ருணையே கடவுள் – இந்த ஊரடங்கு காலத்தில் இந்தியாவின் பெரும்பரப்பில் குறுக்கும் நெடுக்குமான நெடுஞ்சாலைகளில் நடையாய் நடந்தவர்களின் கைகளில் அளிக்கப்பட்ட உணவு பொட்டலங்களே காருண்யம். அதற்கு விலை இல்லை, பட்டினி கூட்டத்தின் ஒரு வேளை சோற்றுக்கு காட்டப்படும் கருணைதான் உலகம் மதிப்பிட முடியாத பேரன்பு. அன்புக்கு காலந்தோறும் அழிவில்லை. இந்தியா பல கால கட்டங்களில் அதை மெய்ப்பித்திருக்கிறது.

ஆனால் அதற்கு அடையாளம் இருக்கிறது. காயசண்டிகையின் அட்சயபாத்திரமே என்றாலும், ஏழைகளுக்காகவும், ஏதிலிகளுக்காகவும் சுரக்கும் அன்புக்கு அடையாளம் இருக்கிறது. லெமன் சாதம் ஊறுகாய் போல, சப்பாத்தி வெங்காயம் போல, ஊழிகால பிஸ்கெட் பாக்கெட்டுகளில் பொறிக்கப்பட்ட அடையாளம் பார்லே ஜி.

சமச்சீரான உணவு அதீத எதிர்பார்ப்பு என்கிற நிலையில், ரேஷன் அரிசி வாங்க வரிசையில் நிற்கும் தகப்பனுக்கு, மூக்கொழுக நிற்கும் பிள்ளையின் கையில் கொடுக்க இந்தியா உருவாக்கிய பிஸ்கெட்.

அப்பேர்ப்பட்ட ஏழைகளின் ஒரு விற்பனை பண்டம், சாதனை படைக்கிறது என்றால், எப்பேர்ப்பட்ட பெருமை. எப்பேர்ப்பட்ட வறுமை. விற்பனையில் சாதனையா ? வறுமையின் பெருமையா? என்பதுதான் என் குழப்பம்.

ஏழைகளின் கையில் பணம் இல்லாத நிலையிலும், பார்லே ஜி சந்தை எழுந்து நிற்கிறது. இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பிஸ்கெட் என்கிற பெருமையை பெற்றுள்ளது. அந்த நிறுவனத்தின் 80 ஆண்டுகால பிஸ்கெட் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத விற்பனை இந்த ஊரடங்கு காலத்தில் நடந்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் மூத்த அதிகாரி மாயங்க் ஷா ஒரு நேர்காணலில் கூறுகையில், ஏற்கெனவே 40 சதவீத பிஸ்கெட் சந்தையை வைத்துள்ள நிலையில், ஊரடங்கு காலத்தில் மேலும் 5 சதவீத சந்தையை கைப்பற்றி உள்ளதாக குறிப்பிடுகிறார். 5 ரூபாய் மதிப்புள்ள பார்லே ஜி பிஸ்கெட் பாக்கெட்டுகள் மட்டும் 90 சதவீத விற்பனை வளர்ச்சியை கண்டுள்ளதாக தெரிவிக்கிறார்.

குறிப்பிட்ட 3 மாதங்களில், ஒரு பிஸ்கெட் பிராண்ட் 90 சதவீதம் விற்பனை உயர்ந்திருப்பது சாதாரணமானதல்ல, அபூர்வமான நிகழ்வு. அதனால்தான் சாதனை என அந்த நிறுவனம் தெரிவிக்கிறது. ஆனால், அதில் பெருமை கொள்ள எதுவுமில்லை என்கிற உண்மையை உணர பார்லே ஜி பிஸ்கெட்டின் உண்மையாக நுகர்வோராக நாம் இருக்கவேண்டும்.

மக்களின் ருசியும், ரசனையும் நாளுக்கு நாள் மாறிக் கொண்டிருக்கும் நிலையில், 80 ஆண்டுகளாக ஒரு பிஸ்கெட் பிராண்ட் மக்களின் மனதில் இடம்பிடித்துள்ளதாக பலரும் பெருமை கொள்கின்றனர். அவர்களில் பலரும் தங்களின், பால்ய நாள் பார்லே ஜி நினைவுகளை மடிக்கணினியில் ஏற்றி மகிழ்ச்சி பொங்கல் வைக்கிறார்கள். அந்த நினைவுகளை அசைபோடும் நேரத்தில் எடுத்துக்கொண்ட நொறுக்கு தீனி எதுவென சொல்வதில் இருக்கிறது, அவர்கள் மீண்டும் ஏழையாக விரும்பாத ஒரு கடந்த காலம்.

