Saturday, July 20, 2024
முகப்புகட்சிகள்அ.தி.மு.கவரலாறு: ம.க.இ.க.வின் கிடா வெட்டும் போராட்டம்

வரலாறு: ம.க.இ.க.வின் கிடா வெட்டும் போராட்டம்

-

கோயில்களில் அன்னதானம், மதமாற்றத் தடை சட்டம், பாபர் மசூதி இடிப்பு ஆதரவு என்று பா.ஜ.கவின் இளைய பங்காளியாக ஜெயலலிதா செய்த நடவடிக்கைகள் பல. இதன்படி கோயில்களில் கிடா வெட்டுவதற்கு தடையை அமல்படுத்த 2003-ம் ஆண்டுஆணை பிறப்பித்தது, அதிமுக அரசு. நாட்டார் வழிபாட்டை பார்ப்பனமயமாக்கும் இந்த முயற்சியை எதிர்த்த்து திருச்சியில் மக்கள் கலை இலக்கியக் கழகம் நடத்திய கிடா வெட்டும் போராட்டம் பற்றிய செய்தி இது. இந்த சட்டம் வந்தவுடன் தமிழகத்தின் கோவில் கொடை நிகழ்வுகளில் வீரப்பரம்பரை என்று சவுண்டு விட்ட எந்த முறுக்கு மீசை சாதியும் வாய் திறக்கவில்லை. ஒரு கோழிக்குஞ்சை கூட கொல்லவில்லை என்பது முக்கியம்.

– வினவு

கிடா வெட்டுவதற்கெல்லாம் ஒரு போராட்டமா என்று கேட்கலாம். சாமி கும்பிடுவதற்கும், செருப்புப் போட்டு நடப்பதற்கும், தேநீர் குடிப்பதற்கும் கூட தலித் மக்கள் போராட வேண்டியிருக்கிற இந்தத் திருநாட்டில் இக்கேள்விதான் அபத்தமானது. பேச்சுரிமை மறுக்கப்பட்ட இடத்தில் வெறும் பேச்சு கூடத்தான் போராட்டமாகி விடுகிறது.

செப்டம்பர் 8, காலை போராட்ட அறிவிப்புச் சுவரொட்டிகள் நகரெங்கும் ஒட்டப்பட்டவுடனே போலீசின் “தேடுதல் வேட்டை” தொடங்கியது. திருச்சி, உறையூர் குழுமாயி அம்மன் கோயிலுக்குக் கிடாவெட்டும் மந்தையில் லாரி லாரியாகப் போலீசு குவிக்கப்பட்டிருந்தது. முன்னால் பெண் தோழர்கள் பறை முழங்கி வர ஆட்டுக் கிடாவும் அரிவாளுமாக தோழர்களின் ஊர்வலத்தைக் கண்டவுடன் 3 லாரி போலீசும் அவர்கள் மீது பாய்ந்தது.

தோழர் செல்வராசின் கையிலிருந்த ஆட்டைப் பிடுங்குவதற்கு இன்ஸ்பெக்டர் மல்லுக்கட்டினார். போலீசார் நடத்திய இந்த ஜீவமரணப் போராட்டத்தின் நோக்கம் பன்முகத்தன்மை வாய்ந்தது. ஆட்டைக் கைப்பற்றுவதன் மூலம் சட்டத்தைக் காப்பாற்ற முயல்வதாக சிலர் கருதியிருக்கலாம். ஆட்டின் வடிவத்தில் செல்வராசு கையில் சிக்கியிருந்த தன் பதவியைக் காப்பாற்றத்தான் இன்ஸ்பெக்டர் போராடுகிறார் என்ற உண்மை போலீசாருக்கு மட்டும் தெரிந்திருந்தது. ஆனால், யாருடைய இன்னுயிரைக் காப்பாற்ற புரட்சித் தலைவியின் ஆணையின் பேரில் 100 போலீசார் குவிக்கப்பட்டிருக்கின்றனரோ, அந்த ஆட்டின் மூளைக்கு தனது உயிருக்குத்தான் இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது என்ற உண்மை உறைத்திருக்காது என்பதுதான் பெரிய துரதிருஷ்டம்

