வன்கொடுமைகளின் கூடாரமாகும் தமிழ்நாடு

தமிழ்நாட்டில் காலூன்ற துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க. கும்பலே ஆதிக்கச் சாதிவெறி சங்கங்களில் ஊடுருவி தாழ்த்தப்பட்ட மக்கள் மீது இத்தகைய தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறது. அதன் மூலம் கலவரங்களை தூண்டிவிட்டு ஆதிக்கச் சாதி மக்களை திரட்டிக்கொள்ள விழைகிறது.

“இந்த திராவிட மாடல் ஆட்சியில் சாதிக் கலவரம் இல்லை, மதக் கலவரம் இல்லை, கும்பல் வன்முறை இல்லை, தொடர் வன்முறை இல்லை, தமிழ்நாடு அமைதியா இருக்கு, மக்கள் நிம்மதியா இருக்காங்க” என 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக தி.மு.க. சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் விளம்பரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார். ஆனால், தமிழ்நாட்டின் எதார்த்த நிலைமையோ தலைகீழாக உள்ளது. தமிழ்நாட்டில் தலித் மக்கள் மீதான ஆதிக்கச் சாதிவெறியாட்டங்கள் மற்றும் சாதி ஆணவப் படுகொலைகள், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள், கொட்டடிப் படுகொலைகள் என பல்வேறு வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

மார்ச் 2 அன்று நாங்குநேரியில் இரட்டைப் படுகொலை; மார்ச் 5 அன்று மானாமதுரை இடைக்காட்டூரில் தலித் மக்கள் குடியிருப்புக்குள் புகுந்து தாக்குதல்; மார்ச் 7 அன்று மானாமதுரையில் பள்ளர் இளைஞர் ஆகாஷ் கொட்டடிப் படுகொலை; பிப்ரவரி 27 அன்று கிருஷ்ணகிரியில் இரண்டரை வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை; மார்ச் 7 அன்று நாமக்கல்லில் 7 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; மார்ச் 8-ஆம் தேதி கிருஷ்ணகிரியில் 70 வயது முதியவரை படுகொலை செய்து அவரது 60 வயது மனைவிக்கு பாலியல் வன்கொடுமை; மார்ச் 10 அன்று மதுராந்தகத்தில் 14 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை; மார்ச் 11 அன்று விளாத்திக்குளம் பள்ளி மாணவி பாலியல் வன்கொலை என மொத்தம் எட்டு கோரச் சம்பவங்கள் பிப்ரவரி 27 முதல் மார்ச் 11 வரையிலான 13 நாட்களில் மட்டும் நடந்திருக்கின்றன. இவையெல்லாம் செய்தியில் பதிவான சம்பவங்கள் மட்டுமே.

“ஏல வெட்டுங்கல”
ஆதிக்கச் சாதிவெறியர்களின் கூச்சல்

நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ளது பெரும்பத்து கிராமம். இது தாழ்த்தப்பட்ட மக்கள் அதிகம் வசிக்கும் கிராமமாகும். இக்கிராமத்தில் மார்ச் 2-ஆம் தேதி இரவு 7.30 மணியளவில் மூன்று இரு சக்கர வாகனங்களில் வந்த ஒன்பது பேர் கொண்ட கும்பல் பிரதான சாலையில் நின்று கொண்டிருந்த இளைஞர்கள் மீது கத்தி, அரிவாள், கோடாரி போன்ற ஆயுதங்களால் திடீரென தாக்குதல் நடத்தியது. மாற்றுத்திறனாளி என்றும் பாராமல் பறையர் சாதியைச் சார்ந்த ஜான் மார்க் (வயது 47) என்பவரை கோடாரியால் தலையை பிளந்து மிகக் கொடூரமான முறையில் அக்கும்பல் படுகொலை செய்தது. மேலும், வேலை முடிந்து அவ்வழியாக வந்துகொண்டிருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த செங்கல் சூளைத் தொழிலாளி திரிநாத் கட்டா (வயது 50) என்பவரையும் அரிவாளால் வெட்டிக் கொன்றது.

அதனைத் தொடர்ந்து ஊருக்குள் புகுந்த அக்கும்பல் அங்கிருந்த தேநீர்க்கடை மீது பெட்ரோல் குண்டுகளை வீசி, அங்கிருந்தவர்களை விரட்டி விரட்டி அரிவாளால் சரமாரியாக வெட்டியது; அங்கிருந்து தப்பித்துச் செல்லும் வழியில் எதிரில் வந்தவர்களை வெட்டியது என வெறிப்பிடித்த நாயைப் போல கண்ணில் பட்டவர்கள் மீதெல்லாம் இத்தாக்குதலை நடத்தியது. இத்தாக்குதலால் பலத்த காயங்களுடன் ஏழு பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். ஜான் மார்க், திரிநாத் கட்டா குடும்பத்தினர் அவர்களை இழந்த வேதனையிலிருந்து மீள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டவர்களுக்கும் எவ்வித முன்பகையும் இல்லை. இரண்டு நாட்கள் ஊரை நோட்டமிட்டு, முகமூடியால் முகத்தை மறைத்துக்கொண்டு, கொடூர ஆயுதங்களுடன் ஊருக்குள் நுழைந்த இக்கும்பல், ஏழை, எளிய மக்களை குறிவைத்தே இத்தாக்குதலை நடத்தியுள்ளது. பெரும்பத்து மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தலித் மக்கள் மத்தியில் அச்சவுணர்வை ஏற்படுத்தி மறவர் சாதி ஆதிக்கத்தை நிலைநிறுத்த வேண்டும் என்ற நோக்கத்திலிருந்தே மறவர் சாதி வெறியர்கள் இத்தாக்குதலை திட்டமிட்டு நடத்தியுள்ளனர். மேலும், பறையர், நாடார், கோனார் என கண்ணில் பட்டவர்களை எல்லாம் வெட்டிய அக்கும்பல் அங்கிருந்த மறவர் சாதியை சார்ந்த ஒருவரைக் கூட தாக்கவில்லை. இப்பகுதியில் வாழும் உழைக்கும் மக்கள் சாதி கடந்துப் பழகி வருவதை சீர்குலைக்க வேண்டுமென்ற நோக்கத்திலிருந்தும் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மேலும், இத்தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவரும் 18 முதல் 21 வயதுடைய இளைஞர்கள் ஆவர். இருவர் மாணவர் சின்னதுரையின் மீது தாக்குதல் நடத்தியவர்கள். பிற வழக்குகளில் குற்றவாளிகளாக சிறையிலடைக்கப்பட்டு சில நாட்களுக்கு முன்னர் வெளியே வந்தவர்களை வைத்தும் வெளியூர் சென்றவர்களை மீண்டும் அழைத்து வந்தும் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வறிய பின்னணியைக் கொண்ட இவர்கள், விலையுயர்ந்த இரு சக்கர வாகனத்தில் வந்து தாக்குதல் நடத்தியிருப்பது; தாக்குதலுக்கு பிறகு விலை உயர்ந்த காரில் அழைத்து வரப்பட்டு சரணடைய வைக்கப்பட்டிருப்பது ஆகியவை இத்தாக்குதலுக்கு பின்னே ஆதிக்கச் சாதிவெறி சங்கங்கள் உள்ளதையும் அக்கும்பலின் சதித்திட்டத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

“எங்க அகமுடைய சாதிக்காரனையே அடிப்பியா?”
போலீசின் சாதிவெறி

மானாமதுரையைச் சார்ந்த ஆகாஷ் டெலிசன் என்ற 26 வயது இளைஞர், மானாமதுரை மற்றும் திருப்புவனம் வட்டார சிறப்புப்படை போலீசால் கடும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு கொட்டடிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவர் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சார்ந்தவர் ஆவார். கடந்த மார்ச் 5 அன்று ஆகாஷ் மற்றும் அவரது நண்பர்களுக்கும் ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஆதிக்கச் சாதியினர் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக ஆகாஷ் போலீசால் கைது செய்யப்பட்டார். ஆனால், போலீசால் கால் உடைக்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆகாஷ், மார்ச் 7 அன்று மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

ஆகாஷை கைது செய்து அழைத்துச் செல்லும்போது, அவர் பாலத்தில் இருந்து கீழே குதித்து தப்பிச் செல்லும்போது அவருடைய கால் உடைந்ததாக போலீசு அப்பட்டமாக பொய்யுரைத்துள்ளது. ஆனால், “காலுக்கு இடையில் கல்லை வைத்து ஈரச் சாக்கை சுற்றி இரும்பு ராடால் காலை உடைத்தனர், பாலத்தில் இருந்து கீழே விழுந்ததால் கால் உடைந்தது என்று பொய் கூறக் கூறினர்” என்று ஆகாஷ் மருத்துவமனையில் நீதிபதிக்கு கொடுத்துள்ள வாக்குமூலத்தின் மூலம் போலீசின் காட்டுமிராண்டித்தனம் அம்பலமாகியுள்ளது.

மேலும், அவருடைய உடலில் 28 இடங்களில் வெளிப்புற மற்றும் உட்புற காயங்கள் இருந்ததாகவும், வலது கால் எலும்பு முறிவு, தசை, நரம்புகள் சேதம், மூளையில் இரத்தக்கசிவு இருந்ததாகவும் ஆகாஷினுடைய உடற்கூராய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளளது. இது அவர் போலீசால் மிகக் கொடூரமான முறையில் அடித்து சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு கொட்டடிப் படுகொலை செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்திருக்கிறது.

அதேபோல, “எங்கள் அகமுடையார் சாதிக்காரனை அடிப்பியா? உனக்கு அவ்வளவு திமிரா?” எனக் கேட்டு போலீசு காலை உடைத்ததாக ஆகாஷ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த போது தன்னுடைய அம்மாவிடம் தெரிவித்து இருக்கிறார். ஆகவே, “ஒரு தாழ்த்தப்பட்டவன் ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தவர்கள் மீது எப்படி கை வைக்கலாம்” என்ற போலீசின்  ஆதிக்கச் சாதிவெறியின் உச்சத்திலிருந்தே இந்த கொட்டடிப் படுகொலை நடத்தப்பட்டுள்ளது. தென்மாவட்ட போலீசு துறையில் தேவர் சாதியினர் திட்டமிட்டு புகுத்தப்பட்டு வருகின்றனர் என புரட்சிகர, ஜனநாயக சக்திகள் எச்சரித்து வந்ததை இப்படுகொலை தோலுரித்துள்ளது.

போலீசின் அலட்சியத்தால் நிகழ்ந்த
பள்ளி மாணவியின் பாலியல் வன்கொலை

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தில் வேடநத்தம் பகுதியைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு மிகக் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். கடந்த மார்ச் 10-ஆம் தேதி மாலை 6 மணிக்கு இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டிலிருந்து வெளியே சென்ற மாணவி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இதனால் அச்சமுற்ற மாணவியின் தந்தை உள்ளிட்ட உறவினர்கள் குளத்தூர் போலீசு நிலையத்தில் புகார் அளிக்க சென்றிருக்கிறார்கள். ஆனால், அங்கு பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் செல்வராசு வழக்கை எடுக்க மறுத்துள்ளார். இத்தகைய வழக்குகளை எடுத்துக்கொள்ளக் கூடாது என போலீசு கண்காணிப்பாளர் கூறியிருப்பதாகக் கூறி, விளாத்திக்குளம் மகளிர் போலீசு நிலையத்திற்கு சென்று புகார் அளிக்குமாறு அலட்சியமாகக் கூறியுள்ளார்.

மாணவியின் குடும்பத்தினரும் இரவு முழுவதும் தேடிப் பார்த்துவிட்டு மார்ச் 11 அன்று காலையில் விளாத்திக்குளம் மகளிர் போலீசு நிலையத்திற்கு சென்றிருக்கிறார்கள். அங்கேயும் இவர்களை நான்கு மணி நேரம் காத்திருக்க வைத்து அலைக்கழித்துள்ளனர். கடைசியில், “பொண்ணு எவனயாச்சு லவ் பண்ணி ஓடியிருக்கும். போயி நீங்களே ஒழுங்கா தேடிப்பாருங்க” என்று பிரவீனா என்ற போலீசு ஆய்வாளர் மிகவும் இழிவாகப் பேசியிருக்கிறார்.

இதனால் மீண்டும் மாணவியை தேட ஆரம்பித்த குடும்பத்தினர், அன்று மாலையில் உடலெங்கும் காயங்களுடன் மாணவியின் சடலத்தைக் கண்டெடுத்துள்ளனர். இதுகுறித்து மாணவியின் தந்தை, “கடைசியில நாங்கதான் முள்ளு காட்டுக்கு நடுவுல கிடந்து புள்ளையோட உடம்ப கண்டுபிடிச்சோம். கை, கால், முகம்னு எல்லா பக்கமும் ஒரே காயம்” என வேதனையுடன் கூறியிருக்கிறார்.

மாணவியை காணவில்லை என்று பெற்றோர்கள் புகார் அளிக்க சென்ற போதே போலீசு விரைந்து நடவடிக்கை எடுத்திருந்தால் மாணவியை உயிரோடாவது காப்பாற்றியிருக்க முடியும் என குடும்பத்தினர் வேதனையுடன் செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கின்றனர். மாணவியின் இந்த பாலியல் வன்கொலையானது போலீசின் அலட்சியதாலேயே நிகழ்ந்துள்ளது.

