பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டஸால்ட் நிறுவனத்திடமிருந்து 36 ரஃபேல் ரக போர் விமானங்களை வாங்குவது தொடர்பாக இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே கடந்த 2016-ம் ஆண்டு ஒப்பந்தம் முடிவானது. இதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதால்,  நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் உச்ச நீதிமன்றம் டிசம்பர் 14-ம் தேதி தள்ளுபடி செய்தது.

முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, அருண் சோரி, வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் ஆகியோரும் ரஃபேல் போர் விமானங்களை வாங்கியதில் நடந்துள்ள முறைகேட்டை விசாரிக்கக் கோரி மனுதாக்கல் செய்திருந்தனர். உச்சநீதிமன்றம் மனுக்களை தள்ளுபடி செய்திருக்கும் நிலையில், அவர்கள் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், ‘உச்சநீதிமன்றம் மனுக்களை தள்ளுபடி செய்திருப்பதால், மோடி அரசு முறைகேடு செய்யவில்லை என அர்த்தமாகிவிடாது’ என தெரிவித்துள்ளனர்.

கூட்டறிக்கையில், “ நீதிமன்றத்தின் சுதந்திரமான மேற்பார்வையில் ரஃபேல் ஒப்பந்தம் குறித்து விசாரணை  கோரிய  எங்கள் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பது எங்களுக்கு மிகுந்த அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அளித்துள்ளது. நாங்கள்  ஒப்பந்தம் தொடர்பான பல்வேறு புகார்களை சிபிஐ-யிடம் சமர்பித்த பிறகு,  உச்சநீதிமன்றத்தை அணுகினோம்” எனக் கூறியுள்ள இவர்கள், அந்த விவரங்களை தந்துள்ளனர்.

1. பிரதமர் மோடி, 36 ரஃபேல் ஜெட் விமானங்களை வாங்க, ஏப்ரல் 10, 2015 அன்று கையெழுத்திட்டார். இந்திய விமானப் படையின் தலைமையகங்களில் இருந்தும் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சிலின் அனுமதி பெறாமலேயே 36 ஜெட் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் போட்டப்பட்டது. பாதுகாப்பு தொடர்பான கொள்முதலுக்கு இந்த இரண்டு அனுமதிகளும் கட்டாயம் தேவை. ஆனால், அந்த விதி மீறப்பட்டிருக்கிறது.

2. பாதுகாப்பு கொள்முதல் கவுன்சிலின் அனுமதியுடன் இந்திய விமானப் படை 126 போர் விமானங்கள் வேண்டும் என நீண்ட காலமாக கோரி வருகிறது. அதற்கான டெண்டர்கள் அறிவிக்கப்பட்டு, ஆறு நிறுவனங்கள் பங்கேற்று, அதில் இரண்டு நிறுவனங்கள் தேர்வாகின. குறைந்த அளவிலான டெண்டர் தொகை அடிப்படையில் டஸால்ட் என்ற நிறுவனத்துக்கு ஒப்பந்தம் போனது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் 126 விமானங்கள் வாங்கப்படும் என்றும் இதில் 18 விமானங்கள் பறக்கும் நிலையில் வாங்கப்படும் என்றும் மீதியுள்ள விமானங்களை ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட் நிறுவனம் மூலம் தொழில்நுட்ப பரிமாற்றத்தின் படி தயாரித்துக் கொள்ளலாம் என ஒப்பந்தம் சொன்னது.

