வாட்ஸ் அப் பல்கலைக்கழகம் தொடந்து முன்னோக்கி வளர்ந்து வருகிறது. அதாவது போலிச் செய்திகள் அதிகம் பரவுவதன் மூலம் போலி வரலாறுகளை உருவாக்கும் விதமாக வளர்ந்து வருகிறது.
கல்வித் துறை வரலாற்று நூல்கள் முக்கியமாக பல்கலைக் கழக அமைப்புகளில் தொழில்முறை வரலாற்று ஆசிரியர்களால் ஒழுங்கு நெறிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன. இந்த நெறிமுறைகளில் வாத-பிரதிவாதங்கள், உரிமைக் கோரல்கள் போன்றவற்றை தீவிர ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியது மிகவும் அவசியம். இந்தத் துறையில் ஆராய்ச்சி அடிப்படையில் புத்தகங்கள் ஒரு நிறுவப்பட்ட பல்கலைக்கழக அச்சகத்திலிருந்து வெளியிடப்பட வேண்டிய அவசியம் இருக்கிறது. இது போன்ற எண்ணற்ற எழுதப்படாத விதிகள் முறையான வரலாற்றாசிரியர்களின் படைப்புகளுக்கு உண்டு.
சமீபத்தில் மீரா விஸ்வநாதன் எனும் வரலாற்றாசிரியர் கேரவன் பத்திரிகையில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். ”வரலாற்றுக்கு எதிராக” என்ற தனது கட்டுரையில் தற்போது இந்திய அரசின் முதன்மை பொருளாதார ஆலோசகராக இருக்கும் சஞ்சீவ் சன்யால் இந்திய வரலாற்றை திருத்தி எழுத முயற்சிப்பது குறித்து அம்பலப்படுத்துகிறார். பொருளாதாரத்தில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் வாங்கியுள்ள சஞ்சீவ் சன்யால், இந்திய வரலாற்றை எழுதுகிறார்.
படிக்க :
ஸ்லீப்பர் செல் சங்கிகளின் நஞ்சு பரப்புத் தளமாகும் வாட்சப் குழுக்கள் !
கும்பல் கொலைகள் : வாட்சப் குழுக்களின் பங்கு என்ன ?
மீரா விஸ்வநாதன் வரலாற்று துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். சமஸ்கிருதம், பிராகிருதம் ஆகிய மொழிகளில் திறமை வாய்ந்தவர். பண்டைய இந்தியாவைப் பற்றி வகுப்புக்கள் எடுப்பது மட்டுமல்லாமல் ஆராய்ச்சியும் செய்கிறார். மீரா விஸ்வநாதன் கேரவனில் எழுதிய தனது கட்டுரையில், சஞ்சீவ் சன்யாலை அம்பலப்படுத்துவதன் வழியாக “வரலாற்றை எழுதுவது” என்றால் என்ன? என்பது பற்றியும் எதுவெல்லாம் “வரலாறு” இல்லை என்பதைப் பற்றியும்  தெளிவுபடுத்துகிறார்.
இத்தகைய போலி வரலாற்றாசிரியர்கள் எங்கிருந்து உருவாகிறார்கள்? இவர்களின் நோக்கம் என்ன ? இவர்களது “ஆய்வுகளின்” விளைவுகள் என்ன ?
போலி வரலாறுகள் உருவாகும் வரலாறு :
போலி வரலாறு என்பது முதலில் ‘சதி’ என்ற அறிவிப்பின் மூலம்தான் பிறக்கிறது. போலி வரலாறுகள் பெரும்பாலும் சமூக ஊடகங்களில்தான் நிர்வகிக்கப்படுகின்றன. பல்வேறு யூடியூப் காணொளிகளில் இதனைக் கண்டிருக்கலாம். குறிப்பாக, இடதுசாரிகள், லிபரல்கள் மற்றும் நேரு ஆதரவு வரலாற்றாசிரியர்கள் இந்தியாவின் மோசமான வரலாற்றை சதி செய்து எழுதியதாகவே துவங்குவார்கள்.
இத்தகைய போலி வரலாற்றாசிரியர்கள், எக்காலத்திலும் வரலாறு சம்பந்தப்பட்ட தரநிர்ணய பத்திரிகைகளில் எழுதமாட்டார்கள். யாருக்கும் பதில் சொல்ல கடமைப்படாத தளங்களான சமூக வலைத்தளங்களில் போலி வரலாற்றை பதிவு செய்துவிட்டு அமைதியாகிவிடுவார்கள்.
இத்தகைய பொறுப்பேற்க அவசியமில்லாத வகையில் கருத்தை தெரிவித்துவிட்டு ஓடி விடுவது ஒரு வழிமுறையாகவே பின்பற்றப்படுகிறது. இவர்களின் உள்ளார்ந்த நோக்கம் மக்களை பயிற்றுவிப்பது அல்ல. மாறாக அவர்களிடம் வெடிக்கத்தக்க உணர்ச்சியை உண்டாக்கும் நோக்கத்திலேயே போலி வரலாறுகளை பரப்புகின்றனர். இந்த போலி வரலாற்றாய்வாளர்களுக்கு, உண்மையான வரலாற்றாசிரியர்களுக்கு இடதுசாரிகள், லிபரல்கள், நேரு ஆதரவு வரலாற்றாசிரியர்கள் என முத்திரை குத்தவும் வசதியான இடமாக சமூக வலைத்தளங்கள் தான் அமைந்துள்ளன.
இந்த போலி வரலாற்றாசிரியர்களுக்கு இந்தியாவின் கடந்த காலத்தை புரிந்துகொள்வது என்பது, தவிர்க்கமுடியாமல் தீவிர உணர்ச்சியை தூண்டிவிட்டு  உண்மையான காரணங்களை மூடி மறைப்பதுதான். இத்தகைய திட்டத்தில், சந்தேகத்துக்கோ, மாற்றுக் கருத்துக்கோ, ஆழ்ந்த சிந்தனைக்கோ இடம் கிடையாது. இந்த அதிவேகமாக பரவக்கூடிய இத்தகைய போலி வரலாறுகளின் நோக்கம், எப்போதும் எதைப் பற்றியோ, யாரைப் பற்றியோ அணையாத கோபம் கொண்டுள்ள கும்பலைத் திரட்டுவதுதான்.
உண்மையான வரலாற்றாசிரியர்கள், எப்போதுமே தங்களது படைப்புகளின் மீதான விமர்சனத்தையும் மாற்றுக் கருத்தையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பார்கள். ஏனெனில், அவர்கள் காரண காரியங்களில் இருந்து வரலாற்றை ஆய்வு செய்பவர்கள். ஆனால், போலி வரலாற்றாசிரியர்கள், சமூக ஊடகங்களின் விளைபொருளே. அவர்கள், தங்களை விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்களாக நிறுத்திக் கொள்கிறார்கள். பிறர் வைக்கும் விமர்சனங்களை தங்கள் மீதான தனிப்பட்ட தாக்குதலாக சித்தரித்து பரிதாபம் தேடிக் கொள்ள பார்ப்பார்கள்.
உதாரணமாக, சாவர்க்கரின் வாழ்க்கை வரலாற்றை இரண்டு பாகமாக எழுதிய விக்ரம் சம்பத் என்பவர், தமது நூலின் மீதான வரலாற்றாசிரியர்களின் விமர்சனத்தையும், சமூக வலைத்தளவாசிகளின் விமர்சனத்தையும் தமது மீதான தனிப்பட்ட தாக்குதலாக சித்தரிக்கிறார். தன்னையும் தனது படைப்பையும் அவமரியாதை செய்வதாக சித்தரிக்கிறார்.
படிக்க :
இந்திய வரலாற்றை காவி வரலாறாக்கத் துடிக்கும் அமித்ஷா !
வரலாற்றைக் காவிமயமாக்கும் பாஜக
உண்மையான வரலாற்று ஆசிரியர்களுக்கு விமர்சனங்கள் மற்றும் கருத்து வேறுபாடுகள் எப்போதுமே உதவியாகவும் அறிவுபூர்வமாகவும் இருக்கும். கல்வித் துறையில் அவர்கள் எப்போதும் உயரத்தில் நின்று முன்னோக்கி பார்க்க முயற்சிக்க வேண்டியதாக உள்ளது. இத்தகைய கற்றலில் சக மதிப்பாய்வு மற்றும் பொருள் குறித்த நிபுணத்துவம் கொண்ட ஆராய்ச்சி நெறிமுறைகள் மூலம் அறிவதும் வளர்ப்பதும் அவசியம்.
நுணுக்கமான மற்றும் அதிநவீன கல்வி உள்ளடக்கத்தை உள்வாங்குவதன் மூலம் கல்வி வரலாற்று ஆசிரியர்கள் மிகவும் நேர்மறையான அணுகுமுறைகளை கொண்டு, சமூக ஊடகங்களின் தற்போதைய பாதையை வளைக்க கவனமாக முயற்சிக்க வேண்டும்.
கடந்த காலமானது நிகழ்காலத்திலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது என்பதை புரிந்துகொள்ளும் முயற்சியில் முறையான வரலாற்றாசிரியர்கள் ஈடுபட்டுள்ள போதிலும், போலி வரலாற்றாசிரியர்கள் இதற்கு நேர்மாறாக, நிகழ்காலத்தை கடந்த காலத்திற்கு எதிராக முன்னிறுத்த முயலுகிறார்கள்.
போலி வரலாற்று ஆசிரியர்கள் உற்பத்தியாவதை தடுக்காவிட்டால், அறிவியல் பூர்வமான வரலாறுகள் அழிக்கப்பட்டு போலி வரலாறுகள்தான் எதிர்காலத்தில் ஆதிக்கம் செலுத்தும்.

சந்துரு
செய்தி ஆதாரம் : த வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க