தீர்வு என்ன?

மேற்குறிப்பிட்ட வன்கொடுமைகளைத் தடுப்பதாகக் கூறித்தான் தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்ததிலிருந்து அவற்றை தடுப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, அப்பிரச்சினைகள் மக்கள் மத்தியில் பூதாகரமாக வெடிக்கும் போது மட்டும் பெயரளவிலான நடவடிக்கை எடுப்பது; தன்னுடைய ஊடகப் படையினர், அதிகார வர்க்கத்தின் மூலம் அப்பிரச்சினையை மூடிமறைப்பது, திசைதிருப்பது என மக்கள் விரோதமாகச் செயல்பட்டு வருகிறது.

குறிப்பாக, பள்ளி, கல்லூரி வளாகங்களுக்குள் மாணவிகள் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுவது தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத வகையில் உச்சத்தைத் தொட்டுள்ள போதிலும் தி.மு.க. அரசு அவற்றை மூடிமறைப்பதற்கான வேலைகளிலேயே ஈடுபட்டு வருகிறது.

சமீபத்தில் கூட, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு மாணவிக்கு, பேராசிரியர் ஞானவேல்பாபு என்ற காமவெறியன் மூன்று ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. கடந்த ஆண்டில் இதே அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் வளாகத்திற்குள்ளேயே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் வெளியாகி பெரும் எதிர்ப்பு கிளம்பியது. எனவே, இவ்விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவனை உடனடியாக கைது செய்து பிரச்சினையை பெரியளவில் விவாதமாகாமல் தி.மு.க. அரசு பார்த்துக்கொண்டது. ஆனால், இத்தகைய தொடர் குற்றங்களைத் தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை.

அதிலும், இத்தகைய பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் தன்னுடைய அடிவருடிகள் மூலம் பாதிக்கப்பட்ட பெண்ணை இழிவாகப் பேசுவதெல்லாம் வக்கிரத்தின் உச்சமாகும். விளாத்திக்குளம் பள்ளி மாணவி பாலியல் வன்கொலை சம்பவத்தில் தி.மு.க. அடிவருடியும் சங்கியுமான எஸ்.வி.சேகர், “மாணவி ஏன் புதருக்குள் போக வேண்டும்? புதருக்குள் போலீசு லைட் போட முடியுமா?” என்று வக்கிரத்தைக் கக்கினார்.

மறுபுறம், அ.தி.மு.க., பா.ஜ.க., விஜய், சீமான் கட்சிகள் இப்பிரச்சினைகளை தங்களுடைய தேர்தல் ஆதாயத்திற்காகவே பயன்படுத்திக்கொள்ள விழைகின்றன.

இதன் விளைவாக, வன்கொடுமைகள் தமிழ்நாட்டில் தொடர்ந்துகொண்டே இருக்கின்றனவே தவிர, அவற்றை தடுத்து நிறுத்துவதற்கான எந்த ஆக்கப்பூர்வமான தீர்வுகளும் சமூகத்தில் நடைமுறைக்கு கொண்டுவரப்படவில்லை.

நாங்குநேரி இரட்டைப் படுகொலையில் தாக்குதலை நடத்திய ஏழு பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால், இத்தாக்குதலை பின்னின்று இயக்கியவர்கள் கைது செய்யப்படவில்லை.

மேலும், தமிழ்நாட்டில் காலூன்ற துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பலே ஆதிக்கச் சாதிவெறி சங்கங்களில் ஊடுருவி தாழ்த்தப்பட்ட மக்கள் மீது இத்தகைய தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறது. அதன் மூலம் கலவரங்களை தூண்டிவிட்டு ஆதிக்கச் சாதி மக்களை திரட்டிக்கொள்ள விழைகிறது. நாங்குநேரி இரட்டைப் படுகொலையும் அந்த அடிப்படையிலிருந்தே நிகழ்த்தப்பட்டுள்ளது. பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு இத்தாக்குதலில் தொடர்பு உள்ளதாகக் கூறப்படுவதும் இதன் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. உள்ளதை நிரூபிக்கிறது.

எனவே, ஆர்.எஸ்.எஸ் – பா.ஜக. மற்றும் அதன் குண்டர் படை அமைப்புகளையும் ஆதிக்கச் சாதிவெறி சங்கங்களையும் தடை செய்யும் போதே தாழ்த்தப்பட்ட மக்கள் மீது அதிகரித்துவரும் தாக்குதல்களை, படுகொலைகள், ஆணவப் படுகொலைகளை தடுத்து நிறுத்த முடியும்.

