திலிருந்து விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்காக ஊர்வலமாக எடுத்துச் சென்ற காவிக் கும்பல், அந்த ஊர்வலத்தை நாகமங்களா எனும் முஸ்லீம் மக்கள் வாழும் பகுதிக்குள் நடத்திச் சென்று திட்டமிட்டு கலவரத்தைத் தூண்டியுள்ளது.
நாகமங்களா பகுதிக்குள் உள்ள மசூதி முன்பு ஊர்வலத்தை நிறுத்திய காவிக் கும்பல் “ஜெய் ஸ்ரீ ராம்”, “பாரத் மாதா கி ஜெய்” என்று முழக்கமிட்டது. மேலும், முஸ்லீம் மக்கள் விநாயகர் சிலை மீதும் கூட்டத்தினர் மீதும் செருப்பு மற்றும் கற்களை வீசியதாகக் கூறி காவிக் கும்பல் திட்டமிட்டு முஸ்லீம் மக்கள் மீது தாக்குதலைக் கட்டவிழ்த்துவிட்டது.
இந்துமதவெறி பிடித்த காவிக்கும்பல், இஸ்லாமியர்கள் மீது கும்பலாகச் சேர்ந்து தாக்கியும் கற்களைக் கொண்டும் கொடிய தாக்குதலில் ஈடுபட்டது. மேலும், நாகமங்கலா பகுதியில் உள்ள சாலையோரக் கடைகள் மற்றும் வாகனங்களை அடித்து நொறுக்கித் தீயிட்டுக் கொளுத்தியது. பெருமளவில் இந்து மக்களைத் திரட்டிக் கொண்டு போலீசு நிலையத்தின் முன்பு அமர்ந்து முஸ்லீம் மக்களைக் கைது செய்யக்கோரி போராட்டத்தை நடத்தியுள்ளது.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த மண்டியா போலீசானது, முஸ்லீம் மக்கள் மீதும் கலவரத்தில் ஈடுபட்ட காவிகள் மீதும் லேசான தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும் வீசியும் வன்முறையை ஓரளவிற்குக் கட்டுப்படுத்தியது. மேலும், வன்முறைச் சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறி இந்துக்கள் மற்றும் முஸ்லீம் மக்கள் உட்பட 52 பேரைக் கைது செய்துள்ளது. மாவட்டத்தின் பல பகுதிகளில் பதற்றம் நிலவி வருவதால் மாவட்ட நிர்வாகம் செப்டம்பர் 15 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவை அமல்படுத்தியுள்ளது.
படிக்க: ராஜஸ்தான்: பசுவின் வாலை கோவிலுக்குள் முஸ்லீம்கள் வீசியதாகக் கூறி கலவரம்
இக்கலவரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள கர்நாடக முதல்வர் சித்தராமையா, “இந்த சம்பவத்தை அரசு தீவிரமாக எடுத்துக்கொண்டதுடன், மத அடிப்படையில் பிளவை ஏற்படுத்த முயல்பவர்கள் மீது சாதி, மத வேறுபாடின்றி இரக்கமற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். தூண்டுதலுக்கு அடிபணியாமல் அமைதி மற்றும் நிதானத்தைக் கடைப்பிடித்து எங்களுடன் ஒத்துழைக்குமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறேன்” என அவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சங்கிகளும் அவர்களது வானரப் படைகளும் இக்கலவரம் முஸ்லீம் மக்களால் ஏற்படுத்தப்பட்டது என்று நச்சுப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். சான்றாக, ஒன்றிய கனரக தொழில்கள் மற்றும் உருக்குத்துறை அமைச்சரும் ஜேடி(எஸ்) தலைவருமான ஹெச்.டி. குமாரசாமி, “கணபதி ஊர்வலத்தில் அமைதியாக நடந்து சென்ற பக்தர்களைக் குறிவைத்தும் பொதுமக்கள் மற்றும் போலீசார் மீதும் கற்கள், செருப்புகளை வீசியும் பெட்ரோல் குண்டுகளை வெடிக்கச் செய்தும் வாள்களைக் காட்டியும் ஒரு சமூகத்தைச் சேர்ந்த மர்மநபர்கள் திட்டமிட்டே சலசலப்பை ஏற்படுத்தியது, ஊரில் சட்டம்-ஒழுங்கு தோல்விக்குச் சான்று” என்று தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், அரசியல் ஆதாயத்திற்காகக் காங்கிரஸ் கட்சியும் மாநில அரசும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை அதிகமாக ஆட்கொண்டு திருப்திப்படுத்தியதன் விளைவுதான் இந்த சம்பவம் என்றும் அவர் குற்றம்சாட்டியிருப்பதன் மூலமும் இக்கலவரம் முஸ்லீம் மக்களால் நடத்தப்பட்டது என்பதை நிறுவ முயல்கிறார்.
படிக்க: அசாம்: மதக் கலவரத்தை உருவாக்கத் துடிக்கும் ஹிமந்த பிஸ்வா சர்மா
ஆனால், விநாயகர் சதுர்த்தியைப் பயன்படுத்திக் கொண்டு காவிக் குண்டர்கள் திட்டமிட்டே முஸ்லீம் மக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே ஆகும். கர்நாடகாவில் மட்டுமின்றி, தமிழ்நாடு, மத்தியப்பிரதேசம் போன்ற நாட்டின் பல மாநிலங்களிலும் காவிகள் முஸ்லீம் மக்கள் மீது தாக்குதலை நடத்தியுள்ளனர்.
இக்கலவரங்கள் மூலம் பெரும்பான்மை இந்து மக்களிடம் இந்துமதவெறியைத் தூண்டிவிட்டு அவர்களை தங்கள் பக்கம் திரட்டிக்கொள்வது மட்டுமல்லாமல், இஸ்லாமியர்களை எந்த உரிமைகளும் அற்ற இரண்டாந்தர குடிமக்களாக மாற்ற விழைகின்றனர். மோடி-அமித்ஷா கும்பல் மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு இஸ்லாமிய மக்கள் மீது நடத்தப்பட்டு வரும் பாசிச தாக்குதல்களின் தொடர்ச்சியாகவே விநாயகர் சதுர்த்தியைப் பயன்படுத்தி காவிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram