நடந்துமுடிந்த ஐரோப்பிய ஒன்றியத்திற்கான நாடாளுமன்றத் தேர்தலில், தீவிர வலதுசாரி மற்றும் பாசிசக் கட்சிகள் அதிக இடங்களில் வெற்றி பெற்றிருப்பது, உலகம் முழுக்க ஜனநாயகத்தை நேசிக்கும் சக்திகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இத்தேர்தலில் தீவிர வலதுசாரி மற்றும் பாசிசக் கட்சிகள் வெற்றி் பெறுவதற்கான அபாயம் உள்ளது என அரசியல் வல்லுநர்கள் எச்சரித்து வந்த நிலையில், பாசிசக் கட்சிகள் ஆரம்பத்திலிருந்தே தேர்தல் முடிவில் ஆதிக்கம் செலுத்தி வந்தன. இந்நிலையில், இறுதியாக அறிவிக்கப்பட்ட தேர்தல் முடிவில் கடந்தமுறை வெற்றிபெற்ற “ஐரோப்பிய மக்கள் கட்சி” (European Peaople’s Party) என்ற மைய-வலதுசாரி (Right-Centrist) கட்சி 188 இடங்களை பெற்று மீண்டும் வெற்றிபெற்றுள்ளது. இருப்பினும், இத்தேர்தலில் தீவிர வலதுசாரி மற்றும் பாசிசக் கட்சிகள், ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தனி முகாமாக உருவாகியிருப்பது உலகம் முழுவதும் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.
தேர்தலில் பாசிச சக்திகளின் ஆதிக்கம்
ஐரோப்பிய ஒன்றியம் (EU-European Union) என்பது ஐரோப்பா கண்டத்தில் உள்ள 27 உறுப்பு நாடுகளை கொண்ட அரசியல் மற்றும் பொருளாதார ஒன்றியமாகும். இதில் அங்கம் வகிக்கும் 27 நாடுகளுக்கும் தனித்தனி நாடாளுமன்றம் இருப்பது போல, மொத்தமாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கென தனி நாடாளுமன்றம் (EP- European Parliament) உள்ளது. ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடக்கும் இந்நாடாளுமன்றத்திற்கு, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைச் சேர்ந்த மக்கள் தங்கள் நாட்டு மக்கள்தொகைக்கேற்ப ஒதுக்கப்பட்டுள்ள பிரதிநிதிகளை நேரடியாகத் தேர்ந்தெடுத்து அனுப்புவர். மொத்தமாக, 720 பிரதிநிதிகளை கொண்ட இந்நாடாளுமன்றத்திற்கு, சட்டங்களை நிறைவேற்றுவது; ஐரோப்பிய ஒன்றியத்திற்கான பட்ஜெட்டை வகுப்பது; அவற்றை கண்காணிப்பது உள்ளிட்ட அதிகாரங்கள் உள்ளன.
இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் ஆதிக்கமும் செல்வாக்கும் செலுத்தும் நாடுகளான ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி ஆகியவற்றில் பாசிசக் கட்சிகள் குறிப்பிடத்தக்க வெற்றியை பதிவு செய்திருப்பது பெரும் அபாயமாகும்.
படிக்க: பாசிச சக்திகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த பிரான்ஸ் மக்கள்!
பிரான்ஸ் நாட்டில் “தேசிய பேரணி” (National Rally) என்ற பாசிசக் கட்சி மொத்தமுள்ள 81 இடங்களில் 30 இடங்களை கைப்பற்றி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோனின் மறுமலர்ச்சி கட்சியை (Renaissance Party) தோற்கடித்துள்ளது. மேலும், மறுமலர்ச்சி கட்சியை காட்டிலும் இரண்டு மடங்குக்கும் அதிக வாக்குகளைப் (31 சதவிகிதம்) பெற்றுள்ளது. இதனையடுத்து பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் பிரான்ஸ் நாட்டு நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு மறுதேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், கருத்துக்கணிப்புகளோ நாடாளுமன்றத் தேர்தலில் பாசிச கட்சியான தேசிய பேரணிதான் வெற்றிபெறும் என்று கூறிவருவதால் பாசிச சக்திகளுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் பிரம்மாண்டமான போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இவையெல்லாம், பிரான்ஸ் நாட்டில் குழப்பமான அரசியல் சூழலை உருவாக்கியுள்ளது.
இதேபோல், ஐரோப்பாவின் மிகப் பெரிய பொருளாதார நாடான ஜெர்மனியை பொறுத்தவரை, நவ-நாஜி கொள்கைகளையும் சீன-ரஷ்ய ஆதரவு போக்கையும் கொண்ட “ஜெர்மனிக்கான மாற்று” (AfD – Alternative for Germany) என்ற பாசிசக் கட்சி இத்தேர்தலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. அந்நாட்டின் ஆட்சித்துறைத் தலைவர் (Chancellor) ஓலாஃப் ஷோல்ட்ஸ்-இன் கட்சியான சமூக ஜனநாயகக் கட்சி (SPD-Social Democratic Party of Germany) எனும் போலி இடது கட்சி வெறும் 13.9 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றுள்ள நிலையில், “ஜெர்மனிக்கான மாற்று” கட்சி 16 சதவிகித வாக்குகளை பெற்று 15 இடங்களை கைப்பற்றியுள்ளது. இந்தாண்டு தொடக்கத்தில் வெளியான கருத்துகணிப்பு ஒன்று, இந்த பாசிச கட்சிக்கு 20 சதவிகித மக்கள் ஆதரவு உள்ளது என்று தெரிவித்ததையடுத்து இரண்டு இலட்சம் ஜெர்மானிய மக்கள் ஒன்றுதிரண்டு பாசிச கட்சியான “ஜெர்மனிக்கான மாற்று” கட்சிக்கு எதிராக பிரம்மாண்டமான போராட்டத்தை நடத்தினர். மேலும், இக்கட்சி உளவு பார்த்தல், லஞ்ச-ஊழல் குற்றச்சாட்டுகளிலும் சிக்கியுள்ளது. அதனையெல்லாம் மீறி “ஜெர்மனிக்கான மாற்று” கட்சி ஜெர்மனியில் இரண்டாம் இடத்தை பிடித்திருப்பது பலரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
இத்தாலியில் ஏற்கெனவே “இத்தாலியின் சகோதரர்கள்” (Brothers of Italy) என்ற பாசிசக் கட்சி ஆட்சி செய்துவரும் நிலையில், ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத் தேர்தலிலும் நான்கில் ஒரு பங்கு வாக்குகளுடன் வென்று இத்தாலியின் சகோதரர்கள் கட்சி அதன் பிடியை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இதுகுறித்து பேசிய இத்தாலியின் சகோதரர்கள் கட்சியின் தலைவரும் பாசிஸ்டுமான பிரதமர் ஜியார்ஜியா மெலோனி, “ஐரோப்பாவின் முகத்தை முன்னெப்போதும் இல்லாத வகையில் மாற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது” என்று வெளிப்படையாக பேசியிருப்பது பாசிஸ்டுகளின் நோக்கத்தை பறைசாற்றுகிறது.
இவையன்றி, ஆஸ்திரியா, ஹங்கேரி, ஸ்பெயின், நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் தீவிர வலதுசாரி மற்றும் பாசிசக் கட்சிகள் கணிசமான வெற்றியை பதிவு செய்துள்ளன.
இத்தகைய பாசிச மற்றும் தீவிர வலதுசாரி கட்சிகளை உள்ளடக்கிய “ஐரோப்பிய பழமைவாத மற்றும் சீர்திருத்தவாதிகள்” குழு (ECR – European Conservatives and Reformists) மற்றும் “அடையாளம் மற்றும் ஜனநாயகக்” குழு (ID – Identity and Democracy) ஆகிய தீவிர வலதுசாரி கூட்டணிகள் மொத்தமாக 141 இடங்களை கைப்பற்றி ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது பெரிய குழுக்களாக வளர்ந்துள்ளன. இதன்மூலம், ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நான்கில் ஒரு பகுதி இடங்களை பாசிச சக்திகள் கைப்பற்றியுள்ளன.
ஐரோப்பா மக்கள் எதிர்கொள்ளவிருக்கும் சவால்
பாசிசக் குழுக்கள் இத்தேர்தலில் வெற்றிபெறவில்லை எனினும் அவை அதிக இடங்களை கைப்பற்றியிருப்பது, அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டத்திட்டங்கள் மற்றும் பட்ஜெட் ஒதுக்கீடுகளில் பாசிச சக்திகளின் கைகளை ஓங்கச் செய்துள்ளது.
குறிப்பாக, தற்போது வெற்றிபெற்றுள்ள ஐரோப்பிய மக்கள் கட்சி குழுவுடன் கூட்டணியில் உள்ள “பசுமை” குழுவும் (Greens) “புதுப்பிக்கப்பட்ட ஐரோப்பா” குழுவும் (RE-Renew Europe) இத்தேர்தலில் பின்னடைவைச் சந்தித்துள்ளன. அதேசமயத்தில், தீவிர வலதுசாரி குழுக்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. இதன் காரணமாக, சில சட்டங்களை இயற்றுவதற்கு தீவிர வலதுசாரி குழுக்களின் ஆதரவை நாட வேண்டிய சூழல் ஐரோப்பிய மக்கள் கட்சி கூட்டணிக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால், குடியேற்றச் சட்டம், காலநிலைக் கொள்கை, பாதுகாப்பு உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கியத்துவம்வாய்ந்த விவகாரங்களையொட்டி கொண்டுவரப்படும் சட்டங்கள், தீவிர வலதுசாரி-பாசிச கட்சிகளின் பாசிச நோக்கத்திற்கேற்ப நிறைவேற்றப்படும் அபாயம் உருவாகியுள்ளது. மேலும், ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடையும் மக்களுக்கு எதிரான “குடியேற்ற எதிர்ப்பு சட்டம்” கொண்டுவரப்படுவதற்கான அபாயம் முன்னைக் காட்டிலும் அதிகரித்துள்ளதோடு, ஐரோப்பாவில் சிறுபான்மை மக்கள், பெண்கள், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளும் தீவிரமடையும்.
படிக்க: பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் ஐரோப்பிய நாடுகள்! மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!
ஏற்கெனவே, ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம், ஐரோப்பிய ஒன்றியத்தின் “இடம்பெயர்வு மற்றும் புகலிடக் கொள்கை”யை (Migration and Asylum Rules) மறுவடிவமைப்பு செய்வதற்கான ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில், தஞ்சம் கோருவோரை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஏற்க விரும்பவில்லையெனில் அவர்களுக்கு நிதியுதவி உள்ளிட்ட ‘மாற்று உதவிகளை’ வழங்கலாம்; ஒரு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடு அதிகளவிலான புகலிட விண்ணப்பங்களை பெற்றால், விண்ணப்பத்தாரர்களை மற்ற உறுப்பு நாடுகளுக்கு ‘விநியோகிக்க’ அழைப்பு விடுக்கலாம்; ‘தகுதியற்றவர்கள்’ என கண்டறிப்படும் விண்ணப்பதாரர்களை விரைவாக திருப்பி அனுப்புவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் எல்லை வசதிகளை நிறுவ வேண்டும் உள்ளிட்டு மனித உரிமைகளுக்கு எதிரான பல அம்சங்கள் அந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றிருந்தன.
இது ஐரோப்பாவிற்குள் தஞ்சம்புகுந்துள்ள மக்களை நாடுகடத்துவது; புகலிடம் கோரும் மக்களை இடமாற்றம் செய்வது உள்ளிட்ட பேராபத்துக்கு வழிவகுத்தது. ஆனால், இது புலம்பெயரும் மக்களை தடுப்பதற்கு போதுமானதாக இல்லை என தீவிர வலதுசாரி-பாசிசக் கட்சிகள் அப்போதே குற்றஞ்சாட்டின. தற்போது இதுபோன்ற புலம்பெயரும் மக்கள் மீது பாசிச ஒடுக்குமுறைகளை செலுத்தும் சட்டங்களின் தன்மை தீவிரமடையும்.
மேலும், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவராக உள்ள ஐரோப்பிய மக்கள் கட்சியைச் சேர்ந்த வான் டெர் லெயன் ஏற்கெனவே பாசிஸ்ட் ஜியார்ஜியா மெலோனியுடன் நெருக்கமான உறவில் உள்ளார். இவர் மெலோனியுடன் சேர்ந்து, துனிசியாவின் எல்லைகளில் புகலிடம் கோருவோரை ஐரோப்பாவிற்குள் நுழையவிடாமல் தடுப்பதற்காக நிதி திரட்டும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் மெலோனியுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாகவும் வான் டெர் லெயன் அறிவித்துள்ளார்.
