ருத்துவ படிப்புகளில் சேருவதற்கு தேசிய அளவிலான தகுதி தேர்வான நீட் கட்டாயமாக்கப்பட்ட நிலையில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்களால் சேரமுடிவதில்லை என்பது கண்கூடு.

அனிதா போன்ற மாணவ – மாணவிகளின் மரணங்கள், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் 7.5% இட ஒதுக்கீட்டை வழங்கும் சட்டத்தை கொண்டு வருவதற்கு காரணமாக இருந்தன. அதனை நிறைவேற்றுவதற்கும்கூட கடுமையான போராட்டங்கள் நடத்தப்பட வேண்டிய நிலைமையே தமிழ்நாட்டில் இருந்தது. சட்டமன்றத் தேர்தலை கணக்கில் கொண்டு அந்த இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது.

அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவிற்கு நீட் தேர்வு ஒரு பெரும் முட்டுக்கட்டையாக இருக்கிறது. இதற்கு முதல் காரணம், நீட் தேர்வு, ஒரு போட்டித் தேர்வு என்ற முறையிலேயே நடத்தப்படுகிறது. போட்டித் தேர்வுகளை எழுதுவதற்கான பயிற்சியை யாரால் தொடர்ச்சியாக எடுக்க முடிகிறதோ, அவர்களால் மட்டுமே இத்தகைய போட்டித் தேர்வுகளில் வெற்றிபெற முடியும்.

படிக்க :

வாட்சப் பல்கலை சாக்கடையில் பிறக்கும் போலி வரலாற்று புழுக்கள் !

புதிய கல்விக் கொள்கையை கமுக்கமாக அனுமதிக்கும் தி.மு.க !

அரசுப் பள்ளி மாணவர்களில் ஆகப் பெரும்பான்மையினர் ஏழை எளிய மாணவர்களே. ஆகவே இந்த போட்டித் தேர்வு முறையில் அவர்கள் ஓரங்கட்டப் படுகிறார்கள்.

இரண்டாவதாக, இத்தேர்வுகளில் சி.பி.எஸ்.ஈ பாடத் திட்டத்திலிருந்து கேட்கப்படும் தேர்வுக் கேள்விகள் முக்கியக் காரணமாகின்றன. அரசுப் பள்ளிகளில் உரிய பாடங்களை நடத்துவதற்கே ஆசிரியர் பற்றாக்குறை இருக்கும்பட்சத்தில் எங்கிருந்து சி.பி.எஸ்.ஈ பாடத் திட்டத்தை நடத்துவது?

வசதி படைத்தவர்கள், தனியார் பள்ளிகளிலும் பயிற்சி மையங்களில் பணத்தை கொட்டி தமது பிள்ளைகளுக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கின்றனர். ஏழை மாணவர்களுக்கு அரசுப் பள்ளிக்கூடம்தான் ஒரே வழி. ஆனால் இந்த அரசுப் பள்ளிக்கூடங்களின் நிலைமை என்னவாக இருக்கிறது ?

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் 20 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என நியமிக்கப்பட வேண்டும் என்பதுதான் ஆரம்பகால விதி. ஆனால் அந்த விதி தற்போது பின்பற்றப்படுவதில்லை. இந்த விதி ஏற்படுத்தப்பட்ட ஆரம்ப காலங்களில், அரசும் போதுமான ஆசிரியர்களை நியமித்தது.

ஆசிரியர்களும் கல்வியை சேவை மனப்பான்மையோடு அணுகி மாணவர்களுக்கு கல்வி கற்பித்தனர்.  தமிழ்நாட்டு அரசுப் பள்ளிகளில் இருந்து பல விஞ்ஞானிகளும் பல்வேறு நிபுணர்களும் மருத்துவர்களும், தொழில்நுட்ப அறிஞர்களும் உருவாகினர்.

இந்த விதி கொண்டுவரப்பட்டு 33 ஆண்டுகளுக்குப் பிறகு அரசாணை எண் 525 (27.12.1997)-ன் படி 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என மாற்றி அமைக்கப்பட்டது. கல்வியில் தனியார்மயக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்ட காலங்களில், திட்டமிட்டு அரசுப் பள்ளிகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் குறைக்கப்பட்டன. இதனால் ஆசிரியர்களின் எண்ணிக்கை மேலும் குறைந்தது.

