ரயில்வே தேர்வு வாரியம் (RRB) நடத்திய தேர்வில், மோசடி நடைபெற்றதாக புகார் கூறி பீகார், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில், தேர்வெழுதிய மாணவர்கள் போராட்டங்களில் ஈட்டுபட்டனர். கடந்த ஜனவரி 24 தொடங்கி ஆர்ப்பாட்டங்கள், இரயில் மறியல், தீவைப்புகள் என இவை மிகக் கொதிப்பானவையாக இருந்தன.
எல்லா அரசுத் துறைகளையும் போல, அரசுத் தேர்வுத் துறையும் ஊழல், மோசடி என்ற எண்ணெயில் இயங்கிக் கொண்டிருக்கிறது. இதெல்லாம் தெரிந்தும் சகித்துக் கொண்டுதான் அரசுத் தேர்வுக்கு படிக்கும் மாணவர்கள் தேர்வெழுதுகிறார்கள். பணம் கட்டிக்கூட எப்படியாவது உள்ளே போய்விட வேண்டும் என்று சிந்திக்கிறார்கள். இவையெல்லாம் சமூகத்தில் இயல்புநிலையாக இருக்கின்றன.
ஆனால், பீகார், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வெடித்தெழுந்த இரயில்வே தேர்வெழுதிய மாணவர்களின் உக்கிரமான போராட்டங்கள், நாட்டில் ஒரு புதிய இயல்புநிலை உருவாகிக் கொண்டிருப்பதை நமக்கு காட்டுகிறது.
000
படிக்க :
TNPSC மோசடி : இது வெறும் ஊழல் அல்ல ! உங்கள் உழைப்பை அழிப்பது !
ரயில்வே தனியார்மயம் : ஏழைகளுக்கு எட்டாக் கனியாகும் ரயில் பயணம் !
இரயில்வே தேர்வு வாரியம் (RRB) சார்பில் ஜூனியர் கிளார்க், இரயில் உதவியாளர், கூட்ஸ் கார்டு, நேரக் காப்பாளர், ஸ்டேஷன் மாஸ்டர் போன்ற தொழில்நுட்பம் சாராத (NTPC – Non Technical Popular Categories) 35,281 பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத் தேர்வு கடந்த 2020-ம் ஆண்டு நடத்தப்பட்டது.
மொத்தமுள்ள 35,281 பணியிடங்களில், 11,000 பணியிடங்களுக்கு 12-ம் வகுப்பு கல்வித் தகுதியே போதுமானது. மீதமுள்ள பணியிடங்களுக்கு ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு தகுதி போதும். எனினும் முதுநிலை பட்டம் மற்றும் முனைவர் பட்டம் பெற்றவர்கள் உட்பட சுமார் 1.25 கோடிக்கும் அதிகமானோர் இத்தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். இதில் 60 இலட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர்.
இந்த தேர்வுக்கான முடிவுகள் கடந்த ஜனவரி 15-ம் தேதியன்று வெளியிடப்பட்டது. அதில் சுமார் 7 இலட்சம் (7,05,446) விண்ணப்பதாரர்கள் இரண்டாம் நிலைத் தேர்வுக்கான இறுதிப் பட்டியலில் தேர்வாகியிருந்தனர். அவர்களுக்கு வரும் பிப்ரவரி 14 மற்றும் 18-ம் தேதிகளில் இரண்டாம் நிலை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், “2019-ம் ஆண்டில், தேர்வுக்கான விதிமுறைகளை அறிவித்தபோது இரண்டு நிலைகளாக தேர்வு நடத்தப்படும் என்று குறிப்பிடப்படவில்லை. ஆகையால் தற்போது இரண்டாம் நிலைத்தேர்வு என்று சொல்வதே முறைகேடு” என்று குற்றஞ்சாட்டி மாணவர்கள் போராடுவதாக பெரும்பாலான பத்திரிகைகள் எழுதுகின்றன.
இரயில்வே தேர்வு வாரியம் இக்குற்றச்சாட்டை மறுத்துள்ளதோடு, 2019 குறிப்பாணையை காட்டி இரண்டு நிலைத் தேர்வை முன்பே குறிப்பிட்டதாக கூறுகிறது.
இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளம் வெளியிட்டுள்ள ஒரு கட்டுரை, மாணவர்கள் போராடுவதற்கான காரணமாக வேறு ஒரு பிரச்சினையை குறிப்பிட்டு எழுதுகிறது. அதில் 2019-ம் ஆண்டில், தேர்வுக்கான அறிவிப்பினை வெளியிட்ட இரயில்வே தேர்வு வாரியம் அதில் ஒரு புதிய விதியை சேர்த்ததும் அதை அமல்படுத்தியதிலும்தான் பிரச்சினை என்று கூறுகிறது.
இரயில்வே தேர்வு வாரியம், தனது அந்த புதிய விதியில், போட்டியை அதிகரிக்கும் வகையில், காலி பணியிடங்களை விட 20 மடங்கு நபர்கள் இரண்டாம் நிலைத் தேர்வுக்கு (இறுதிநிலைத் தேர்வு) தேர்ந்தெடுக்கப்படுவார்கள் எனக் குறிப்பிட்டிருந்தது. ஆனால் 7,05,446 பேர் தேர்வுசெய்யப்பட்டது என்பது உண்மையில் 20 மடங்காக இல்லை.
விசயம் என்னவென்றால், 12-ம் வகுப்புவரை படித்தவர்கள் மற்றும் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்தவர்கள் என காலிப் பணியிடங்கள் இரண்டு வகைகளில் அமைந்துள்ளன. 12-ம் வகுப்பு கல்வித் தகுதியே போதும் என்ற பணியிடங்களுக்கு ஒரு பட்டதாரி மாணவரும் விண்ணப்பிக்க முடியும். அவ்வாறு பல மாணவர்கள் இரண்டு, மூன்று பணிகளுக்கு விண்ணப்பித்தும் உள்ளார்கள். விண்ணப்பங்களை விட்டுவிட்டு நபர்களின் அடிப்படையில் பார்த்தால், 3.84 இலட்சம் பேர் மட்டுமே இரண்டாம் நிலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். இது அறிவிப்புக்கு முரணானதாகும்.
எனவே இதுபோன்ற நடவடிக்கைகளின் மூலம், அதிக கல்வித் தகுதி கொண்டவர்கள் மட்டுமே அனைத்துக் காலிப் பணியிடங்களிலும் நிரப்பப்பட்டுவிடுவார்கள் என குற்றம் சாட்டுகிறார்கள் போராடும் மாணவர்கள். தங்களது வாய்ப்பு பறிபோய்விடுமோ என்ற அச்சம்தான் அவர்களை போராட்டத்திற்கு தள்ளியுள்ளது.
பீகார் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் போராட்டம் வெடித்துக் கிளம்பியது. குறிப்பாக, பீகாரில் போராட்டங்கள் வீச்சாக நடந்தன. சிதாமர்ஹி எனும் இடத்தில் இரயில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. கூட்டத்தை கலைக்க துப்பாக்கிச் சூடு நடத்தியது போலீசு.
அரா மற்றும் கயா ஆகிய நகரங்களில் இரயில் பெட்டியை போராட்டக்காரர்கள் தீவைத்து எரித்தார்கள். தெற்கு பீகார் விரைவு இரயில், கயா – ஜம்லாப்பூர் பயணிகள் இரயில், கயா – ஹவுரா விரைவு இரயில் மற்றும் பாட்னா – வாரணாசி விரைவு இரயில் ஆகியவை போராட்டச் சூழல் காரணமாக இரத்து செய்யப்பட வேண்டியிருந்தது. ஜெகனாபாத்தில் மோடியின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.
தேர்வர்களின் போராட்டங்கள் காரணமாக பிப்ரவரி 14 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த இரண்டாம் நிலைத் தேர்வு காலவரையறையின்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
போராட்டக்காரர்கள் தங்களது புகாரைத் தெரிவிக்க மின்னஞ்சல் முகவரியை வெளியிட்டுள்ளது இரயில்வே தேர்வு வாரியம். அத்துடன், போராட்டங்களைத் தொடர்ந்தால் சம்மந்தப்பட்ட தேர்வர்கள் போட்டித் தேர்விலிருந்து நீக்கப்படுவார்கள் என்றும் மிரட்டியுள்ளது.
