வேலை, வாழ்வாதாரம், பொது சுகாதாரத்திற்காக போராடு !
கொரோனா – பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்க
கார்ப்பரேட் – காவி பாசிசத்தை வீழ்த்து !

தமிழக தழுவிய பிரச்சார இயக்கம்!

ன்பார்ந்த பொதுமக்களே,

கடந்த நான்கு மாதங்களாக கொரோனா ஊரடங்கு பிரச்சினையால் மக்களின் வாழ்நிலை மீண்டு வரமுடியாத அளவிற்கு மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலும், நிகழும் மரணங்களும் பெருகி கொண்டே போகிறது. மருத்துவ சிகிச்சையையும், உணவையும் அரசே கொடுத்தால் மட்டுமே சாதாரண மக்கள் பிழைக்க முடியும்.

கொரோனா தொற்றை எதிர்கொள்ளவும், மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் மத்திய அரசு பல லட்சம் கோடி நிதி ஒதுக்கினால் மட்டுமே சமாளிக்க முடியும் என பொருளாதார வல்லுநர்கள் உட்பட அனைவரும் வலியுறுத்தி வருகிறார்கள். தனியார் மருத்துவமனைகள் அனைத்தும் அரசின் கட்டுப்பாட்டில் வைத்து அனைவருக்கும் இலவச சிகிச்சை அளிக்க வேண்டும். இன்றைய தேவைக்கு ஏற்ப மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள் கூடுதலாக நியமிக்கப்பட வேண்டும். மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள், வெண்டிலேட்டர்கள், மாவட்டம் தோறும் கொரோனா சிறப்பு மருத்துவமனைகள், பரிசோதனை நிலையங்கள் உருவாக்க வேண்டும். ஆனால் இவற்றை மத்திய, மாநில அரசுகள் செய்யாமல் தனியார் கொள்ளைக்கு கட்டணம் நிர்ணயிக்கிறது.

பல வடிவங்களில் தொடரும் ஊரடங்கால் ஆட்குறைப்பு , சம்பள வெட்டு, வேலையிழப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இருக்கும் வேலைவாய்ப்புகளை பாதுகாக்க அரசிடம் எந்தத் திட்டமும் செயல்பாடும் இல்லை. அரசுகள் வழங்கும் சொற்பப் பணத்தினை கொண்டு எப்படி குடும்பத்தினை நடத்த முடியும். பெருமளவில் வேலைகளை வழங்கும் சிறு தொழில் நடத்துபவர்கள் கடன் நெருக்கடியாலும், போதிய வியாபாரம் இல்லாமலும், ஜி.எஸ்.டி வரிச்சுமையாலும் தொழில்களை நடத்த முடியாமல் திணறுகின்றனர்.

பஸ், இரயில் இல்லாத நிலையில், தினந்தோறும் உயர்த்தப்படும் பெட்ரோல் விலை உயர்வால் வாகன ஓட்டிகளின் கைக்காசு பலவந்தமாக உறிஞ்சப்படுகிறது.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

கிராமம், நகரம் வேறுபாடின்றி பெரும்பான்மையான மக்களிடம் காசு இல்லை . ரேசன் அரிசியால்தான் பல கோடி குடும்பங்கள் உயிர் வாழ்கின்றன. குழுக் கடன் கட்டமுடியாமல் நுண்கடன் நிதி நிறுவன வசூல் குண்டர்களின் மிரட்டலுக்கு அஞ்சி தற்கொலை நிலைக்கு மக்கள் தள்ளப்படுகிறார்கள். எந்த அதிகாரியாலும் அதிகரிக்கும் பிரச்சினைகளை தீர்க்க முடியவில்லை . அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்த நாட்டின் பொருளாதாரத்தை கொரோனா மேலும் படுகுழியில் தள்ளியுள்ளது.

இவற்றை எதிர்கொள்ள ஒரே வழி அரசுகள் மக்களுக்கு நேரடியாக பணம் கொடுப்பதுடன், அடிப்படை தேவைகளை இலவசமாக வழங்க வேண்டும். மாதக்கணக்கில் வீட்டில் முடக்கப்படும் மக்களுக்கு மாதந்தோறும் பணம் கொடுங்கள், உணவுக் கிடங்குகளில் புழுத்து வீணாகும் தானியங்களை மக்களுக்கு போதுமான அளவில் விநியோகியுங்கள் எனத் தொடர்ச்சியாக வலியுறுத்தியும் மோடி அரசு அதனை செய்யவில்லை.

நோய்த் தொற்று மேலும் பரவாமல் தடுப்பதுடன் அதை எதிர்கொள்வதற்கான மருத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்த, தேவைப்படும் கால அவகாசம்தானே ஊரடங்கின் நோக்கம். அரசு நிர்வாகங்களோ கொரோனா ஊரடங்கைப் பயன்படுத்தி மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பறிக்கும் வேலைகளை செய்கிறது. ஊரடங்கினை காட்டி போலீசு அத்து மீறல்கள் அதிகமாகியுள்ளன. அதன் உச்சம்தான் கொடூரமான சாத்தான்குளம் ஜெயராஜ் – பெனிக்ஸ் காவல் நிலைய படுகொலை. கொரோனா தடைகளை மீறி எழுந்த மக்கள் போராட்டத்தால் போலீசார் மீது கொலைவழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். அழுகிப்போன மீன் கூடையான போலீசு துறையில் நல்ல மீன்களை தேடுவதால் பயனில்லை.

படிக்க:
மதுரை நாகமலை கோவிலுக்கு அர்ச்சகராக முடியுமென்றால் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு முடியாதா ?
தோழர் வரவரராவை விடுதலை செய் ! கருத்துப்படம்

மோடி அரசின் 20 இலட்சம் கோடி கொரோனா நிவாரண பேக்கேஜ் எனும் பித்தலாட்ட வாய்ச்சவடால் மக்கள் அனுபவிக்கும் பிரச்சினையின் முனையைக்கூட தொடவில்லை. “கார்ப்பரேட்டு முதலாளிகளுக்கு வரி விதிப்பதன் மூலம் அரசின் நிதி ஆதாரத்தை பெருக்க முடியும்” என்று மத்திய வருவாய்த் துறை அதிகாரிகள் அறிக்கை கொடுத்தார்கள். மத்திய அரசு அவர்கள் மீதே நடவடிக்கை எடுக்க உத்திரவிட்டுள்ளது. இதுவரை பாஜக அரசு கார்ப்பரேட்டுகளின் பையிலிருந்து ஒரு ரூபாயைக்கூட எடுக்கவில்ல . மாறாக, அவர்களுக்கு பல ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. மேலும் வாரிக் கொடுக்க மக்கள் கட்ட வேண்டிய வரிகளை கறாராக வசூலிக்கிறார்கள்.

பெட்ரோல் – டீசல் விலையை உயர்த்தி கொள்ளையடிக்கிறார்கள். விலைவாசி உயருகிறது; ஏற்றத்தாழ்வு அதிகரிக்கிறது. நாட்டின் செல்வங்களில் 99 சதவீதத்தை வைத்துள்ள அம்பானி , அதானி போன்ற கார்ப்பரேட்டுகளுக்கும், பெரும் செல்வந்தர்களுக்கும் சொத்து வரி, புதிய வரிகளை போடுவது, அதிகார வர்க்கம், அரசியல்வாதிகளிடம் உள்ள கருப்பு பணத்தை அரசின் கஜானாவிற்கு கொண்டு வருவதன் மூலம்தான் மக்களின் கைகளுக்கு பணத்தினை கொண்டு வரமுடியும். கொரோனா தொற்றிலிருந்து மட்டுமல்ல, பசியிலிருந்தும் மக்களைக் காக்க முடியும்.

பிரதமர் மோடியோ ‘தற்சார்பு இந்தியா’ என பேசிக் கொண்டு, கொரோனா நெருக்கடியை பயன்படுத்தி கார்ப்பரேட் கொள்ளைக்கு அனைத்தையும் திறந்து விடுகிறார். கருப்புப் பணம் ஒழிப்பு, விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பு, ஆண்டுக்கு இரண்டு கோடி வேலைவாய்ப்பு என பா.ஜ.க மோடி அரசின் ஆறு ஆண்டுகால வாய்சவடாலின் அடுத்த அவதாரமே ‘தற்சார்பு இந்தியா’.

கல்வி, மருத்துவம், காப்பீடு, விண்வெளி அணுசக்தி, இராணுவ தளவாட உற்பத்தி அனைத்திலும் அந்நிய முதலீட்டு சூறையாடலை அனுமதித்து நாட்டை அடிமைப்படுத்திக் கொண்டே தற்சார்பு பொருளாதாரம் பேசும் மோடி – ஆர்.எஸ்.எஸ் சங்பரிவாரங்கள் ஒரே நேரத்தில் கிழக்கேயும் மேற்கேயும் போகலாம் என நம்மை நம்ப சொல்கிறார்கள்.

பன்னிரண்டு மணி நேர வேலை – தொழிலாளர் பாதுகாப்பு கடப்பாடுகளிலிருந்து முதலாளிகளுக்கு தளர்வு எனத் தொழிலாளர் நலச் சட்டங்களில் திருத்தம், கனிம இயற்கைவள கொள்ளைகளுக்கு அனுமதி, ஹைட்ரோ கார்பன் – மீத்தேன் எடுக்க மக்களிடம் கருத்து கேட்க வேண்டாம், மாநில அரசை கேட்க வேண்டாம் என சுற்றுச்சூழல் சட்டத்தில் திருத்தம், மின்விநியோகத்தை தனியாருக்கு கொடுக்க மின்சார சட்டத்தில் திருத்தம், வேளான் விளைபொருள்கள் கொள்முதலை தனியாருக்கு கொடுக்க திருத்தம், ரயில்வே தனியார்மயம் என அடுத்தடுத்து மக்கள் மீது தாக்குதல் தொடுக்கப்படுகிறது. கூடுதல் கடன் வாங்கி நிலைமையை சமாளிக்க மாநில அரசுகள் கார்ப்பரேட்டுகளுக்கு சாதமாக நடக்குமாறு நிபந்தனை விதிக்கப்படுகிறது. ஏற்றத்தாழ்வுகளை அதிகரித்த, நாட்டின் பொருளாதாரத்தை நெருக்கடியில் தள்ளிய அதே தனியார்மய – தாராளமய – உலகமயக் கொள்கைகளை இந்நெருக்கடியான நேரத்தில் மிகத்தீவிரமாக அமல்படுத்துகின்றது மோடி அரசு. நாட்டை மறுகாலனியாக்கப் பாதையில் நடத்திக் கொண்டே, அமெரிக்க ஆதரவு – சீன எதிர்ப்பு தேசிய வெறியைக் கிளப்பி தேசக்காப்பாளர் வேடமிட்டு சர்வாதிகாரத்தினை நிலைநிறுத்துகின்றன.

நாட்டு மக்கள் மீதான பாஜ.க அரசின் அடக்குமுறையை எதிர்க்கும் அறிவுத்துறையினர், மாணவர்கள், இசுலாமிய அமைப்பினர் ஊபா சட்டத்தின் கீழ் ஆண்டுக்கணக்கில் சிறைப்படுத்தப்படுகின்றனர். கொரோனாவை பயன்படுத்தி மக்களின் பேச்சுரிமை, போராடும் உரிமையைப் பறிக்கும் அரசியல் முடக்கம் நிரந்தரமாக்கப்படுகிறது. குற்றவியல் சட்டங்களில் திருத்தம் செய்யப்பட்டு சட்டப்படியான உரிமைகள் ரத்து செய்யப்பட உள்ளன. அனைத்துத் துறைகளிலும் மாநிலங்களின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டு பெயரளவிலான கூட்டாட்சியும் ஒழிக்கப்படுகிறது. நெருக்கடியான நோய்த்தொற்றுக் காலத்திலும் கொரோனா ஜிகாத் என இசுலாமியர்களுக்கு எதிரான வெறுப்பை பரப்பி அவர்களை தனிமைப்படுத்தும் வைரஸை விடவும் கொடியவர்களான ஆர்.எஸ்.எஸ் காவிகளிடமே ஆட்சி அதிகாரம் உள்ளது.

உடனடி வாழ்வாதாரக் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசை நிர்பந்தித்து போராடுவதுடன் நாம் நின்றுவிட முடியாது. கார்ப்பரேட் – காவி பாசிசத்தை வீழ்த்த அணிதிரள வேண்டும். அதுவரை நாட்டின் எந்தப் பிரிவு மக்களுக்கும் வாழ்வுமில்லை; ஒடுக்குமுறைகளிலிருந்து விடுதலையுமில்லை.

உழைக்கும் மக்களே! கோரிக்கையில் ஒன்றிணைவோம் வாரீர்!

  • கொரோனா பரவலை கட்டுப்படுத்து! பொது சுகாதாரத்தை பலப்படுத்து!
  • அனைவருக்கும் இலவச மருத்துவம் வழங்கு! குடும்பத்திற்கு மாதம் 7500 ரூபாய், 40 கிலோ அரிசி, தேவையான உணவு தானியங்கள் இலவசமாக வழங்கு!
  • சுயஉதவிக் குழு, விவசாய, சிறு தொழில் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்! அனைவருக்கும் வேலை கொடு!
  • கிராமப்புற 100 நாள் வேலைத் திட்டத்தை 300 நாட்களுக்கு விரிவுபடுத்தி கூலியை ரூ.400 ஆக உயர்த்து! நகர்ப்புறத்திலும் வேலைவாய்ப்பு திட்டத்தை அமல்படுத்து!
  • சிறுகுறு தொழில்களுக்கான ஜி.எஸ்.டி வரியை ரத்து செய், கடன் உதவியை அரசே வழங்கு! இலவச மின்சாரத்தை ரத்து செய்யாதே!
  • விளைப்பொருளுக்கு உரிய ஆதார விலை நிர்ணயம் செய்!
  • கார்ப்பரேட்கள், செல்வந்தர்கள் மீது வரிவிதிப்பை அதிகபடுத்து!
  • மக்கள் மீதான வரிகளை ரத்து செய்!
  • சுற்றுச்சூழல் வாழ்வாதாரங்களை அழிக்காதே!
  • அரசிடம் கெஞ்சுவதால் அடக்குமுறைக்கு அஞ்சுவதால் பயனில்லை! போராடாமல் கொரோனா – பொருளாதார நெருக்கடியிலிருந்து விடிவில்லை!

மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
தொடர்புக்கு : 99623 66321.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க