தமிழகத்தில் 27.10.2021 அன்று ரூ.200 கோடி மதிப்பீட்டில் “இல்லம் தேடிக் கல்வி” என்ற திட்டத்தை ஸ்டாலின் துவக்கி வைத்திருக்கிறார். இத்திட்டத்தின் நோக்கமாக கூறப்படுவது கொரோனா நோய் தொற்றினால் பள்ளிக் குழந்தைகளின் கற்றலில் ஏற்பட்டுள்ள இடைவெளியை சரி செய்யவும், இடைநிற்றலைத் தவிர்க்கவும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்கம் (சர்வ சிக்ஷா அபியான் – SSA) சார்பில் தன்னார்வலர்களைக் கொண்டு மாலை 5 முதல் 7 மணிக்குள் ஆடல், பாடல், நாடகம், பொம்மலாட்டம் போன்றவற்றின் மூலம் கல்வி கற்றுக் கொடுப்பது என்று அரசு தெரிவித்துள்ளது.
இத்திட்டம் முதல் கட்டமாக விழுப்புரம், காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, நீலகிரி, மதுரை, கன்னியாகுமாரி ஆகிய 12 மாவட்டங்களில் செயல்படுத்தப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது 6 மாத காலம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 86,550 பேர் தன்னார்வலர்களாக பணிபுரிய விண்ணப்பித்துள்ளார்கள். மேலும், தன்னார்வலர்களாக பணிபுரிய வருபவர்களுக்கு ஊக்கத்தொகையாக மாதம் ரூ.1000 தருவது பற்றி ஆலோசித்து வருவதாகவும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
இத்திட்டம் தமிழக அரசின் சாதனையாக அரசு சார்பிலும், திமுக-வினர் சார்பிலும் காட்டப்படும் அதே சமயத்தில் கணிசமான அளவில் பள்ளி ஆசிரியர்களிடமிருந்து இது புதிய கல்விக் கொள்கையிலிருக்கும் அம்சங்களில் ஒன்று என்றும், அரசு பள்ளிகளை பலவீனபடுத்தக் கூடியது என்றும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. மேலும், திராவிடர் கழகத் தலைவர் வீரமணியும் இது ஆர்.எஸ்.எஸ்.-ன் கல்விக் கொள்கையை பரப்புவதே என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் இதை எதிர்த்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
படிக்க :
♦ கலா உத்சவ் : சமஸ்கிருத திணிப்பில் ‘சமூகநீதி’ ஆட்சி || பு.மா.இ.மு கண்டன அறிக்கை
♦ கல்வியை மேம்படுத்த தனியார்மயத்தை ஒழிப்பதே ஒரே வழி !
இது ஒன்றிய பாஜக அரசு முன்னெடுத்திருக்கும் புதிய கல்விக் கொள்கையின் ஒரு அம்சமாக இருக்கும் திட்டம் தான் என்ற குற்றச்சாட்டுக்கு, திமுக-வின் செய்தித் தொடர்பாளர் இராஜீவ் காந்தி வியக்கத்தகு ஒரு விளக்கத்தை அளித்துள்ளார். இந்தத் திட்டத்திற்கு மாநில அரசுதான் ரூ. 200 கோடி செலவழிக்க இருப்பதாகவும், ஒன்றிய அரசிடமிருந்து இதற்கான நிதி ஒதுக்கப்படவில்லை எனவும் கூறி, அதனடிப்படையில் இது புதிய கல்விக் கொள்கையின் அம்சம் அல்ல என்று விளக்கமளிக்கிறார்.
புதியக் கல்விக் கொள்கையின் அங்கமா இல்லையா என்பதை, பணம் யாரிடமிருந்து செலவழிக்கப்படுகிறது என்பதிலிருந்து முடிவு செய்ய முடியும்? திட்டத்தின் மூலக் கருத்து புதிய கல்விக் கொள்கையோடு ஒத்துப் போகிறது என்பதிலிருந்துதானே முடிவு செய்ய முடியும். இதற்கான பதிலை சொல்லாமல் மழுப்புகிறது, திமுக. இல்லம் தேடி வரும் கல்வி எனும் இத்திட்டமே ஆர்.எஸ்.எஸ்.-ன் நிகழ்ச்சிநிரல் தான் என்பது குறித்து விரிவாகப் பார்ப்பதற்கு முன்னர், இத்திட்டத்தின் மூலம் அரசுப் பள்ளி மாணவர்களின் நலனுக்காக இதைச் செய்ததாக திமுக முன் வைக்கும் வாதத்திற்கு பதிலளித்து விடுவோம்.
இந்தத் திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்காக மாநில அரசின் நிதியிலிருந்து 200 கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பதன் மூலம் தாம் அரசு பள்ளி மாணவர்களின் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகக் காட்டிக் கொள்கிறது திமுக அரசு. உண்மையில் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி நிலைமை என்ன, என்பதிலிருந்து திமுக, அரசுப் பள்ளி மாணவர்களுக்காகத் தான் இதைச் செய்திருக்கிறதா என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
தமிழ்நாட்டில் உள்ள 37,579 அரசுப் பள்ளிகளில் 45,93,422 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். 2.27 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். ஆனால் வெறும் 12,382 தனியார் பள்ளிகளில், 64,15,398 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். 2.53 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இந்த ஒப்பீட்டில் இருந்து அரசு பள்ளிகளின் மோசமான நிலைமையை புரிந்து கொள்ள முடியும். (இதில் அரசு உதவி பெறும் பள்ளிகள் சேர்க்கப்படவில்லை)
இந்நிலையில் கொரோனா பெருந்தொற்றுப் பேரிடரால் ஏழை, நடுத்தர வர்க்கத்தினரின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட சரிவின் காரணமாக, சுமார் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தனியார் பள்ளிகளிலிருந்து அரசுப் பள்ளிகளை நோக்கி வந்துள்ளனர்.
அரசுப் பள்ளிக்கூடங்களில் ஏற்கெனவே மாணவர்களுக்குப் போதுமான ஆசிரியர்கள் இல்லாத நிலையில், அதிகரித்துள்ள மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு ஆசிரியர்களை அதிகரிப்பதற்கு நடவடிக்கைகள் எதுவும் எடுக்காமல், அதற்குப் பணம் செலவழிக்காமல், புதிய கல்விக் கொள்கையின் ஒரு அம்சத்தை மட்டும் நடைமுறைப்படுத்த ரூ. 200 கோடி மாநில அரசு நிதியை ஒதுக்கியிருப்பது மிகப்பெரிய துரோகம்.
மேலும் ஆசிரியர் பட்டயப் பயிற்சி படித்து முடித்து வேலைக்காக காத்துக்கிடக்கும் பல இலட்சம் இளைஞர்களுக்கு இனி அரசு ஆசிரியர் பணி கிடையாது என்பதையே இந்தத் திட்டத்தின் மூலம் தமிழ்நாடு அரசு நமக்குத் தெரிவிக்கிறது. ஏற்கெனவே, புதிய கல்விக்கொள்கை 2019-ன் வரைவிறிக்கையில் ஆசிரியர்கள் காண்ட்ராக்ட் அடிப்படையில்தான் நியமிக்கப்படுவார்கள் என்று தெரிவித்திருப்பதை நாம் இங்கு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியுள்ளது.
இது தவிர கொரோனா பெருந்தொற்றின் காரணமாக ஏற்பட்டிருக்கும் பொருளாதார பின்னடைவின் காரணமாக, ஏழை மாணவர்களின் இடைநிற்றலும் அதிகரித்துள்ளது. இத்தகைய சூழலில் தமிழக அரசு மாணவர்களை எவ்வாறு பள்ளிக்கு மீண்டும் கொண்டுவருவது குறித்து ஆசிரியர்களுடன் கலந்தாலோசித்திருக்க வேண்டும்.
அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, புதிதாக இணைந்துள்ள மாணவர்களை தக்கவைக்கவும், கல்வியை விட்டு வெளியேறும் மாணவர்களை தடுத்து நிறுத்தவும், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் பணியிடங்களை அதிகரித்து புதிய நியமனங்களையும் செய்திருக்க வேண்டும்.
ஆனால், திமுக அரசோ, ஆசிரியர்களையும் மாணவர்களையும் ஒருசேர வகுப்பறைகளிலிருந்து வெளியேற்றும் வேலையைச் செய்திருக்கிறது. வகுப்பறைக்கு வெளியில் மாணவர்களை தள்ளி ஆசிரியர்கள் இடத்தில் தன்னார்வலர்களை நிரப்புகிறது. பள்ளிக் கல்வியின் அறிவியல் அடிப்படையை இது தகர்க்கிறது. ஆர்.எஸ்.எஸ். கல்விக் கொள்கையின் நோக்கமும் அதுதான்.
முறையாக பி.எட், எம்.எட், ஆசிரியர் பட்டயப்படிப்பு படித்தவர்கள் மாணவர்களுக்கு பாடம் எடுத்தே கற்றல் குறைபாடு நிகழ்கிறது எனில், இத்திட்டதின் படி 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 12 வகுப்பு படித்தவர் போதுமென்றும் 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏதேனும் ஒரு பட்டபடிப்பு படித்திருந்தால் போதும் என்றும் ஆசிரியர் பயிற்சிக் கல்வி பயின்றிருக்க வேண்டிய அவசியம் இல்லை எனும்போது கற்றல் குறைபாட்டை இது அதிகரிக்குமே தவிர ஒருபோதும் குறைக்காது.
மேலும், தன்னார்வலர்களை எவ்வாறு அளவிடுகிறீர்கள், அவர்கள் என்ன கற்றுத் தருகிறார்கள் என்று எவ்வாறு கண்காணிப்பீர்கள்..? பள்ளிக்கு வெளியே நிகழும் கல்வி மூலம் குழந்தைகளின் பாதுகாப்பு எவ்வாறு உறுதி செய்யப்படும், ஒரு சில மணிநேரத்தில் என்ன கற்றுக்கொடுப்பீர்கள் ? ஆகிய கேள்விகளுக்குத் தெளிவான பதில் எதுவும் திமுக-விடம் இல்லை.

இல்லம் தேடி கல்வி திட்டம் என்பது புதிய கல்விக் கொள்கையின் அங்கமே என பு.க.கொ. அறிக்கையிலிருந்தே மேற்கோள் காட்டி எழுதியிப்பது சிறப்பு..!
திமுக-வின் கொண்டை வெளியே தெரிய ஆரம்பித்துவிட்டது.
# ரூ. 200 கோடி செலவழிக்க இருப்பதாகவும், ஒன்றிய அரசிடமிருந்து இதற்கான நிதி ஒதுக்கப்படவில்லை எனவும் கூறி, அதனடிப்படையில் இது புதிய கல்விக் கொள்கையின் அம்சம் அல்ல என்று விளக்கமளிக்கிறார்#
இதுக்கு பேர்தான் உங்க விரலை வைத்தே உங்கள் கண்ணை குத்துவது என்பது