ரஃபேல் விமானங்களை இந்தியா வாங்கியதில், இடைத்தரகு நிறுவனம் ஒன்றிற்கு பல கோடி ரூபாய் பணம் வழங்கியதாக ரஃபேல் விமானத் தயாரிப்பு நிறுவனமான டஸ்ஸால்ட் நிறுவனத்தின் மீது குற்றம்சாட்டியிருக்கிறது பிரான்ஸ் நாட்டின் ஊழல் எதிர்ப்பு முகமை.
கடந்த 2016-ம் ஆண்டு மோடி அரசால் பல்வேறு விமர்சனங்களையும் குற்றச்சாட்டுக்களையும் தாண்டி போடப்பட்ட ரஃபேல் ஒப்பந்தத்தை ஒட்டி, இந்த ஒப்பந்தத்தால் இந்தியாவிற்கு இழப்பு என்பதை பல்வேறு ஆதாரங்களில் இருந்தும் தொழில்நுட்ப விவரங்களில் இருந்தும் பலரும் அம்பலப்படுத்தினர்.
இந்திய பொதுத்துறை நிறுவனமான எச்.ஏ.எல் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை முறித்துவிட்டு, அதை விட அதிகமான விலையில் தொழில்நுட்பத்தை இந்தியாவுடன் பகிராத வகையில் அனில் அம்பானி நிறுவனத்துக்கு ஆதாயம் கிடைக்கும் வகையில் ஒப்பந்தம் போடப்பட்டது.
படிக்க :
♦ ரஃபேல் ஊழல் : திருடப்பட்ட ஆவணங்களை ஆதாரமாக எடுக்கக் கூடாதாம் !
♦ மோடியின் ரஃபேல் ஊழலை மறைக்க முடியாமல் திணறும் சிஏஜி !
இது தொடர்பாக போடப்பட்ட வழக்கில் ரஃபேல் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் உள்ளிட்ட ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு மோடி அரசை கேட்டுக் கொண்டது உச்சநீதிமன்றம். ரஃபேல் தொடர்பான ஆவணங்கள் தொலைந்து போய்விட்டதாக நீதிமன்றத்தில் அப்பட்டமாகப் பொய் சொன்னது மத்திய அரசு.
மத்திய அரசின் இந்த வாக்குமூலத்தை ‘அப்பாவி’யாக தன்னை பாவித்துக் கொண்டு கேட்டுக் கொண்டு அமைதியாக இருந்து விட்டது உச்சநீதிமன்றம். இது தொடர்பாக இந்து என். ராம் உள்ளிட்ட பத்திரிகையாளர்கள் அம்பலப்படுத்தத் துவங்கினர். ரஃபேல் ஊழல் தொடர்பாக வெளியிடப்பட்ட ஒரு வெளியீட்டை உடனடியாக கைப்பற்றி அழிக்க அடிமை எடப்பாடி அரசு அச்சமயத்தில் மும்முரமாய் செயல்பட்டது நினைவில் இருக்கலாம்.
சமீபத்தில் பிரான்ஸ் நாட்டின் ஊழல் எதிர்ப்பு முகமை சமர்ப்பித்துள்ள அறிக்கையில், 2017-ம் ஆண்டு டஸ்ஸால்ட் நிறுவனம் இந்திய நிறுவனமான டெஃப்சிஸ் நிறுவனத்திற்கு ரஃபேல் விமானத்தின் 50 மாதிரிகளைச் (Model) செய்வதற்கு பணம் கொடுக்கப்பட்டதாக காட்டப்பட்ட கணக்கிற்கு உரிய ஆதாரம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளது.
