ந்திய நாட்டின் பொதுத்துறை மற்றும் அரசுத் துறைகள் அனைத்தையும் தனியார்மயமாக்கும் கொள்கையின் ஒரு அங்கமாக இந்தியாவின் மிகப்பெரிய அரசுத்துறை நிறுவனமான ரயில்வே துறையை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இந்திய துணைக் கண்டம் முழுவதும் 63,140 கிலோமீட்டர் ரயில் பாதையை தன்னகத்தே கொண்ட போக்குவரத்து வலைப்பின்னலை உள்ளடக்கியது இந்திய ரயில்வே.

கிழக்கிந்திய கம்பெனி பிளாசி யுத்தத்திற்குப் பிறகு இந்தியத் துணை கண்டத்தில் தனது வாணிப வேட்டையை துவங்கியது. 1858-ல் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் கீழ் இந்தியாவை தனது சுரண்டலுக்கான தளமாக பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் மாற்றிக்கொண்டது. இந்திய செல்வ வளங்களை சுரண்டிக் கொழுக்க, தொழில்துறையை விஸ்தரிக்க நாடெங்கிலும் போக்குவரத்து வழித்தடங்களை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகள் உருவாக்கினார்கள். முதன் முதலில் மும்பையில் துவங்கப்பட்ட இரயில் போக்குவரத்தை இந்திய துணைக் கண்டம் முழுவதும் விரிவுபடுத்தியது பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசு.

1901-ம் ஆண்டு ரயில்வே வாரியம் அமைக்கப்பட்டது. எந்த முதலீடும் செய்யாமல் மக்களுடைய பணத்தில் நிர்மாணிக்கப்பட்ட ரயில்வே வழித்தடங்களை இந்திய தரகு முதலாளித்துவ கும்பல் பயன்படுத்திக்கொண்டது. இந்திய ரயில்வே வழித்தடம் லட்சக்கணக்கான உழைக்கும் மக்களுடைய உதிரத்தாலும் உழைப்பாலும் உருவாக்கப்பட்டது. காடுகளை அழித்து, மலைகளைக் குடைந்து மேடு பள்ளங்களை சீர்செய்து கடும் பனி, வெயிலுக்கு மத்தியிலும் கணக்கிலடங்கா கொடுமைக்கு  இலக்காகி, பல்வேறு கொள்ளை நோய்களுக்கு உள்ளாகி, கை கால்கள் இழந்து, உயிரிழந்து, ரத்தம் சிந்தி இந்திய ரயில் போக்குவரத்து வலைப்பின்னலை உருவாக்கியது இந்திய தொழிலாளி வர்க்கம் தான்.

படிக்க :
♦ பயணிகள் இரயில்களை ஒழித்துக் கட்டும் மோடி அரசு !
♦ கார்ப்பரேட் இரயில் : தனியார் கையில் மேலும் 150 இரயில்கள் !

இப்படி தொழிலாளர்களின் உழைப்பிலும் மக்களின் வரிப்பணத்திலும் உருவாக்கப்பட்ட இரயில்வேதுறையைத் தான் தனியாரிடம் விற்கப் போவதாக அறிவித்துள்ளது மோடி அரசு. கரையான் புற்று எடுக்க கருநாகம் குடிபுகுந்த கதையாக, இந்திய ரயில்வேயை கபளீகரம் செய்ய கார்ப்பரேட் நிறுவனங்கள் மோடியின் உதவியுடன் களமிறங்கியுள்ளன.

இந்திய இரயில்வே உலகின் மிகப்பெரிய அரசுத் துறை நிறுவனம். ஆண்டுக்கு 500 கோடி மக்கள் இரயில் போக்குவரத்தில் பயணிக்கின்றனர். ஆண்டுக்கு 35 கோடி டன் இரயில்வே மூலமாக சரக்கு பரிவர்த்தனை நடைபெறுகிறது.16 லட்சம் பணியாளர்கள் இரயில்வே துறையில் பணிபுரிகின்றனர். இரயில்வேயின் வலைப்பின்னலின் மொத்த நீளம் 63,140 கிலோமீட்டர். சாதாரண நாட்களில் நாள்தோறும் 14 ஆயிரத்து 444 இரயில்கள் இயக்கப்படுகின்றன. இலாபத்தில் இயங்கிக் கொண்டிருந்த இரயில்வே துறையை கார்ப்பரேட் முதலாளித்துவ கும்பலுக்கு தாரைவார்க்க, அதை தனியார் மயமாக்கும் முடிவை மோடி அரசு எடுத்துள்ளது.

பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான அரசாங்கம் 2014-ம் ஆண்டு பொறுப்பேற்றதில் இருந்து தொடர்ந்து ரயில்வே துறையை தனியார்மயமாக்கும் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.  பிபேக் தேப்ராய் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு, அந்தக் குழு ரயில்வே துறையை முற்றிலும் தனியார்மயமாக்கும் பரிந்துரைகளை அரசுக்கு அளித்துள்ளது. ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை தீவிரமாக அமல்படுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் ரயில்வே துறையை தனியார் மயமாக்கமாட்டோம்  என்று கிளிப்பிள்ளை போல் சொல்லிக் கொண்டிருக்கிறார். பாஜக-வின் அகராதியில் இதன்  உண்மையான பொருள், தனியார்மயத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்துவோம் என்பதுதான். ரயில்வே துறையை சீரமைக்க 50 லட்சம் கோடி தேவைப்படுவதாக துறையின் அமைச்சர் பியூஷ் கோயல் அவர்கள் கூறுகிறார். எதிர்வரும் 2030-ம் ஆண்டுக்குள் இந்த நிதியை திரட்டுவதற்காகத்தான் தனியாருக்குத் தாரை வார்ப்பது என்ற முடிவை எடுத்திருப்பதாகவும் கூறுகிறார்.