3. மார்ச் 25, 2015-ல், டஸால்ட் நிறுவனத்துடனான ஒப்பந்த பேச்சுவார்த்தை 95% நிறைவடைந்துவிட்டதாகவும் விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் டஸால்ட் நிறுவனத்தின் செயல் அதிகாரி, இந்திய விமானப் படையின் உயர் அதிகாரிகள் மற்றும் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் அதிகாரிகள் உள்ளிட்டோர் அறிவித்தனர். இந்த ஒப்பந்தம் குறித்து மேலதிக தகவல்கள் எதுவும் அப்போது சொல்லப்படவில்லை. இந்நிலையில், ஏப்ரல் 10-ம் தேதி பிரதமர் மோடி பிரான்சு அதிபருடன் 36 விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் தன்னிச்சையாக கையெழுத்திட்டார். அதாவது, 126 விமானங்கள் 36 விமானங்களாக குறைப்பட்டன. 36 விமானங்களும் பறக்கக்கூடிய நிலையில் கொள்முதல் செய்யப்படும் எனவும் ஒப்பந்தம் சொன்னது. ‘உள்நாட்டு உற்பத்தி பங்குதாரர்’ என்கிற புதுவிதி உள்ளே சொருகப்பட்டு தொழில்நுட்பத்தை பரிமாறிக்கொள்வதும் ‘மேக் இன் இந்தியா’ முழக்கமும் கைவிடப்பட்டன.

அதே நேரத்தில் அனில் அம்பானி, ‘ரிலையன்ஸ் டிபன்ஸ்’ என்ற புது நிறுவனத்தை தொடங்கி, ரஃபேல் ஒப்பந்தத்தில் கூட்டாளியாக நுழைகிறார். உள்நாட்டு உற்பத்தி பங்குதாரர் என்ற பெயரில் மொத்த ஒப்பந்தமும் ரிலையன்ஸ் நிறுவனத்து தரப்படுகிறது.  இந்த ஒப்பந்தத்தில் அப்போதைய பிரான்ஸ் அதிபராக கையெழுத்திட்ட ஹோலாண்டே சமீபத்தில் அளித்த பேட்டியில், முன் அனுபவம் இல்லாத புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ஒப்பந்தத்தை அளிக்கும் முடிவை எடுத்தது முழுக்க முழுக்க இந்தியாவே என்றார்.  பிரான்ஸ் அரசுக்கும் இதற்கு தொடர்பில்லை என்றும் கூறினார்.

4. அதன் பிறகு, 36 ரஃபேல் விமானங்களின் அதிகபட்ச விலை 5.2 பில்லியன் யூரோக்கள் என பேச்சுவார்த்தை குழுவின் மூன்று மூத்த அதிகாரிகளால் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், பிரதமர் தலைமையிலான பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவை குழு விமானங்களின் விலை 8. 2 பில்லியன் யூரோக்கள் என தன்னிச்சையாக உயர்த்தியது. இறுதியாக இந்த ஒப்பந்தம் 7.2 பில்லியன் யூரோக்களில் வந்து முடிந்தது. ஒப்பந்தப்படி, ஒரு விமானத்தின் விலை ரூ. 1650 கோடியாக உள்ளது. பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், 2015 ஏப்ரல் 10-ம் தேதி அளித்த பேட்டியில், 126 விமானங்கள் 90 ஆயிரம் கோடிக்கு வாங்கப்படுவதாக, (அதாவது ஒரு விமானத்தின் விலை ரூ. 715 கோடி) சொல்லியிருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தகுந்தது.

மேலே குறிப்பிட்ட இந்த உண்மைகளின் அடிப்படையில் எங்களுடைய புகாரை, நீதிமன்றத்தின் மேற்பார்வையில் விசாரிக்கக் கோரி சிபிஐ-யிடம் அளித்தோம். ஆனாலும் எங்களுடைய புகாரின் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்யவில்லை.

நீதிமன்றம் டிசம்பர் 14-ம் தேதி அளித்திருக்கும் தீர்ப்பு, நாங்கள் மனுவில் அளித்த, ஆவணப்படுத்தியிருந்த உண்மைகளை கணக்கில் கொள்ளவே இல்லை. விசாரணை கோரும் எங்களுடைய கோரிக்கையையும் அது பரிசீலிக்கவில்லை.

