ண்மையில்  இங்கிலாந்தில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் பழமைவாதக் கட்சி வெற்றி பெற்றது தெரிந்ததே. பழமைவாதக் கட்சிக்கும் (Conservative Party) , தொழிலாளர் கட்சிக்கும் (Labour party) இடையே கடும் போட்டியாக நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட இத் தேர்தலானது, இறுதியில் பெருமளவிற்குப்  பழமைவாதக் கட்சிக்கு சார்பானதாகவே முடிவுற்றிருந்தது.

இக் கட்சிகளின் பெயர்களே கட்சிகளின் கொள்கைகளை ஒரளவிற்குத் தெளிவாக்கிவிடும். கட்சிக் கொள்கைகளை விட, இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் விடயமானது (BREXIT) இத் தேர்தலில் முதன்மையான இடத்தினைப் பெற்றிருந்தது. இக் கட்டுரையின் நோக்கமானது கட்சிகளின் கொள்கைகளையோ அல்லது வெற்றி-தோல்விகளிற்கான காரணங்களையோ ஆராய்வதல்ல. மாறாக, இத் தேர்தலில் முதன்முறையாக இந்துத்துவா பரப்புரை இங்குள்ள இந்திய கால்வழி மக்களிடம் செலுத்திய செல்வாக்குப் பற்றி ஆராய்வதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.

***

ங்கிலாந்தில் ஏறத்தாழ 3 மில்லியன் தென்னாசியர்கள் வாழ்வதாகவும், அவர்களில் ஒன்றரை மில்லியன் இந்தியர்கள் இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த ஒன்றரை மில்லியன் (15 லட்சம்) இந்தியர்களில் பெருமளவானோர் வட இந்திய இந்துக்களே பெரும்பான்மையானோர். பொதுவாகத் தொண்ணூறுகள் வரை, மிகப் பெருமளவான இந்தியர்கள் தொழிற் கட்சி சார்பானவர்களாகவே இருந்து வந்தார்கள். நிறவெறித் தாக்குதல்களின்போது இந்தியர்களிற்குச்  சார்பாகத் தொழிற்கட்சி செயற்பட்டமையும், இந்தியர்களில் பலர் தொழிலாளர்களாகவிருந்தமையும் இதற்குக் காரணங்களாகவிருந்தன.

தொண்ணூறுகளின் பின்னர் தொழிற்கட்சியும் பழமைவாதக் கட்சி போன்றே முதலாளிகளின் நலன் பேணும் கட்சியாக மாறத் தொடங்கியமையாலும், இந்தியர்களிலேயே பலர் பெரும் பணக்காரர்களாக மாறியிருந்தமையும், நிறவாதம் பெருமளவிற்கு குறைந்து போயிருந்தமையாலும்; இந்த நிலையில் சிறியளவு மாற்றம் ஏற்பட்டிருந்தது. அதாவது இந்திய மக்களும் பொது நீரோட்டத்தில் கலந்து வெள்ளையினத்தவர்கள் போன்று தொகுதி வேட்பாளர், அன்றைய இங்கிலாந்து அரசியல் நிலைக்கேற்ப வெவ்வேறு கட்சிகளிற்கும் சார்பாகச் செயற்படத் தொடங்கியிருந்தார்கள். என்றபோதிலும், இதற்குப் பின்னரும் ஒப்பீட்டுரீதியில் பெருமளவான இந்தியர்கள் தொழிற் கட்சியின் சார்பாளர்களாகவே இருந்துவந்தார்கள்.

இவ்வாறான வேளைகளில் எல்லாம் இந்தியர்கள் எப்போதுமே மதம் சார்ந்து சிந்தித்ததில்லை. குறிப்பாக இங்குள்ள இந்திய வழி முஸ்லீம்களுடனும், பாகிஸ்தானியர்களுடனும் இணைந்தே செயற்பட்டு வந்தார்கள். இந்த ஒற்றுமையில் மிகப் பெரிய பிளவாக இந்தத் தேர்தலில் பெருமளவு இந்தியர்களின் செயற்பாடு அமைந்திருந்தது. குறிப்பாக இந்த மோதல் 42 விழுக்காடளவிற்கு தென்னாசியர்கள் வாழும் பிரட்போர்ட் (Bradford) தொகுதியில் தெளிவாகவே வெளித் தெரிந்தது.

2016 அமெரிக்க அதிபர் தேர்தலின் போது இந்து சேனா டொனால்ட் ட்ரம்ப்புக்கு ஆதரவளிப்பதை அம்பலப்படுத்தும் கேலிச்சித்திரம்.

