நடந்து முடிந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்றத் தேர்தலில் கடும் பின்னடைவைச் சந்தித்ததையடுத்து பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு மறுதேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதற்கு காரணமாக, ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் முடிவுகள் மூலம் மக்களின் கவலைகளைக் கண்டறிந்ததாகவும் அதற்கு பதிலளிக்காமல் இருக்க முடியாது என்பதற்காக மக்களிடமே முடிவை விட்டுவிடுவதாகவும் கூறியுள்ளார்.
இந்த அறிவிப்பு மேக்ரோனின் மறுமலர்ச்சி கட்சி (Renaissance) அமைச்சர்கள் உட்பட அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்தது. அதேசமயத்தில் மேக்ரோனின் இம்முடிவை வரவேற்றுள்ள, அந்நாட்டின் தீவிர வலதுசாரி கட்சியான தேசிய பேரணி (National Rally) கட்சியின் தலைவர் மரீன் லீ பென், பிரான்ஸ் மக்கள் எங்களுக்கு வாக்களித்தால் நாங்கள் ஆட்சியைப் பிடிப்போம் என்று கூறியுள்ளார்.
ஏனெனில், நடந்துமுடிந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்றத் தேர்தலில் மேக்ரோனின் மறுமலர்ச்சி கட்சி வெறும் 13 இடங்களைப் பெற்று படுதோல்வியடைந்த நிலையில், அந்நாட்டில் பாசிசக் கட்சியான தேசிய பேரணி மேக்ரோனின் கட்சியை விட இருமடங்கு வாக்குகளைப் பெற்று 30 இடங்களைக் கைப்பற்றியிருந்தது.
ஏற்கெனவே, 2022-ஆம் ஆண்டு நடந்த பிரான்சின் அதிபர் தேர்தலில் இமானுவேல் மேக்ரோன் வெற்றிக்கு தேசிய பேரணி கட்சியின் தலைவர் மரீன் லீ பென் கடும் சவாலாக இருந்தார். அதன் தொடர்ச்சியாக நடந்த பிரதமர் பதவிக்கான நாடாளுமன்றத் தேர்தலிலும் மறுமலர்ச்சி கட்சியின் கூட்டணிப் பெரும்பான்மை இடங்களைப் பெற முடியாமல் சிறுபான்மை அரசாங்கம் (Minority Government) அமைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது. ஆனால், தேசிய பேரணி கட்சியோ முந்தைய தேர்தலுடன் ஒப்பிடும்போது சுமார் 82 இடங்களை அதிகமாகப் பெற்று பிரம்மாண்டமாக வளர்ந்திருந்தது.
படிக்க: நிறவெறிக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த பிரான்ஸ்!
இந்நிலையில், தற்போது நடந்த ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத் தேர்தலிலும் மேக்ரோனின் மறுமலர்ச்சி கட்சி தோல்வியடைந்திருப்பதானது, பிரான்சில் 2027-ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் அதிபர் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் மறுமலர்ச்சி கட்சியின் வெற்றி வாய்ப்பை கேள்விக்குறியாக்கியுள்ளதோடு, பிரான்சில் பாசிச கட்சியான தேசிய பேரணி வேகமாக வளர்ந்து வருவதைத் துலக்கமாகக் காட்டுகிறது.
எனவே, மேக்ரோனின் இந்த திடீர் முடிவால் பிரான்சின் நாடாளுமன்றத் தேர்தலில் பாசிசக் கட்சியான தேசிய பேரணி வெற்றிபெற்று ஆட்சிக்கு வரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுவரை வெளிவந்துள்ள கருத்துக்கணிப்புகளும் நடைபெறயிருக்கும் பிரான்சின் நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய பேரணி கட்சி வெற்றி பெறுவதற்குத்தான் அதிக வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கின்றன. இத்தகைய சூழலில் நாடாளுமன்றத்தைக் கலைத்து பாசிச அபாயம் நெருங்க வழிகோலியுள்ள மேக்ரோனின் நடவடிக்கைக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்நிலையில், நாடாளுமன்றத்தைக் கலைத்ததற்குப் பின்னால் ஒளிந்திருக்கும் மேக்ரோனின் சூழ்ச்சியை ஊடகங்கள் அம்பலப்படுத்தியுள்ளன. தற்போது நடைபெறும் தேர்தலில் தேசிய பேரணி கட்சி வெற்றிபெற்றாலும், மேக்ரோனின் அதிபர் பதவிக்காலம் முடிவடைய இன்னும் மூன்று ஆண்டுகள் உள்ளதால், ஒரு வருடத்திற்குப் பிறகு மீண்டும் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டுத் தேர்தல் நடத்துவதற்கான அதிகாரம் மேக்ரோனுக்கு உள்ளது. இதன்மூலம், பாசிச கட்சியான தேசிய பேரணி கட்சிக்கு எதிரான மக்களின் எதிர்ப்புணர்வை பயன்படுத்தி மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்ற கணக்கிலேயே மேக்ரோன் இம்முடிவை எடுத்துள்ளதாக ஊடகங்கள் அம்பலப்படுத்துகின்றன.
