Monday, January 25, 2021
முகப்பு செய்தி இந்தியா பார்லே பிஸ்கெட் நிறுவனத்தில் 10,000 பேர் பணிநீக்கம் !

பார்லே பிஸ்கெட் நிறுவனத்தில் 10,000 பேர் பணிநீக்கம் !

சந்தை ஆய்வு நிறுவனமான நீல்சன், இந்திய நுகர்வோர் சந்தை வீழ்ச்சியடைவதாக கூறுகிறது. பார்லே மட்டுமல்ல, பல உணவு தயாரிப்பு நிறுவனங்களும்கூட தேவை குறைந்து வருவதாக கூறியுள்ளனர்.

-

ந்தியாவின் முன்னணி பிஸ்கெட் நிறுவனமான பார்லே புராடக்ட் பிரைவேட் லிமிடெட், பத்தாயிரம் பணியாளர்களை பணியிலிருந்து நீக்க முடிவெடுத்துள்ளது. பொருளாதார வளர்ச்சி நிலை மந்தமடைந்திருப்பதன் காரணமாக ஊரகப் பகுதிகளில் தேவை குறைந்திருப்பது இதற்குக் காரணமென அந்நிறுவனத்தின் நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆசியாவின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதாரத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக கார்கள் முதல் ஆடை வரை அனைத்தும் விற்பனையும் சரிவை சந்தித்துள்ளன. இது உற்பத்தியைக் குறைக்க நிறுவனங்களை கட்டாயப்படுத்தியுள்ளன. வளர்ச்சியைப் புதுப்பிக்க மத்திய அரசு பொருளாதார தூண்டுதலைத் தரும் எனவும் பலர் எதிர்ப்பார்க்கின்றனர்.

PARLE-BISCUITS-CONFECTIONERIESபார்லே பிஸ்கெட் விற்பனையில் ஏற்பட்டுள்ள சரிவு காரணமாக 8,000 முதல் 10, 000 பேரை பணிநீக்கம் செய்ய முடிவு செய்திருப்பதாக அந்நிறுவனத்தைச் சேர்ந்த மயான்க் ஷா கூறியுள்ளார். “நிலைமை மோசமாக உள்ளது, அரசு உடனடியாக தலையிடவில்லை எனில், நாங்கள் கட்டாயமாக பணிநீக்கம் செய்ய வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுவோம்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

1929-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பார்லே நிறுவனம், நேரடியாகவும் மறைமுகமாகவும் கிட்டத்தட்ட 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது. சொந்தமாக 10 இடங்களிலும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் 125 இடங்களிலும் இந்நிறுவனம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

பார்லே நிறுவனத்தின் முக்கியமான தயாரிப்பான ‘பார்லே-ஜி’ பிஸ்கெட்டுகள் தயாரிப்பு, 2017-ம் ஆண்டு ஜி.எஸ்.டி. அமலாக்கத்துக்குப் பின், ரூ. 5 பிஸ்கெட் பாக்கெட்டுக்கு அதிக வரி கொடுக்க வேண்டியிருந்ததாகவும் இதனால் தயாரிப்பு கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும் அந்த அதிகாரி தெரிவிக்கிறார்.

அதிக வரி காரணமாக, பாக்கெட்டில் சில பிஸ்கெட்டுகளை சலுகையாக தர வேண்டியிருந்ததாகவும் கூறும் அவர், “நுகர்வோர் விலையைப் பற்றி மிக கவனமாக இருக்கிறார்கள். எத்தனை ரூபாய்க்கு எத்தனை பிஸ்கெட் கிடைக்கிறது என்பதில் அவர்கள் கவனமாக இருக்கிறார்கள்” என்கிறார்.

படிக்க:
♦ ஓசூர் அசோக் லேலாண்டில் சட்டவிரோத லே – ஆஃப் !
♦ யூடியூபில் பரவும் பருவநிலை மாற்றம் குறித்த வதந்திகள் !

இந்தியாவின் மூன்றில் இரண்டு பகுதி மக்களை உள்ளடக்கிய ஊரகப் பகுதியைச் சார்ந்த குறைந்த வருமானம் உள்ளவர்கள் பார்லே பிஸ்கெட்டுகளை வாங்குகிறவர்களாக உள்ளனர்.

கடந்த ஆண்டே, முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜேட்லியிடம் ஜி.எஸ்.டி வரியை குறைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்ததாகவும் ஷா தெரிவிக்கிறார். இந்திய பொருளாதார மந்த நிலை, ஆயிரக்கணக்கான வேலை இழப்புகள் வாகன துறையில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தியிருப்பதும் விற்பனையை குறைத்திருப்பதாகவும் அவர் கூறுகிறார்.

சந்தை ஆய்வு நிறுவனமான நீல்சன், இந்திய நுகர்வோர் சந்தை வீழ்ச்சியடைவதாக கூறுகிறது. பார்லே மட்டுமல்ல, பல உணவு தயாரிப்பு நிறுவனங்களும்கூட தேவை குறைந்துவருவதாக கூறியுள்ளனர்.

பிரிட்டானியா நிறுவனத்தின் மேலாண் இயக்குனரான வருண் பெர்ரி, ஐந்து ரூபாய்க்கு பொருளை வாங்குவதற்குக்கூட நுகர்வோர் இரண்டு முறை யோசிக்கிறார்கள். பொருளாதாரத்தில் மிக மோசமான பிரச்சினை உள்ளது என்பது மட்டும் உண்மை” என்கிறார்.

ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்ரமணியம் போன்ற முதலாளித்துவ பொருளாதார நிபுணர்களும்கூட இந்திய பொருளாதாரம் குறித்து எச்சரிக்கை விடுத்திருக்கிற நிலையில், தூங்கிக் கொண்டிருக்கும் மோடி அரசின் ரிசர்வ் வங்கி ஆளுநர், ‘சரியாகவிடும் என நினைத்தால் சரியாகிவிடும்’ என தத்துவம் பேசிக் கொண்டிருக்கிறார்.

காஷ்மீர் பிரச்சினையை கையில் எடுத்ததுபோல, திசைதிருப்ப ஏராளமான திட்டங்கள் அவர்கள் கைவசம் உள்ளதாலும், மக்களும் அதன் பின்னே ஓடத் தயாராக இருப்பதாலும் மோடி அரசுக்கு இப்போதைக்கு எந்தக் கவலையும் இல்லை.

வினவு செய்திப் பிரிவு
அனிதா
நன்றி
: இந்தியன் எக்ஸ்பிரஸ்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க