ஆக, இத்தேர்தலில் பாசிசக் கட்சிகள் வெற்றிபெறவில்லை என்று நிம்மதியடையவோ, வெற்றிபெற்றுள்ள கட்சிகள் பாசிச சக்திகள் வளர்வதற்கு ‘அரணாக’ இருக்கும் என கருதுவதற்கோ எந்த முகாந்திரமும் இல்லை. சொல்லபோனால், இந்த மைய-வலது, போலி இடதுசாரி கட்சிகள்தான் தாங்கள் கொண்டுவந்த மக்கள் விரோத சட்டத்திட்டங்கள் மூலமாகவும் பிழைப்புவாத அரசியல் மூலமாகவும் பாசிஸ்டுகள் வளர்வதற்கான பாதையை செப்பனிட்டன. இந்தியாவில் பா.ஜ.க-வின் இந்துத்துவ அரசியலுக்கு பலியாகி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மிதவாத இந்துத்துவத்தைக் கையில் எடுப்பதைப்போல, இக்கட்சிகள் தீவிர வலதுசாரிகளின் இனவெறி அரசியலுக்கு பலியாகி, தீவிர வலதுசாரிகளின் நிகழ்ச்சிநிரலை முன்னெடுத்து அப்பாதையை மேலும் விரிவுப்படுத்திக் கொண்டிருக்கின்றன. எனவே, அடுத்த ஐந்தாண்டு என்பது ஐரோப்பாவில் பாசிச சக்திகள் பகாசுரமாக வளர்வதற்கான பேரபாயம் உள்ளது.
நெருக்கடிகளை அறுவடைச் செய்யும் பாசிஸ்டுகள்
உலகம் முழுவதும் ஏகாதிபத்திய நெருக்கடி தலைவிரித்தாடுவதை போலவே ஐரோப்பாவிலும் நெருக்கடி தீவிரமாக உள்ளது. குறிப்பாக, கடந்த 2019-ஆம் ஆண்டு ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்று, இரண்டாண்டுகளுக்கும் மேலாக நடந்துவரும் உக்ரைன்-ரஷ்யா போர், பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் இன அழிப்புப் போர் உள்ளிட்டவை இந்நெருக்கடிகளை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
குறிப்பாக, உக்ரைன்-ரஷ்யா போரால் ஐரோப்பாவின் எரிசக்தி விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது; ஐரோப்பிய நாடுகளில் மேற்கொள்ளப்படும் கடுமையான ராணுவச் செலவுகள்; போர் மற்றும் நெருக்கடி ஆகியவை அடிப்படை வாழ்க்கை தேவையை கூட பூர்த்தி செய்துகொள்ள முடியாத நிலைக்கு ஐரோப்பிய மக்களை தள்ளியுள்ளது.
அதேபோல், உலக வர்த்தக கழகத்தின் (World Trade Organization) தலைமையில் அமல்படுத்தப்படும் புதிய தாராளவாத கொள்கைகளால் ஐரோப்பா விவசாயத்துறை தீவிர நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்தாண்டு தொடக்கத்தில் ஐரோப்பா முழுவதும் கார்ப்பரேட் முதலாளிகளின் லாபவெறிக்காக போடப்படும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களில் இருந்து வெளியேற வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து தொடர் போராட்டங்களை விவசாயிகள் முன்னெடுத்தனர்.
இத்தகைய புதிய தாராளவாத கொள்கைகளின் தோல்வியை சமாளிக்கும் முயற்சியாக ஆளும் வர்க்கங்கள், பாசிச சக்திகளை மாற்றாக முன்தள்ளுகின்றன. பாசிச சக்திகளும் இந்நெருக்கடிகளை அறுவடை செய்துகொண்டு பகாசுரமாக வளர்கின்றன.