மேலும் யூடியூப் சேனலில் வெளியிட்ட காணொலியின் மூலம் போராட்டத்தை தூண்டியதாக, பீகாரில் பிரபல பயிற்சி மையத்தை நடத்திவரும் ஆசிரியர் கான் சார் உட்பட ஆறு பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. ஆனால், “குறுகிய காலத்தில் இரண்டாம் நிலைத் தேர்வு நடத்துவதனால் மாணவர்களால் தயாராக முடியாது. அரசு மாணவர்கள் மீது கூடுதல் சுமையை ஏற்றியுள்ளது” என்ற பொருளில்தான் ஆசிரியர் கான் சார் அந்த காணொலியில் பேசியிருந்தார்.
இக்கைதுகளின் மூலம் அரசுத் தேர்வெழுதிய மாணவர்களின் போராட்டங்களை வதந்தியால் தூண்டிவிடப்பட்ட போராட்டங்களைப் போலவும் மாணவர்கள் புரிதல் இல்லாமல் போராடுவதைப் போலவும் சித்தரிக்க முயல்கின்றன பீகாரின் நிதிஷ்குமார் அரசும் மோடி அரசும்.
மாணவர்கள் மீது நடத்தப்பட்ட போலீசு தாக்குதலுக்கு எதிராக காங்கிரஸ், சாம்ஜ்வாதி உள்ளிட்ட எதிர்கட்சிகள் போராடி வருகின்றன. நடைபெறக்கூடிய ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில், இதைவைத்து தங்களுக்கு சாதகமாக ஓட்டு அறுவடை செய்துகொள்ள அக்கட்சிகள் முயல்கின்றன.
000
சமூகத்தில் மற்ற பிரிவு மக்கள் போராட்டங்களில் பங்கெடுப்பதைப் போல அரசுத் தேர்வுக்கு படிப்போர் பொதுவாக பங்கெடுப்பதில்லை. தங்களது வாழ்க்கையை பாதுகாத்துக் கொள்ள வழிசெய்துகொள்ள வேண்டும்; அதற்காக கஷ்டப்பட்டு படித்து ஏதேனும் ஒரு அரசுப் பணிக்கு சென்றுவிட வேண்டும்; ஆகையால், எந்தப் ‘பிரச்சினையிலும்’ தலையை நுழைத்துவிடக் கூடாது என்று கருதுபவர்கள்.
படிப்புக்கேற்ற வேலையின்மை, தனியார் நிறுவனங்களில் உத்திரவாதமற்ற, நிலையற்ற வேலை மற்றும் தேவைக்கேற்ற ஊதியமின்மை ஆகியவற்றால் நாளுக்குநாள் அரசு வேலைவாய்ப்புகாக முயலும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எப்படியாவது அரசு வேலை பெற வேண்டும் என்பதற்காக அரசு தேர்வுகளுக்காக படிப்பதையே பலர் முழுநேரத் தொழிலாக செய்துவருகின்றனர்.
இப்படிப்பட்டவர்களை நூலகங்கள், கோயில்கள், இரயில் நிலையங்கள் மற்றும் பூங்காக்கள் போன்ற இடங்களில் பார்க்க முடியும். ஒரு தேர்வு இல்லையென்றால் இன்னொன்று என்று எழுதி வரும் இவர்கள் “எந்த தேர்விலாவது பணி வாய்ப்பு கிடைத்துவிடாதா” என்ற எதிர்பார்ப்புடன் இருப்பவர்கள்.
இன்று அந்த பிரிவினரே வீதியில் இறங்கி போராடுவது, பெருகிவரும் வேலையில்லாத் திண்டாட்டத்தின் தீவிரத்தையே காட்டுகிறது. வெறும் 35,000 பணியிடங்களுக்காக 1.25 கோடி பேர் விண்ணப்பித்திருப்பதும் எங்கே தமக்குச் சேர வேண்டிய (12-ம் வகுப்பு கல்வித் தகுதிக்குரிய) காலி பணியிடங்களை பட்டதாரி மாணவர்கள் தட்டிப் பறித்துவிடுவார்களோ என்ற அச்சமுமே இதை நமக்கு துலக்கமாக காட்டுகின்றன.
