தொடர்ந்து வஞ்சிக்கப்படும் ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்கள் !
அவர்களை படிக்க விடாமல் செய்துகொண்டே, படித்து முன்னேறியவர்களை தகுதி, திறமை என மோசடி செய்து ஒழித்துக் கட்டும் கைங்கரியத்தை செவ்வனே செய்து கொண்டுள்ளது, ஆதிக்க சாதி வெறி பார்ப்பனியக் கும்பல்.
தமிழகமே சமூக நீதிப் போராளி பெரியாருக்கு விழாவைக் கொண்டாடிய மறுநாள் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில செய்தித்தாளில் சமூக நீதியை கேள்விக்குள்ளாக்கும் இரண்டு செய்திகள் பல்லிளிக்கின்றன.
18-09-2021 தேதி வெளியான இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் ஒரு செய்தி அச்செய்தியின் படி, நீலகிரியில் உள்ள ஆதிவாசிகள் ஆய்வு மையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் நன்கு ஆய்வு செய்து, சான்றுகள் அடிப்படையில் காட்டு நாயக்கன் சாதியைச் சேர்ந்த 21 மாணவர்களுக்கு S.T சாதிச் சான்றிதழ் தரலாம் என பரிந்துரைத்துள்ளனர். ஆகஸ்ட் மாதமே அவர்கள் பரிந்துரையைத் தந்துவிட்டார்கள் என்று அவர்களின் பரிந்துரைக் கடிதம் மூலம் தெரிய வருகிறது. காசு, பணம் தர இயலாததால் இன்றைய தேதி வரை அவர்களுக்கான சாதிச் சான்றிதழ் வழங்கப்படவில்லை.
விழுப்புரம் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர் ஏ.மகேந்திரன், 2019-ம் ஆண்டிலிருந்தே சாதிச் சான்றிதழ் பெற கடும் முயற்சி எடுத்தும் இதுவரை சான்றிதழ் பெற முடியாமல் தவித்து வருகிறார். கல்லூரியோ சாதிச் சான்றிதழ் இல்லாமல் பட்டம் வழங்க முடியாது என மிரட்டிக் கொண்டுள்ளது. S.T பிரிவு மாணவர்கள் படிப்பதே குதிரைக் கொம்பாக உள்ள நிலையில், அப்படிப் படிப்பவர்களை ஊக்குவிக்காமல் சாதிச் சான்றிதழ் இல்லையென்றால் பட்டம் தரமாட்டோம் என கல்லூரிகள் கூறமுடியுமா ?
இதே கல்லூரியில் இந்த ஆண்டு பி.காம் படிக்க விண்ணப்பித்த 17 வயது ஆர்.சீனுவாசனின் கல்லூரி சேர்க்கை, சாதிச் சான்றிதழ் இல்லாததால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சி.நந்தினி, கே.எழிலரசன் என்ற 17 வயது +2 முடித்த மாணவர்களுக்கு அந்தக் கொடுப்பினை கூட இல்லை. அரசுக் கல்லூரிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போதே சாதிச் சான்றிதழை இணைக்காததால் இன்னும் விண்ணப்பத்தையே பதிவேற்ற முடியாமல் தவிக்கிறார்கள். அவர்களும் என்னென்ன முடியுமோ அத்தனையையும் செய்து பார்த்துவிட்டு பரிதவித்து நிற்கிறார்கள்.
இதேபோல 10,12-ம் வகுப்பு மாணவர்கள் 20 பேர் சாதிச் சான்றிதழுக்கு விண்ணப்பித்து காத்துக் கிடக்கிறார்கள். சான்றிதழ் தரவில்லை என்றால் இந்த ஆண்டு பொதுத் தேர்வுக்கான நுழைவுச் சீட்டும் கிடைக்காது, பொதுத் தேர்வையும் எழுத அனுமதிக்க மாட்டார்கள் என்ற பரிதவிப்பில் செய்வதறியாமல் உள்ளனர். தங்களின் படிப்பை பாதுகாக்கக் கோரி மாவட்ட நிர்வாகத்திடம் விண்ணப்பித்துள்ளனர்.
