இஸ்ரேல்: நெதன்யாகு அரசை ஸ்தம்பிக்க வைத்த மக்கள் போராட்டம்!

பாசிஸ்டுகளின் செல்வாக்கு அதிகரித்து வருகின்ற வேளையிலும், பாசிச அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களும் அதிகரித்து வருகின்றன. இஸ்ரேலில் தீவிர அரசு ஒடுக்கு முறையை துச்சமாக மதித்து பத்தாவது வாரமாக போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது நமக்கு இதை உணர்த்துகிறது.

0

ஸ்ரேலின் பெஞ்சமின் நெதன்யாகு அரசு நீதித்துறையை மாற்றி அமைப்பதற்காக முன்வைத்துள்ள சட்ட மசோதாவிற்கு எதிராக நாடு முழுவதும் இலட்சக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டங்கள் பத்தாவது வாரமாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

மார்ச் 11 ஆம் தேதியன்று நடைபெற்ற போராட்டத்தில் ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். இது இஸ்ரேல் வரலாற்றிலேயே மிகப்பெரிய போராட்டம் என்று கூறப்படுகிறது. டெல் அவிவ் (Tel Aviv) நகரில் மட்டும் சுமார் 2,00,000 மக்கள் திரண்டனர். ஹைஃபாவில் (Haifa) 50,000 பேரும் பீர்ஷேவா (Beersheba) நகரில் 10,000 பேரும் அணி திரண்டனர்.

இதற்கு முன்னர், கடந்த மார்ச் 3 ஆம் தேதியன்று நடைபெற்றப் போராட்டத்தின்போது இஸ்ரேலின் முக்கிய சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்லும் சாலைகளை போராடிய மக்கள் மறித்தனர். போராட்டத்தின் வீரியத்தால் அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் லாயிட் ஆஸ்டின் உடனான சந்திப்பை இடமாற்றம் செய்யும் நிலைக்கு நெதன்யாகு தள்ளப்பட்டார்.

படிக்க : இஸ்ரேல்: பாசிஸ்டுகளுடன் கூட்டணியமைத்த நெத்தன்யாஹூ!

பாசிஸ்டுகளும் யூத மத வெறியர்களும் (மதவாத சியோனிசம், யுனைடெட் டோரா ஜூடாயிசம், ஜூயுஸ் பவர் உள்ளிட்ட கட்சிகள்) ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பிறகு இஸ்ரேலில் யூத மதவெறி அடிப்படையிலான எதேச்சதிகார ஆட்சியை நிறுவும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நீதித்துறையின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தவும், நீதித்துறை அதிகாரத்திற்கும் அரசாங்கத்தின் அதிகாரத்திற்கும் சம நிலையை மீட்டெடுக்கவும் நீதித்துறையில் மாற்றங்களை கொண்டுவர உள்ளதாக பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அறிவித்திருந்தார்.

இப்புதிய சட்ட திருத்தம் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை மீறும் அதிகாரத்தை இஸ்ரேலிய நாடாளுமன்றத்திற்கு (Knesset) வழங்கி, சட்டமன்றம் மற்றும் நிர்வாகத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்தும். நாடாளுமன்றத்தின் எளிய பெரும்பான்மையை (simple majority) கொண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை முறியடிக்கும் அதிகாரத்தை இச்சட்ட திருத்தம் வழங்கும்.

இஸ்ரேலின் அடிப்படைச் சட்டங்களின் (Basic Laws) சட்டப்பூர்வமான தன்மையை மறுபரிசீலனை செய்வதற்கான உச்ச நீதிமன்றத்தின் அதிகாரமும் இச்சட்ட திருத்தத்தின் மூலம் பறிக்கப்பட உள்ளது. மேலும், நீதிபதிகளைத் தேர்ந்தெடுப்பதில் அரசாங்கத்திற்கு அதீத அதிகாரத்தையும் இது வழங்கவுள்ளது.

“இதை நீதித்துறையில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தமாக கருத முடியாது. இது இஸ்ரேலை சர்வாதிகாரத்திற்கு இட்டுச் செல்வதற்கான நடவடிக்கை. இஸ்ரேல் என்பது எங்கள் குழந்தைகளுக்கான ஜனநாயக நாடாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்” என்று அணிவகுப்பில் கலந்து கொண்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

பீர்ஷேவா நகரில் பேசிய எதிர் கட்சித் தலைவரான யெயர் லாபிட் நாடு முன்னெப்போதும் இல்லாத நெருக்கடியை சந்தித்து வருகிறது என்றும், ஈரான் சௌதி அரேபியாவுடன் ஒரு புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள இவ்வேளையில் இஸ்ரேலிய அரசாங்கம் ஜனநாயகத்தை நசுக்குவதில் மட்டுமே அக்கறை கொண்டுள்ளது என்றும் கூறினார்.

நீதித்துறை சில சமயங்களில் தங்களின் பாசிச நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டையாக இருப்பதை பாசிஸ்டுகள் விரும்புவதில்லை. எனவே, நீதித்துறையை தனது முழு கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள பாசிஸ்டுகள் விரும்புகிறார்கள். இது இஸ்ரேலில் மட்டும் ஏற்பட்டிருக்கும் போக்கல்ல. இது ஒரு உலகு தழுவிய போக்காகும்.

படிக்க : கொலீஜிய பரிந்துரைகளை தணிக்கை செய்யும் பாசிச மோடி அரசு!

சமீப காலமாக, இந்தியாவில் நடக்கும் நிகழ்வுகளும் இப்போக்கிற்கு ஒரு எடுத்துக்காட்டாகும். இந்திய குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ மற்றும் பாசிச சங்க பரிவார் கும்பல்கள் நீதிபதிகள் நியமனத்திற்கான கொலீஜியம் முறையை ஒழித்துக் கட்டுவதற்கான முயற்சியை தீவிரப்படுத்தியுள்ளனர். நிலவுகின்ற முதலாளித்துவ (போலி) ஜனநாயக கட்டமைப்புகளை ஒழித்துக் கட்டுவதற்கு பதிலாக, அவற்றைத் தனது பாசிச நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு ஏற்ற கருவிகளாக மாற்றி வருகின்றனர்.

பாசிஸ்டுகளின் செல்வாக்கு அதிகரித்து வருகின்ற வேளையிலும், பாசிச அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களும் அதிகரித்து வருகின்றன. இஸ்ரேலில் தீவிர அரசு ஒடுக்கு முறையை துச்சமாக மதித்து பத்தாவது வாரமாக போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது நமக்கு இதை உணர்த்துகிறது.

ஆனால், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு பகுதிகளில் பாலஸ்தீனியர்கள் மீது நிகழ்த்தப்படும் அரசு பயங்கரவாதத்திற்கு எதிராகவோ, பாலஸ்தீனியர்களையும் போராட்டங்களில் இணைப்பது குறித்தோ எந்த முழக்கமும் இடம்பெறவில்லை. 2023-ஆம் ஆண்டின் துவக்கத்திலிருந்து 80-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனீயர்கள் இஸ்ரேலிய ராணுவத்தால் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, பாசிஸ்டுகளுக்கு எதிரான இப்போராட்டத்தை தீவிரப்படுத்த இஸ்ரேலிய உழைக்கும் மக்களும் ஜனநாயக சக்திகளும் பாலஸ்தீனியர்களையும் உடன் இணைத்து கொண்டு போராட வேண்டும்.


பொம்மி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க