1990-கள் தொடங்கி அமல்படுத்தப்பட்ட மறுகாலனியாக்க கொள்கைகளின் விளைவாக விவசாயத்துறை திட்டமிட்டே புறக்கணிக்கப்பட்டது. விவசாயம் இலாபகரமான தொழிலற்றதாக மாறிப் போனதால் தொழில் வளர்ச்சியடைந்த நகரங்களில் அத்துக் கூலிகளாக துரத்தியடிக்கப்பட்டார்கள் கிராமப்புற மக்கள். புலம்பெயர் தொழிலாளர்கள் என்று அவர்களைத்தான் அழைக்கிறோம். அவ்வாறு மொத்த இந்தியாவிலும் பரவியுள்ள புலம்பெயர் தொழிலாளர்களுள் பீகாரிகளே அதிகம். இதன் பின்னணியில் தற்போது பீகாரில் நடைபெற்ற தேர்வர்களின் போராட்டத்தை பொருத்திப் பார்க்க வேண்டியிருக்கிறது.
இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் ஜனவரி 26, 2022-ன் கணக்கின்படி இந்தியாவில் சராசரி வேலையின்மை 6.8 சதவீகிதமாகும். வேலையின்மை வீதம் கிராமங்களில் 6.1 சதவீதமாகவும், நகரங்களில் 8.2 சதவீதமாகவும் இருக்கிறது. இந்திய மாநிலங்களில், வேலையில்லா திண்டாட்டத்தில் ராஜஸ்தான் (27.1%), ஜார்கண்ட் (17.3%) மற்றும் பீகார் (16%) ஆகியவைதான் முதன் மூன்று இடங்களில் இருக்கின்றன.
விவசாயமும், சுரங்கத் தொழிலும்தான் பீகாரின் முக்கியத் தொழில்களாகும். பீகாரில் 3-ல் 2 நபர்களுக்கு முறையான வேலையில்லை. 2020 கொரோனா ஊரடங்கின்போது நாடுதழுவியை வேலையின்மை சராசரியைவிட (24%) பீகாரில் இருமடங்கு (46%) அதிகமாக இருந்தது. இதனால் படிக்காத இளைஞர்கள் பிழைப்புக்காக தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களுக்கு கூலி வேலைக்கு வருகின்றனர். படித்த இளைஞர்களோ அரசு வேலையையே ஒரே வாய்ப்பாக கருதுகிறார்கள்.
படிக்க :
சொமாட்டோ மட்டுமல்ல – வங்கி முதல் இரயில்வே வரை அனைத்திலும் இந்தி திணிப்பு !
பயணிகள் இரயில்களை ஒழித்துக் கட்டும் மோடி அரசு !
இதன் காரணமாகத்தான் கடந்த 2020-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது பீகாரில் ஓட்டுக்கட்சிகளின் முக்கிய வாக்குறுதியாக “வேலைவாய்ப்பு” இருந்தது. இன்று பீகாரை ஆளும் ஐ.ஜ.த – பா.ஜ.க. கூட்டணி அரசு, அரசு வேலைவாய்ப்புகளை பெரிய அளவில் உயர்த்துவோம் என்றும் 19 இலட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்றும் வாய்சவடால் அடித்தது.
பீகார் மட்டுமல்ல. நாடு முழுக்க வேலைவாய்ப்பின்மை, வேலை உத்தரவாதமின்மை, வாழ்க்கைச் செலவினங்களுக்கு கூட போதிய வருவாயின்மை ஆகிய பிரச்சினைகள் மக்களை ஒரு கிளர்ச்சிகர சூழலின் தருவாயில் நிறுத்தியுள்ளது. அதில் ஒரு சிறு தீப்பொறியினைத்தான் பீகாரில் பார்க்கிறோம்.

வாகை சூடி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க