ஃபேல் போர் விமானங்கள் வாங்கப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதை விசாரிக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் கடந்த டிசம்பர் மாதம் ‘முறைகேடு நடந்ததற்கான சந்தேகங்கள் ஏதும் இல்லை’ எனக் கூறி தள்ளுபடி செய்தது. அதன்பின், ஊடகங்களில் ரஃபேல் ஒப்பந்தத்தில் நடைபெற்ற பல்வேறு விதிமீறல்கள், முறைகேடுகள் குறித்து ஆதாரப்பூர்வமாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் உச்சநீதிமன்றத்தின் முடிவை மறு சீராய்வு செய்யக்கோரி தாக்கல் செய்த மனுவை விசாரிக்க நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.

கடந்த 06-03-2019 அன்று சீராய்வு மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி எஸ்.கே. கவுல், நீதிபதி கே. எம். ஜோசப் ஆகியோரைக் கொண்ட அமர்வு விசாரித்தது. அப்போது மோடி அரசு, ரஃபேல் ஆவணங்கள் திருடு போய் விட்டதாகவும் அதிகாரப்பூர்வ ரகசிய சட்டத்தை (Official Secrets Act) மீறி ஊடகங்களில் இந்த ஆவணங்கள் வெளியிட்டப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளது.

அம்பலப்பட்ட ரஃபேல் ஊழல்

சீராய்வு மனுவை தாக்கல் செய்த மனுதாரர்களில் ஒருவரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், உச்ச நீதிமன்றம், ‘பிழையான உண்மைகள்’ அடிப்படையில் அறியாமல் தனது முந்தைய தீர்ப்பை வழங்கியதாகவும் ‘தி இந்து’ பத்திரிகையில் வெளியான ஆவணங்களை தற்போது வழக்குக்கு ஆதாரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் வாதத்தை துவக்கினார்.

அப்போது, மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கே. கே. வேணுகோபால், ‘தி இந்து’-வில் வெளியான ஆவணங்கள் பாதுகாப்புத்துறை அமைச்சகத்திலிருந்து திருடப்பட்டவை என்றும் மத்திய அரசு இது குறித்து அதிகாரப்பூர்வ ரகசிய சட்டத்தின் கீழ் விசாரித்து வருவதாகவும் ‘அதிர்ச்சி’ தகவலை தெரிவித்தார்.

வேணுகோபால் வாதிடுகையில், “எனக்கு இதில் ஆட்சேபணை உள்ளது! இந்த ஆவணங்கள் பாதுகாப்புத் துறை அமைச்சக அதிகாரி ஒருவரால் திருடப்பட்டவை. இதுகுறித்து விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.  இரண்டு நாளிதழ்களில் வெளியான இந்த ஆவணங்களில் ‘ரகசியம்’ என குறிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ ரகசிய சட்டத்தின்படி இது குற்றமாகும். நாங்கள் இது குறித்து வழக்கு தொடர இருக்கிறோம்” என்றார்.

படிக்க:
♦ மோடியின் ரஃபேல் ஊழலை மறைக்க முடியாமல் திணறும் சிஏஜி !
♦ ரஃபேல் ஊழல் : உச்சநீதிமன்றம் பார்க்க மறுத்த உண்மைகள் !

“இன்றும்(06-03-2019)கூட ‘தி இந்து’ ஆவணங்களை பிரசுரித்திருக்கிறது. இது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் வரும். வழக்கு விசாரணைக்கு வரும்போது, அதுகுறித்து செய்தி வெளியிடுவது வழக்கு விசாரணையில் தாக்கத்தை ஏற்படுத்தும்” எனவும் வாதிட்ட அவர், இதை பிரசுரித்தது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் குற்றமாகும் எனவும் சொன்னார்.

ஆவணங்கள் திருடப்பட்டது குறித்து கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி, “பிப்ரவரி 8-ம் தேதி முதல் ஆவணம் வெளியானது. அதுமுதல் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள். ஆவணங்கள் திருடுபோய் விட்டதாக சொல்கிறீர்கள், அதற்காக என்ன செய்தீர்கள்?” எனக் கேட்டார்.

உணவு இடைவேளைக்குப் பிறகு, தொடர்ந்த வாதத்தில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், “குற்றம்சாட்டப்பட்ட ஒருவர், தான் குற்றம் ஏதும் செய்யவில்லை என நிரூபிக்க, ஒரு ஆவணத்தை திருடி நீதிபதியிடம் காட்டுகிறார். அந்த ஆவணம் அவரை குற்றமற்றவர் என நிரூபிக்கிறது.  எனில், அந்த நீதிபதி, அந்த ஆவணத்தை ஏற்கக்கூடாதா?” என வினவினார்.

அதற்கு பதிலளித்த அட்டர்னி ஜெனரல், “அந்த ஆவணத்தை திருடுவது குற்றத்துக்குரியது எனும்போது நீதிமன்றம் அதை எடுத்துக் கொள்ளக்கூடாது” என்றார்.

‘தி இந்து’வும்,  ’ஏஎன்ஐ’ செய்தி நிறுவனமும் வெளியிட்டவை திருடப்பட்ட ஆவணங்கள் எனக்கூறிய அட்டர்னி ஜெனரலிடம், பாதுகாப்புத்துறை தலைமை அதுகுறித்து அஃபிடவிட் தாக்கல் செய்யக் கூறியது நீதிமன்றம். வியாழக்கிழமை (07-03-2019) விவரங்கள் தாக்கல் செய்யப்படும் என மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

படிக்க:
♦ ரியல் எஸ்டேட் முதலைகளுக்கு ஆதரவாக அதிகாரியை தூக்கியடித்த பாஜக அரசு !
♦ புல்வாமா தாக்குதல் முதல் அபிநந்தன் விடுதலை வரை மோடி என்ன செய்தார்?

இந்த ஆவணங்களை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதா இல்லையா என்பதை பின்னர்தான் முடிவு செய்வோம் என நீதிமன்றம் கூறிவிட்டது. ஒருவேளை, இந்த ஆவணங்களை மத்திய அரசு கூறிய காரணங்களுக்காக விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளாவிட்டால், வேறு ஆவணங்கள் அடிப்படையில் சீராய்வு மனு விசாரிக்கப்படும் எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது. வழக்கு விசாரணை மார்ச் 14-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

அதாவது, ரஃபேல் விமானங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்திருக்கிறதா இல்லையா எனப் பார்ப்பதை விடவும் ‘சட்டத்தின்படி’ ஆவணங்களை ஆதாரமாக கொள்ளலாமா இல்லையா என்பதில் கவனம் செலுத்துகிறது நீதிமன்றம்.  மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்வதற்கான அத்தனை முகாந்திரங்களுடன் நீதிமன்றம், சட்டத்தின் ஓட்டைகளை தேடிக்கொண்டிருக்கிறது என்பதை இந்த வழக்கு விசாரணை சொல்கிறது.


கலைமதி
நன்றி: தி வயர்