privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபுதிய ஜனநாயகம்உலகம்புதிய தாராளவாத வைரஸின் சகாப்தம் !

புதிய தாராளவாத வைரஸின் சகாப்தம் !

கொள்ளை நோயை எதிர்கொள்ளும் அணுகுமுறையில், தொழிலாளி வர்க்கத்தின் உடல் நலன் மற்றும் அவர்களது வாழ்க்கை நலன் குறித்து உலக நாடுகள் அக்கறை கொண்டதாகத் தெரியவில்லை.

-

முன்னுரை :

பணமதிப்பழிப்பு நடவடிக்கையைப் போலவே, கரோனா நோய்த் தொற்றுக்கு எதிரானஊரடங்கு உத்தரவையும் திடீரென அறிவித்து,  பெரும்பான்மையான மக்களை, குறிப்பாக தினக் கூலித்தொழிலாளர்களை,  புலம்பெயர்ந்த தொழிலாளர் குடும்பங்களைத் திண்டாடவைத்துவிட்டது, மோடி அரசு.

ஊரடங்கு உத்தரவு திணிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமது சொந்த கிராமங்களுக்குத் திரும்ப உ.பி. காஸியாபாத் பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர் குடும்பங்கள்.

அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு அலைமோதிய மக்கள் திரளும்; சென்னை, திருப்பூர் உள்ளிட்ட தொழில் நகரங்களிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்லுவதற்காகப் பேருந்து நிலையங்களிலும் தொடர்வண்டி நிலையங்களிலும் குவிந்த குடும்பங்களும்; தமது கிராமங்களுக்குத் திரும்ப முடியாத வடமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர் குடும்பங்கள் சென்னை தெருக்களில் தத்தளித்து நின்றதுமான காட்சிகள் அனைத்தும் மொகலாயப் பேரரசன் முகம்மது பின் துக்ளக்கை, இந்து சாம்ராட் நரேந்திர தாமோதரதாஸ் மோடி வென்றுவிட்டதை எடுத்துக் காட்டின.

பிரதமர் மோடி கரோனா வைரஸ் தொற்று தொடர்பாக நாட்டு மக்களிடம் இரண்டாம் முறையாக உரையாற்றப் போகிறார் என்ற செய்தி வந்தவுடன், இந்தக் கொள்ளை நோயால் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டிருக்கும் பிரிவினர் அனைவருக்கும் பயனளிக்கக்கூடிய சலுகைகளை, நிதி ஒதுக்கீடை அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு பொருளாதார நிபுணர்களிடமும்கூட நிலவியது. ஆனால், மோடியோ, சலுகைகளை அறிவிப்பதற்குப் பதிலாக, ஊரடங்கு உத்தரவு மூலம் இந்த வைரஸை எதிர்த்துப் போராடும் பெரும் சுமையைப் பொதுமக்களின் தலையின் மீது சுமத்திவிட்டு ஒதுங்கிக் கொண்டார்.

இந்தக் கொள்ளை நோயை மருத்துவம், பொது சுகாதாரம், சமூக நிதியுதவித் திட்டங்கள் உள்ளிட்டு பல்வேறு வழிகளில் போராடி ஒழிப்பதற்கு ஐந்து முதல் ஆறு இலட்சம் கோடி ரூபாய் நிதி தேவைப்படும் என்றும், இது இக்கொள்ளை நோய் ஏற்படுத்தவல்ல பேரழிவை ஒப்பிடும்போது பெரும் நிதிச் சுமையல்ல என்றும் ப.சிதம்பரம் உள்ளிட்டுப் பல்வேறு பொருளாதார நிபுணர்களும் சுட்டிக்காட்டி வரும்போது, மோடி அரசோ முதல் கட்டமாக வெறும் 15,000 கோடி ரூபாயை மட்டுமே ஒதுக்கிவிட்டு, வீட்டினுள் அடைந்து கிடப்பது மட்டும்தான் இந்த வைரஸை ஒழிக்கக்கூடிய ஒரே சாத்தியமான வழி என அறிவுரை வழங்கிவிட்டு ஒதுங்கிப் போய்விட்டது. 

சிறுதொழில், சிறு வணிகம் உள்ளிட்ட அமைப்புசாரா தொழில்களின் முடக்கத்தால் ஏறத்தாழ 40 கோடி அமைப்புசாராத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டாம் கட்டமாக அறிவிக்கப்பட்ட 1.70 இலட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு என்பது புதிய மொந்தை பழைய கள்ளு எனக் கூறத்தக்க மோசடி. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களையே மறு ஒலிபரப்பு செய்திருக்கிறது, மோடி அரசு. பட்ஜெட் பற்றாக்குறை அதிகரித்து விடக்கூடாது என்பதற்காகவே இவ்வளவு குறைவாக நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக அம்பலப்படுத்தியிருக்கிறது, இந்து நாளிதழ்.

பொருளாதார மந்தத்தால் உள்நாட்டு தரகு முதலாளிகளின் இலாபம் சரிந்துவிடாமல் தூக்கி நிறுத்துவதற்காக இரண்டு இலட்சம் கோடி ரூபாய் வரையில் வரித் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை ஓரிரு மாதங்களுக்கு முன்பு வாரி வழங்கிய மோடி அரசு, பொதுமக்களின் நலன் என வரும்போதோ கஜானாவை இறுக மூடிவைக்கிறது.

மோடி மட்டுமின்றி, பெரும்பாலான நாடுகளின் அரசுத் தலைவர்கள் அனைவருமே கரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதைப் பொதுமக்களின் தலையின் மீதுதான் ஏற்றி வைத்து வருகின்றனர். டென்மார்க்கில் வாழ்ந்துவரும் இந்திய நாவலாசிரியரும் கல்வியாளருமான தாபிஷ் கைர் முதலாளித்துவ அரசுகளின் இந்த அணுகுமுறையின் அடிப்படையில் கரோனா வைரஸை உலகின் முதல் புதிய தாராளாவாத வைரஸ் என வரையறுக்கிறார். அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளின் அனுபவத்தின் வழியாக அவர் வந்தடைந்திருக்கும் இந்த முடிவு இந்திய அரசுக்கும் பொருந்தும்.

கடந்த மார்ச் 24 அன்று ஆங்கில இந்து இதழில், “புதிய தாராளவாத வைரஸின் சகாப்தம்” (The age of the neoliberal virus) என்ற தலைப்பில் வெளியான தாபிஷ் கைர் எழுதிய கட்டுரை வாசகர்களுக்காக மொழிபெயர்த்து வெளியிடப்படுகிறது.

***

கோவிட்-19 என்ற நோயை உருவாக்கக்கூடிய கரோனா வைரஸ்தான் இந்த உலகின் முதல் புதிய தாராளவாத வைரஸ். இப்படிக் கூறுவது ஏற்கெனவே பாதுகாப்பற்று வாழும் நோயுற்றவர்களை, வயது முதிர்ந்தோரை, ஏழைகளை (பட்டினி கிடக்காமல் இவர்களால் தனிமைப்படுத்திக் கொள்ள முடியாது) இந்த வைரஸ் எளிதாகத் தாக்கக்கூடிய அபாயத்தைக் குறைத்து மதிப்பிடுவதாகாது. மாறாக, உலகின் பல்வேறு நாட்டு அரசுகள் இந்த வைரஸை எவ்வாறு எதிர்கொள்கின்றன என்பதைத்தான் விமர்சிக்க வேண்டியிருக்கிறது. ஐரோப்பாவில் ஒப்பீட்டளவில் சிறப்பான சமூக நல முதலாளித்துவ அரசுகளாக உள்ள, நான் வசித்துவரும் டென்மார்க் உள்ளிட்ட நாடுகளுக்கும்கூட இந்த விமர்சனம் பொருந்தக்கூடியதுதான்.

பல்வேறு ஐரோப்பிய நாடுகளைப் போலவே டென்மார்க்கிலும் மார்ச் 12 தொடங்கி இரண்டு வார காலத்திற்கு ஊரடங்கு நடவடிக்கைகள் அமலுக்கு வந்தன. இங்கிலாந்து உள்ளிட்ட சில நாடுகள் மட்டும்தான் இதற்கு விதிவிலக்காக இயங்கி வந்தன. அறுபது இலட்சம் மக்கள் தொகை கொண்ட டென்மார்க்கில் மார்ச் 12 வாக்கில் 500 பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டிருந்தது.

படிக்க:
கொரோனா வைரஸ் என் உடலைத் தின்று வருகிறது ! – இரயாகரன்
கொரோனா பெருந்தொற்று ஒரு நுழைவாயில் | அருந்ததி ராய்

அவசியமான இந்த ஊரடங்கு நடவடிக்கையை முன்னரே எடுத்திருக்க வேண்டும். எனினும், இந்த ஊரடங்கைத் தவிர, இந்த நோயைக் கட்டுப்படுத்தத் தேவையான மற்றைய அவசியமான நடவடிக்கைள் எதுவும், நான் இந்தக் கட்டுரையை எழுதும் தருணத்திலும், மார்ச் 17 வரை டென்மார்க்கில் எடுக்கப்படவில்லை.

மற்றைய நடவடிக்கைகளுள் மிக முக்கியமான, இன்றியமையாத ஒன்று மருத்துவப் பரிசோதனை. மற்றைய ஐரோப்பிய நாடுகளைப் போலவே, டென்மார்க்கிலும் நோய்த்தொற்று தீவிரமடைந்த நோயாளிகளுக்கு மட்டும்தான் மருத்துவப் பரிசோதனை நடத்தப்படுகிறது. மிதமான தொற்று அறிகுறிகள் உள்ளவர்களைப் பொருத்தவரை – நூற்றுக்கும் மேற்பட்ட பிற நோய்களும் இதே போன்ற அறிகுறிகளை வெளிபடுத்தக்கூடியவைதான் – தனிமைப்படுத்திக் கொள்வது மட்டுமே அறிவுறுத்தப்படுகிறது. உள்நாட்டினுள் மருத்துவப் பரிசோதனை விரிவாக நடத்தப்படாத அதேவேளையில், டென்மார்க் அரசு, அரசியல்ரீதியான நடவடிக்கையாக, பிற நாடுகளுடனான தனது எல்லைகளை மூடிவிட்டது. செல்வ வளமிக்க மேற்குலக நாடுகளில் மருத்துவப் பரிசோதனையின் முடிவு தெரிவதற்கு இரண்டிலிருந்து நான்கு நாட்கள் வரை கால தாமதம் ஆகும் அதேவேளையில், கரோனாவால் பாதிக்கப்பட்ட சீனப் பகுதிகளில் நான்கு மணி நேரத்தில் பரிசோதனை முடிவுகளைத் தெரிந்துகொள்ள முடியும் என்பது ஆச்சரியமான விடயம்தான்.

கரோனா தாக்குதலையடுத்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த ஏகபோக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை ஒப்பிடும்போது மருத்துவ, சுகாதாரத் துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி குறைவானது என்கிறார், கட்டுரையாளர் தாபிஷ் கைர்.

ஆக, இதிலிருந்து நாம் விளங்கிக்கொள்வதென்ன? டென்மார்க் உள்ளிட்ட நாடுகள் சமூக நல மற்றும் மருத்துவ வசதிக் கட்டமைப்புகளைக் கொண்டிருந்த போதும், புதிய தாராளவாத அணுகுமுறையைத்தான் வெளிப்படுத்துகின்றன என்பதுதான் ஐயத்துக்கு இடமின்றித் தெரிகிறது. இந்த வைரஸைக் கட்டுப்படுத்தக்கூடிய பொறுப்பின் பெரும்பகுதி, தனிமைப்படுத்திக் கொள் என்ற கட்டளையின் வழியாகச் சாதாரண குடிமகனிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. சாதாரண சளித் தொல்லகளால் பீடிக்கப்பட்டவர்கள்கூடத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ள நிலையில், அறிவுரைகளையும் கட்டளைகளையும் அள்ளிவிடும் அரசுகளோ மிகக் குறைந்த அளவிற்கே நிதி ஒதுக்கியுள்ளன.

இது வியப்புக்குரியதல்ல. கடந்த இரண்டு பத்தாண்டுகளில், எப்பொழுதெல்லாம் கார்ப்பரேட் நிறுவனங்களோ அல்லது குறிப்பிடத்தக்க பெரிய வங்கிகளோ தடுமாறத் தொடங்கியவுடனேயே, தேசிய அரசுகள், சுகாதாரம், ஆராய்ச்சி உள்ளிட்ட பொது சேவைகளுக்கான  நிதி ஒதுக்கீடுகளை வெட்டி, அதன் மூலம் கிடைக்கும் பொதுப் பணத்தை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வாரி வழங்கியுள்ளன. இது உலகெங்கும் நடந்திருக்கிறது. இது மீண்டும் நடந்து வருகிறது.