2014 இல் இந்தியாவில் பாரதீய சனதா கட்சியின் இந்துத்துவா ஆட்சி ஏற்பட்டதிலிருந்து புலம் பெயர் நாடுகளிலும் இந்தியர்களிடம் ‘இந்துத்துவா வெறி’ பரவத் தொடங்கியிருந்தது. அதன் பின்னர், இந்துத்துவா அமைப்புகள் புலம்பெயர் நாடுகளிலும் இந்துக்களாக மக்களை அணிதிரட்டி, அந்தந்த நாடுகளிலுள்ள தீவிர வலதுசாரிகளிற்கு வாக்களிக்க வைத்து; அதற்குக் கைமாறாக அந்த அரசுகளிடமிருந்து தமது பார்ப்பனிய-பணியா கும்பலின் வணிக நலன்களைப் பாதுகாத்துக் கொள்ளத் தொடங்கியிருந்தன.

இந்த வகையிலேயே  சென்ற அமெரிக்கத் தேர்தலில் டிரம்பிற்காக இந்து அமைப்புக்கள் களமாடின. டிரம்பின் வெற்றிக்காக யாகங்கள் கூட நடாத்தப்பட்டன.  டிரம்பே வெற்றி பெற்று, இந்தியர்களின் வேலை வாய்ப்பினை அமெரிக்காவில் விசா தொடர்பான கடுமையான நடைமுறைகள் மூலம் பறித்ததும், இந்தியாவிற்கான அவுட்சோர்சிங்  முறையிலான இந்தியாவிலேயே கிடைத்த வேலை வாய்ப்புகளைப் பறித்ததும், டிரம்பின் எழுச்சியால் உந்தப்பட்ட தீவிர வலதுசாரிகளால் இந்தியர்களே கொல்லப்பட்டதும் பிந்திய விளைவுகள். இவற்றைப் பற்றி இந்துத்துவா அமைப்புக்கள் அலட்டிக் கொள்ளவேயில்லை, ஏனெனில் இவற்றினால் பெரிதும் பாதிக்கப்பட்டது நடுத்தர இந்துக்களே. அவை தமது பார்ப்பனிய – பணியா வணிக நலன்களைப் பேணுவதிலையே குறியாகவிருந்தன.

மேற்கூறிய ஒரு இந்துத்துவா அணிதிரட்டலினை இங்கிலாந்து வாழ் இந்திய கால்வழி இந்துக்களிடமும் ‘இந்து கவுன்சில் யுகே’ (HCUK) , RSS, விஸ்வ ஹிந்து பரிசத் போன்ற அமைப்புக்கள் மேற்கொண்டிருந்தன. இதற்காக, இந்த அமைப்புகள் சென்ற சில ஆண்டுகளாகவே கடுமையாகச் செயற்பட்டுவந்தன. தொழிற் கட்சியின் தலைவராக ஜேர்மி கோபன் தெரிவு செய்யப்பட்டதிலிருந்து, அக் கட்சியானது தனது பழைய தொழிலாளர் நலன் பேணும் இடதுசாரிப் பாதைக்கு மீண்டும் திரும்பியிருந்தது. சமத்துவம் என்ற சொல்லைக் கேட்டாலே அலறும் இந்து அமைப்புக்களிற்கு, சமத்துவத்தினையே இலக்காகக் கொண்ட ஒரு தலைமையினை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்.

படிக்க:
♦ பிரக்சிட் – இடியாப்பச் சிக்கலில் இங்கிலாந்து !
♦ அமெரிக்க – சீன வர்த்தகப் போர் : வீழக் காத்திருக்கும் உலகப் பொருளாதாரம் !

அப்போதே  இந்துக்களை பழமைவாதக் கட்சிக்குச் சார்பாக அணிதிரட்டும் வேலையில் இறங்கியிருந்தன. 2017 பொதுத் தேர்தலிலேயே இந்து அமைப்புக்கள் தமது வேலையில் இறங்கி ஒரளவு தாக்கத்தினையும் ஏற்படுத்தியிருந்தன, என்ற போதிலும் பெரு வெற்றி பெற்றார்கள் என்று கூற முடியாது. மே 2016 இல் தொழிற்கட்சியின் சார்பில் லண்டன் மேயராக பாகிஸ்தான் கால்வழியினைச் சேர்ந்த ‘சாதிக் கான்’ (Sadiq Khan ) வெற்றி பெற்றதனை முன்னிட்டு இந்துத்துவா அமைப்புக்கள் இந்துக்களிடம் ‘தொழிற்கட்சி ஒரு முஸ்லீம் சார்புக் கட்சி’ என்ற பொய்ப் பரப்புரையினை கட்டிவிட்டது.  இதற்கு முன்னர் பல இந்துக்கள், முஸ்லீம்கள் தொழிற்கட்சியில் பல பதவிகளை வகித்தபோதும், அப்போதெல்லாம் இத்தகைய முத்திரை குத்தல்கள் இடம்பெற்றிருக்கவில்லை. இவர்களின் மத வெறுப்புப் பரப்புரை 2017 தேர்தலில் பெருமளவு பலன்களைக் கொடுக்காமையால், அவ்கள் சோர்வடையவில்லை. மாறாக புலனம், முகநூல் போன்ற பல குழுக்களை ஏற்படுத்தித் தொடர் முயற்சியில் ஈடுபட்டுவந்தார்கள்.

