நாளொன்றுக்கு 200 கிலோமீட்டருக்கு அதிகமான தூரம் பயணிக்கும் 508 பயணிகள் ரயில்களை (Passenger Train) விரைவு இரயில்களென (Express Train) மாற்ற உள்ளதாக இரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜீன் 17 அன்று இரயில்வேத் துறை வெளியிட்டுள்ள ஆணையில் இந்தியா முழுவதும் பல நகரங்களுக்கு இடையே ஓடிக் கொண்டிருக்கும் சுமார் 508 பயணிகள் இரயில்களை விரைவு இரயில்களாக மாற்ற இருப்பதாகத் தெரிவித்துள்ளது. இது குறித்து இரண்டு நாட்களுக்குள் விரைவாக முடிவெடுத்து தெரிவிக்குமாறு 17 இரயில்வே மண்டலங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.
ஒரு நாளுக்கு 200 கி.மீ-க்கு அதிகமாகப் பயணிக்கும் பயணிகள் இரயில்களை விரைவு இரயில்களாக மாற்றுவதன் மூலம், வருமானத்தை அதிகப்படுத்துமாறு அந்த ஆணையில் குறிப்பிட்டுள்ளது.
இந்த வகையில் தென்னக இரயில்வே தமிழகத்தில் ஓடும் 34 பயணிகள் இரயில்களையும் கேரளாவில் ஓடும் 10 பயணிகள் இரயில்களையும் விரைவு இரயில்களாக மாற்ற திட்டமிட்டுள்ளது.
பயணிகள் இரயில்களே தமிழகத்தில் பல்வேறு சிறுநகரங்களை இணைக்கின்றன. கல்லூரி, பள்ளி மாணவர்கள், பணிபுரிவோர், சிறுதொழில், வியாபாரம் செய்வோர் அனைவருக்கும் எளிமையான, மலிவான போக்குவரத்து வடிவமாக பயணிகள் இரயில் ஆற்றிவரும் சேவை மிகவும் முக்கியமானது. பயணிகள் இரயிலின் கட்டணம், பேருந்துக் கட்டணம் மற்றும் விரைவு இரயில் கட்டணத்தை விடக் குறைவு என்பதும், பல ஊர்களையும் இணைத்துச் செல்கிறது என்பதுமே மக்கள் இந்தச் சேவையை தொடர்ந்து பயன்படுத்த முக்கியக் காரணமாகும்.
சென்னை, மதுரை, கோவை, திருச்சி போன்ற மாநகரங்களைச் சுற்றியுள்ள பல்வேறு சிறு நகரங்களில் இருந்து பணிக்காகவும், தொழிலுக்காகவும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பயணிகள் இரயில்களின் சிறப்பம்சமே இந்த இரயில்கள் சிறுசிறு ஊர்களிலும் நின்று செல்லும் என்பதுதான். கிராமப்புற மற்றும் சிறுநகர பொருளாதாரத்தில் பயணிகள் இரயில்கள் முக்கியப் பங்காற்றுகின்றன.
படிக்க:
♦ அடாவடி நுண்கடன் நிறுவனங்களைக் கண்டித்து சுவரொட்டி ஒட்டிய மக்கள் அதிகாரம் தோழர்கள் கைது !
♦ பார்லே ஜி பிஸ்கெட் விற்பனை உயர்வு : சாதனையா ? வேதனையா ? – நீரை மகேந்திரன்
இந்நிலையில் இந்தியா முழுவதும் பயணிகள் இரயிலை விரைவு இரயில்களாக மாற்றுவது நாட்டின் உள்நாட்டு பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதிக்கும். சிறு நகரங்களில், கிராமப்புறங்களில் உள்ள மக்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கும்.
கோவிட்-19 ஊரடங்கு தாக்குதலில் வாழ்வாதாரத்தை இழந்த மக்கள் தங்கள் எதிர்காலம் என்னாகுமோ என கவலை கொண்டிருக்கையில், ஊரடங்கு சூழலைப் பயன்படுத்திக் கொண்டு தொடர்ச்சியான தாக்குதல்களை அவர்கள் மீதே தொடுத்துக் கொண்டிருக்கிறது மத்திய அரசு.
