காய்ந்த சருகுகள் எரிவதற்குத் தேவை சிறு தீ பொறியே!

பசி, பட்டினி, உணவு மற்றும் எரிப்பொருள் விலையேற்றம், வேலை பறிப்பு, ஏகாதிபத்திய போர் இதற்கெல்லாம் எதிராக மாபெரும் வேலை நிறுத்தங்களும், ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் உலகின் குறுக்கும் நெடுக்குமாய் உள்ள பிரான்ஸ், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, ஜெர்மனி, கிரீஸ் என உலக நாடுகள் முழுவதும் படர்ந்து வருகிறது.

உலகின் பல நாடுகளில் மக்கள் போராட்டங்கள்:
காய்ந்த சருகுகள் எரிவதற்குத் தேவை சிறு தீ பொறியே!

ண்மையில் உலகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. ஏகாதிபத்தியப் போர், பொருளாதார நெருக்கடி, பாசிச கொடுங்கோன்மை சட்டங்கள், வறுமை  உள்ளிட்டவை தொடர்ச்சியாக மக்களை போராட்டக்களத்தை நோக்கி தள்ளிக்கொண்டே இருக்கின்றன. குறிப்பாக பின்தங்கிய நாடுகளில் மட்டுமின்றி பணக்கார நாடுகளாக கருதப்பட்ட மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் இத்தகைய போரட்டங்கள் தீவிரமடைந்து வருவது கவனிக்கத்தக்கது.

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரோன் கொண்டுவந்த ஓய்வூதிய சீர்திருத்தங்களுக்கு எதிராக இரண்டு மாதங்களுக்கு மேலாக அந்நாட்டு மக்கள் போராடி வருகின்றனர். தொழிலாளர்களின் ஓய்வு பெறும் வயதை 62-லிருந்து 64 ஆக உயர்த்தியது மற்றும் 43 ஆண்டுகள் வேலை செய்தால் தான் ஓய்வூதியம் வழங்கப்படும் போன்ற ஒடுக்கமுறை அம்சங்களுக்கு எதிராக கடந்த  மார்ச் மாதம் 12 ஆம் தேதி தலைநகர் பாரிசில் 35 லட்சம் மக்கள் ஆறாவது முறையாக மாபெரும் பொது வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தினர். கண்ணீர்ப் புகைகுண்டுகளை வீசியும், லத்தியால் தாக்கியும் மாபெரும் மக்கள் போராட்டத்தைக் கலைக்க போலீஸ் முயன்றபோதும் அது தோற்றுப்போனது.

பல இடங்களில்  போலீசே தலைகவசங்களை கழட்டிவிட்டு மக்களுக்கு ஆதரவாக அவர்களுடன் நிற்கும் காட்சிகளும் அரங்கேறின. தூய்மை பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால்  பிரான்சின் பல நகரங்களில் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. போராடும் மக்கள் அக்குப்பைகளை எரித்து அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஒடுக்குமுறையின் மூலமும் கள்ள மௌனத்தின் மூலமும் போராட்டத்தை நீர்த்துப்போக செய்துவிடலாம் என்று எண்ணிக்கொண்டிருந்த மேக்ரோன் அரசின் கனவில் மண்ணை தூவுவது போல நாளுக்கு நாள் பிரான்சில் மக்கள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.

பிரான்ஸை போல் ஆளும் அரசை மக்கள் போராட்டத்தின் மூலம் ஸ்தம்பிக்க வைத்த மற்றொரு நாடு என்றால் அது இஸ்ரேல். இஸ்ரேலில் யூத இனவெறி பாசிஸ்டுகளுடன் கூட்டணி வைத்து ஆட்சியை பிடித்த பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கொண்டுவந்த நீதித்துறை சீர்திருத்த சட்டம் பாசிஸ்டுகளுக்கு நீதித்துறை மீது கட்டற்ற அதிகாரத்தை வழங்குகிறது. இதற்கு எதிராக பல வாரங்களாக மக்கள் போராடி வருகின்றனர். போராட்டத்தையும் மீறி நெதன்யாகு அரசு சட்டத்தை நிறைவேற்றிய போதிலும், மக்கள் போராட்டம் தீவிரமடைந்ததை எதிர்த்து இந்த முடிவை தற்சமயத்துக்கு நிறுத்திவைத்துள்ளது. எந்த அளவிற்கு மக்கள் எதிர்ப்பு தீவிரமாக உள்ளதென்றால் நீதித்துறை சட்டதிருத்தத்திற்கு எதிராக நெதன்யாகு அரசின் பாதுகாப்புத்துறை அமைச்சரே வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்தார்.


படிக்க: இஸ்ரேல்: நெதன்யாகு அரசை ஸ்தம்பிக்க வைத்த மக்கள் போராட்டம்!


இலங்கையில் மாபெரும் மக்கள் எழுச்சிக்குப் பிறகு ஆளும் வர்க்கத்தால் நியமிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க உலக வட்டிக்காரனான சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் வாங்க ஒப்பந்தம் போட்டுக்கொண்டு மக்கள் தலையில் நெருக்கடியை சுமத்தி வருகிறார். ஐ.எம்.எப்-இன் கட்டளைக்கு இணங்க ரணில் அரசு செலவினத்தை குறைப்பதோடு வரியை உயர்த்தி வருகிறது. இதனால் அடிப்படை உணவு மற்றும் மருந்து பொருட்களுக்கு கூட மக்கள் மத்தியில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதற்கு எதிராக இலங்கை மக்கள் மீண்டும் கிளர்ந்து எழுந்துள்ளனர். உலக கந்துவட்டி ரௌடியிடம் இருந்து வாங்கும் கடனை சமாளிக்கக் கடுமையான சுமையை உழைக்கும் மக்கள் தலைமீது ஏற்றாதே என இலங்கை தலைநகரான கொழும்புவில் பொதுத்துறை ஊழியர்கள் மாபெரும் பொது வேலைநிறுத்தத்தில் இடுபட்டனர்.   இடையில் சற்று தணிந்திருந்த இலங்கை மக்கள் போராட்டம் இந்தாண்டு ஜனவரியில் இருந்து மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

பெறும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வரும் பிரிட்டனில் “ஊதிய உயர்வு இல்லாமல் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க முடியாது” என்ற கோரிக்கையை முன்வைத்து பிரிட்டனின் கல்வித்துறையைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து வருகிறார்கள். இவர்கள் உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக தீவிரமடைந்து வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக வாழ்வாதாரம் மோசமாகி பெரும்பான்மை மக்கள் தொடர் போரட்டடங்களை நடத்தி வருகின்றனர்.

ஏகாதிபத்திய அமெரிக்க ரசியா மீது பொருளாதார தடை விதித்தால் பெறும் பாதிப்புக்கு உள்ளான மற்றொரு  நாடு ஜெர்மனி. பொருளாதாரத் தடையினால் உணவு மற்றும் எரிப்பொருட்களின் விலை விண்ணை முட்டுகின்றன. இதனால் அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க முடியாமல் தவித்தது வருகின்றனர் ஜெர்மன் மக்கள். இந்நிலையில் அனைத்து துறை போக்குவரத்து தொழிலாளர்களும் ஊதிய உயர்வு கோரி எழுச்சிகரமான ஒரு வேலைநிறுத்தத்தை நடத்தி உள்ளனர். இவ்வேலைநிறுத்தத்தில் வெர்டி என்ற தொழிற்சங்கத்தில் இருந்து மட்டும் 25 லட்சம் தொழிலாளர்கள் பங்கேற்றுள்ளனர். மேலும், பிற தொழிற்சங்கத் தொழிலாளர்களும் இவ்வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டுள்ளனர். வேலைநிறுத்தத்தால் பல இடங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்துவிட்டது. மேலும், பல்வேறு சர்வதேச விமான நிலையங்களும் முடங்கிவிட்டன. இதனால் கிட்டத்தட்ட 4 லட்சம் பயணிகள் தங்கள் பயணத்தை ரத்து செய்தனர்.


படிக்க: துருக்கி நிலநடுக்க மரணங்கள்: அரசு நிகழ்த்திய படுகொலையே!


பிரிட்டன் மற்றும் ஜெர்மனியை போல் பாதிக்கப்பட்ட மற்றொரு ஐரோப்பிய நாடான போர்த்துகீசியமும் பெரும் நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. நெருக்கடியைச் சமாளிக்கத் தங்கள் ஊதியத்தை உயர்த்தி வழங்குமாறு போர்த்துகீசிய தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

கிரீஸ் நாட்டின் தலைநகர் ஏதென்ஸில் கடந்த மார்ச் 20 ஆம் தேதி காலியாகக் கிடக்கும் ஊழியர்களின் பணியிடங்களை நிரப்பாமல் மக்களின் வாழ்க்கையை ஆபத்தில் தள்ளும் கிரீஸ் அரசின் போக்கைக் கண்டித்து நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை அந்நாட்டுத் தொழிலாளர்கள் மேற்கொண்டனர்.

கடந்த மார்ச் 12 அன்று தென் ஆப்பிரிக்காவில் கல்வி, சுகாதாரம் மற்றும் அதன் துணைதுறைகளை சார்ந்த ஊழியர்கள் ஊதிய உயர்வுக் கோரிக்கையை முன்வைத்துப் போராடியுள்ளனர். 2018 ஆம் ஆண்டு மூன்றாண்டுக் கால உடன்பாடு போடப்பட்டது. ஆனால் மீண்டும் 2021 ஆம் ஆண்டு போடப்பட வேண்டிய உடன்பாடு இதுவரையில் எட்டப்படவில்லை. இதனை எதிர்த்து பல்லாயிரம் ஊழியர்கள் போராடினர்.

இவையன்றி ஜியார்ஜியா, தென்னமெரிக்க நாடுகளான பெரு, துனிசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் போராட்டம் நடந்துள்ளது. உக்ரைன்-ரஷ்யப் போரால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்காக மட்டுமின்றி உக்ரைன் மீதான போரை கண்டித்து போரை உடனடியாக நிறுத்தக் கோரி ரஷ்யாவுக்கு எதிராகவும், “உக்ரைனுக்கு ஆயுதம் வழங்காதே” என்று அமெரிக்க தலைமையிலான மேல்நிலை வல்லரசுகளை கண்டித்தும் மக்கள் அவ்வபோது போராடி வருகின்றனர்.

பசி, பட்டினி, உணவு மற்றும் எரிப்பொருள் விலையேற்றம், வேலை பறிப்பு, ஏகாதிபத்திய போர் இதற்கெல்லாம் எதிராக மாபெரும் வேலை நிறுத்தங்களும், ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் உலகின் குறுக்கும் நெடுக்குமாய் உள்ள பிரான்ஸ், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, ஜெர்மனி, கிரீஸ் என உலக நாடுகள் முழுவதும் படர்ந்து வருகிறது.

ஏகாதிபத்தியங்களின் மேலாதிக்க போட்டாபோட்டி காரணமாக ஏற்பட்ட போர்களும், அதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளுமே மக்களை இப்போராட்டங்களை நோக்கி தள்ளியுள்ளது. பல நாடுகளில் இனி வாழவே முடியாது என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. முதலாளித்துவ ஏகாதிபத்தியத்தின் தோல்வியின் நெருக்கடி முழுக்க முழுக்க மக்கள் தலையில் வந்து விடிகிறது. இவையெல்லாம் உணர்த்துவது ஒரு விஷயத்தை தான்.  முதலாளித்துவத்தை தூக்கி எறிந்துவிட்டு பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கான ஆட்சியை நிறுவும் ஓர் புரட்சிக்காக இந்த உலகம் ஏங்கிகொண்டிருக்கிறது. அதனை செய்வதற்கான மக்கள் அடித்தளம் கொண்ட போஷ்விக்மயமான கட்சியே ஒவ்வொரு நாட்டிற்கும்  தற்போதைய தேவை. ஏனெனில் உலக மக்கள் புரட்சியை பாற்றிகொள்ள காய்ந்த சருகுகளாக காத்துக்கிடக்கின்றனர். அது எரிவதற்கு தேவை சிறு தீ பொறியே!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க