மோடி அரசால் பொய்யாகக் குற்றஞ்சாட்டப்பட்டு கருப்புச் சட்டமான ஊபா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேராசிரியர் சாய்பாபா மற்றும் பிரசாந்த் ராஹி, மகேஷ் திக்ரி, ஹேம் கேஷ்வதத்தா மிஸ்ரா, விஜய் நான் திக்ரி ஆகியோரை மும்பை உயர்நீதிமன்றம் மார்ச் 5-ஆம் தேதி விடுதலை செய்ய உத்தரவிட்டது.

மும்பை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி வினய் ஜி.ஜோஷி மற்றும் நீதிபதி வாலிமிகி எஸ்.மெனேசஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு, “சட்டத்தின் கட்டாய விதிகளை மீறிய போதிலும் நடத்தப்பட்ட இவ்வழக்கு “நீதியின் தோல்வி” என்று குறிப்பிட்டது”. மேலும், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களிடமிருந்து மின்னணு ஆதாரங்களைக் கைப்பற்றியபோது நடந்துள்ள குறைபாடுகளையும், குற்றத்தை நிரூபிக்க போதுமான ஆதாரம் இல்லை என்பதையும் சுட்டிக்காட்டி ஐவரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது.

ஆனால், சாய்பாபா மற்றும் அவருடன் கைது செய்யப்பட்ட ஐந்து பேரின் குற்றத்தை நிரூபிக்க போதிய ஆதாரமில்லை என்று மும்பை உயர்நீதிமன்றம் விடுதலை செய்வது இது இரண்டாவது முறையாகும். ஏற்கனவே, 2022-இல் சாய்பாபா உள்ளிட்ட ஆறு பேர் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்து விடுதலை செய்ய உத்தரவிட்டிருந்தது.  ஆனால், சில மணி நேரத்திற்குள் அவர்களின் விடுதலையை ரத்து செய்யக்கோரி மகாராஷ்டிரா மாநில அரசு உச்சநீதிமன்றத்தை அணுகியது.

இவ்வழக்கை விடுமுறை நாளில் அவசரமாக விசாரித்த உச்சநீதிமன்றம், “மும்பை உயர்நீதிமன்றம் குற்றத்தின் தீவிரத்தைப் புரிந்து கொள்ளாமல், தகுதிகளைப் பரிசீலிக்காமல் உத்தரவு பிறப்பித்துள்ளது” எனக் கூறி விடுதலையை ரத்து செய்தது. போலியோவால் பாதிக்கப்பட்டு 90 சதவிகிதம் உடல் செயலிழந்துள்ள சாய்பாபாவின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, அவரை வீட்டுக் காவலில் வைக்க வேண்டும் என்று முன்வைக்கப்பட்ட கோரிக்கையையும் நிராகரித்தது.

இம்முறையும், அதேபோல் செவ்வாய்க்கிழமை (மார்ச் 5-ஆம் தேதி) தீர்ப்பு வழங்கப்பட்ட சில மணி நேரங்களில், மகாராஷ்டிரா மாநில அரசு இத்தீர்ப்பிற்குத் தடை விதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் முறையிட்டது. உயர்நீதிமன்றம் விடுதலைக்குத் தடைவிதிக்க மறுத்த நிலையில் தற்போது உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளது.


படிக்க: கொரோனா தொற்று : பேராசிரியர் சாய்பாபாவை சிறையிலேயே கொல்லாதே!


நீதித்துறை பாசிசமயமாகி வரும் சூழலில் சாய்பாபா உள்ளிட்ட ஐந்து பேருக்கு உச்சநீதிமன்றம் விடுதலை அளிக்குமா என்பது மிகப்பெரிய கேள்விக் குறிதான். அதனால்தான் இத்தீர்ப்பு குறித்து பேசிய பேராசிரியர் சாய்பாபாவின் மனைவி, “ஒருபுறம், நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம்; மறுபுறம், நாங்கள் பயப்படுகிறோம். 2022-ஆம் ஆண்டில் அவர்கள் இதையேதான் செய்தார்கள்” என்கிறார்.

2017-ஆம் ஆண்டு மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்பிலிருந்ததாகக் கூறி ஊபா சட்டத்தால் கைது செய்யப்பட்ட சாய்பாபா உள்ளிட்ட ஐந்து பேருக்கு ஆயுள் தண்டனையும் விஜய் நன் திர்கிக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்தது மகாராஷ்டிரா நீதிமன்றம். இந்த வழக்கில் தண்டனை அனுபவித்துவந்த பாண்டு நரோட் என்பவர் 2022-ஆம் ஆண்டு பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்படாமல் மோடி அரசால் சிறையிலேயே கொல்லப்பட்டார்.

