செயல்பாட்டாளர் ஸ்டான் சுவாமி மரணம் : நீதி விசாரணை கோரி பீமா கொரேகான் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டோர் உண்ணாநிலைப் போராட்டம் !

பீமா கொரேகான் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 10 பேர் கடந்த ஜூலை 7-ம் தேதியன்று பழங்குடி உரிமை ஆர்வலர் ஸ்டான் சாமியின் “நிறுவன கொலைக்கு” எதிர்ப்பு தெரிவித்து ஒரு நாள் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஸ்டான் சுவாமியின் மரணத்திற்கு நீதி விசாரணை வேண்டும் என்கிற கோரிக்கையையும் அவர்கள் அப்போது முன் வைத்துள்ளனர்.

ரோனா வில்சன், சுரேந்திர காட்லிங், சுதிர் தவாலே, மகேஷ் ராவுத், அருண் ஃபெரைரா, வெர்னோன் கான்சால்வேஸ், கவுதம் நவ்லாகா, ஆனந்த் தெல்தும்டே, ரமேஷ் கைசோர், சாகர் கோர்கே ஆகியோர் நவி மும்பையின் தலோஜா சிறையில் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

படிக்க :
♦ அரச பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட ஸ்டான் சுவாமி
♦ ஸ்டான் சுவாமி படுகொலை : பீமா கொரேகான் வழக்கில் கைதானோரின் குடும்பத்தினர் அறிக்கை !

பீமா கொரேகான் வழக்கில் கைதான – பர்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டிருந்த – பாதிரியார் ஸ்டான் சுவாமிக்கு சிறைச்சாலையில் கொரோனா தொற்று ஏற்பட்டது. நீண்ட போராட்டத்துக்குப் பின் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் கடந்த ஜூலை 5-ம் தேதியன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உடல்நிலை மிகவும் மோசமடைந்த போதும், தொடர்ச்சியாக அவருக்கு பிணை மறுத்தது நீதிமன்றம். தொடர்புடைய ஆதாரங்கள் ஏதுமின்றி, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 12-க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள், மனித உரிமை செயல்பாட்டாளர்களிடையே ஸ்டான் சுவாமி வயதில் மூத்தவர் ஆவார்.

சிறையில் அடைக்கப்பட்ட ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்கள் டிசம்பர் 31, 2017 அன்று புனேவில் உள்ள சனிவார் வாடாவில் நடைபெற்ற எல்கர் பரிஷத் மாநாட்டில் வன்முறையை தூண்டும் வகையில் உரையாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டது. அடுத்த நாள் ஜனவரி 1, 2018 அன்று இந்த பேச்சுகள் பீமா கொரேகான் போர் நினைவிடத்தில் வன்முறையைத் தூண்டியதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இந்துத்துவ குண்டர்கள் திட்டமிட்டு உள்ளே புகுந்து ஏற்படுத்திய வன்முறையில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் பலர் காயமடைந்தனர்.

ஸ்டான் சுவாமியுடன் இதே வழக்கில் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் தங்கள் குடும்பத்தினர் வாயிலாக வெளியிட்ட அறிக்கையில், செயல்பாட்டாளர் ஸ்டான் சுவாமியின் மரணத்துக்கு தேசியப் புலனாய்வு முகமையும், தலோஜா சிறைச்சாலையின் முன்னாள் கண்காணிப்பாளர் கவுஸ்தூப் குர்லேகருமே (kaustubh kurlekar) காரணம் எனக் குற்றம் சாட்டியிருந்தனர்.

ஸ்டான் சுவாமி படுகொலையை கண்டித்து டெல்லியில் மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்

ஸ்டான் சுவாமி காவலில் இருந்தபோது “துன்புறுத்த” கிடைத்த எந்த வாய்ப்பையும் என்.ஐ.ஏ மற்றும் குர்லேகர் இழக்கவில்லை என அந்த அறிக்கை குற்றம் சாட்டியது. இது “அவரது உடல்நிலை மோசமாக இருந்தபோதிலும் அவரை மீண்டும் மருத்துவமனையில் இருந்து சிறைக்கு மாற்றுவது, சிறையில் தரமற்ற சிகிச்சையை வழங்குவது அல்லது ஸ்ட்ரா மற்றும் சிப்பர் போன்ற அடிப்படை தேவைகளில் ஒன்றை மறுப்பது” ஆகியவையும் அடங்கும் என அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தனர்.

“இவைதான் ஸ்டான் சுவாமியின் மரணத்திற்குக் காரணமாக அமைந்தன. எனவே, இந்த நிறுவனக் கொலைக்கு, இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302 (கொலை)-இன் கீழ் என்.ஐ.ஏ அதிகாரிகள் மற்றும் குர்லேகர் ஆகியோரை விசாரிக்க வேண்டும்” என அந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.

தங்களது கோரிக்கைகளை தலோஜா சிறை நிர்வாகம் மூலம் மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவிடம் சமர்ப்பிக்கவிருப்பதாக சிறையில் உள்ள செயல்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறைச்சாலையின் வெவ்வேறு தடுப்பறைகளில் அடைக்கப்பட்டுள்ள குற்றம் சாட்டப்பட்ட செயல்பாட்டாளர்கள், ஜூலை 7-ஆம் தேதியன்று ஒன்றுகூடி ஸ்டான் சுவாமி பற்றிய தங்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவருக்காக இரண்டு நிமிட மவுன அஞ்சலியும் கடைப்பிடித்தனர்.

ஸ்டான் சுவாமியின் மரணத்திற்கு பல அரசியல்வாதிகள், ஆர்வலர்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் மோடி அரசாங்கத்தை குற்றம் சாட்டியுள்ளன. பீமா கொரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட 16 பேரின் குடும்பத்தினரும் நண்பர்களும் ஸ்டான் சுவாமியின் மரணம் ஒரு “நிறுவனக் கொலை” என சாடியுள்ளனர். ஸ்டான் சுவாமியின் மரணம் பொது சமூகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பீமா கொரோகான் வழக்கில் கைதானவர்கள் விடுவிக்க வேண்டும் என்ற அறைகூவலும் சமூக ஆர்வலர்களிடமிருந்து எழுந்து வருகிறது !!


அனிதா
செய்தி ஆதாரம் : Scroll

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க