அதுவே இன்று கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக, ஆரம்பப் பள்ளிகளிலும் தொடக்கப்பள்ளிகளிலும் பல இடங்களில் ஒரே ஆசிரியர் 3 முதல் 5 வகுப்புகளுக்கு அனைத்து பாடங்களையும் எடுக்க வேண்டிய அவல நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.

இது மாணவர்களின் கற்றல் திறனை குறைத்து விட்டது. ஆற்றலில் பின்தங்கிய மாணவர்களின் இடைநிற்றலுக்கு காரணமாக இருக்கிறது. இது அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையையும் குறைத்து விட்டது.

கல்வியில் தனியார்மயத்தை கொண்டு வந்த ஆட்சியாளர்கள், அரசுப் பள்ளிகளின் மீதான அக்கறையை அறவே கைவிட்டனர். அதற்கு இதுக்கும் நிதியை சரமாரியாக குறைத்தனர். உலக மேலாதிக்க கந்துவட்டிக்காரனான உலகவங்கியின் உத்தரவின்படி, கல்விக்காக அரசு ஒதுக்கும்  நிதி 6 சதவிகிதத்தில் இருந்து 2.5 சதவீதமாக குறைக்கப்பட்டது.

இதன் காரணமாக அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்துவதற்கும் போதுமான ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதற்குமான நிதி குறைக்கப்பட்டது. அரசுப் பள்ளி மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டது. போதுமான ஆசிரியர்கள் நியமிக்கப்படாததால், அவர்களது கல்வித் திறன் ஒப்பீட்டளவில் குறைந்தது. ஆனால் தனியார் பள்ளிக்கூடங்களில் பணம் கட்டிப் படிக்கும் மாணவர்களுக்கு குறைந்தபட்சம் போதுமான ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு கல்வி பயின்றனர்.

இத்தகைய வேறுபாடும் ஏற்றத்தாழ்வும் ஏற்பட்டதற்கு கல்வி தனியார்மயமாக்கப்பட்டது ஒரு முக்கியக் காரணம். அதோடு, அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, கேந்திர வித்தியாலயா, நவோதயா பள்ளி என பாகுபடுத்தி அரசு நிதி ஒதுக்குவதும், அரசு பள்ளி மாணவர்களிடையே மேலும் ஏற்றத்தாழ்வான வளர்ச்சியை உண்டாக்குகிறது. அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள், ஒவ்வொருவருக்கும் ரூபாய் ஆயிரமும், சிறப்பு கேந்திரா – நவோதயா பள்ளி மாணவர்களுக்கு பதினோராயிரமும் அரசால் செலவழிக்கப்படுகிறது எனில், இதில் நிலவும் பாகுபாட்டை புரிந்துகொள்ள முடியும்.

தற்போது 2020 – 2021 காலகட்டத்தில் கொரோனா பெருந்தொற்று ஏற்படுத்தியிருக்கும் பொருளாதார தாக்கம், பல்வேறு நடுத்தரவர்க்க மக்களை அரசுப் பள்ளிகளை நோக்கித் தள்ளியிருக்கிறது. இதனால் இந்த ஆண்டு மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. ஆனால் அரசு பள்ளிகளிலோ அதே அளவுக்குத் தான் ஆசிரியர்களின் எண்ணிக்கை நீடிக்கிறது.

ஆசிரியர்கள் எண்ணிக்கையை உயர்த்தாமல் தரமான கல்விச் சேவை வழங்குவது என்பது சாத்தியமற்றது. மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தவும் முடியாது. அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நிதி ஒதுக்காமல், அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்த நிதி ஒதுக்காமல், “இல்லம் தேடி கல்வி” என்ற பெயரில் தன்னார்வலர்களை ஈடுபடுத்தி அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றலை மேம்படுத்தப் போவதாக கூறுகிறார், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் பொய்யாமொழி.

முறையான பயிற்சி பெற்ற ஆசிரியர்களே மாணவர்களின் கற்றல் திறனை வளர்ப்பதில் குறைபாடு நீடிக்கும்போது, நீட் போன்ற போட்டித் தேர்வுகளுக்கான கற்றல் திறனை ஆசிரியர்களால் தர இயலாத போது தன்னார்வலர்களால் எப்படி தர முடியும்?