ஆனால் அவர்களுக்கு சான்றிதழ் தராமல் இழுத்தடித்திருக்கிறது அரசு நிர்வாகம். காட்டுநாயக்கன் சாதி என்பது மலைசாதி மக்களில் ஒரு பிரிவினரைக் குறிக்கிறது. அப்பிரிவு மக்கள் S.T பிரிவைச் சேர்ந்தது. இந்த S.T பிரிவு மாணவர்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்க அதிகார வர்க்க கும்பல் ஆயிரத்தெட்டு இழுத்தடிப்புகளைச் செய்து, கடைசியில் சாதிச் சான்றிதழே தர மாட்டார்கள்.
காட்டுக்குள் இல்லாமல் ஊருக்குள் வசிப்பதால் எதை நம்பி சான்றிதழ் தர முடியும்? என நியாயஸ்தன் போல பேசும் இந்த யோக்கிய சிகாமணிகள்தான் காசு வாங்கிக் கொண்டு ஆதிக்க சாதியினருக்கே S.T சான்றிதழும் தருபவர்கள். இவர்களின் இந்த யோக்கியதையின் காரணமாகத்தான், S.T சான்றிதழ் தருவதற்கு பல கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன.
அப்படிப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு ஆய்வு செய்து, சாதிச் சான்றிதழ் தரலாம் என அதிகாரிகள் அனுமதி கொடுத்தும் கூட இன்று வரை சான்றிதழ் வழங்காத காரணத்தால்தான் இந்த மாணவர்களுக்கு எதிர் காலமே இன்று கேள்விக்குறியாகி நிற்கிறது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் டி.மோகன், எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் பேசியபோது பள்ளி மாணவர்களின் படிப்புக்கு எந்தத் தடையும் போடக்கூடாது என சம்பந்தப்பட்ட கல்வித் துறைக்கு உத்தரவிட்டுள்ளதாகக் கூறியவர், கல்லூரி மாணவர்களின் கல்லூரி சேர்க்கையை தடையின்றி செய்ய உறுதியளித்துள்ளதோடு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே சாதிச் சான்றிதழை வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளதாகக் கூறினார்.
ஆனால், எதற்காக இது வரை சான்றிதழ் வழங்கவில்லை என தனக்குக் கீழ் பணிபுரியும் இடைநிலை அதிகாரியைக் கேள்வி கூடக் கேட்கவில்லை ! விசயம் செய்தித் தாள்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வந்ததால்தான் இந்த நடவடிக்கை கூட குறைந்தபட்சமாக எடுக்கப்பட்டிருக்கிறது. இல்லையெனில் இவையெல்லாம் அதிகாரவர்க்கத்தின் கடைக்கண் பார்வைக்குக் கூட எட்டியிருக்காது. இப்படிப்பட்ட கேடுகெட்ட கழிசடைக் கும்பலை அரசு இயந்திரத்தில் வைத்துக் கொண்டு சமூக நீதியை நட்டமாக தூக்கி நிறுத்தப் போவதாக சொல்கிறார்கள் ஆட்சியாளர்கள். அது சாத்தியமா ? இல்லை கண் துடைப்பா ?
0o0o0
இதே எக்ஸ்பிரஸ் நாளிதழில் இன்னொரு செய்தி. ஐ.ஐ.டி.-கள் எனப்படும் உயர்கல்வி தொழில்நுட்ப ஆய்வு நிறுவனங்களில் இட ஒதுக்கீடு அடிப்படையில் பேராசிரியர்கள் நியமிக்கப்படவில்லை எனவும், உடனடியாக சிறப்பு நடவடிக்கை எடுத்து பேராசிரியர்களை நியமிக்க வேண்டும் எனவும் ஒன்றிய அரசு வலியுறுத்தியுள்ளதாம் ! சரி, அப்படி இப்படி என ஏதோ ஒருசில நியமனங்கள் நடக்காமல் போயுள்ளதோ எனப் பார்த்தால், மலைக்கும் மடுவுக்கும் போல வித்தியாசம் நீடித்திருக்கிறது.
