தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதத்திற்குள் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளும் பாலியல் வன்கொலைகளும் அடுத்தடுத்து அரங்கேறி வருகின்றன. இது, பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மார்ச் 9-ஆம் தேதியன்று இரவு 17 வயது சிறுவன், தனது தோழியான தாம்பரத்தைச் சேர்ந்த 9-ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமியுடனும், அவரது தோழியான 16 வயது சிறுமியுடனும் இரு சக்கர வாகனத்தில் மதுராந்தகம் அருகிலுள்ள கீழக்காண்டை கிராமத்தை நோக்கிச் சென்றுள்ளார்.
அப்போது மதுராந்தகம் அருகிலுள்ள தேவத்தூர் பகுதியில் மது அருந்திக் கொண்டிருந்த காக்கா பாலாஜி மற்றும் தாமு என்கிற தாமோதரப் பெருமாள் ஆகிய இரண்டு கொடூரர்கள் அச்சிறுவனின் இருசக்கர வாகனத்தைப் பின்தொடர்ந்து சென்றுள்ளனர். இதை உணர்ந்த சிறுவன் வாகனத்தை வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார். அத்திவாக்கம் காட்டுப் பகுதி அருகே சென்ற போது, சிறுவனின் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்துள்ளது. அப்போது பின்தொடர்ந்து வந்த அவ்விருவரும் சிறுவன் மற்றும் 16 வயது சிறுமியைத் துரத்திவிட்டு, 14 வயது சிறுமியை அத்திவாக்கம் ஏரி பகுதிக்குத் தூக்கிச் சென்று கொடூரமான முறையில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமி, அப்பகுதியிலிருந்த சிலரால் பவுஞ்சூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
தனக்கு நடந்த கொடூரத்தை அச்சிறுமி மருத்துவர்களிடம் தெரிவித்ததையடுத்தும் மருத்துவர்கள் மேல்மருவத்தூர் அனைத்து மகளிர் போலீசு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசு காமவெறிப்பிடித்த மிருகங்களான காக்கா பாலாஜி மற்றும் தாமோதரப் பெருமாளை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இவ்விருவருமே ஏற்கெனவே பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு பலமுறை சிறைக்குச் சென்றவர்கள் என்பது தற்போது அம்பலமாகியுள்ளது. இவ்விருவரும் சந்தித்துக்கொண்டதும் கூட்டாக குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவதற்குத் திட்டமிட்டதும் கூட சிறையிலிருந்த போதுதான் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு போலீசு மற்றும் நீதித்துறையின் அலட்சியத்தால் வெளிவரும் கிரிமினல்கள் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவது தொடர்கதையாகியுள்ளது.
அதேபோல், தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் பகுதியைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவி கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த மார்ச் 10 அன்று மாலையில் இயற்கை உபாதை கழிப்பதற்காக வெளியே சென்ற மாணவி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து புகாரளிப்பதற்கு மாணவியின் பெற்றோர் குளத்தூர் போலீசு நிலையத்திற்குச் சென்றுள்ளனர். ஆனால், அங்கிருந்த போலீசு புகாரை எடுத்துக்கொள்ளாமல் விளாத்திகுளம் அனைத்து மகளிர் போலீசு நிலையத்திற்குச் செல்லுமாறு பெற்றோரை அலைக்கழித்துள்ளது. விளாத்திகுளம் போலீசு நிலையத்திலும் புகாரை ஏற்காமல், “உன் மக எங்கயாது ஓடி போயிருப்பா” என இழிவுபடுத்தியுள்ளனர்.
இதனையடுத்து மாணவியைத் தேடி பெற்றோர்கள் அலைந்த நிலையில், மார்ச் 11 அன்று மாலையில் வேடநத்தம் காட்டுப்பகுதியில் முகத்திலும் உடலிலும் பல்வேறு காயங்களுடன் மாணவியின் சடலம் கிடந்துள்ளது. ஒருவேளை போலீசு உடனடியாக நடவடிக்கை எடுத்திருந்தால் மாணவியை உயிரோடு கண்டுபிடித்திருக்க முடியும்.
இதனையடுத்து மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், பொதுமக்கள் குளத்தூர் – குறுக்குச்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெற்றோரின் புகாரை ஏற்க மறுத்து அலைக்கழித்த போலீசு மக்கள் போராட்டத்தில் இறங்கிய உடன் உடனடியாக அங்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.
பாலியல் வன்கொடுமை வழக்குகளில் பாதிக்கப்பட்டோர் புகாரளிக்கச் செல்லும் போது அலட்சியமாக நடந்துகொள்வது; குற்றவாளிகளுக்கு ஆதரவாகச் செயல்படுவது; பாதிக்கப்பட்டோரை மிரட்டுவது போன்ற நடவடிக்கைகளில் தமிழ்நாடு போலீசு தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது.
படிக்க: பட்டாசுத் தொழிலாளர்கள் நலன்காக்க என்ன செய்ய வேண்டும்?
அதேபோல் பிப்ரவரி மாத இறுதியில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரண்டு வயது பால் வாசம் மறக்காத பச்சிளம் குழந்தையை தி.மு.க. இளைஞர் பிரிவின் நிர்வாகி ஒருவன் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்த கொடூரம் அரங்கேறியுள்ளது.
மார்ச் 8-ஆம் தேதி நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த ஏழு வயது சிறுமி கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். பின்னர் கிராம மக்கள் தெரிவித்த தகவலின் பேரில் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த காமவெறிப்பிடித்த மிருகத்தைப் போலீசு கைது செய்துள்ளது.
குறிப்பாக, சாராயம், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களும், ஆபாச இணையதளங்களும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளுக்கு முக்கியக் காரணங்களாக உள்ளன. இரண்டு வயது பச்சிளம் குழந்தையைக் கூட பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்வதற்கு இந்த போதை-ஆபாச வெறியே காரணமாகின்றன.
ஆனால், தி.மு.க. அரசு தொடரும் பெண்கள் பாலியல் வன்முறைகளைத் தடுப்பதற்கான உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதில்லை. போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்தவும், அவற்றை நிரந்தரமாக ஒழிக்கவும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடைகளை மூடுவோம் என்று வாக்குறுதி அளித்ததையும் நிறைவேற்றவில்லை. ஆனால், பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என்ற பிரச்சாரத்தை மட்டுமே முன்னெடுத்து வருகிறது.
எனவே, பாதிக்கப்பட்ட பெண்களுக்காகப் போராடுகின்ற இயக்கங்கள், பெண்ணிய அமைப்புகள், ஜனநாயக சக்திகள் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது “பாலியல் வன்முறைகளைத் தூண்டக்கூடிய போதைப் பொருட்களையும் ஆபாச இணையதளங்களைத் தடை செய்ய வேண்டும்!” என்ற கோரிக்கையையும் முன்வைத்துப் போராட வேண்டும்.
![]()
ஆசாத்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