உண்மையில், அது ஒரு திராபையான பிஸ்கெட் என்பது என் அனுபவம். எந்தவிதமான தனித்தன்மை சுவையும் கொண்டதல்ல. எனர்ஜி கிடைப்பதாக நிரூபணம் இல்லை. ஒரு கிலோ ரஸ்க் தயாரிக்கவே 150 ரூபாய்க்கு மேல் செலவாகும் நிலையில், கிலோ 100 ரூபாய்க்கு கீழே விற்பனையாகும் பிஸ்கெட்டுக்கு என்ன சத்தான மூலப்பொருள் சேர்த்து விடமுடியும்? இந்த வர்க்க முரண்பாட்டை மறைக்கும் சூட்சுமத்தைத்தான் 80 ஆண்டுகால மயக்கம் என்கிறார்கள்.

90 களில் குழந்தைகளாக இருந்தவர்களுக்கு, குறைந்த விலையில் வேறு பிஸ்கெட்டுகள் இல்லை என்பதால் பார்லே ஜி அதிகம் விற்பனையானது. இன்னொரு காரணம், இது மட்டும்தான் சிறு கிராமங்களில் உள்ள பெட்டிக்கடைகளில் குறைந்த விலையில் பாக்கெட்டாக கிடைத்தது. இதற்கு அடுத்து உதிரி பிஸ்கெட்டுகள்தான் கிடைக்கும்.

1929ஆம் ஆண்டு, பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் மும்பையின் சவுகான் குடும்பத்தாரால் தொடங்கப்பட்ட ‘பார்லே புராடக்ட்ஸ்’ என்கிற இந்த நிறுவனம், அடுத்து 10 ஆண்டுகளில் பிஸ்கெட் உற்பத்தியை தொடங்கியுள்ளது. ஆனாலும், 1990 க்கு பின்னரே அதன் சந்தையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

வீடுகளில் தொலைக்காட்சி பெட்டிகள் வரத் தொடங்கிய பின்னர், குறிப்பாக வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகளின் வருகை, பார்லே பிஸ்கெட் விற்பனையில் பெரிய மாற்றங்களை கொண்டு வந்தது.

படிக்க:
ரவுடிகளின் கூடாரமாகும் பெரம்பலூர் ! மாவட்ட ஆட்சியரிடம் அமைப்புகள் மனு !
♦ பார்லே பிஸ்கெட் நிறுவனத்தில் 10,000 பேர் பணிநீக்கம் ! 

அந்த நிறுவனத்துக்கு கிராக் ஜாக், மொனாக்கோ என வேறு பல பிஸ்கெட் பிராண்டுகள் இருந்தாலும் பெரிய அளவில் சந்தையை பிடிக்க முடியவில்லை. புதிய தலைமுறை நுகர்வோருக்கான ஹைட் அண்ட் சீக் போன்ற பிராண்டுகளும் சந்தையை கொண்டிருக்கவில்லை. பார்லே ஜி தான் அதன் மதிப்பு மிக்க பிராண்ட். நுகர்வு தேர்வுகள் சாத்தியமில்லாத அந்த நாட்களில் ஏழை குழந்தைகளின் மாபெரும் மகிழ்ச்சி பார்லே ஜி பிஸ்கெட். அதாவது 80 கிட்ஸ்களின் பிஸ்கெட்.

அதன்பின்னர், இந்தி நடிகர் முகேஷ் கண்ணாவை வைத்து சக்திமான என்ற தொலைகாட்சி தொடரை அந்த நிறுவனம் தயாரித்து, தூர்தர்ஷனில் வெளியிட்டது. அதன் பிறகுதான் பார்லே ஜி பிஸ்கெட் விற்பனையில் முக்கிய இடத்தை பிடிக்கிறது.

இரண்டாயிரத்துக்கு பின்னரான கிட்ஸ்களிடம் கேளுங்கள்.., அவர்களின் பிஸ்கெட் தேவைகளில் பார்லே ஜி க்கு பெரிய இடமில்லை. அதனால்தான், கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில், தற்போது 90 சதவீத விற்பனை அதிகரித்துள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.

சந்தையின் இன்னொரு முகம்

இந்திய பிஸ்கெட் சந்தையின் மதிப்பு சுமார் 37 ஆயிரம் கோடி ரூபாய் என்றால், அதில் பார்லே ஜி பிஸ்கெட் மட்டும் சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் சந்தையை வைத்துள்ளது. பிஸ்கெட் சந்தையில் இப்படி ஏகபோகமாக மாறியதற்கு பின்னால், அதன் விலை, விளம்பரம் மற்றும் விநியோக கட்டமைப்பு மட்டும் காரணமல்ல, அதற்கு இன்னொரு முகம் உள்ளது.