ஒரு மாபெரும் குற்றத்தைத் தடுத்து விட்ட மகிழ்ச்சியில் போலீசார் நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்த நேரத்தில் இன்னொரு கோயிலின் வாசலில் ஒரு ஆட்டுக் கிடாவின் உயிர் பிரிந்தது. கிடா வெட்டும் ‘குற்றத்தை’ இழைத்து அதற்குரிய நடவடிக்கையை எதிர்கொள்வதன் மூலம் நாட்டார் கோயில்களை பார்ப்பனமயமாகும் இந்தச் சட்டத்தை அம்பலப்படுத்துவது என்று நாம் முடிவு செய்திருந்ததால் இன்னொரு குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மலைக்கோட்டைக் கோயிலிலிருந்து சுமார் ½ கி.மீ தொலைவில், பெரிய கடைவீதியில் இருக்கும் சுடலை மாடன் – சப்பாணி கோயில் வாசலில் கிடாவை வெட்டி எடுத்துக் கொண்டு கிளம்பிய ஊர்வலம் மலைக்கோட்டைக் கோயிலை அடைந்தது. ஒரு கையில் வீச்சரிவாள், இன்னொரு கையில் ஆட்டுத் தலையுடன், முழக்கங்களால் போர்க்குணமூட்டப்பட்ட கொடிகளுடன் கம்பீரமாகச் சென்ற ஊர்வலத்தை கடைவீதியே கூடி நின்று ரசித்தது. மலைக்கோட்டை வாயிலில் ஊர்வலத்தை மறித்த போலீசார், பிரேதத்தையும் அரிவாளையும், ‘குற்றவாளிகளிடமிருந்து’ கைப்பற்றினர்.

குற்றமிழைக்கப்பட்டு விட்டது. போலீசாருக்கு இது கிரிமினல் குற்றம். கோயில் நிர்வாகிகளைப் பொறுத்த வரை தெய்வக் குத்தம்.

‘நேற்று கும்பாபிஷேகம் நடந்த கோயிலில் இன்று கிடா வெட்டித் தீட்டாக்கி விட்டார்களே’ என்று அவர்கள் பதறினார்கள். உண்மைதான். சப்பாணி – சுடலை மாடன் கோயிலை “சுடலை மாடஸ்வாமி சப்பாணி ஸ்வாமி” திருக்கோயிலாக்கி, உள்ளே ஒரு விநாயகரையும் ‘பிரதிஷ்டை’ செய்து, யாக குண்டங்கள் அமைத்து, நாள் முழுதும் வேள்வி நடத்தி, ஒரு பார்ப்பன அர்ச்சகரையும் கோயிலுக்கு நியமித்திருந்தார்கள். கோனார் சாதியினருக்குச் சொந்தமான அந்தக் கோயில் முழுமையாக பார்ப்பனமயமாக்கப்பட்டிருந்தது. எனவே, 8-ம் தேதி மாலை கோயில் வாசலில் உறைந்திருந்த ரத்தத்தை கழுவிவிட்டு, தீட்டுக் கழிப்பு சடங்கும் நடத்தி நிம்மதியடைந்தனர்.

இவ்வளவு வேலை செய்த இந்தப் புத்திசாலிகளுக்கு கோயில் வாசலில் தாங்கள் அமைத்திருந்த அலங்கார வளைவில் கொட்டை எழுத்தில் எழுதியிருந்த இரண்டு சொற்களுக்கு பொருள் புரியவில்லை போலும். “மகா சம்ப்ரோட்சணம்” என்பதே அந்த வாசகம். அதாவது, “மாபெரும் தீட்டுக்கழிப்பு”. வேறு யாருக்கு? சுடலை மாடனுக்கும் சப்பாணிக்கும்தான்.

போலீசுக்கும் தீட்டுப்பட்டு விட்டது. கோயில் வாசலிலேயே புறக்காவல் நிலையம் இருந்தும், ஊர்வலப் பாதையில் நகரக் காவல்நிலையம் இருந்தும், மலைக்கோட்டை வாயிலில் இன்னொரு புறக்காவல் நிலையம் இருந்தும், அனைத்தையும் மீறிக் ‘குற்றம்’ நடந்து விட்டதால் அரை டஜன் குற்றப் பிரிவுகளில் வழக்கு போட்டனர். ஆனால், எந்தச் சட்டத்தை மீறி இந்தக் குற்றம் இழைக்கப்பட்டதோ, அந்தக் குற்றப் பிரிவு மட்டும் போடப்படவில்லை. ஏனென்றால், அந்தச் சட்டநகலே போலீசிடம் இல்லை. மாறாக, கிடாவெட்டைத் தடுக்க வந்த கோயில் நிர்வாகி ஒருவரைக் கொலை செய்ய வழக்குப் பதிவு செய்தனர்.