23 ஐ.ஐ.டி.-களில் மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கை 6,043 பேர். இதில், பிற்படுத்தபட்டோர் 27% எண்ணிக்கையிலும், S.C பிரிவினர் 15% (906 பேர்) எண்ணிக்கையிலும், S.T பிரிவினர் 7.5% (453 பேர்) எண்ணிக்கையிலும் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மொத்தத்தில் S.C பிரிவில் 149 பேரும், S.T பிரிவில் வெறும் 21 பேர் மட்டுமே ஆசிரியர் பணியில் உள்ளனர். சில ஐ.ஐ.டி.-களில் S.T பிரிவில் ஒரு ஆசிரியர் கூட இல்லை. பிற்படுத்தப்பட்டோர் பற்றிய விவரங்களே இல்லை. S.C, S.T பிரிவு மொத்தம் 22.5% எண்ணிக்கை இருக்க வேண்டிய இடத்தில் வெறும் 2.8% எண்ணிக்கையில் மட்டுமே ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தக் கொடுமையை என்னென்பது?
சட்டம் மயிருக்குச் சமம் என பார்ப்பன, ஆதிக்க சாதி வெறிக் கும்பல் செய்துள்ள இந்த கொடூரத்தை யார் கேட்பது? சென்னையில் உள்ள ஐ.ஐ.டி.-யில் நடக்கும் கொடூரங்களை நாம் காலங்காலமாக பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம். S.C, S.T மாணவர்களை தற்கொலைகளுக்குத் தள்ளுவதும், பார்ப்பனக் கொடுங்கோன்மைக்கு ஈடுகொடுக்க முடியாமல் பல எஸ்.சி. எஸ்.டி பேராசிரியர்களே தங்களின் பதவியை ராஜினாமா செய்துவிட்டுச் செல்வதும் நடந்து கொண்டுதானே உள்ளது!
தகுதியானவர்கள் வரவில்லை எனக் கூறி பார்ப்பனக் கும்பலின் கோட்டையாக ஐ.ஐ.டி-க்கள் இன்றும் திகழ்வதற்கான காரணம் இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் முதல் செய்தியில் இருக்கிறது. பல்வேறு மோசமான வாழ்நிலையில் இருந்து மேலெழுந்து படிக்க வரும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களை படிக்கக் கூட விடாமல் தடுப்பதற்கு ஏற்ற பார்ப்பனிய வெறி ஊறிய அதிகார வர்க்கம் நிறைந்திருக்கும் இந்த அரசுக் கட்டமைப்பு தான் அடிப்படைக் காரணமாக இருக்கிறது.
கல்லூரிக் கல்விக்கே முட்டுக்கட்டை போடும் இந்த பார்ப்பனியக் கட்டமைப்பு, S.C, S.T மாணவர்களை உயர் ஆய்வு தொழிற்கல்வி பயில அனுமதித்துவிடுமா என்ன ? அல்லது அங்குதான் பணியாற்ற அனுமதித்துவிடுமா ?
ஒரு புறம் அவர்களைப் படிக்க விடாமல் விரட்டியடிக்கும் வேலையைச் செய்து கொண்டே, தப்பித்தவறி அப்படி படித்து முன்னேறியவர்களை தகுதி, திறமை என மோசடி செய்து ஒழித்துக் கட்டும் கைங்கரியத்தை செவ்வனே செய்து கொண்டுள்ளது ஆதிக்க சாதி வெறி பார்ப்பனியக் கும்பல்.
ஒன்றிய அரசு பெயரளவிற்குத்தான் வலியுறுத்துகிறது என்பதைப் புரிந்து கொண்டுதான் வெறும் நான்கு ஐ.ஐ.டி-கள் தவிர வேறு எந்த ஐ.ஐ.டி-யும் இந்த ஆசிரியர் நியமனத்திற்கு விளம்பரம் செய்யவில்லை. இந்த பார்ப்பன, ஆதிக்க சாதி வெறிக் கொழுப்பும், நெஞ்சழுத்தமும் தான் சமூக நீதியைப் பற்றிப் பேசினாலே இந்த பார்ப்பன பாசிசக் கும்பலை வயிறெரியச் செய்கிறது !!
நாகராசு
செய்தி ஆதாரம் : இந்தியன் எக்ஸ்பிரஸ் 18.9.21 ஆங்கில நாளிதழ்