மத்திய அரசின் இந்த நகர்வுகள் அனைத்துமே, இரயில்வேயைத் தனியார்மயப்படுத்தும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டே நடக்கின்றன. ஏற்கெனவே நன்றாக வருமானம் ஈட்டக்கூடிய 100 ரயில் தடங்களில் ஓடும் 150 ரயில்களை தனியார்மயமாக்க அரசு முடிவெடுத்து இருக்கிறது.
கடந்த ஜூன் 19 அன்று இந்திய இரயில்வே வாரிய நிதி ஆணையாளர் அனைத்து ரயில்வே பொது மேலாளர்களுக்கும் செலவினங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து அனுப்பியுள்ள வழிகாட்டுதலில், “வருமானம் இல்லாத பாதைகளில் இரயில் இயக்கத்தை நிறுத்தி, அதன் மூலம் செலவினங்களைக் குறைக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளதை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது அறிக்கையில் சுட்டிக் காட்டி இரயில்வேதுறையின் இந்த நகர்வை கண்டித்திருக்கிறார்.
பயணிகள் இரயில்களைப் பொருத்தவரையில் இரயில்வேதுறைக்கு அது வருமான இழப்பை ஏற்படுத்தியிருந்தாலும், மறைமுகமாக அது உருவாக்கும் தொழில் வருமானம் நாட்டின் பொருளாதாரத்தின் மூலமாக அதனை ஈடு செய்யக் கூடியதாகும். தற்போது மொத்த இரயில்வேயையும் தனியாருக்குத் தாரைவார்க்க போடப்பட்டிருக்கும் திட்டத்தில் பெரும் நெருடலாக இருப்பவை இத்தகைய வருமான இழப்பை ஏற்படுத்தும் பயணிகள் இரயில்கள்தான் என்பதால் அவற்றை ஒழித்துக்கட்டவே இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது மத்திய அரசு.
பயணிகள் இரயில்கள் விரைவு இரயிலாக மாற்றப்படும் பட்சத்தில், பயணச் சீட்டு விலை கடுமையாக உயரும். முக்கியமான நகரங்களில் மட்டுமே நிறுத்தங்கள் இருக்கும். இதன் விளைவாக சிறு நகர, கிராமப்புற மக்களுக்கு இரயில் பயணம் என்பது எட்டாக்கனியாவதோடு, அவர்களது வாழ்வாதாரமும் பொருளாதாரமும் கடுமையான பாதிப்புக்குள்ளாகும். இது மத்திய அரசுக்குத் தெரியாத விசயமில்லை. மோடி அரசுக்கு அது குறித்த கவலையுமில்லை.
நாம் செல்லும் இரயில் தடத்தில் இந்தப் பிரச்சினை இல்லையென்றோ, நாம் இரயிலிலேயே பயணிக்கவில்லையே என்றோ இதனைக் கண்டும் காணாமல் போனால், இன்று இரயில்கள் ஓடாத காரணத்தால், புலம் பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு நடந்து சென்ற நிலைமை, நாளை இரயில்கள் ஓடும் சூழலிலும் நமக்கு ஏற்படும் என்பதே நிதர்சனம் !
– நந்தன்
செய்தி ஆதாரம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா.
மக்களுக்கு பயண்படும் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் (அசையும்.அசையா சொத்துகள் உள்பட)விற்பனையாகிவிட்டது எ.க. மாடர்ன்பேக்கரி.விஎஸ்என்ல்.பால்கோ…மீதமிருக்கும் உயிர்நாடியான வாழ்வாதரமற்ற மக்களின் பயணத்திர்கு உதவி வரும் போக்குவரத்துக்கும் வேட்டுவைக்கிறது ஆன்லைன் பாசிசம்… மீண்டும் நினைவுக்கு வருகிறது வீரசெரிந்த தென்னிந்திய இரயில்வே போராட்டம்…