பச்சையான பொய்வழக்கு என்று தெரிந்தும் பிணை மறுத்தது நீதிமன்றம். 15 நாட்களுக்குப் பின் காவல் நீட்டிப்பை ஆட்சேபித்தோம். “கொலை செய்யப்பட்ட ஆட்டின் சவப் பரிசோதனை அறிக்கை தயாராகாததால் குற்றவாளிகளை விடுவிக்கக் கூடாது” என்று வாதாடியது, அரசுத் தரப்பு. கேலிக்குரிய இந்த வாதத்தை ஏற்று தோழர்களை மீண்டும் சிறைக்கு அனுப்பியது நீதிமன்றம்.

“என்னைக் கொலை செய்ய முயன்றதாக நான் புகாரே கொடுக்கவில்லை” என்று கோயில் நிர்வாகியே நீதிமன்றக் கூண்டில்  ஏறி வாக்குமூலம் கொடுத்தபின், வேறு வழியின்றி பிணை வழங்கப்பட்டது. அதுவும், “அன்றாடம் காலையும், மாலையும் நீதி மன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்” என்ற நிபந்தனையுடன்!

போராட்டம் என்றால் போலீசு அடக்குமுறை உண்டு என்பது நாமறிந்ததுதான். எனினும் இப்போராட்டம் குறித்து இவ்வாறு விவரித்து எழுதக் காரணம் இருக்கிறது. இந்தத் தடைச்சட்டத்தை எதிர்க்காத மக்களில்லை. எதிர்க்காத பூசாரிகளில்லை. எனினும் களத்தில் நின்று எதிர்ப்பைக் காட்டத் தயங்குகிறார்கள்.

பாசிச ஜெயாவின் இரண்டாண்டு ஆட்சிக் காலத்தில் தமது சொந்த உரிமைகளைப் போராடிக் காப்பாற்றிக் கொள்ளவியலாத மக்களால், தங்கள் தெய்வத்தின் உரிமையையும் காப்பாற்ற முடியவில்லை. அரசு அன்றே கொல்லும் என்பதை அனுபவத்தில் உணர்ந்திருக்கும் மக்கள், தெய்வம் நின்று கொல்லும் என்று நம்புகிறார்கள். ஆனால், “என்று கொல்லும்” என்று அவர்களுக்கே தெரியவில்லை.

மூடநம்பிக்கையை ஒழிப்பதாகச் சொல்லிப் பார்ப்பன கும்பல் திணித்துள்ள இந்தச் சட்டம், அவர்கள் முற்றிலும் எதிர்பாராதவொரு கோணத்தில் மக்களிடம் பகுத்தறிவுச் சிந்தனைக்கு விதை போடவிருக்கிறது. தங்கள் தெய்வத்தின் ‘உரிமை’யைக் கூட தாங்கள் போராடித்தான் பெற்றுத் தர வேண்டும் என்ற அனுபவம் அர்களைத் தெய்வ நம்பிக்கையிலிருந்து விடுவிக்கும் ஒரு படிக்கல்லாக அமையும்.

போராட்டம் குறித்த செய்தி தமிழகம் முழுவதுமுள்ள பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட போதும் போராட்டத்தின் நோக்கத்தை மட்டும் அவை கவனமா இருட்டடிப்புச் செய்தன.

“நாட்டார் தெய்வங்களைப் பார்ப்பனமயமாக்குவது, கோயில்களை ஆர்.எஸ்.எஸ் முகாமாக்குவது” என்ற இந்தச் சட்டத்தின் நோக்கத்தை வெளியிடாமல் பரபரப்புச் செய்தியாக மட்டுமே பல பத்திரிகைகள் வெளியிட்டன. தொலைக்காட்சிகளோ தோழர்கள் எழுப்பிய முழக்கங்களின் ஒலியை மிகக் கவனமாகத் தணிக்கை செய்தன. எங்கே இருக்கிறது பார்ப்பன ஆதிக்கம் என்று கேட்போருக்கு இதை விட வேறு விளக்கம் தேவையில்லை.

போராட்டம் முடிந்த மறுநாளே ‘விசுவ இந்து பரிசத்’ தலைவர் வேதாந்தம் ஒரு அறிக்கை விட்டார். சட்டத்தை வரவேற்பதாகவும், அதே நேரத்தில் சில ‘இந்து விரோத சக்திகள்’ இதைப் பயன்படுத்திக் கொள்கின்ற காரணத்தால் கிடா வெட்டும் பக்தர்களைக் கைது செய்ய வேண்டாமென்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இறுதியாக, அந்த அறிக்கை நீங்கள் முற்றிலும் எதிர்பார்க்க முடியாத இன்னொரு கேள்வியையும் எழுப்பியிருந்தது. “கிடா வெட்டும் இந்துக்களை கைது செய்யும் அரசு பக்ரீத்துக்கு ஆடு அறுக்கும் முசுலீம்களை கைது செய்யுமா?” என்பதே அந்தக் கேள்வி. சட்டத்தின் நோக்கம் இப்போது புரிகிறதா?