90 சதவிகிதம் உடல் செயலிழந்துள்ள சாய்பாபாவும் பத்தாண்டுகளாக சிறையில் சித்திரவதையை அனுபவித்து வருகிறார். அவருக்கு சிறையில் இரண்டுமுறை கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளது. ஒருமுறை பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார், மேலும் இடது வென்ட்ரிகுலர் செயலிழப்பு, மூளை நீர்க்கட்டி, சிறுநீரகக் கற்கள் போன்ற பல பிரச்சினைகளால் அவரின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கான உரிய சிகிச்சை ஏதும் அவருக்கு கிடைப்பதில்லை என்கிறார் அவரின் மனைவி. 2022-இல் அவரின் தாய் மரணித்தபோது கூட அவருக்கு பிணை வழங்கப்படவில்லை. இதனால் சிறையில் அவர் முடங்கி விடவில்லை, தனக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக தொடர்ச்சியாகப் போராடித்தான் வருகிறார்.

சாய்பாபா மட்டுமல்ல மோடி அரசை எதிர்த்து சிறுபான்மையினருக்கு ஆதரவாக போராடும் அறிவுத்துறையினரின் நிலை இதுவாகத்தான் உள்ளது. இதற்காக தான் ஊபா என்ற கருப்பு சட்டமும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் மூலம் போராடுபவர்கள் மீது பொய்யாக குற்றம்சாட்டி சிறையில் அடைத்து, பிணை கொடுக்காமல், சிறையிலேயே கொன்றுவிட வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறது மோடி அரசு.

இதேபோன்றுதான் பீமா கோரேகான் வழக்கில் இதுவரை 20-க்கும் மேற்பட்ட சமூக செயற்பாட்டாளர்களை மோடி அரசு கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இதில் கைது செய்யப்பட்ட 84 வயதான ஸ்டான் சுவாமிக்கு மருத்துவ சிகிச்சையும் கொடுக்காமல் பிணையும் கொடுக்காமல் சிறையிலேயே கொன்றுவிட்டது. பீமா கோரேகான் வழக்கில், ரோன வில்சன் கணினியில் இருந்து எடுக்கப்பட்ட கோப்புகள் புனே போலீசாரால் திட்டமிட்டு வைக்கப்பட்டது என்பதை அமெரிக்க ஆய்வு நிறுவனம் நிரூபித்துள்ளது. சாய்பாபாவின் மீதான வழக்கு புனையப்பட்ட ஒன்று என்பதும் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.


படிக்க: சிசிடிவி-யை அகற்றகோரி சிறையில் பேராசிரியர் சாய்பாபா உண்ணாவிரதப் போராட்டம் !


ஆனால், பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இவர்களை இன்றுவரை சட்டப்போராட்டத்தால் விடுதலை செய்ய முடியவில்லை.

லக்கிம்பூர் கேரியில் கார் ஏற்றி எட்டு விவசாயிகளைப் படுகொலை செய்த ஒன்றிய அமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா, மல்யுத்த வீரர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த பிரிஜ் பூஷன் போன்ற குற்றவாளிகள் எளிமையாக பிணை வாங்கி, சுதந்திரமாகச் சுற்றித் திரிகிறார்கள்.

நாடு முழுவதும் உள்ள உழைக்கும் மக்களுக்காகவும், சிறுபான்மையினருக்காகவும் குரல் கொடுக்கும் சாய்பாபா போன்ற அறிவுத்துறை செயற்பாட்டாளர்கள், பொய் வழக்குகளால் சிறையில் அடைக்கப்பட்டு பிணை கூட கொடுக்கப்படாமல் சித்திரவதை அனுபவித்து வருகிறார்கள். நீதிமன்றம் விடுதலை செய்ய உத்தரவிட்டால் கூட பா.ஜ.க. அரசு அதை அமல்படுத்த மறுக்கிறது. எனவே, சட்டப் போராட்டத்தால் மட்டுமே  இவர்களின் விடுதலையை சாத்தியமாக்க முடியாது, உறுதியான களப் போராட்டத்தை புரட்சிகர ஜனநாயக சக்திகள் கட்டியமைக்க வேண்டும்.


ரித்திக்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க