சில நாட்களுக்கு முன்னர்தான், டென்மார்க் அரசு கரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொள்வதற்காகத் தனது நாட்டைச் சேர்ந்த கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 5,000 கோடி அமெரிக்க டாலர் (ஏறத்தாழ 3,50,000 கோடி ரூபாய்) மதிப்புடைய சலுகைகளை வழங்கியது. இத்தொற்று நோய் ஓர் அபாயமாக உருவாவதற்கு முன்னரே, அமெரிக்காவின் டிரம்ப் அரசு, தனது நாட்டின் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், நிதி மூலதனத் துறைக்கும் 1.5 இலட்சம் கோடி அமெரிக்க டாலர்களை வாரி வழங்கியது. இத்தொற்று அமெரிக்காவில் பரவி, தேசிய அவசர நிலை அறிவிக்கப்பட்ட சமயத்தில் மேலும் 70,000 கோடி அமெரிக்க டாலர்கள் அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு நிதியதவியாக வழங்கப்பட்டது. இங்கிலாந்து அரசு, இத்தொற்று அபாயத்தை முழுமையாக ஏற்க மறுத்தாலும், தனது நாட்டின் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 90,000 கோடி அமெரிக்க டாலர்களை நிதியுதவியாக வழங்கியிருக்கிறது. மற்றைய நாடுகளிலும் இதே கதைதான்.

தேசியப் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியைச் சந்திக்காமல் தடுப்பதற்கு இத்தகைய முட்டுக் கொடுத்தல்கள் அவசியம்தான் எனினும், இதில் இரண்டு பெரிய சிக்கல்கள் உள்ளன. இந்தச் சலுகைகளின் பெரும் பகுதி வேலைவாய்ப்புகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற கண்டிப்பான நிபந்தனையோடு ஒதுக்கப்படவில்லை. அதிலும் குறிப்பாக, மிகவும் குறைவான கூலி பெறும் தொழிலாளி வர்க்கத்தின் பாதுகாப்பு புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. டென்மார்க், நார்வே, ஸ்வீடன் நாடுகள் கூட்டாக இணைந்து இயக்கும் ஸ்காண்டிநேவியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஏற்கெனவே 10,000 ஊழியர்களை இடைநீக்கம் செய்துவிட்டது. மற்றைய நாடுகளிலும் தனியார் துறையைச் சேர்ந்த ஊழியர்களும் தொழிலாளர்களும் வேலையிலிருந்து தூக்கியெறியப்படுவது நடந்து வருகிறது.

பெர்னீ சாண்டர்ஸ்

அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜனநாயகக் கட்சியின் சார்பில் சீட்டு கேட்டுப் போட்டியிட்டு வரும் பெர்னீ சாண்டர்ஸ் என்ற அரசியல் தலைவர் ஒருவர் மட்டும்தான், “இந்தச் சலுகைகள் மக்கட் தொகையில் 95 சதவீதமாக உள்ள உழைக்கும் மக்களின் வேலைகளைப் பாதுகாப்பதற்காகக் கொடுக்கப்பட வேண்டுமெயொழிய, 5 சதவீத மேட்டுக் குடியினரின் பங்கு மதிப்பு வீழ்ந்துவிடாமல் முட்டுக் கொடுக்க வழங்கப்படக் கூடாது” என வலியுறுத்தி வருகிறார். மற்றொரு சிக்கல் என்னவென்றால், அநேகமாக எந்தவொரு நாடும் இதற்கு இணையான தொகையை இத்தொற்று நோயை எதிர்கொள்ளும் விதத்தில், மக்கள் நல்வாழ்வு, சமூகத் துறைகளுக்கு ஒதுக்கவில்லை.

வெள்ளையர் அல்லாத நாடுகளில் எந்தவொரு அசம்பாவிதம் ஏற்பட்டாலும், அது மேற்குலக நாடுகளில் கனன்று கொண்டிருக்கும் இன வெறியைத் தூண்டிவிடும் என்பதோடு, சீனாவில் ஏற்பட்டுள்ள இந்த வைரஸ் பீதி அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நிதி மூலதனக் கும்பலைத் தமது பங்குகளை அவசர அவசரமாக விற்கும் நிலைக்கும் தள்ளியிருக்கிறது. சீனாவின் குறிப்பிடத்தக்க தொழில்துறைகளைக் கட்டுப்படுத்தும் அளவிற்குப் பங்குகளை வைத்திருக்கும் இந்தக் கும்பல், அப்பங்குகளை மிகவும் மலிவாக விற்பதை சீன அரசும், சீன முதலீட்டாளர்களும் வாங்கி வருகின்றனர். சீனா, தற்சமயம் இந்த வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் நிலையை எட்டியிருப்பதோடு, தனது நாட்டின் பொருளாதாரத்தையும் தொழில்துறைகளையும் முன்னைக் காட்டிலும் அதிக அளவில் கட்டுப்படுத்தும் நிலையை மீண்டும் பெற்றிருக்கிறது எனக் கூறலாம். இதன் மறுபக்கத்தில் அமெரிக்காவின் காங்கிரசு மற்றும் செனட் சபைகளைச் சேர்ந்த மாண்புமிகு உறுப்பினர்கள், அமெரிக்கப் பங்குச் சந்தை வீழ்ச்சியடைவதற்குச் சற்று முன்பே, உள்பேரத்தின் மூலம் தமது பங்குளை விற்றுக் காசாக்கிவிட்டனர். மீண்டுமொரு ஒரு புதிய தாராளவாத வைரஸ்: இந்தப் போக்கு உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகளைப் பாதிக்கும் வண்ணம் கணினிமயமாக்கம் (digitalisation) மற்றும் இயந்திர மனிதமயமாக்கம் (robotisation) ஆகிய துறைகளிலும் தொடரும்.