முரண்பாடாக, நாங்கள் இந்த ஒப்பந்தத்தையே கேள்விக்குள்ளாக்குவதாக அணுகி, அரசு சீல் வைக்கப்பட்ட உறைகளில் கொடுத்த தகவல்களின் அடிப்படையில், அதுகுறித்து எங்களுக்கு தெரிவிக்கப்படாமல் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  உண்மையில், தீர்ப்பில் சொல்லப்பட்டிருக்கும் சில விசயங்கள் ஆவணங்களில் இல்லை என்பதோடு முழுவதுமாக தவறானவை.

சிஏஜி அறிக்கை குறித்த தவறு

நீதிமன்றம் தனது ஆணையின் 25-வது பத்தியில் இப்படி சொல்லியிருக்கிறது,

“விமானங்களின் விலை விவரங்கள், மத்திய தணிக்கை ஆணையத்திடம் பகிர்ந்துகொள்ளப்பட்டுள்ளன. மேலும், மத்திய தணிக்கை ஆணையத்தின் அறிக்கை பொது கணக்கு கமிட்டியால் ஆய்வு செய்யப்பட்டது.  சிஏஜி அறிக்கையின் ஒரு பகுதி மட்டுமே நாடாளுமன்றத்தில் தரப்பட்டது, பொது பார்வைக்கும் வந்தது…”

மேலே குறிப்பிட்ட அனைத்து தகவல்களும் ஆவணங்களிலோ, உண்மையில் சரியானதாகவோ இல்லை. பொது கணக்கு கமிட்டி ஆய்வு சமர்பிக்கப்படவில்லை என்பதோடு, சிஏஜி அறிக்கையின் ஒரு பகுதி நாடாளுமன்றத்திலோ, பொது பார்வைக்கோ வைக்கப்படவில்லை.  இந்த தவறான கூற்று மத்திய அரசு அளித்த தகவலின் அடிப்படையில்(எங்கள் பார்வைக்கு வராதது) கூறப்பட்டுள்ளது. சொல்லப்பட்ட மூன்று விவகாரங்களிலும் ஆதாரமற்ற பொய்கள் சொல்லப்பட்டிருக்கும் நிலையில் மூடப்பட்ட உறைகளில் அளிக்கப்படும் தகவல்களின் அடிப்படையில் தீர்ப்புகள் வழங்கப்படுவது எந்த அளவுக்கு ஆபத்தானவை என்பதற்கு இந்த கூற்று எடுத்துக்காட்டுகிறது.

தனது சுருக்கமான தீர்ப்பில் அடிப்படையிலேயே தவறான தகவல்களை நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது அதிர்ச்சியை அளிக்கிறது.

இந்திய விமானப் படை அதிகாரிகளின் சாட்சியங்களில் உள்ள தவறுகள்

நீதிமன்றம் அதே பத்தியில் இந்திய விமானப் படையின் தலைவர், விமானத்தின் விலையை வெளிப்படையாக கூறுவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என கூறியதாக குறிப்பிட்டுள்ளது.  இந்த கூற்று ஆவணப்படுத்தப்படவில்லை. அதோடு இதை நீதிமன்றம் எங்கிருந்து பெற்றது என்பதும் புரியவில்லை. அதோடு, விமானப்படை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடைமுறைகள் மற்றும் விலை குறித்து நீதிமன்றத்தின் முன் சாட்சியம் அளித்ததாக நீதிமன்றம் கூறுகிறது.

இந்த கூற்றும் உண்மையில்லை, விமானப்படை அதிகாரிகளிடம் நீதிமன்றம் ஒரே ஒரு கேள்வியைக் கேட்டு பதிலைப் பெற்றது. ரஃபேல் விமானங்கள் 3வது,  4வது,  5வது தலைமுறையை சேர்ந்தவையா என்பதும் எப்போது கடைசி பேச்சுவார்த்தை நடந்தது என்பது மட்டும்தான் கேட்கப்பட்டது.  பேச்சுவார்த்தை குறித்தோ, விலை குறித்தோ எந்தவொரு கேள்வியும் கேட்கப்படவில்லை. அவர்களும் பதில் சொல்லவில்லை. நீதிமன்றத்தில் அப்படியொரு விசாரணை நடைபெறவே இல்லை.