குறிப்பாக  இந்து கவுன்சில் (HCUK) இந்துக் கோயில்களை மையப்படுத்தி இந்த மத வெறுப்பினைச் சிறப்பாகவே இந்துக்களிடம் கட்டமைத்தார்கள். இவர்கள் கோபன் மீது வெறுப்புக் கொள்வதற்கு இன்னொரு முதன்மையான காரணமும் உண்டு.

சாதி பாகுபாடுகளை கண்டித்து தொழிலாளர் கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டம். (கோப்புப் படம்)

2010 இல் இங்கிலாந்தில் கொண்டுவரப்பட்ட சமத்துவச் சட்டத்திறகுள் சாதி ஒடுக்குமுறையினையும் கொண்டு வந்து கோயில்களில் பிறப்பால் பார்ப்பனர்கள் மட்டுமே அர்ச்சகர்களாவதனைத் தடுக்கும் ஒரு முயற்சி நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்தது. அந்தச் சட்டத்திற்காக நாடாளுமன்றத்தின் உள்ளேயும், வெளியேயும் கடுமையாகக் கோபன் குரல் கொடுத்திருந்தார்.

அம் முயற்சியினைக் கடுமையாகப் போராடி முறியடித்தது இந்த இந்துப் பேரவையே (HCUK). அந்தக்  காரணத்தை வெளிப்படையாகத் தெரிவித்தால், தமது பார்ப்பனப் பற்று வெளிப்பட்டுப்போகும் என மறைத்துவிட்டு, ‘லண்டன் மேயர் ஒரு முஸ்லீம்’ என்ற வெறுப்புணர்வினைக் கட்டியமைத்தார்கள். இவ்வாறான பின்புலத்தில், காஷ்மீர் மாநிலம் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, அந்த மாநில மக்கள் சொல்லொண்ணாத் துன்பங்களை எதிர்கொண்ட வேளையில், கோபன் அந்த மாநில மக்களிற்காகக் குரல் கொடுத்திருந்தார்.

பொதுவாகவே கோபன் உலகில் எங்கு மக்கள் ஒடுக்கப்பட்டாலும், அங்கு ஒடுக்கப்படுவோர்களிற்காக கட்சி ஆதாய இழப்புகளிற்கு அப்பால் குரல் கொடுத்துவருபவர். அந்த வகையில் ஈழத் தமிழர்களிற்காக 1983 முதலே குரல் கொடுத்து வருபவர். அவ்வாறே இங்கும் காஷ்மீரிய மக்களிற்காகக் குரல் கொடுத்திருந்தார். இதனையே H.U.C.K (இந்து கவுன்சில்) ‘இந்து விரோதி கோபன்’ என முத்திரை குத்தி, வெளிப்படையாகவே ஒரு அறிக்கை வெளியிட்டது. மறுபுறத்தில் பழமைவாதக் கட்சியின் தலைவரான போரிஸ் யோன்சனிற்கு தலைப்பாகை கட்டி ‘இந்துக்களின் காவலன்’ எனும் அடையாளத்தையும் கொடுத்தது.

இந்த இந்துத்துவா அமைப்புக்களின் வேலை பெருமளவான வட இந்திய இந்துக்களைப் பழமைவாதக் கட்சியின் பக்கம் திருப்பியிருந்தது. அதாவது மக்களின் வாழ்வாதாரச் சிக்கல்களை எல்லாம் மறைத்து, வெறும் மத அமைப்பு ஒன்றின் சொல்லிற்கு மிகப் பெரியளவிலான இந்து மக்களை ஒப்பீட்டுரீதியில் வளர்ச்சியடைந்த ஒரு நாட்டிலேயே செயற்படவைக்க முடிந்தமை கடுமையான ஆய்விற்குரிய ஒன்றாகும்.

படிக்க:
♦ கம்பம் : குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறு ! 2000 பேர் ஆர்ப்பாட்டம்
♦ குடியுரிமை வழங்கு, இல்லையெனில் எங்களைக் கொன்று விடு – இலங்கைத் தமிழ் அகதிகள் !

தமிழர்களின் நிலை :

இங்குள்ள ஒரு ஆறுதலான செய்தி என்னவென்றால் தமிழர்களில் பெருமளவானோர் இந்த ‘இந்துத்துவா’ மாயைக்குள் சிக்கவில்லை. தமிழ்நாட்டுத் தமிழர்களும் சரி, ஈழத் தமிழர்களும் சரி,  இந்த ‘இந்து’ அணி திரட்டலில் இணையவில்லை. பெருமளவான தமிழர்கள் இங்குள்ள வாழ்வியல் சிக்கல்களிற்கமையவே வாக்களித்திருந்தார்கள்.  இலவச பொது மருத்துவ சேவை (NHS), தரமான பொதுத்துறைக் கல்வி போன்ற காரணங்களை அடிப்படையாகக் கொண்டு தொழிற்கட்சிக்கோ அல்லது  BREXIT இனைக் கருத்திற்கொண்டு பழமைவாதக் கட்சிக்கோ வாக்களித்திருந்தார்கள்.  தமிழர்களில் பெருமளவானோர்கள் மதரீதியான அணி திரட்டலிற்குள் சிக்கிக்கொள்ளாமைக்கு இங்கு செயற்படும் தமிழ் சொலிடாரிற்றி, பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் (லண்டன்), மக்கள் கலை பண்பாட்டுக் களம் போன்ற சிறு அமைப்புகளின் விழிப்புணர்வுச் செயற்பாடுகளும் ஒரு காரணம்.

பழமைவாதக் கட்சியின் தலைவரான போரிஸ் ஜான்சனிற்கு தலைப்பாகை கட்டி ‘இந்துக்களின் காவலன்’ எனும் அடையாளத்தையும் கொடுத்தது இந்துத்துவ கும்பல்.

ஆனால், இந்த நிலை எதிர்காலத்தில் மாறாமலிருப்பதற்குப்  பெரியளவிலான செயற்பாடுகள் தேவைப்படுகின்றன. தமிழர்கள் இங்குள்ள கோயில்களில் உண்டியல்களில் போடும் பணத்தின் ஒரு பகுதியும் இந்த இந்துத்துவா அமைப்புக்களிற்குச் சென்று சேருகின்றது. இலண்டனிலுள்ள சிறீ முருகன் கோயில் மட்டுமே 769 ஆயிரம் பவுண்களை ஆண்டு (2016) வருவாயாகக் கணக்கு காட்டியுள்ளது. இவ்வாறு இலண்டனிற்குள்ளேயும், வெளியேயும் பல கோயில்கள் உண்டு.

ஈழத் தமிழர்களை மையமாகக் கொண்டு இயங்கும் கோயில்களில் சில ஈழத்தில் மக்கள் சார்ந்த வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதனையும் மறுப்பதற்கில்லை. எவ்வாறாயினும் கோயில்களிற்கான கொடுப்பனவுகளில் மிகுந்த கவனம் தேவைப்படுகின்றது. அதே போன்று தமிழர்களிடம் தொடர்ச்சியான விழிப்பூட்டல் மேற்கொள்ளப்பட வேண்டியமுள்ளது. இது தமிழ்நாடு – ஈழம் ஆகிய தாயகங்களிலிருந்து புலம்பெயர் நாடுகள் வரைச் செய்யப்படவேண்டியுள்ளது.

மீண்டும் இந்துத்துவா அணிதிரட்டலினைப் பார்த்தால், இதனால் மட்டுமே பழமைவாதக் கட்சி வெற்றிபெற்றது எனக் கூறவரவில்லை. மாறாக, ‘இந்து மாயை’ எவ்வளவிற்கு ஆழமாகப் புலத்திலும் பரவிப் பார்ப்பனிய நலன்களைப் பேணுகின்றது என்பதனை எடுத்துக்காட்டுவதே இந்த கட்டுரையின் நோக்கமாகும்.

உலகின் வலதுசாரிகள் எல்லோரும் கோபனின் வெற்றியானது புதிய ஒரு தொடக்கமாக அமைந்துவிடக் கூடாது என்பதில் தெளிவாகவிருந்தன. டிரம்ப் வெளிப்படையாக பொரிஸினை ஆதரித்திருந்தார். ருஸ்யாவின் மாபியா நேரடியாகவே பழமைவாதக் கட்சிக்கு ‘கட்சிப் பணம்’ வழங்கியிருந்தது. யூதர்கள் முதல் கிறிஸ்தவ மதகுருமாருமார்கள் வரைப் பல பிற மத அமைப்புகளும் கூடப் பழமைவாதக் கட்சிக்கு ஆதரவு கொடுத்திருந்தன.

இங்குள்ள சிங்களப் பேரினவாத அமைப்புகள், சில முஸ்லீம் சிறு அமைப்புகள் என இந்த பழமைவாத ஆதரவு நீண்டு செல்கின்றது.  இவ்வாறு பலமான எதிரணியினை எதிர்கொள்ள உலகெங்குமுள்ள இடதுசாரிகள், முற்போக்குவாதிகள் ஆகியோரும் இணைந்து செயற்படவேண்டிய தேவையுள்ளது.

வி.இ.  குகநாதன்