வேதாந்தம் இந்திய வைதீகத்தின் முதன்மையான தத்துவம். வேதாந்தம் உபநிடதங்களில் தோற்றம் பெற்றது. பிரம்மசூத்திரம், பகவத்கீதை ஆகியவற்றின் வழி அது முழு உருப்பெற்றது. இடைக்கால இந்தியாவில் சங்கரர், ராமானுஜர், மத்வர், நிம்பர்கர், பாஸ்கரர் போன்ற பல உரையாசிரியர்கள் மூலம் அது பல புதிய வடிவங்களைப் பெற்றது. அத்வைதம், விசிஷ்டாத்வைதம், துவைதம் என்று பல போக்குகளாக அது பிரிந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் வேதாந்தம் மீண்டும் இந்திய வைதீக மீட்டுருவாக்கத்தில் பங்கேற்றது. இந்திய விடுதலைப் போராட்டத்தின் தத்துவம் என்ற முகத்தையும் அது ஒரு கட்டத்தில் பெற்றது. இருபதாம் நூற்றாண்டில் சர்வ பள்ளி ராதாகிருஷ்ணன் போன்ற கல்வியாளர்களாலும் காஞ்சி சங்கராச்சாரியார் போன்ற மடாதிபதிகளாலும் புது விளக்கங்களைப் பெற்றது.

இவ்வாறாக, நீண்ட நெடிய இந்திய வரலாற்றில் வேதாந்தம் பலவகையாக தனது கலாசார அரசியலை நடத்தி வந்துள்ளது. இன்றைய இந்துத்துவச் சூழல்களில் வேதாந்தத்தின் வேர்களையும் வெவ்வேறு காலகட்டங்களில் அதன் புது உருவங்களையும் புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. வேதாந்தத்தின் கலாசார அரசியல் எனும் இச்சிறு நூல் அந்நோக்கத்தையே முன்னிறுத்துகிறது.

இந்திய வைதீகத்தின் முதல் நூல்கள் வேதங்கள். ரிக், யஜூர், சாம, அதர்வணம் என அவை நால் வகைப்படும். இவை தத்துவ நூல்கள் அல்ல; சடங்கியல் நூல்கள். வேதகால ஆரியர்கள் இந்தியாவிற்குள் நுழைவதற்கு முன்னரே இவற்றில் பலயாக்கப்பட்டிருக்க வேண்டும். ஆரிய நாடோடி இனக்குழுக்கள் யக்ஞங்களை மையப்படுத்தி இயற்றிய சடங்குப் பாடல்களே வேதங்கள். யக்ஞங்கள், அவற்றில் ஏற்றப்படும் நெருப்பு (அக்னி), யக்ஞங்களில் பாடப்படும் பாடல்கள் (மந்திரங்கள்), பாடல்களில் அழைக்கப்படும் வானத்து தெய்வங்களான இந்திரன், வர்ணன், வாயு, சூரியன், சந்திரன், அஸ்வினி, மாருதி போன்றோர் என்பதாக வேதங்களின் உள்கட்டமைப்பு அமைந்திருந்தது. யக்ஞம், அக்னி, மந்திரங்கள் ஆகியவற்றைப் பேணிப் பாதுகாக்கும் சமூகப் பிரிவினராக பிராமணர் என்ற முதல்வர்ணம் ஆரிய இனக்குழு மக்களிடையில் தோன்றியிருக்க வேண்டும்.

வேதகால ஆரியர்கள் வடமேற்கு இந்தியா வழியாக உள்ளே நுழைந்து, அங்குமிங்குமாக சில காலம் அலைந்து, இறுதியில் யமுனை நதிக்கும் மேற்கு கங்கைக்கும் இடைப்பட்ட நிலப்பகுதிகளில் குடியேறினார்கள். இறக்கை கட்டிய வெறும் வார்த்தைகளைத் தவிர வேறு எதுவும் இல்லாத ஆரிய இனக்குழுக்கள் கங்கை – யமுனை நதிக்கரைகளில் நிலைத்த வாழ்க்கையைத் தொடங்கின.