கொள்முதல் நடைமுறையில் இருந்த முதன்மையான விசயங்களை கண்டுகொள்ளவே இல்லை

126 விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தம் நிறுத்தப்பட்டு, 36 விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தம் போடப்படுவதாக அரசு தெரிவித்த தகவலை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டிருக்கிறது. டஸால்ட் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி, பேச்சுவார்த்தை 95 சதவீதம் முடிவடைந்துவிட்டதாகவும் ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் எனவும் 2015, மார்ச் 25-ம் தேதி நேர்காணல் அளித்தார். மேலும் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தில் தாங்கள் நிறைவும் மகிழ்ச்சியும் பெறுவதாகவும் தெரிவித்திருந்தார். அவர் அளித்த வீடியோ நேர்காணலை நீதிமன்றத்தில் ஆதாரமாக அளித்திருந்தோம். அதை நீதிமன்றம் முற்றிலுமாக புறக்கணித்துவிட்டது.

மேலும் கொள்முதல் செய்வதில் விதிமீறல் செய்யப்பட்டிருப்பது குறித்து நாங்கள் எழுப்பிய புகாரை நீதிமன்றம் கண்டுகொள்ளவில்லை. ஏப்ரல் 10-ம் தேதி பிரான்ஸ் அரசுடன் 36 விமானங்கள் வாங்கப்போவதாக பிரதமர் ஒப்பந்தம் செய்துகொண்டார். இந்திய விமானப்படை 36 விமானங்கள் வேண்டுமென கேட்கவுமில்லை, பாதுகாப்பு கொள்முதல் கவுன்சிலின் ஒப்புதலையும் பெறவில்லை. விதிமுறைகள் பின்பற்றவில்லை என்பதை நாங்கள் சுட்டிக்காட்டியிருந்தோம். புதிய ஒப்பந்தம் செய்யப்பட்டதாக பிரதமர் தன்னிச்சையாக அறிவித்தார்.

36 விமானங்கள் விலை பற்றி நீதிமன்றம் கூறுகையில், இந்த விலை நிர்ணயம், புதிய விமானங்களின் அடிப்படை விலை மற்றும் அதன் இதர கூடுதல் விலை பற்றிய ஒப்பீட்டு விபரங்களை நாங்கள் கவனமாக ஆய்வு செய்ததில் அது RFP, IGA எனப்படும் ஒப்பந்த நடைமுறைகளின் வழி காட்டுதல்படியே செய்யப்பட்டுள்ளது என்கிறது.

விதிமுறைகளைப் பற்றி கண்டுகொள்ளாமல், நீதிமன்றம் அபாயகரமான முடிவை எடுக்கிறது. 75-வது பிரிவில் இப்படி கூறுவதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டுகிறது, “பரிந்துரைக்கப்பட்ட நடைமுறையிலிருந்து ஏதேனும் விலகல் நேரிட்டால் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சிலுக்கு பாதுகாப்பு கொள்முதல் நடைமுறை மூலம் ஒப்புதல் தர அனுப்ப வேண்டும்”.  அதாவது அரசு நினைத்தால் என்ன வேண்டுமானால் செய்துகொள்ளலாம், (இந்த விசயத்தில் பிரதமர்) இறுதியில் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சிலின் ரப்பர் ஸ்டாம்ப் குத்தப்பட்டால் முடிந்தது என்பதைத்தான் நீதிமன்றம் சொல்கிறது.

விலை மாற்றத்தை கண்டுகொள்ளவில்லை !