“இந்த வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கு முன்பாக பல பேர் இறப்பது தேவையானதுதான்” என வெளிப்படையாக ஒப்புக்கொண்ட முதல் நாடு இங்கிலாந்துதான். இந்த வைரஸைக் கட்டுப்படுத்துவதற்குப் போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படாத தருணத்தில் அரசியல்வாதிகள் கூறவருவது இதுதான்: “இந்த வைரஸ் அநேகமாக வயது முதிர்ந்தவர்கள், நோய்வாய்ப்பட்டிருப்பவர்கள், ஊட்டச்சத்துக் கிடைக்காத ஏழைகள் ஆகியோரைத்தான் கொல்கிறது. பொருளாதார உற்பத்திக்குப் பயனற்ற இந்தக் கூட்டம் வாழ்ந்தால் என்ன, செத்தால் என்ன என்பது பற்றி நாம் உண்மையில் அக்கறை கொள்ளத் தேவையில்லை.”

அரசியல் விமர்சகர்கள் அரசியல்வாதிகளின் இந்த உள்ளக்கிடக்கையை சுட்டிக்காட்டியவுடனேயே, அந்த வர்க்கம் தாம் கூறியதிலிருந்து பின்வாங்கியதோடு, ” நாங்கள் மக்களிடம் பொய் கூறாமல் தமது கடமையைச் செய்வதாக”த் தமது கூற்றுக்கு விளக்கமளித்தார்கள்.

அவர்கள் உண்மையைப் பேசுகிறார்களா? அல்லது, நிதி மூலதனத்தின் மதிப்பு மட்டுமே அக்கறைக்குரியது என்ற புதிய தாராளவாத தர்க்கத்திற்கு ஆட்பட்டுப் பேசுகிறார்களா? பசி என்ற கொள்ளை நோயைக் கட்டுப்படுத்தக்கூடிய தடுப்பு மருந்தான உணவுப் பொருட்கள் கையிலிருந்தும், ஒவ்வொரு நாளும் 8,000 குழந்தைகள் பசி என்ற வைரஸுக்குப் பலியாவது இந்தப் புதிய தாராளவாத சமன்பாட்டின் ஒரு பகுதியாகும். கரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ள நாம் பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் தருணத்தில், மற்ற கொள்ளை நோய்களை எதிர்த்த போராட்டம் தவிர்க்கவியலாதவாறு பாதிக்கப்படும்.

இந்தக் கொள்ளை நோயை எதிர்கொள்வதற்கு இன்னும் பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கிறது. இன வெறியும் தேசியவாதமும் இதற்கு உதவாது. இந்தக் கொள்ளை நோயைப் போல எதிர்காலத்தில் சந்தேகத்திற்கு இடமின்றி வரக்கூடிய கொள்ளை நோய்களை எதிர்கொள்வதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கிறது. ஒரு நூற்றாண்டுக்கு முன்பாக, 1918-இல் உருவான ஸ்பானிஷ் ஃப்ளு என்ற கொள்ளை நோய் – பிரிட்டிஷ் அல்லது நேச நாட்டுப் படையினர் மத்தியில் உருவாகிப் பரவியது – 5 கோடி மக்களைக் காவு வாங்கியது. இந்த கரோனா வைரஸை முதல் புதிய தாராளவாத வைரஸ் என்ற முறையில் அணுகி, அதற்கேற்ப செயல்படவில்லை என்றால், பெரிதாக எதுவொன்றும் நடவாது.

மொழியாக்கம்: ரஹீம்