கங்கை – யமுனைக் கரைகளில் வாழத் தொடங்கிய அக்காலத்தில்தான் ஆரியர்கள் தமது வேதப் பாடல்களுக்குப் புனிதத் தன்மையை ஏற்றத் தொடங்கினார்கள். வேதங்கள் மனிதர்களால் இயற்றப்பட்டவை அல்ல என்றும் அவை தேவ ரிஷிகளால் கேட்கப்பட்டவை’ (சுருதி) என்றும் அறிவிக்கத் தொடங்கினர். ‘அபௌருஷ்ய’ என்ற சொல்லால் வேதங்களைக் குறிக்கத் தொடங்கினார்கள். அபௌருஷ்ய எனில் “மனிதத் தன்மை அற்ற” என்ற பொருள். அதாவது, வேதங்கள் தெய்வத் தன்மை கொண்டவை என்ற அலங்காரச் சொல் வேதங்களுக்குச் சூட்டப்பட்டுள்ளது. வேதங்களுக்கு இப்படிப்பட்ட புனிதத்தன்மை ஏற்றப்பட்டது ஏன்? (நூலிலிருந்து பக்.3-4)

… பக்தி தென்னாட்டில் தோன்றியது என்று சில பிற்கால புராணங்கள் குறிப்பிடுகின்றன. பக்தி எனும் பெண் தாமிரபரணி நதிக்கரையில் தோன்றி, தனது இரு பிள்ளைகளுடன் முதலில் வடமேற்கு இந்தியாவிலும் பின்னர் வட இந்தியாவிலும் பரவிச் சென்றாள் என்று அவை குறிப்பிடுகின்றன. தென்னாடு, வங்காளம் ஆகிய இடங்களில் அதிக எச்சங்கள் காணப்படும் சைவசமயத்தின் சிவன் வைதீக மரபால் ஆரம்பத்தில் பெரிதும் புறக்கணிக்கப்பட்டவன் என்பது குறிப்பிடத்தக்கது. சிவன் தோலை ஆடையாக அணிந்தவன். தோல் கருவியான உடுக்கை ஏந்தியவன், இடுகாடு சுடுகாடு ஆகியவற்றில் அலைபவன், அவன் மகாயோகி, வைத்தீஸ்வரன், பூத கணங்களின் தலைவன் என்பன போன்ற அடையாளங்கள் எல்லாம் அவனை வைதீக மரபுக்கு வெளியில் நிறுத்தி வைக்கின்றன. வேத கேள்விகளின் அவிர்பாகம் பலமுறை மறுக்கப்பட்ட தெய்வம் சிவன். பிராமணனைக் கொன்ற பிரம்மஹத்தி தோஷம் கொண்டவன் சிவன். பக்தி ஒரு சூத்திர மரபு எனக் கூறி ஆரம்ப காலம் தொட்டு வைதீகமரபு அதனை ஒதுக்கி வைத்தது. ஆனால், பக்தியின் வெகுசன செல்வாக்கு வேதாந்தத்திற்கு அதனைத் தவிர்க்க முடியாததாக்கியது.

பக்தியை வேதாந்தம் உள்வாங்கத் தொடங்கியதன் முதல் குறிப்புகளைப் பகவத்கீதையில் காணுகின்றோம். பக்தி வேதாந்தம் வடக்கில் பகவத்கீதையிலிருந்து தொடங்கியது எனக் கூறலாம். பகவத் கீதை பிரம்மத்தை விஷ்ணுவோடு சமப்படுத்துகிறது. விஷ்ணுவை உணர்ச்சிவசப்பட்டு பணிந்து வணங்குதல், வழிபடுதல் ஆகியவையே பக்தி என அது விளக்குகிறது. “எந்தெந்த வடிவில் இறைவனை வணங்கினாலும் எல்லா வழிபாடுகளும் இறுதியில் என்னையே வந்து சேருகின்றன” என்ற அகலமான அணுகுமுறையை விஷ்ணு பகவத்கீதையில் முன்வைக்கிறார். இது தாராளத்தன்மை கொண்டதாகக் காட்சியளிக்கும். ஆனால் ஏராளமான வட்டார வழிபாடுகளைச் செரித்து அகப்படுத்தும் ஒரு பேரிறைக் கொள்கை. அத்தோடு பகவத்கீதையின் புதிய ஏற்பாடான அவதாரக் கொள்கையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். பக்தர்கள் இறைவனின் முன் தம்மை முழுவதும் இழந்து சராணாகதி அடைதல் என்ற கோட்பாடும் கீதையில் பேசப்படுகிறது. (நூலிலிருந்து பக். 33-34)

டி.டி.கோசாம்பி.

… இந்திய நில உடமை மேலிருந்தும் கீழிருந்தும் இருவகையாகக் கட்டி எழுப்பப்பட்டன என்று டி.டி.கோசாம்பியும் குறிப்பிடுவார். “மேலிருந்து” என்பதை பிராமணியத்தன்மை கொண்டிருந்த மேட்டுக்குடிக் கருத்தியல்களிலிருந்து பரவிய சாதிய அமைப்பு முறை என்று புரிந்துகொள்ள வேண்டும். பக்தி இயக்கம் வேதாந்தமயப்படுத்தப்படுவதை, வெகுசனங்களுக்குள் சாதியம் திணிக்கப்படுவதை “மேலிருந்து” உருவாக்கப்பட்ட நில உடமை எனப் புரிந்து கொள்ள வேண்டும். உழவுத் தொழிலின் பரவலால் நில உடமை தோன்றுவதையும் வட்டார மேட்டுக்குடிகள் உருவாவதையும் “கீழிருந்து” தோன்றிய நில உடமை எனக் கொள்ளல் வேண்டும். பக்தி இயக்கம் மடங்களின் தலைமையை ஏற்பதும், கோயில் பொருளாதாரத்தின் தோற்றமும் “கீழிருந்து” தோன்றிய நில உடமை முறையின் அடையாளங்களாகும். திருத்தொண்டர்களின் வைசம் இக்காலத்தில் சித்தாந்த சைவமாக நிறுவனப்படுகிறது. உழவுத்தொழில் சார்ந்த வேளாளர் வட்டங்கள் இக்காலத்தில் சைவ வேளாளராகவும் அசைவ வேளாளராகவும் இரண்டுபட்டனர். வைதீகம் முன்மொழிந்த சாதிமுறைமை இப்போது இவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது. இது கீழிருந்து தோன்றிய நிலப்பிரபுத்துவம்.

படிக்க:
வரலாறு: ம.க.இ.க.வின் கிடா வெட்டும் போராட்டம்
கீழடி : ஆரிய – சமஸ்கிருத – பார்ப்பனப் புரட்டுகள் தவிடுபொடி !

வேதாந்தத்திற்கு வெகுசன வடிவம் ஏன் தேவைப்பட்டது? வேதாந்தம் என்பது ஒருவகை சமூக உறவின் கருத்தியல் வடிவம். பிராமணர்களின் சுதர்மத்தையும் பிற மக்கள் கூட்டங்களின் சுதர்மங்களையும் வரையறுத்துக் காட்டும் கருத்தியல் அது. வெவ்வேறு சமூக வர்க்கங்களுக்கிடையில் கலாசாரத் தடைகளைக்கொண்ட ஏற்பாடு அது. தமதுசுதர்மத்தைக் காத்துக்கொள்ள பிறரது சுதர்மங்களை நிர்ணயித்த ஏற்பாடு அது. வேதாந்தத்தின் வெகுசன வடிவம் வருண – சாதி அமைப்பு குறித்த வெகுசன அங்கீகாரம். வேதாந்தத்தின் வெகுசன வடிவம் சைவத்திற்கு எதிராகவும் பழங்குடிகளுக்கு எதிராகவும் வெகுசனங்களைத் திரட்டுவதற்கும் உதவுவது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து வேதாந்தத்தின் வெகுசன வடிவம் “இந்து” என்ற புதிய பேரடையாளம் ஒன்றை உருவாக்கியது. இது இந்து தேசியம் என்ற நேரடிவடிவிலும் இந்திய தேசியம் என்ற மறைமுக வடிவிலும் தொழில்பட்டிருக்கிறது. முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், மேற்கத்தியப் பண்பாடு, விவசாயிகள், பழங்குடிகள் ஆகியோருக்கு எதிரான வெகுசனத் திரட்சிக்கும் இது பயன்பட்டிருக்கிறது. (நூலிலிருந்து பக்.39-40)

நூல் : வேதாந்தத்தின் கலாசார அரசியல்
ஆசிரியர் : ந.முத்துமோகன்

வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,
41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர், சென்னை – 600 098.
தொலைபேசி எண் : 044 – 2624 1288 | 2625 1968 | 2625 8410
மின்னஞ்சல் : info@ncbh.in

பக்கங்கள்: 40
விலை: ரூ 20.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

இணையத்தில் வாங்க : noolulagam

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க