திருச்சியில் நாம் கிடா வெட்டிய கோயில் அமைந்துள்ள இடம் சரஸ்மீரான் தெரு, அங்கே 100 முசுலீம் குடும்பங்களும், 4 மாட்டிறைச்சிக் கடைகளும் உள்ளன. சுடலை மாடன் ஏன் “ஸ்ரீ சுடலை மாடஸ்வாமி”யானார் என்று இன்னுமா புரியவில்லை?

– சூரியன்
______________
கிடா வெட்டைத் தடை செய்ய சட்டம்!

பார்ப்பனரல்லாத பூசாரியைத் துரத்திப்
பார்ப்பானை நுழைக்கும் சதித்திட்டம்!

மதுரை வீரன், மாரியாத்தா,
ஒண்டிக்கருப்பன் போன்ற
நாட்டார் தெய்வங்களைப்
பார்ப்பனமயமாக்கி
சங்கராச்சாரியிடம் ஒப்படைக்கும்
சதித்திட்டத்தின் முதல் கட்டம்தான்
கிடா வெட்டத் தடைச் சட்டம்

கிடா வெட்டி, கோழி அறுத்துச்
சாமி கும்பிடுவது அசுத்தம்;
பார்ப்பானை வைத்துச்
சாமி கும்பிடுவதுதான் சுத்தம் என்றால்
கிடா வெட்டிச் சாமி கும்பிடும் 90 சதவீத ‘இந்துக்கள்’
அசுத்தமானவர்களா?

கோயிலில் கிடா வெட்டியவர்களைக்
கிரிமினல் குற்றவாளிகள் என்று
கைது செய்யும் அரசே,
வெட்டியவன் கிரிமினல் என்றால்
கறி தின்பவர்கள் எல்லோரும்
கிரிமினல்களா?
கறி கேட்கும் கடவுளும் கிரிமினலா?

பார்ப்பன முனிவர்களும் அவதாரங்களும்
மாட்டுக்கறி தின்றதற்கு ஆதாரம்
வேத புராணங்களில் இருக்கிறது.
மாட்டுக் கறியைத்
தடை செய்யக் கோரும்
இந்து முன்னணியே,
வேதங்களையும் தடை செய்யலாமா?

பிணத்தின் சாம்பலை உடலில் பூசி
மண்டையோட்டைக் கையிலேந்தி
சுடுகாட்டில் ஆடும்
பரமசிவன் தெய்வம்!
மண்டையோட்டு மாலையணிந்து
மனித ரத்தம் குடிக்கும்
பத்ரகாளியும் தெய்வம்!
கிடா வெட்டுபவன்
கிரிமினல் குற்றவாளியா?

பட்டுச்சேலை, வேட்டி
தானியங்களை
வேள்வித் தீயில் போட்டு
டன் டன்னாய் நெய்யை ஊற்றி
எரிப்பது காட்டுமிராண்டித்தனமா?
கிடா வெட்டிப் பொங்கல் வைத்துச்
சாப்பிடுவது காட்டுமிராண்டித்தனமா?

தாழ்த்தப்பட்டவன் நுழைந்தால்
கோவிலுக்குத் தீட்டு!
சூத்திரன் நுழைந்தால் கருவறை தீட்டு!
தமிழ் மொழியா, சாமிக்கே தீட்டு!
இந்தப் பார்ப்பன ஆதிக்க
மனுதர்மத்தின் மறுபதிப்பு தான்
கிடா வெட்டத் தடைச் சட்டம்

கிடா வெட்டுவது குற்றம் என்றால்
ஏழைக்குழந்தைகள்
பாலின்றி தவிக்கையில்
சாமிக்குப் பாலாபிஷேகம் செய்வது
காட்டுமிராண்டித்தனமில்லையா?

மிருதங்கத்தில் கட்டி இருப்பது
பசுமாட்டுத் தோல்!
மிருதங்கம் வாசிக்கும்
பார்ப்பன வித்வான்களே,
மாடு வெட்டத் தடை என்றால்
மிருதங்கத்திற்கு
யார் தோலை உரித்துக் கட்டுவது?

மகாமகம், கும்பமேளாவில்
நூற்றுக்கணக்கான மக்கள்
மிதிபட்டுச் சாவது
நாகரிகமான வழிபாட்டு முறை!
கிடா வெட்டுவது
காட்டுமிராண்டித்தனமா?

ஆயிரக்கணக்கில்
அரசு ஊழியல் வேலை நீக்கம்,
பத்தாயிரம் சாலைப் பணியாளர்கள் நீக்கம்!
விவசாயிகள், நெசவாளர்கள்
பட்டினிச் சாவு!
உலகவங்கிக்கு நரபலியிடும்
ஜெயலலிதாவிற்கு
ஆட்டுக்கிடா மீது ஜீவகாருண்யமாம்

மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

(திருச்சி கிடா வெட்டும் போராட்டத்தின்போது ஆயிரக்கணக்கில் விநியோகிக்கப்பட்ட துண்டுப் பிரசுரம்)
_______________________________
புதிய கலாச்சாரம், அக்டோபர் 2003
______________________________

 1. கிடாவை வெட்டி தோளில் போட்டுக்கொண்டு ரத்தம் சொட்டச் சொட்ட பார்ப்பனியத்தை அம்பலப்படுத்தி முழக்கமிட்டபடி தோழர் தூக்கி வரும் அந்த காட்சியை காண கோடி கண்கள் வேண்டும்! அந்த அற்புதமான காட்சியை தன்னுடைய நாளிதழில் கடைசி அரைப்பக்கத்தில் பெரிதாக போட்டு வயிறெரிந்த, காட்டிக்கொடுத்த ‘அவாள்’ தினமணியின் அந்த புகைப்படம் கிடைத்தால் போடுங்களேன். பொருத்தமாக இருக்கும்!

 2. கோயில்களை பார்ப்பனமாக்குவது எவளவு தவறோ அதே மாதிரி தவறான செயல்தான் கோயிலில் ஆடு வெட்டுவதும். ஒரு தவறு இன்னொரு தவற்றினை சரி செய்யாது.

  • உயிர்களை சமமாக பாவிக்கிற மனநிலை வேண்டும். வினவு எல்லா உயிர்களும் சுகமாக வாழவே விரும்புகின்றன என்பதை மறப்பது ஏனோ ……….. ? பார்பனீயத்தின் வெறுப்பால் வாய் பேச முடியாத அப்பாவி உயிர்களை ஈவு இரக்கம் இன்றி கொன்று இதுதான் தமிழ் பண்பாடு என்று முழக்கம் இடுவது முறையா? கொல்லான் புலால் மறுத்தானை கை கூப்பி எல்லா உயிரும் தொழும் என்ற திருக்குறள் நெறி தமிழ் பண்பாடு இல்லையா? நம்மை விட வலிமையானவர்களிடம் நாம் என்றைக்கும் வலிந்து சண்டை செய்வதில்லை ….எளிமையானவர்களிடம் வீச்சரிவாள் கொண்டு ரத்தம் சொட்ட சொட்ட தலையையும் உடலையும் தனி தனியாக்கி உர்வலம் போவதும் முழக்கமிடுவதும் மனித பண்பாடு தானா…..? வினவு அறிவு சார்ந்த சமூகம் உருவாக வழி காட்ட வேண்டும் ….

 3. கிடாவெட்டும் போராட்டத்தைக் காட்டிலும் ________________ஆகையால் இதனை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.______________________ வினவு முடிவெடுக்க வேண்டும்!!!!

 4. இத்தகைய கட்டுரைகளை மேலும் மறுபதிப்பு செய்யும்படி கேட்டக்கொள்கிறேன்

 5. what is the use here? no change is going to happen.
  Yesterday 1 goat was there. today it is not there.
  will the humans accept if some one do it on other humans…..? i hope this is kaatu miraandi thanam when it happens in name of any religion or caste.

 6. புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின், மாநில துணைத் தலைவர் விளாங்குறிச்சியை சேர்ந்த இராமசாமி, மாணவர் இளைஞர் முன்னணி தலைவர் திலீபன் ஆகியோரை சாய்பாபாகாலனி போலீசார் நேற்று காலை கைது செய்தனர்.
  பின்னர், கோவை மாநகர ஏழாவது குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரையும், 14- நாள் காவலில் வைக்க, குற்றவியல் நடுவர் ஹேமந்த்குமார் உத்தரவிட்டார். இதையடுத்து இருவரும் கோவை நடுவன் சிறையில் அடைக்கப்பட்டனர். இனி எல்லோரும் அம்மா ஆட்சியில் களி திண்ண கிளம்ப தயாராக இருக்கவும்.. தேவையில்லாத ஒரு போராட்டம்…கிடா வெட்டுறேன், மயிரை வெட்டுறேன்னு…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க