அதிக வருவாய் ஈட்டித் தரும் வழித்தடங்களை தனியாருக்கு கொடுப்பதில் அதிக ஆர்வம் காட்டப்பட்டு வருகிறது. சுற்றுலா தளங்கள் அமைந்துள்ள வழித் தடங்களிலும் தங்க நாற்கர பாதை எனப்படும் சென்னை – மும்பை, மும்பை – டெல்லி, டெல்லி – ஹவுரா, ஹவுரா – சென்னை ஆகிய வழித்தடங்களில் தனியார் நிறுவனங்கள் ரயில் போக்குவரத்தை நடத்த உரிமம் அளிக்கின்ற திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ராஜதானி சதாப்தி உள்ளிட்ட பிரீமியம் கட்டண ரயில்களை தனியார் இயக்குவதற்கு ஒப்பந்தப் புள்ளிகள் கோர அரசு முடிவு எடுத்துள்ளது. பிரதமர் அலுவலகம் இதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது. இவை போதாது என்று ரயில்வேக்கு சொந்தமான அச்சகங்கள், ரயில்வே எஞ்சின் மற்றும் சக்கரங்கள் தயாரிக்கும் 7 உற்பத்தி ஆலைகள் உள்ளிட்டு ரயில்வே துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் சொத்துக்களை தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

151 ரயில்களை 109 வழித் தடங்களில் தனியார் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 35 ஆண்டுகளுக்கு தங்கள் விருப்பப்படி ரயில் கட்டணத்தை தனியார்கள் நிர்ணயித்துக் கொள்ளலாம். வருவாய் குறைந்த வழித்தடங்களை தனியார்கள் ஏற்கமாட்டார்கள்.

ஏழை எளிய நடுத்தர மக்கள் எளிதாக பயணம் செய்து வந்த ரயில் பயணம் இனி எட்டாக்கனியாக மாறி விடும். சமூக நோக்கத்தோடு கொண்டு வரப்பட்ட மூத்த குடிமக்களுக்கான  கட்டணச் சலுகை, மாற்றுத் திறனாளிகளுக்கான கட்டணச் சலுகை, ரயில்வே ஊழியர்களுக்கான போக்குவரத்து சலுகை ஆகியவை தனியார் ரயில் போக்குவரத்து மூலம் முற்றிலும் மறுக்கப்படும்.

இன்றைய நடைமுறையில் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணத்தில் பாதி மட்டுமே வசூலிக்கப்படுகிறது. இனி 7 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு முழு கட்டணத்தைச் செலுத்த வேண்டும். ஏழை எளிய மக்களுடைய ரயில் பயணத்தை தனியார்மயம் முடிவுக்கு வந்து கொண்டு வந்துவிடும்

படிக்க:
♦ பொதுத்துறை வங்கி தனியார்மயம் : லாபம் தனியாருக்கு ! இழப்பு மக்களுக்கு !
♦ எல்.ஐ.சி. தனியார்மயம் : சூறையாடப்படவிருக்கும் நம் காப்பீடு

வெளியூரிலிருந்து வரும் உறவினர்களை வரவேற்ற அழைத்துவரும் எவரும் ரயில்வே நிலையத்திற்கு போக முடியாது. ரயில்வே நடைமேடை பிளாட்பார்ம் கட்டணம் 50 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது கொரோனா பரவலை காரணம் காட்டி முன்பதிவு செய்யாமல் யாரும் ரயிலில் பயணம் செய்ய முடியாது என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. பயணியர் ரயில் கட்டணத்தை சமீபத்தில் உயர்த்திய இரயில்வேதுறை கொரோனா காலத்தில் அவசியத்தை ஒட்டி மக்கள் பயணிக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே கட்டணத்தை உயர்த்தியதாக திமிராக பதிலளித்தது.

தனியார் ரயில் போக்குவரத்தும் அரசுத் துறை ரயில் போக்குவரத்தும், ஒரே வழித்தடத்தில் ரயிலை இயக்கும் போது லஞ்ச லாவண்ய முறைகேடுகள் தலைவிரித்தாடும் என்பது திண்ணம். தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் வந்த பின்னர், படிப்படியாக பி.எஸ்.என்.எல்-இன் சேவை குறைக்கப்பட்டு அது படிப்படியாக ஒழிக்கப்பட்டதைப் போல, அரசு ரயில்வேத்துறை படிப்படியாக குறைக்கப்பட்டு ஒழிக்கப்பட்டு விடும்.

இந்திய ரயில்வே துறையை தனியார்மயமாக்கும் முயற்சி நாட்டின் பொருளாதாரத்தில் மிக கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். சரக்கு கட்டணங்கள் கடுமையாக உயரும். அதன் விளைவாக விலைவாசி புதிய உயரங்களை எட்டும். லட்சக்கணக்கான ரயில்வே தொழிலாளர்கள், ஒப்பந்த ஊழியர்களின் வாழ்வாதாரம் மிகப் பெரும் கேள்விக்குறி ஆக்கப்படும். இதன் மூலம் மிகப் பெரும் தாக்குதலை சாமானிய மக்கள் மீது தொடுத்துள்ளது பாசிச மோடி அரசு.


இரணியன்