privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஜன்னல் சீட்டுக்கும் காசு, இனி லோயர் பெர்த்துக்கும் காசு !

ஜன்னல் சீட்டுக்கும் காசு, இனி லோயர் பெர்த்துக்கும் காசு !

-

ளர்ச்சியின் நாயகன்’ மோடியின் ஆட்சியில், நடுத்தரவர்க்கத்தினரே கண்டு மிரளும் அளவிற்கு இரயில் கட்டணங்கள் உயர்ந்துள்ளன. இந்நிலையில் இரயில் கட்டணங்களை பரிசீலித்து மறுசீரமைக்க மத்திய அரசால் அமைக்கப்பட்டிருந்த கமிட்டி 17-01-2018 அன்று தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. இதில் இரயில் கட்டணங்களை எப்படியெல்லாம் அதிகரிக்கலாம் எனப் பல்வேறு பரிந்துரைகளைச் செய்துள்ளது.

இந்தக் குழுவின் தற்போதைய பரிந்துரையில் பிரதானமானது, மக்கள் அதிகமாக பயணிக்கும் பண்டிகைக் காலத்திற்கான இரயில் பயணச்சீட்டின் விலையை அதிகரிக்க வேண்டும் என்பதுதான். ஏற்கனவே விமானம் மற்றும் தங்கும் விடுதிகளின் கட்டணங்கள் இந்த அடிப்படையில் பண்டிகைக் காலங்களில் உயர்த்தப்படும் நிலையில், அதைப் போன்றே இரயில்வேத் துறையிலும் கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது. பண்டிகைக் காலங்களில் தனியார் ஆம்னி பேருந்துகள் சட்டவிரோதமாக பயணச்சீட்டு விலையை ஏற்றி கட்டணக் கொள்ளை அடிக்கிறார்கள் அல்லவா? இனி அரசும் இரயில்வேத் துறையின் மூலமாக அத்தகைய கட்டணக் கொள்ளையை சட்டப்பூர்வமாகவே செய்யப் போகிறது.

இந்தப் பரிந்துரை அமல்படுத்தப்பட்டால், பண்டிகைக் காலங்களில் டிக்கெட்டின் அடிப்படை விலையே சட்டப்பூர்வமாக அதிகரிக்கப்படும். உயர்த்தப்பட்ட அடிப்படை விலையின் மீது, பிரீமியம் இரயில்களில், தற்போது நடைமுறையில் இருக்கும் டைனமிக் கட்டண முறையும் அமல்படுத்தப்பட்டால்,  பண்டிகைக்காலங்களில் ஊருக்குச் செல்லும் நினைப்பையே நடுத்தரவர்க்கத்தினர் மறந்து விட வேண்டியதுதான்.

அடுத்ததாக, படுக்கை வசதி கொண்ட இரயில்களில் இனி, கீழ் தட்டில் (லோயர் பெர்த்) பயணம் செய்ய கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்பட வேண்டும் எனப் பரிந்துரை செய்துள்ளது இந்தக் கமிட்டி. இதற்கு முன்னர் வரையில் பெண்கள், முதியவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து வழங்கப்படும் கீழ் தட்டு, இனி காசு அதிகமாக செலுத்தும் நபர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.

பொதுவாக இரயில் பயணத்தில், நடு அல்லது மேல் தட்டு கிடைக்கப்பெற்ற முதியவர்களோ, பெண்களோ, கீழ் தட்டில் இருக்கை கிடைக்கப்பெற்ற நபர்களிடம் கேட்டுக் கொண்டு தங்களது படுக்கைகளை மாற்றிக் கொள்வர். கீழ் தட்டு கிடைக்கப்பெற்றவர்களும் தங்களது சூழலுக்குத் தகுந்தாற் போல மாற்றிக் கொள்வார்கள். இனி அப்படி ஒரு வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்கப்பெறாது. ஜன்னல் சீட்டிற்கு இனி கூடுதல் கட்டணம் என  அறிவிக்கப்பட்ட போதே எதிர்ப்புகள் காட்டப்படாததன் விளைவு இது.

மோடி ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்த மூன்றே மாதங்களில் பயணிகள் இரயில் கட்டணத்தை சுமார் 14.2% உயர்த்தினார். அதோடு, மெட்ரோ இரயில் டிக்கெட்டுகளின் விலை இரட்டிப்பாக்கப்பட்டது. சீசன் டிக்கட்டுகளின் விலையும் அதிகரிக்கப்பட்டது.

பொதுவாக இரயில் பயணத்தில், நடு அல்லது மேல் தட்டு கிடைக்கப்பெற்ற முதியவர்களோ, பெண்களோ, கீழ் தட்டில் இருக்கை கிடைக்கப்பெற்ற நபர்களிடம் கேட்டுக் கொண்டு தங்களது படுக்கைகளை மாற்றிக் கொள்வர்.

அதே ஆண்டு அக்டோபரில் பிரீமியம் இரயில்கள் சேவையை அதிகரித்தது மோடி அரசு . சுமார் 800 இரயில்கள், பிரீமியம் இரயில்களாக மாற்றப்பட்டன. டைனமிக் கட்டண முறை (இருக்கப் பெற்றிருக்கும் சீட்டுகளின் எண்ணிக்கை குறையக் குறைய விலை ஏறும் முறை) அனைத்து பிரீமியம் ரயில்களிலும் கொண்டுவரப்பட்டது. பொதுவாக இரயில்வே நிதி அறிக்கையின் போது இரயில் பயணச்சீட்டு விலை உயர்த்தப்படுவது தான் வழக்கம். ஆனால் மோடியின் ஆட்சியில், இடைக்காலத்திலேயே பயணச்சீட்டு விலை அதிகரிக்கப்பட்டது.

வளர்ச்சி என்ற பெயரில் இந்திய இயற்கை வளங்களையும், கடல் வளங்களையும் ஏகாதிபத்தியங்களுக்கு அள்ளிக் கொடுத்தது போல்,  இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான இரயில்வே துறையிலும் ’வளர்ச்சி’ என்ற பெயரில் ஏகாதிபத்தியங்களின் நிதி மூலதனத்திற்கு அனுமதி அளிக்க முடிவு செய்திருக்கிறது மத்திய அரசு. அதன்படி சரக்கு ரயிலுக்கான தனி இருப்புப் பாதை அமைப்பது, சென்னையில் கார்களை கொண்டு செல்லும் ரயில் முனையம், புல்லட் ரயில் போன்றவைகளுக்கு இங்கே பெரும் அன்னிய நிறுவனங்கள் வர இருக்கின்றன.

அதற்குள் பயணிகள் ரயிலையும் இப்படி பழக்கப்படுத்துகிறார்கள் போலும். படிப்படியாக விலையை ஏற்றி இரயில்வேயை சேவைத் துறையிலிருந்து இலாபம் ஈட்டும் வியாபாரமாக மாற்றிவருகிறது மோடி அரசு. இதையே காரணம் காட்டி, தனியார் வந்தால்தான் போட்டி ஏற்பட்டு கட்டணம் குறையும் என்பது போன்ற பொய்களைக் கட்டவிழ்த்து, ஒட்டு மொத்த இரயில்வேத் துறையையும் தனியாரின் வசம் ஒப்படைக்கத் திட்டமிடுகிறது மோடி அரசு. மத்தியில் மோடி ஆட்சியின் தொடக்கம் இரயில் பயணத்திலிருந்து ஏழைகளை ஒதுக்கி வெளியேற்றியது. தற்போது அதன் நீட்சியாக நடுத்தரவர்க்கமும் வெளியேற்றப்படவிருக்கிறது.