போலீசால் கொட்டடிப் படுகொலை செய்யப்பட்ட ஆகாஷ்.

அதேபோல, ஆகாஷ் கொட்டடிப் படுகொலையில் மானாமதுரை சார்பு ஆய்வாளர் குகன், திருப்புவனம் சார்பு ஆய்வாளர் திலீபன் தலைமையிலான 16 போலீசு குண்டர்கள் ஈடுபட்டிருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர். அவர்களை கைது செய்யக்கோரி 25 நாட்களுக்கும் மேலாக ஆகாஷின் உடலை வாங்க மறுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த திருப்புவனம் போலீசு நிலையத்தில்தான் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் அஜித்குமார் கொட்டடிப் படுகொலை செய்யப்பட்டார். அப்படியிருந்தும் தி.மு.க. அரசு குகன், திலீபன் உட்பட ஆறு பேரை மட்டுமே இடைநீக்கம் செய்திருக்கிறது.

மேலும், மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கை கொலை வழக்காகவும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் பதிவு செய்ய உத்தரவிட்ட போதிலும், அதனை நடைமுறைப்படுத்த மறுத்து அவர்களை கைது செய்யாமல் சுதந்திரமாக உலாவவிட்டிருக்கிறது. இதிலிருந்தே தி.மு.க. அரசின் நடவடிக்கை ஒரு கண் துடைப்பு நாடகம் என்பதைப் புரிந்துகொள்ள இயலும்.

எனவே, மக்கள் போராட்டங்கள் மூலமே குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர இயலும். மேலும், ஆதிக்கச் சாதிவெறி சங்கங்கள், ஆர்.எஸ்.எஸ். கும்பலுடன் தொடர்பில் உள்ளவர்களை போலீசு பணிக்குத் தகுதியற்றவர்களாக அறிவிப்பது; போலீசு பணிக்குத் தேர்வு செய்யப்படுபவர்கள் மக்களுக்கு சேவையாற்றி இருப்பதைக் கட்டாயமாக்குவது; போலீசு துறையை மக்கள் கண்காணிப்பின் கீழ் கொண்டு வருவது ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவதன் மூலமே கொட்டடிப் படுகொலைகளை தடுத்துநிறுத்துவதை நோக்கி நகர முடியும்.

அதேபோல, விளாத்திக்குளம் மாணவி பாலியல் வன்கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட குற்றவாளி ஏற்கெனவே பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறையிலடைக்கப்பட்டு பிணையில் வெளியே வந்தவன் என்பதும், போதைவெறியில் மாணவியை பாலியல் வன்கொலை செய்திருப்பதும் அம்பலமாகியிருக்கிறது. பெண்கள் மீதான பாலியல் வன்முறை தொடர்பான பல வழக்குகளில் இது பொதுத்தன்மையாக உள்ளது. எனவே, பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரிப்பதற்கு அடிப்படையாக உள்ள மது, கஞ்சா போன்ற போதைப் பொருட்கள், ஆபாச இணையதளங்கள், திரைப்படங்கள், பத்திரிகைகள், இலக்கியங்கள், புராண இதிகாசங்கள் தடை செய்வது அடிப்படையானது. பாலியல் வன்முறை வழக்குகளில் குற்றவாளிகளை பாதுகாக்கும் நோக்கத்தில் செயல்படுகின்ற போலீசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்க வேண்டும்.

இவ்வாறு சாதியத் தாக்குதல்கள், கொட்டடிப் படுகொலைகள், பாலியல் வன்முறைகள் என அனைத்துவித வன்கொடுமைகள், குற்றங்களுக்கு எதிராகவும் குறிப்பான தீர்வுகளை முன்வைத்து மக்கள் போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும். தேர்தல் கட்டமைப்பிற்கு வெளியே இக்கோரிக்கைகளுக்கான மக்கள் கூட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். இக்கூட்டமைப்புகளை பாசிச எதிர்ப்பு போராட்டத்துடன் இணைத்து பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு என்ற மாற்றுக் கட்டமைப்பை அமைப்பதை நோக்கி வளர்த்தெடுக்க வேண்டும். அதன் மூலமே இத்தகைய வன்கொடுமைகளை தடுத்துநிறுத்த முடியும்.


சிவராமன்

(புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2026 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க