எப்போதெல்லாம் இந்தியாவில் பேரழிவுகள் நிகழ்கிறதோ, அப்போதெல்லாம் அந்த பிஸ்கெட் விற்பனை தாறுமாறாக எகிறுகிறது. குஜராத்தில் பூகம்பம், கடற்புரத்தில் சுனாமி, ஒடிசாவில் புயல், சென்னையில் பெருவெள்ளம் என எந்த பேரிடரின் போதும் அதன் விற்பனை இரண்டு மடங்காக அதிகரித்து விடும். இப்போதும் அது நிகழ்ந்துள்ளது. அரசும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் பண்டல் பண்டலாக வாங்கிய காரணத்தால் இதுவரை இல்லாத விற்பனை சாதனையை எட்டியுள்ளது.

மயங்க் ஷா.

மயங்க் ஷா பேட்டியில் அதை உறுதி செய்கிறார். பல மாநில அரசுகளிடம் இருந்து பிஸ்கெட் கேட்டு கோரிக்கைகள் வந்தன. மாவட்ட ஆட்சியர்களும், அதிகாரிகளும் எங்களுடன் தொடர்பில் இருந்தனர். கையிருப்பு விவரங்களுக்கு ஏற்ப ஆர்டர்களை அளித்தாக கூறியுள்ளார். தன்னார்வ அமைப்புகளும் பார்லே ஜி பிஸ்கெட்டை பண்டல் பண்டலாக வாங்கி விநியோகம் செய்து வருகின்றன.

உண்மைதான்; புலம்பெயர் தொழிலாளர்கள் பலருக்கு பார்லே ஜி பிஸ்கெட் மட்டுமே ஆறுதலான உணவாக இருந்தது. சமைத்த உணவோ, பிரெட்டோ கிடைக்காத மக்களுக்கு பார்லே ஜி கிடைத்தது. அல்லது அவர்கள் வைத்திருந்த ஒரே உணவாக இருந்தது. இப்படித்தான்; சாதாரண மனிதனின் பிஸ்கெட், பசித்த மானுடத்தின் சாதனை பிஸ்கெட்டாக மாறியது.

விலை உயர்ந்த பிஸ்கெட்டை வாங்க இடம்கொடுக்காத வறுமைதான் பார்லே ஜி விற்பனையின் பலம் என்றால், எதுவுமற்ற நிலையில் நிற்கும் மக்களுக்கு காட்டப்படும் அன்பிலும் பார்லே ஜி முந்தி நிற்பதுதான் இந்திய வர்க்கமூலத்தில் ‘கருணை’ கொண்டுள்ள இடம்.

கையில் இருக்கும் காசை கொண்டு, எதை வாங்கித் திங்க முடியும் என்பது ஏழைகளுக்கு தெரியும். யாருக்கான சந்தையில் நிற்கிறோம் என்பது பார்லே நிறுவனத்துக்கும் தெரியும்… ஆனால், ஏழைகளுக்கு அளிக்க உகந்தது இதுதான் என்பதை, கருணை உள்ளங்களுக்கு கற்றுக் கொடுத்தது எது?

கருணையை சந்தேகிப்பது சரியாக இருக்காது. பாலைவன தாகத்துக்கு சிறிய சுனையில் கிடக்கும் நீர். எதுவுமற்றவர்களுக்கு கிடைத்த ஏதோ ஒன்று. அதுவும் இல்லையென்றால் நெடுஞ்சாலைகளில் கொத்து கொத்தாக நம் தேசம் செத்து கிடந்திருக்கும். ஆனால்… யாருக்கான உதவி என்பதை தீர்மானித்த பின்னர், கருணையின் அகலம் விரிவதே நம் அவலமாக உள்ளதையும் மறைக்க முடியாது. நெடுஞ்சாலைகளில் தேசியப் பண்டமாக பார்லே ஜி கையளிக்கப்பட்டதில் கண்டதே உண்மை.

அதாவது ஏழ்மையின் மீது எழுந்து நிற்கும் கருணை. வறுமையே பெருமையான சரித்திரம். 80 ஆண்டுகளாக ஏழைகளை மட்டுமே வாடிக்கையாளர்களாக கொண்ட ஒரு பிராண்ட் விற்பனையில் சாதனை படைக்கிறது என்றால், முதல் கசப்பான உண்மை 80 ஆண்டுகளாக ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தில் எந்த மாற்றமும் இல்லை. இரண்டாவது உண்மை, ஏழைகள் விகிதாச்சாரம் மேலும் அதிகரிக்கிறது. மற்றும் ஒரு கசப்பான உண்மை, ஏழைகள் மீது காட்டப்படும் கருணையில் நீடிக்கும் வறுமை.

-நீரை மகேந்திரன்.
நன்றி: உயிர்மை

disclaimer

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க