தவிர, இல்லம் தேடி கல்வி என்பது சங்க பரிவாரக் கும்பல் முன்வைத்த புதிய கல்விக் கொள்கையின் ஒரு அங்கம் தான் என்பதும், அதன் மூலம் மாணவர்களின் மனதில் தன்னார்வலர்கள் என்ற பெயரில் இந்துத்துவ விசத்தைப் பரப்ப ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு நல்வாய்ப்பாகவே இது அமையும்.

நிலைமை இப்படி இருக்க, “அரசு பள்ளிகளை வறுமையின் அடையாளமாக இல்லாமல் பெருமையின் அடையாளமாக மாற்றுவோம்” என்ற வெற்றுச் சவடால் முழக்கம் வேறு அடித்துக் கொள்கிறார்கள் தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள்.  வாயில் வடை சுடுவதில் மோடிக்கு அடுத்தபடியாக தேர்ச்சி அடைந்தவர்கள் இவர்களாகத் தான் இருக்க முடியும்.

அரசுப் பள்ளிகளுக்கு போதுமான ஆசிரியர்களை நியமிப்பது முதல், பெஞ்சு, மேஜை, கட்டிடம், பராமரிப்பு உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பை அரசுதான் உருவாக்க  முடியும். அரசு இதனைச் செய்வதற்கு நிதி ஒதுக்காமலோ, அல்லது அந்த நிதியை வீடு தேடி கல்வி போன்ற திட்டங்களுக்கு மடைமாற்றியோ விடுகிறது.

இருப்பினும் மாணவர்களின் வருகை குறைவைக் காரணம் காட்டி பள்ளிகளை மூடுவதற்கான அரசு தரப்பு சதிகளை முறியடிக்க,  பல்வேறு அர்ப்பணிப்புணர்வு கொண்ட ஆசிரியர்களும் தங்களால் இயன்ற முயற்சியை மேற்கொள்கின்ற்னர். இதனடிப்படையில், சென்னை அம்பத்தூர் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள், ராமநாதபுரம் திருவொற்றியூர் நகராட்சி நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள், சென்னை மதரஸா பள்ளி ஆசிரியர்கள், புதுக்கோட்டை அரசுப் பள்ளி ஆசிரியர்கள் என பலரும், புரவலர்கள் மூலம் பெறும் உதவியைக் கொண்டு பள்ளிக்குத் தேவையான பெஞ்ச், மேஜை போன்ற தேவைகளையும், மாணவர்களுக்கான இலவச காலை உணவு உட்பட பல முயற்சிகளின் மூலம், மாணவர்களின் இடைநிற்றலை தடுத்து மேலும் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கப் போராடி வருகின்றனர்.

படிக்க :

தொடர்ந்து வஞ்சிக்கப்படும் ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்கள் !

மாணவர்கள் அரசியலில் பங்கெடுக்க வேண்டும் || தோழர் பகத்சிங்

இதை ஏன் அரசால் செய்ய முடியாது ? அரசால் நிச்சயம் செய்ய முடியும். ஆனால் அதைச் செய்வதற்கு எந்த அரசிற்கும் மனமில்லை. காரணம், தனியார்மயம் தாராளமயத்தை நடைமுறைப்படுத்துவதில்  பங்குதாரர்களாக, அது மக்களை அடிக்கும் கொள்ளையின் கூட்டாளிகளாக, அரசியல்வாதிகளும் அரசு அதிகாரிகளும் மாறிவிட்டனர்.

மீறி, தனியார்மய தாராளமயத்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கி அரசுப் பள்ளி, அரசு மருத்துவமனை என மக்களின் அடிப்படைத் தேவைகளை சேவையாக வழங்கினால், அந்த அரசைக் கலைப்பதற்கும் தயாராக இருக்கிறது ஏகாதிபத்தியங்களும் அதன் அடியாள் நிறுவனங்களும்.

கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை அரசுக் கட்டுப்பாட்டில் எடுத்து சேவையாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராடினால் மட்டுமே ஏழை மாணவர்கள் கல்வியிலும் வாழ்விலும் உயர்ந்து வர முடியுமே தவிர, அவ்வப்போது நம்மை சமாளிக்க கொடுக்கப்படும் சலுகைகளால் அல்ல.

கதிரவன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க