குறிப்பாக, ஐரோப்பா மக்கள் மத்தியில் உருவாகியுள்ள கோவத்தையும் அதிருப்தியையும் அகதிகளாக்கப்பட்ட மக்களுக்கும் சிறுபான்மை மக்களுக்கும் எதிராக திருப்பி பாசிசக் கட்சிகள் இனவெறி, மதவெறி பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றன. ஏகாதிபத்தியங்களின் மேலாதிக்க போட்டாப்போட்டியால் உருவாகியிருக்கும் போர்களாலும், மறுகாலனியாக்க கொள்கைகளை மூர்க்கமாக அமல்படுத்துவதனாலும் மூன்றாம் உலக நாடுகளில் ஏற்பட்டிருக்கும் வறுமை, பஞ்சம், வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கம் உள்ளிட்ட காரணங்களால் மக்கள் அகதிகளாக ஐரோப்பாவிற்கு தஞ்சம் புகுகின்றனர். ஆனால், அவற்றை மூடிமறைத்துவிட்டு அகதிகளாக்கப்பட்ட மக்களை தடுக்கும், நாடுகடத்தும் “குடியேற்ற எதிர்ப்புச் சட்டம்” போன்ற மனிதவிரோத சட்டங்களை இந்நெருக்கடிகளுக்கான தீர்வாக பாசிச சக்திகள் முன்னிறுத்துகின்றன. அதேபோல், ஐரோப்பா முழுவதும் நடந்த விவசாயிகளின் போராட்டங்களையும் பாசிச சக்திகள் ஆதரித்துக் குரல் கொடுத்து அவர்களை தங்களுக்கான அடித்தளமாக மாற்றிக்கொள்ள முயற்சித்தன.
ஐரோப்பிய மக்கள் மத்தியில் பாசிசக் கட்சிகளுக்கான எதிர்ப்பு இருந்தாலும், அவ்வபோது தீவிர வலதுசாரிகளுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்தாலும், ஐரோப்பாவிலுள்ள போலி இடது கட்சிகள் மைய-வலதுசாரி கட்சிகளுடன் கைக்கோர்த்து நிற்பதால் அவை தீவிர வலதுசாரி-பாசிசக் கட்சிகளுக்கு இன்னும் சாதகமாக அமைகிறது.
அதேபோல், ஐரோப்பாவிலுள்ள பல தீவிர வலதுசாரி கட்சிகளும் பாசிச கட்சிகளும் ரஷ்ய-சீன ஆதரவாக உள்ளதும் உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை வழங்குவதற்கு எதிராக பிரச்சாரம் செய்வதும் குறிப்பிடத்தக்கது. மேலும், சில பாசிச சக்திகள் அமெரிக்க மேலாதிக்கத்தையும் எதிர்ப்பதாகவும் கூறுகின்றன. எனவே, ஏகாதிபத்தியத்தையும் காலனியாதிக்கத்தையும் எதிர்ப்பதாக நாடகமாடும் ரஷ்ய-சீன ஏகாதிபத்தியங்களும் இத்தகைய பாசிசக் கும்பல் வளருவதை ஆதரிக்கின்றன.
ஆனால், இருளை கிழித்துக்கொண்டு ஒளிக்கீற்று கிளம்புவது போல பிரான்ஸ் நாட்டு மக்கள் பாசிச சக்திகளுக்கு எதிராக வீதிக்கு வந்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றிய தேர்தலில் பிரான்சில் பாசிச கட்சியான தேசிய பேரணி கட்சி வெற்றி பெற்றதையடுத்து “பாசிச சக்திகள் நாட்டை ஆள அனுமதியோம்” என இலட்சக்கணக்கான மக்கள் ஒன்றுதிரண்டு போராடி வருகின்றனர். அதே சமயத்தில் அதிபர் மேக்ரோனின் மக்கள் விரோத தன்மையையும் அம்பலப்படுத்துகின்றனர். இத்தகைய பாசிச சக்திகளுக்கு எதிரான போராட்டங்களை ஐரோப்பா முழுவதும் வளர்த்தெடுப்பதே பாசிஸ்டுகளின் மக்கள் அடித்தளத்தை தகர்ப்பதற்கும் பாசிச சக்திகளை ஐரோப்பாவிலிருந்து பிடிங்கி எறிவதற்குமான தீர்வு.
பானு
(புதிய ஜனநாயகம் – ஜூலை 2024 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube