ஒரு மாதத்திற்கும் மேலாக ஏகாதிபத்திய அமெரிக்கா இனவெறி இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் விளைவாக ஈரான் ஹார்மூஸ் நீரிணையை முடக்கி வைத்துள்ளது. இதனால் உலகளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அது இந்திய மக்களையும் பாதித்துள்ளது.
எரிவாயுப் பற்றாக்குறை மற்றும் விலை உயர்வால் உணவகங்களில் உணவுகளின் விலையும் அதிகரித்துள்ளது. இதன் விளைவாக குஜராத், ராஜஸ்தான் மற்றும் மும்பையிலிருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உடைமைகளுடன் தங்களின் சொந்த ஊருக்குச் சென்று கொண்டியிருக்கின்றனர். இதனால் ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது.
ராஜஸ்தானில் வர்த்தக எரிவாயு பற்றாக்குறையால் ஜவுளி, பளிங்குக் கற்கள், ரசாயனத் தொழிற்சாலைகள் உள்பட ஏராளமான தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகின்றன. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைப் போன்று குஜராத் சூரத் நகரில் எரிவாயு பற்றாக்குறையால் புலம்பெயர் தொழிலாளர்கள் உடைமைகளுடன் தங்கள் ஊர்களுக்குச் சென்று கொண்டிருக்கின்றனர்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாள், மும்பையில் உள்ள லோக்மான்ய திலக் முனையம் (LTT) மற்றும் சத்ரபதி சிவாஜி மகாராஜ் முனையம் (CSMT) ஆகிய ரயில் நிலையங்களில் கடந்த வாரத்தில் ஐந்து நாட்களாகப் புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடம் கருத்துக் கேட்டுள்ளது. அவர்களில் 130 பேரில், 62 பேர் எல்.பி.ஜி நெருக்கடியின் காரணமாகத் தங்கள் சொந்த ஊருக்குச் செல்வதாகத் தெரிவித்துள்ளனர்.
மும்பையில் வேலை செய்து வருகின்ற, புலம்பெயர் தொழிலாளர்களின் கூற்றுப்படி கள்ளச்சந்தையில் 5 கிலோ சிலிண்டர் விலை 500-540 ரூபாயிலிருந்து 1,100-2,000 ரூபாயாகவும், 14.2 கிலோ சிலிண்டர் 900-1,200 ரூபாயிலிருந்து 3,200-4,000 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.
பதிவு செய்யப்பட்ட இணைப்புக்குத் தேவையான கே.ஒய்.சி (KYC) ஆவணங்கள் இல்லாத பெரும்பாலான புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு, அதிகாரப்பூர்வ விலையில் சிலிண்டர்கள் கிடைப்பதில்லை. இதனால் உணவுகள் சமைக்க முடியாததால் தங்கள் ஊர்களுக்குச் செல்வதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை.
முன்பு கொரோனா ஊரடங்கின் போது லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் உடைமைகளுடன் ஊருக்குச் சென்றனர். தற்போது சிலிண்டர் தட்டுப்பாட்டினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு தங்கள் ஊருக்குச் சென்று கொண்டிருக்கின்றனர்.
மும்பை பகுதியில் உள்ள சில புலம்பெயர் தொழிலாளர்கள் அமைதியாகத் தங்கள் உடைமைகளை எடுத்துக்கொண்டு சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் சென்றுவிட்ட நிலையில், அங்கேயே தங்கியிருப்பவர்கள் வேறுவிதமான ஒரு போராட்டத்தைச் சந்தித்து வருகின்றனர்.
எரிவாயு நிலையங்களுக்கு வெளியே சிலிண்டர்களுக்காக காத்திருக்கும் மக்கள் வரிசையில் தங்களின் இடத்தை இழக்காமல் இருப்பதற்காக இரவில் சாலையோரத்தில் விரிப்புகளை விரித்து படுத்துறங்கும் அவல நிலைக்கு பாசிச மோடி அரசு அவர்களைத் தள்ளியுள்ளது.
பிவண்டியின் விசைத்தறிச் சாலைகளில் சூரியன் உதிக்கும் நேரத்திற்குள், எரிவாயு நிலையங்களுக்கு வெளியே உள்ள வரிசைகள் மேலும் நீண்டுவிடுகின்றன. சில சமயங்களில் ஒரு நிலையம் திறந்து சில மணி நேரங்களுக்குள்ளேயே சிலிண்டர்கள் தீர்ந்துவிடுகிறது. இதனால் மக்கள் மீண்டும் வரிசையாகச் சாலையோரத்தில் உறங்குகின்ற தூக்கமில்லாத இரவுகளைக் கடந்து கொண்டிருக்கின்றனர்.
படிக்க: ஈரான் மீதான போர்: மேற்காசியாவைச் சுடுகாடாக்கும் அமெரிக்க மேலாதிக்கப் போர்வெறி!
குறிப்பாக மும்பையின் புறநகரில் உள்ள டெக்ஸ்டைல் மில் நகரத்தில் 5 கிலோ எல்.பி.ஜி சிலிண்டர்களின் விநியோகம் தடைப்பட்டுள்ளது. அங்குள்ள ஆயிரக்கணக்கான விசைத்தறி தொழிலாளர்களும் தினக்கூலித் தொழிலாளர்களும் சமைப்பதற்கு இந்த சிலிண்டர்களையே நம்பியிருப்பதால் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில் ஒவ்வொரு முகமைக்கும் தினமும் வெறும் 40-50 சிலிண்டர்கள் மட்டுமே வழங்கப்படுகின்றன. இதனால் பல தொழிலாளர்கள் மூன்று நான்கு நாட்களாக வரிசையில் நின்றும் சிலிண்டரைப் பெற முடிவதில்லை.
“கடந்த நான்கு நாட்களாக நான் சமையல் எரிவாயு சிலிண்டருக்காக வரிசையில் நிற்கிறேன். என் முறை வரவே வரவில்லை. ஒவ்வொரு முறையும் ஏமாற்றத்துடன் வீட்டிற்குத் திரும்ப வேண்டியுள்ளது,” என்று பங்கஜ் சோனி (Pankaj Soni) என்ற மும்பையில் பணிபுரியும் தொழிலாளி கூறினார்.
சிலிண்டருக்காக காத்திருக்கும் விசைத்தறித் தொழிலாளியான அனில் விஸ்வகர்மா “நாங்கள் வேலையை இழக்கிறோம்; அதாவது எங்கள் தினக்கூலியை இழக்கிறோம். எங்கள் வாழ்வாதாரத்திற்காகவும், பசியைப் போக்கத் தேவையான உணவையும் ஒரே நேரத்தில் பெறுவதற்காகப் போராட வேண்டிய கட்டாயத்தில் இருப்பது உண்மையிலேயே வேதனையளிக்கிறது,” என்று கூறினார்.
ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கு, 5 கிலோ சிலிண்டர் மட்டுமே சமையலுக்குக் கிடைக்கும் ஒரே எரிபொருளாகும். சரஸ்வதி குமாரி என்ற பெண், “மூன்று நாட்களாக எரிவாயு கிடைக்கவில்லை. இதனால் என் குழந்தைகளின் பசியைப் போக்குவதற்காகவே நான் அவர்களுக்கு வெறும் பிஸ்கட்டை கொடுக்க வேண்டியிருக்கிறது,” என்று கூறினார்.
எரிவாயு தட்டுப்பாடு புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் சாமானிய உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதித்துள்ளது என்பதை களநிலவரங்கள் வெளிக்காட்டுகின்றன.
சிலிண்டர் தட்டுப்பாட்டால் உணவு கிடைக்காமலும் தொழிற்சாலைகள் மூடப்பட்டும் புலம்பெயர் தொழிலாளர்கள் துன்பப்பட்டு வருகின்றனர். ஆனால் பாசிச மோடி அரசு சிலிண்டர் தட்டுப்பாட்டை மறைத்து வருகிறது; தேவையான கையிருப்பு உள்ளதாக நாடகமாடிக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் மக்களைப் பட்டினி போட்டும் வறுமைக்குள் தள்ளியும் வருகிறது.
![]()
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