விலை குறித்து நீதிமன்றம் இப்படிச் சொல்கிறது…

நாங்கள் விலை குறித்தும் விலைகளின் ஒப்பீடு குறித்தும் முழுமையாக ஆராய்ந்தோம். அதிகாரிகள் அளித்த தகவல்களையும் ஆராய்ந்தோம். 36 ரஃபேல் விமானங்களை வாங்குவதில் பராமரிப்பு மற்றும் ஆயுதங்களை உள்ளடக்கிய தொகுப்பில் வணிக லாபங்கள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தார்கள். விலைகளை ஒப்பீடு செய்வது நீதிமன்றத்தின் பணியல்ல. மேலும் இதுபற்றி மேலதிக தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது அது பற்றி மேற்கொண்டு கூற இயலாது

விமானத்தின் விலை திடீரென 5.2 பில்லியனிலிருந்து 8. 2 பில்லியன் யூரோவாக விலை உயர்த்தப்பட்டது குறித்து நாங்கள் அளித்த விவரங்களை நீதிமன்றம் விசாரிக்கவில்லை.  பேச்சுவார்த்தை குழுவில் இடம்பெற்றிருந்த மூன்று அதிகாரிகள்,  இந்த ஒப்பந்தத்தை எதிர்த்த காரணத்துக்காக இடமாற்றம் செய்யப்பட்டார்கள். ஆனால், இல்லாத சிஏஜி அறிக்கை குறித்து மீண்டும் மீண்டும் நீதிமன்றம் மேற்கோள் காட்டுகிறது.

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துடன்
அனில் அம்பானியின் நிறுவனத்தை சேர்த்து குழப்பிக்கொள்கிறது !

2012-ம் ஆண்டிலிருந்தே ரிலையன்ஸ் நிறுவனம் டஸால்ட் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்ததாக அனில் அம்பானியின் நிறுவனத்துடன் நடந்த ஆப்செட் ஒப்பந்தம் குறித்து நீதிமன்றம் சொல்கிறது.  டஸால்டுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது முற்றிலும் வேறுபட்ட முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம்.  அந்த பேச்சுவார்த்தைக்கும் 2015-ம் ஆண்டு ரஃபேல் ஒப்பந்தத்தின் போது தொடங்கப்பட்ட அனில் அம்பானியின் நிறுவனத்துக்கும் தொடர்பு இல்லை.

பாதுகாப்பு கொள்முதல் நடைமுறையின் படி, பாதுகாப்பு அமைச்சரின் ஒப்புதலின் கீழ் ஆப்செட் ஒப்பந்தங்கள் போடப்படவேண்டும் என்பதையும் நீதிமன்றம் கண்டுகொள்ளவில்லை.

இந்த தகவல்களின் அடிப்படையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த 36 ரஃபேல் விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தில் நீதிமன்றம் தலையிடத் தேவையில்லை என நீதிமன்றம் முடிவுக்கு வருகிறது.  “தனிநபர்களின் முன்முடிவுகளை வைத்து நீதிமன்றம் விசாரிக்க முடியாது” என அது சொல்கிறது.

நாங்கள் நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என கோரவில்லை. சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வு குழுவின் சுதந்திரமான விசாரணையை கோரினோம்.  உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு லலிதா குமாரி வழக்கில் இதற்கான வழிமுறைகளை கூறியுள்ளது. அதாவது குற்றம் நடந்திருக்கிறது என கருதப்பட்டால், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, விசாரிக்கப்பட வேண்டும்.  இந்த ஒப்பந்தத்தின் மூலம் பெரும் பகுதியான பணம் ஆப்செட் ஒப்பந்தம் என்ற பெயரில் கமிஷனாக தரப்பட்டுள்ளது என்பது எங்களுடைய புகார். இந்த பணம் கைமாறுவதற்கென்றே ஆப்செட் ஒப்பந்தம் என்கிற புதிய வழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவே எங்களுடைய குற்றச்சாட்டு.