அதாவது கடந்த மார்ச் 30, 2017 தேதியிடப்பட்ட விற்பனை ஆவணத்தில் 8.8 கோடி மதிப்பிலான ரஃபேல் விமான மாதிரிகள் செய்வதற்கான ஆணையை வழங்கியிருக்கிறது. ஆனால் அந்த மாதிரிகள் உண்மையாக தயாரிக்கப்பட்டதற்கான ஆவணங்கள் எதையும் அந்த நிறுவனம் சமர்ப்பிக்க வில்லை. மேலும் இந்த செலவினத்தை வாடிக்கையாளருக்கான பரிசு என்ற பெயரில் குறிப்பிட்டுள்ளது ரஃபேல் நிறுவனம். இது குறித்து ஊழல் எதிர்ப்பு முகமையின் கண்காணிப்பாளர்கள் எழுப்பிய கேள்விக்கு முறையான ஆவணங்களை வழங்க முடியவில்லை.
இந்த மாதிரிகளை செய்வதற்கு பணியாணை பெற்ற நிறுவனமான டிஃப்சிஸ் சொலுசன்ஸ் (Defsys Solutions) நிறுவனமானது ரஃபேல் ஒப்பந்தத்தில் இந்தியாவில் ஒப்பந்தம் போடப்பட்ட டஸ்ஸால்ட் நிறுவனத்தின் துணைத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகும்.
இது குறித்து பிரான்சின் புலனாய்வு செய்தி நிறுவனமான மீடியா பார்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், டிஃப்சிஸ் நிறுவனமானது மூன்று தலைமுறையாக வானூர்தி மற்றும் இராணுவ தளவாடங்கள் விற்பனையில் தரகு வேலை பார்க்கும் குடும்பத்தைச் சேர்ந்த குப்தா என்பவருக்குச் சொந்தமானது என்றும், கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில், கோப்ரா போஸ்ட் மற்றும் எக்கனாமிக் டைம்ஸ் ஆகிய இரண்டு செய்தி நிறுவனங்களும் குப்தா குடும்ப உறுப்பினரான சுசேன் குப்தா டஸ்ஸால்ட் நிறுவனத்துடனான ரஃபேல் ஒப்பந்தத்தில் இடைத்தரகராக செயல்பட்டதாகவும், ரஃபேல் ஒப்பந்தத்தை முடிப்பதற்கு இந்திய பாதுகாப்புத் துறையின் பல இரகசிய ஆவணங்களையும் இந்நிறுவனம் பெற்றதாக்வும் செய்தி வெளியிட்டன என்றும் குறிப்பிட்டுள்ளது.
படிக்க :
♦ ரஃபேல் ஊழல் நூல் பறிமுதல் : மோடிக்கு ஆதரவாக தேர்தல் கமிசனின் நடவடிக்கை !
♦ ரஃபேல் ஊழல் : அம்பலமானது அடுத்த ஆதாரம் !
அதற்கு அப்படியே பொருந்தும்படி தற்போது இந்த தரகு நிறுவனம் அளித்த 8.8 கோடி ரூபாய் மதிப்பிலான பில் அம்பலமாகியிருக்கிறது. இந்த சுஷென் குப்தா கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் அமலாக்கத்துறையால், அகஸ்டா வெஸ்ட்லாண்ட் ஹெலிகாப்டர்கள் வாங்கியதில் நடைபெற்ற பண மோசடிக்காக கைது செய்யப்பட்டு பிணையில் விடப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்த குப்தா விவகாரம் ரஃபேல் ஒப்பந்த விவகாரத்திலும் அம்பலமாகிவிட்டது. செய்திகளில் இந்த முறைகேடு அம்பலப்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட துறையில் நடந்திருக்கும் மிகப்பெரிய முறைகேட்டின் ஒரு சிறு பங்கு அம்பலமான நிலையில், இதனை தாமாக முன் வந்து விசாரித்திருக்க வேண்டியது நீதிமன்றத்தின் கடமை.
ஆவணங்கள் தொலைந்து போனதையே ‘அப்பாவியாக’ ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், உண்மையிலேயே ரஃபேலின் மாடல் தயாரித்துத் தந்ததாக சுஷென் குப்தா, சாமி மேல் சத்தியம் செய்து கூறினால் ஏற்றுக் கொள்ளாதா என்ன ?
கர்ணன்
செய்தி ஆதாரம் : தி வயர்