பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் ஐரோப்பிய நாடுகள்! மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!

நார்வே, ஸ்பெயின், அயர்லாந்து ஆகிய மூன்று நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கவுள்ள நிலையில், இதற்கு இனவெறிப்பிடித்த இஸ்ரேல் அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

நாளை (28-05-2024) பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கப்போவதாக நார்வே, ஸ்பெயின், அயர்லாந்து ஆகிய ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த நாடுகள் அறிவித்துள்ளன. இந்த மூன்று நாடுகளின் பிரதமர்களும் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பது பற்றிய தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கடந்த புதன் கிழமையன்று (22-05-2024) செய்தியாளர்களை சந்தித்த நார்வே பிரதமர் ஜோனாஸ் கர் ஸ்டோர், பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாகக் கூறினார். மேலும், “நிரந்தரத் தீர்வு என்பது இரு நாடுகளின் ஆதரவின் மூலம் மட்டுமே அடையப்படும். பாலஸ்தீன மக்களுக்கு ”சுய நிர்ணய உரிமைக்கான அடிப்படை மற்றும் சுதந்திரமான உரிமை உள்ளது. இஸ்ரேலியர்கள் மற்றும் பாலஸ்தீனர்கள் அந்தந்த நாடுகளில் நிம்மதியாக வாழ அவர்களுக்கு உரிமை உண்டு” என்றும் கூறினார்.


படிக்க: பாலஸ்தீன இனப்படுகொலை – பாசிஸ்டுகள் உலகளவில் ஒன்றிணைகிறார்கள்!


ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் கடந்த வியாழக் கிழமையன்று (23-05-2024) நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது, அமைதி, நீதி மற்றும் உறுதித்தன்மை ஆகிய மூன்று காரணங்களுக்காக பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கப் போவதாகக் கூறினார்.

டப்ளினில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய அயர்லாந்து பிரதமர் சைமன் ஹாரிஸ், “பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பது அமைதியைக் கொண்டு வருவதற்கு மிகவும் தேவையான நடவடிக்கை” என்று கூறினார்.

நார்வே, ஸ்பெயின், அயர்லாந்து ஆகிய மூன்று நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கவுள்ள நிலையில், இதற்கு இனவெறிப்பிடித்த இஸ்ரேல் அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் இந்த மூன்று நாடுகளில் இருந்து தனது நாட்டு தூதர்களையும் திரும்ப அழைத்துள்ளது.

மற்றொருபுறம், ஐரோப்பிய நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் முடிவை ஹமாஸ் அமைப்பு மற்றும் பாலஸ்தீன அரசு வரவேற்றுள்ளது. இந்த முடிவு சர்வதேச அரங்கில் முக்கியமான மற்றும் தீர்க்கமான திருப்புமுனையாக அமையும் என்றும் ஹமாஸ் தெரிவித்துள்ளது.

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் முடிவை வரவேற்றுள்ள சௌதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சகம், இதுவொரு நேர்மறையான நடவடிக்கை என்றும் மற்ற நாடுகளும் இதேபோன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளது. இதற்கு முன்பாக கடந்த 1967-ஆம் ஆண்டு, பாலஸ்தீன அரசை அங்கீகரிக்குமாறு சர்வதேச நாடுகளை, குறிப்பாக பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்களை சௌதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சகம் கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது வரை 140 நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளன. இதில் ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள 22 நாடுகளை கொண்ட அரபுக் குழு, 57 நாடுகளை கொண்ட இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு மற்றும் 120 உறுப்பினர்களைக் கொண்ட அணிசேரா இயக்கம் ஆகியவையும் அடங்கும்.

1988-இல்அப்போதைய பாலஸ்தீனத் தலைவர் யாசர் அராபத் பாலஸ்தீனத்திற்கான கொடியை அறிமுகப்படுத்தி பாலஸ்தீனத்திற்கான அங்கீகாரத்தை கோரியபோது, அதனை முதன்முதலில் அங்கீகரித்தது அல்ஜீரியாதான். அதன் பிறகு துருக்கிவும், இந்தியாவும் ஆதரித்தன.

பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கவில்லை. ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த நாடுகளில் ஸ்வீடனை தவிர வேறு எந்த நாடும் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கவில்லை. அமெரிக்கா, பிரிட்டனை போல ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டையே கொண்டுள்ளன.


படிக்க: பாலஸ்தீனம்: போராட்டக் களம் காண்போம்? | கவிதை


ஆனால், தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நார்வே, ஸ்பெயின், அயர்லாந்த் ஆகிய நாடுகள் பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்கும் முடிவானது முக்கியத்துவம் வாய்ந்தது. 200 நாட்களுக்கும் மேலாக இனப்படுகொலைக்கு ஆளாகிவரும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக சர்வதேச அளவில், குறிப்பாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் நடைபெறும் மக்கள் போராட்டங்கள்தான் பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்கும் முடிவை நோக்கி நார்வே, ஸ்பெயின், அயர்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளைத் தள்ளியுள்ளது.

அந்தவகையில் உலகம் முழுக்க நடக்கும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களும், மக்கள் மத்தியில் உருவாகிவரும் பாலஸ்தீன ஆதரவு மனநிலையும்தான் பாலஸ்தீனம் மீது பாசிச இஸ்ரேல் தொடுத்துள்ள இன அழிப்பு போருக்கு முடிவுக்கட்டி பாலஸ்தீன விடுதலைக்கு வழிவகுக்கும்.


தன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க