அரசு குற்றமற்றது என சொல்லவில்லை

நிலைமை இப்படியிருக்க, நீதிமன்றம் அளித்த தீர்ப்பு எங்களை அதிர்ச்சியடைய வைத்தது; ஏமாற்றம் தந்தது. நீதிமன்றம் நாங்கள் அளித்த சான்றுகளை ஆராயவில்லை; ஆராய்ந்ததாகவும் சொல்லவில்லை. அரசின் ஒப்பந்தங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது என்ற அரசியலமைப்பு சட்டத்தின் 32-வது பிரிவைக் காரணம் காட்டி, எங்கள் மனு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.  எனவே, இந்த தீர்ப்பை ஒப்பந்தத்துக்கு உச்சநீதிமன்றத்தின் நற்சான்று என எடுத்துக்கொள்ள முடியாது.

நாங்கள் அளித்த புகாரில் கூறியுள்ளது போல, இது ஒரு மோசடி ஒப்பந்தம்.  இந்த ஒப்பந்தம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்பதோடு, பொதுமக்களின் பணத்தையும் வீணடிக்கக்கூடியது. ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் என்ற பொதுத்துறை நிறுவனத்துக்கு பெருத்த சேதத்தை ஏற்படுத்தக்கூடியது.  அனில் அம்பானியின் நிறுவனத்துக்கு ஒரு பெருந்தொகையை கமிஷனாக கொடுப்பதற்கென்றே இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. இதுகுறித்து விசாரிக்கப்பட வேண்டும்.

பரிமாறப்படும் புன்னகைகளின் பொருள் என்ன ?

பெருந்தலைகளின் தொடர்பிருந்த போபர்ஸ் மற்றும் பிர்லா சஹாரா வழக்குகளில் வழங்கப்பட்டதைப் போல, இந்தத் தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. சுதந்திரமான விசாரணையை நீதிமன்றம் இந்த வழக்குகளை நிறுத்தி வைத்ததோடு, வழக்குகளை மூடவும் உதவியது. அதுபோல இந்த வழக்கின் தீர்ப்பும் உள்ளது.

படிக்க:
இந்திய இராணுவத்திற்கான செலவு : தேசப் பாதுகாப்பிற்கா – கார்ப்பரேட்டுகளை கை தூக்கவா ?
மோடி அரசின் பாசிசத்திற்கு பச்சைக் கொடி காட்டும் உச்சநீதி மன்றம்

வினவு செய்திப் பிரிவு ஆனால் மக்களின் மனதில் உள்ள ஐயங்களைப் போக்க வேண்டுமானால் ஒரு சுதந்திரமான விசாரணை நடத்தி உண்மைகளை வெளிக் கொண்டு வர வேண்டியது மிகவும் அவசியம். ஆனால், பொதுமக்கள் மனதில் எழுந்துள்ள சந்தேகங்களை போக்கும் விதமாக முழு விசயங்களும் வெளியே வர வேண்டும். அதற்கு சுதந்திரமான விரிவான விசாரணை தேவை.

ரஃபேல் ஒப்பந்தத்தின் முறைகேடுகளை தெள்ளத்தெளிவாக சுட்டிக்காட்டிய பிறகும் உச்சநீதிமன்றம் கண்களை மூடிக்கொண்டு தீர்ப்பு எழுதியதன் மூலம், மோடியின் ஊழலுக்கு துணைபோயிருக்கிறது. மோடி கும்பல் அம்பானிகளுக்கு நாட்டை தாரைவார்க்க தயாராகிவருகிறது.

தமிழாக்கம்: அனிதா
நன்றி: தி வயர்

3 மறுமொழிகள்

  1. சுருக்கமாகச் சொன்னால் 2ஜி ஊழல் வழக்கு மாதிரி இந்த வழக்கும் முடிந்திருக்கிறது அல்லது முடித்து வைக்கப்பட்டிருக்கிறது. இதை ஒப்புக் கொள்ளுங்கள்.

  2. // டஸால்டுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது முற்றிலும் வேறுபட்ட முகேஷ் அம்பானியின் நிலையன்ஸ் நிறுவனம்.// நிலையன்ஸ் அல்ல ரிலையன்ஸ் என்று மாற்றவும்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க