எனவே, தன்னுடைய அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்காக ஒட்டுமொத்த நாட்டு மக்களின் நலனை பாசிஸ்டுகளிடம் அடகுவைக்கும் மேக்ரோனின் இம்முடிவிற்கு எதிராகவும், பாசிச கட்சியான தேசிய பேரணி கட்சி ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகவும் பல்வேறு அமைப்புகளும் மக்களும் இணைந்து பிரான்ஸ் முழுவதும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
படிக்க: பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் ஐரோப்பிய நாடுகள்! மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!
கடந்த ஜூன் 15-ஆம் தேதி இனவெறிக்கு எதிரான குழுக்கள், பிரெஞ்சு தொழிற்சங்கங்களையும் இத்தேர்தலையொட்டி உருவாக்கப்பட்ட ஒரு புதிய இடதுசாரி கூட்டணியையும் இணைத்துக்கொண்டு பாசிச சக்திகளுக்கு எதிராக மாபெரும் பேரணியை நடத்தின. சுமார் 6 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இப்பேரணியில் கலந்துகொண்டதாக அந்நாட்டு தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன. பேரணியில் கலந்துகொண்ட மக்கள் “அனைவருக்கும் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்” என்ற பிரான்சின் தேசிய முழக்கத்தையும் “எல்லைகளை உடைப்போம், அனைவருக்கும் ஆவணங்கள், குடியேற்ற மசோதா வேண்டாம்” என்ற பாசிஸ்டுகளின் கொள்கைகளுக்கு எதிரான முழக்கங்களையும் கொண்ட பதாகைகளை ஏந்திச் சென்றனர்.
இதேபோல் ஜூன் 23-ஆம் தேதி பிரான்சில் இருக்கும் பெண்ணுரிமை குழுக்கள், பிற அமைப்புகளுடன் ஒன்றிணைந்து, தேசிய பேரணி கட்சி ஆட்சிக்கு வந்தால் கருக்கலைப்பு உள்ளிட்ட பெண்களின் உரிமைகள் பறிபோகும் என்பதை வலியுறுத்தி மாபெரும் பேரணியை நடத்தினர். இதில், சுமார் 75,000 பேர் கலந்துகொண்டனர். இதேபோன்று 50-க்கும் மேற்பட்ட பேரணிகள் பிரான்சின் நகரம் முழுவதும் நடைபெற்றது.
போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள், “இது முன்னெப்போதையும் விட பெரிய ஆபத்து. ஐரோப்பியத் தேர்தல்களில் தீவிர வலதுசாரிகள் 30 சதவிகித வாக்குகளைப் பெற்றது இதுவே முதல் முறை. இன்று இளைஞர்களும் மக்களும் தெருக்களில் இறங்கியிருப்பது, பிரான்சிற்கு இது நேரக் கூடாது என்பதை கூறுவதற்குத்தான்” என்று உறுதிப்பட கூறினர்.
ஐரோப்பா முழுவதும் பாசிச சக்திகளின் எழுச்சி மூர்க்கமாக அரங்கேறிவரும் இச்சூழலில், “பாசிச சக்திகள் நாட்டை கைப்பற்றுவதை அனுமதியோம்” என்ற பிரான்ஸ் மக்களின் போராட்டமானது அந்நாட்டில் மட்டுமின்றி ஐரோப்பா முழுவதுமுள்ள பாசிஸ்டுகளுக்கும் கிலியூட்டியுள்ளது. பாசிச சக்திகளுக்கு எதிராக பிரான்சின் வீதிகளில் தொடங்கியுள்ள மக்கள் போராட்டம் ஐரோப்பா முழுவதும் பற்றிப் பரவட்டும்!
அகதா
(புதிய ஜனநாயகம் – ஜூலை 2024 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube