கடந்த ஜூன் மாதம் 27-ஆம் தேதி காலை, தான் ஓட்டி வந்த காரை நிறுத்த மறுத்ததாகக் கூறி நஹேல் என்ற 17 வயது சிறுவன் பாரிஸ் புறநகர்ப் பகுதியான நன்டெரேயில் போலீசால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனையடுத்து, பாரிஸ் மற்றும் பிரான்ஸ் முழுவதும் உள்ள நகரங்களில் போராட்டங்கள் வெடித்தன.
சமூக ஊடகங்களில் வைரலான ஒரு வீடியோ, “தங்களை தற்காத்துக் கொள்ளவே சுட்டோம்” என்ற போலீசு துறையின் பொய் கதைகளை தொகுப்பாக அம்பலப்படுத்தியுள்ளது. நான்டெர்ரேயில் இரண்டு போலீசு மஞ்சள் காரை நிறுத்துவதையும் பின்பு காவலர்களில் ஒருவர், கண்ணாடியில் சாய்ந்து, மிகக் குறுகிய தூரத்தில் இருந்து காரை ஓட்டி வந்த சிறுவனை நோக்கி துப்பாக்கியால் சுட்டதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.
கொல்லப்பட்ட சிறுவன் நஹேல், அல்ஜீரியா வம்சாவளியைச் சேர்ந்தவன். பிரான்ஸ் போலீசிடம் புரையோடிப்போயிருக்கும் இனவெறி காரணமாகவே இந்த கொலை நடந்துள்ளதாக மக்கள் குற்றச்சாட்டுகிறார்கள். இந்த குற்றச்சாட்டுக்குத் தகுந்த ஆதாரங்கள் இருக்கின்றன. கடந்த 2022-ஆம் ஆண்டு மட்டும் இதேபோல் 13 பேரை பிரான்ஸ் போலீசு கொலை செய்திருக்கிறது. அவர்களில் பெரும்பாலானோர் கருப்பின அல்லது அரேபிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நஹேல் போலீசால் கொல்லப்பட்டது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது; போராட்டங்களை தூண்டியது. காரணம், பிரான்ஸில் மேக்ரான் அரசாங்கம் தனக்கிருக்கும் அதிகாரத்தைக் கொண்டு அரசியல் சாசன வழிகளை குறுக்குவழியில் பயன்படுத்தி புதிய ஓய்வூதிய திட்டத்தைக் கொண்டு வந்தது. இதனை எதிர்த்து, இந்த சட்டத்தை திரும்ப பெறும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என அனைத்து தரப்பு உழைக்கும் மக்களும் கடந்த நான்கு மாதங்களாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
படிக்க: ரஃபேல் : ஊழல் முறைகேடுகளை சுட்டிக்காட்டியது பிரான்ஸ் ஊழல் எதிர்ப்பு முகமை !
இந்த அமைதியான போராட்டங்களை போலீசு தண்ணீர் பீரங்கிகள் மூலமாகவும், கண்ணீர் புகை குண்டுகள் மூலமாகவும் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு ஒடுக்கி வருகிறது.
நேஹேலை நிறுத்திக் கொன்ற போலீசு, மேக்ரோனின் புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு எதிராக வெகுஜன எதிர்ப்பாளர்களின் மீது வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டு வரும் BRAV (Brigades for the Repression of Violent Action) என்ற பிரிவின் உறுப்பினர்களாக இருக்கலாம் என்று செய்திகள் வந்துள்ளன.
இதற்கிடையில் போலீஸ் துறை சார்பாக வந்த கூட்டறிக்கையில் போராடும் மக்களை குறிப்பிட்டு, “இந்த காட்டுமிராண்டித்தனமான கூட்டங்களை எதிர்கொள்ளும் போது, அமைதியைக் கடைப்பிடிக்கும்படி கேட்பது போதாது” என்றும், ”இது இந்த அற்ப பூச்சிகளுக்கு எதிரான போருக்கான நேரம்” என்றும் சொல்லிருப்பது மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மில்லியன் கணக்கான உழைக்கும் மக்களை “அற்பப்பூச்சிகள்” என்று போலீசு அதிகாரிகள் விவரிப்பது, போலீசின் மக்கள் விரோத மனநிலையை மட்டும் வெளிப்படுத்தவில்லை, பிரான்ஸ் நாட்டில் தொழிலாளி வர்க்கம் எதிர்கொள்ளும் நெருக்கடியான அரசியல் சூழ்நிலையையும் இது அப்பட்டமாக அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. பணக்காரர்களின் சேவைக்கான மேக்ரான் தலைமையிலான முதலாளித்துவ அரசு தொழிலாளர்களின் உரிமைகளை நசுக்கப் போலீசு தாக்குதல் குழுக்களை அணிதிரட்டுகிறது என்பதையும் காட்டுவதாக இருக்கிறது.
இந்த வன்முறைகளை பற்றி மேக்ரோன் கூறுகையில், “பல சமூக ஊடகத் தளங்களில் வன்முறைக் கூட்டங்கள் ஒழுங்கமைக்கப்படுவதை நாங்கள் பார்த்திருக்கிறோம். ஒரு வகையான வன்முறையைப் பிரதிபலிக்கும் போதையில் அவர்களை ஆழ்த்திய வீடியோ கேம்களில் நாம் வாழ்கிறோம்” என்கிறார். நிகழும் வன்முறைகளுக்கு காரணம், வீடியோ கேம்கள் விதைத்த வன்முறை மனப்பாண்மை என்று சொல்வதன் மூலம், நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடியை மறைக்க முயற்சிக்கிறார். ஆனால் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் மக்களின் போராட்டங்கள், இந்த கட்டமைப்பிற்குள் வாழ வழியின்றி நெரிக்கப்படுவதையும் அதனால் இயல்பாகவே அவர்கள் போராட்டங்களை முன்னெடுப்பதையும் அப்பட்டமாக காட்டுகிறது.
படிக்க: இந்தியாவில் ஜார்ஜ் ஃபிளாய்ட் போராட்டங்கள் ஏன் நடக்கவில்லை ?
பிரான்சில் உள்ள வறுமை மற்றும் வேலையின்மை ஆகியவை இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்திய அதிருப்தி, மக்களின் மெய்யான கோரிக்கைகளை பிரதிபலிக்கும் அரசியல் கட்சிகள் இல்லாதது, இடதுசாரி கட்சிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் கூட ஆளும் வர்க்க ப்ரோக்கர்களைப் போல் செயல்படுவதனால் ஏற்பட்ட அதிருப்தி மனநிலை ஆகியவை தான் இளைஞர்கள் அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபடக் காரணங்களாகும். இந்த உண்மையான காரணங்களை மறைத்துவிட்டு, சமூக ஊடகங்கள் அல்லது வீடியோ கேம்களால் தான் வன்முறை வெளிப்பட்டது என்று சொல்வது நிலவும் அநியாயமான சமூக பொருளாதார அரசியல் சூழலை திரையிட்டு மறைக்க நினைக்கும் அயோக்கியத்தனமாகும்.
தொழிலாளி வர்க்க இளைஞர்கள் எதிர்கொள்ளும் யதார்த்த நிலை என்னவென்றால், வேலைகள் இல்லாதது, தரமான கல்விக்கான வழி இல்லாதது, மற்றும் அரசு இயந்திரங்களால் தொடர்ச்சியான துன்புறுத்தலுக்கு உள்ளாவது ஆகியவையாகும். மேலும் தொழிலாளர்களின் ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கு எதிரான போராட்டம், தங்களை இடதுசாரிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் அந்த போராட்டங்களின் கோரிக்கைகளை நீர்த்துப் போகும் வகையில் துரோகத்தனமாக நடந்துகொள்வது ஆகியவை இந்த மக்களை அரசுக்கு எதிராக விடாப்பிடியாகப் போராடச் செய்கிறது. இந்த கட்டமைப்பிற்குள் நிலவும் ஒவ்வொரு அமைப்பும் ஆளும் வர்க்கத்திற்கு சேவை செய்வதாக மாறிவிட்டதாலும், மக்கள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து உரையாடக்கூட போதுமான நிறுவன அமைப்புகள் இல்லாமல் போனதாலும் தான், மக்கள் தெருப் போராட்டங்களை தேர்வு செய்திருக்கிறார்கள். ஆனால் அவர்களை அமைப்பாக்கி தலைமை தாங்கும் புரட்சிகர கட்சி ஒன்று இல்லாதது தான் பெரும் குறையாக இருக்கிறது.
அமெரிக்காவில் ஜார்ஜ் ஃபிலாய்ட் கொலை செய்யப்பட்ட போது எழுந்து பெரும் போராட்டங்களுக்குப் பின், அமெரிக்க ஜனநாயகக் கட்சி போலீஸ் வன்முறை எதிர்ப்புப் போராட்டக்காரர்களுடன் தங்களை ஒருங்கிணைத்துக்கொண்டது. பின்பு, பைடன் பதவிக்கு வந்த பிறகு, போலீஸ் துறையின் நிதியுதவி மற்றும் இராணுவமயமாக்கலை பெருமளவில் அதிகரிக்க செய்தது. அதாவது போராடும் மக்களின் உணர்வுகளை வாக்கு வங்கியாகப் பயன்படுத்தி ஆட்சிக்கு வந்த பின், மக்களை ஒடுக்கும் போலீசு இராணுவ துறையை வளர்க்க நடவடிக்கைகள் எடுப்பதுதான் எல்லா முதலாளித்துவ கட்சிகளின் இயல்பு. இது பிரெஞ்சு மக்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆகவே சரியான புரட்சிகர கட்சி அல்லது இயக்கத்தின் வழிகாட்டுதல்கள், தலைமை இல்லாமல் போகும் பட்சத்தில், இந்த போராட்டங்களில் இருந்து ஆளும் வர்க்கம் பாடங்கள் கற்றுக்கொண்டு முன்பைவிட மக்களை கடுமையாக ஒடுக்கும் ஒரு கருவியை கண்டுபிடிப்பதில் தான் போய் முடியும் என்பதை நாம் சொல்லத் தேவையில்லை.
இந்த பிரான்ஸ் போராட்டங்கள் மட்டுமல்ல உலகெங்கும் நடக்கும் போராட்டங்கள் புரட்சிகர இயக்கங்களின் அவசியத்தை வலியுறுத்துவதாகவே இருக்கின்றன.
சீனிச்சாமி