தொழிலாளர்களும், விவசாயிகளும் கடுமையாக உழைத்து அரசுக்கு வரி செலுத்துகிறோம். அந்த வரிப்பணத்தில் பெரும்பகுதியை தேசப்பாதுகாப்பு என்ற பெயரில் இராணுவத்துக்கு செலவிடுகிறது ஆளும் வர்க்கம்.

இப்போது சமீப காலமாக பெட்ரோல் டீசல் விலை விண்ணை முட்டுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி என்று பல காரணங்கள் கூறப்பட்டாலும், கடந்த நான்கு ஆண்டுகளில் மத்திய அரசின் பெட்ரோலிய பொருட்கள் மீதான கலால் வரி விதிப்பு உயர்வே இந்த நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. 2014-க்குப் பிறகு மட்டும் பெட்ரோல், டீசல் மீதான வரிவிதிப்பின் மூலம் சுமார் 17 லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசு பெற்றிருக்கிறது. இதன்றி ஜி.எஸ்.டி மூலம் மாதம் 1 லட்சம் கோடி வீதம் வருடத்திற்கு 12 லட்சம் கோடி ரூபாய் வசூலிக்கிறது.

இந்தப் பணத்திலிருந்துதான் பாதுகாப்புத் துறைக்கு பட்டுக் குஞ்சலம் வாங்கி அலங்கரித்துக் கொள்கிறது ஆளும் வர்க்கம். 2018-2019-க்கான மத்திய பட்ஜெட்டில் 3 லட்சம் கோடி ரூபாய் இராணுவத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. உலகில் ராணுவத்திற்கு அதிகம் செலவிடும் நாடுகளில் பிரிட்டனைப் பின்னுக்குத் தள்ளி 5-வது இடத்தில இருக்கிறது இந்தியா. தேசப்பாதுகாப்பு என்ற பெயரில் நியாயப்படுத்தப்படும் இந்தச் செலவு உண்மையிலேயே நாட்டின் பாதுகாப்பிற்குதான் பயன்படுத்தப்படுகிறதா? கார்ப்பரேட் கொள்ளைக்கே இந்த நிதி ஒதுக்கீடு சென்று கொண்டிருக்கிறது.

இராணுவத்திற்கு என்று ஒதுக்கப்படும் பணத்தில் பாதிக்கும் மேல் புதிய தளவாடங்கள் வாங்கவும், தளவாட பராமரிப்புக்காக வும் செலவிடப்படுகிறது. இராணுவ தளவாடங்களை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடு இந்தியா. இதற்கான ஒப்பந்தங்கள் அனைத்தும் பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு வழங்கப்படுகிறது.

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிஃபன்ஸ் – டஸ்ஸால்ட் ஆகிய நிறுவனங்களின் கூட்டு நிறுவனம் தொடக்க விழா

போபர்ஸ் பீரங்கி ஊழல் தொடங்கி, கார்கில் சவப்பெட்டி ஊழல், சமீபத்திய ரஃபேல் விமான ஊழல் வரை மேற்கத்திய கார்ப்பரேட்டுகளுடனான இந்த ஒப்பந்தங்களில் நடைபெறும் லஞ்ச ஊழல் முறைகேடுகள் பற்றிய விபரங்கள் ஆளும் வர்க்கங்களுக்கிடையேயான மோதலின் காரணமாக அவ்வப்போது வெளிவருகின்றன. தற்போது வெளியாகியிருக்கும் ரஃபேல் விமான ஊழல் பற்றி சுருக்கமாக தெரிந்து கொள்வது, ஏன் இராணுவத்துக்கு “தேசப்பாதுகாப்பு” என்ற பெயரில் இவ்வளவு பணம் ஒதுக்கப்படுகிறது என்று புரிந்து கொள்ள உதவும்.

2012-ம் ஆண்டு பிரான்சின் தஸ்ஸால்ட் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி 126 நவீன ரக போர்விமானங்களை (18 விமானங்கள் பறக்கும் நிலையில்) அன்றைய மதிப்பில் சுமார் ரூ 54,000 கோடி செலவில் கொள்முதல் செய்வது, 108விமானங்களை இந்திய அரசின் HAL (இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட்) நிறுவனத்துடன் சேர்ந்து இந்தியாவிலேயே தயாரிப்பது, தொழில்நுட்ப பரிமாற்றம் ஆகியவை அடக்கம்.

ஆனால், மோடி ஆட்சிக்கு வந்த பிறகு போட்ட புதிய ஒப்பந்தத்தின்படி, 36 விமானங்களை ஏறத்தாழ ரூ 60,000 கோடி கொடுத்து வாங்க வேண்டும், தொழில்நுட்ப பரிமாற்றம் கிடையாது. முக்கியமாக HAL நிறுவனத்துடன் சேர்ந்து இந்தியாவில் விமானங்களைத் தயாரிக்க வேண்டும் என்பது மாற்றப்பட்டு, அனில் அம்பானி புதிதாகத் திறந்த ரிலையன்ஸ் டிபென்ஸ் லிமிடெட் மூலமாக விமானங்களை சப்ளை செய்ய வேண்டும். ஒரு விமானத்தின் விலை ரூ 700 கோடியிலிருந்து ரூ 1600 கோடியாக இரண்டு மடங்கிற்கும் மேல் உயர்த்தப்பட்டிருக்கிறது, HAL நிறுவனத்திடம் இருந்து ரிலையன்சுக்கு ஒப்பந்தம் மாற்றப்பட்டிருக்கிறது என்பவை இதில் கவனிக்க வேண்டிய விசயங்கள்.

படிக்க:
ரஃபேல் ஊழல் : வாய் திறக்காத மோடியின் கருத்தே மெக்ரானின் கருத்தாம் !
ரஃபேல் விமானம் : மூட்டைப் பூச்சி மிசின் தயாரிக்க அம்பானிக்கு அள்ளிக் கொடுக்கும் மோடி

இதில்தான் ரூ 30,000கோடிக்கும் மேல் ஊழல் நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகளும் யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்ட முன்னாள் பா.ஜ.க தலைவர்களும் கூறுகின்றனர். ஒப்பந்த விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க மறுக்கும் மோடி அரசு, குற்றச்சாட்டுகளுக்கு எந்த பதிலும் கூறாமல் இதைப்பற்றி கேள்வி கேட்பவர்கள் தேசத்தின் பாதுகாப்பைக் கேள்விக்குள்ளாக்குகின்றனர் என்று பிரச்சாரம் செய்து வருகிறது.

பொதுத்துறை நிறுவனத்திடமிருந்து வாய்ப்பை பறித்து அம்பானிக்கு கொடுத்து விட்டீர்களே என்ற குற்றச்சாட்டுக்கு பதிலாக, அம்பானிக்கு மட்டுமில்லை 70 தனியார் நிறுவனங்களுக்கு காண்டிராக்ட் கொடுக்கப்பட உள்ளது என்று பதில் சொல்கிறார் மோடியின் பாதுகாப்புத் துறை துணை அமைச்சர் எம்.ஜே.அக்பர். அதாவது, பொதுத்துறையில் வேலை வாய்ப்பை பலி கொடுத்து விட்டு தனியார் கார்ப்பரேட்டுகள் பையில் நமது வரிப்பணத்தை கொண்டு சேர்ப்பதுதான் தங்களது தேச பக்தியின் யோக்கியதை என்று வெளிப்படையாகவே அறிவிக்கிறார்கள்.

மோடி – ஹாலந்தே

“காந்தி அவர்களே, எங்களுக்கு தேசம் என்ற ஒன்றே இல்லாத நிலையில், தேசபக்தியைப் பற்றி எப்படி பேச முடியும்?” என்பதுதான் அம்பேத்கர், தேசபக்தி குறித்த காந்தியின் கேள்விக்கு அளித்த பதில். தேச பாதுகாப்பு என்ற பெயரில் ஊட்டி வளர்க்கப்படும் ராணுவம் என்பது உண்மையில் சொத்துடைமை வர்க்கங்களின் நலனை பாதுகாப்பதற்கான நிறுவனம்தான். இந்திய ஆளும் வர்க்கங்களுக்கும், பாகிஸ்தான் அல்லது சீன ஆளும் வர்க்கங்களுக்கும் இடையேதான் பகையும் போட்டியும் நிலவுகிறது. ஆனால், போரில் பலியிடப்படுவது உழைக்கும் வர்க்கம், ராணுவத்துக்கு செலவிடப்படுவது உழைக்கும் மக்களின் வரிப்பணம்.

ஒவ்வொரு நாட்டு முதலாளி வர்க்கமும் அண்டை நாடுகளை எதிரிகளாகக் காட்டி, தீவிரவாதிகள் என்று அச்சுறுத்தி தேசபக்தி என்ற திரையிட்டு தங்களை மறைத்துக் கொள்கின்றன. உண்மையில் உழைக்கும் மக்களுக்கு எதிரிகளாக இருப்பது கார்ப்பரேட் முதலாளிகளும் அவர்களைப் பாதுகாக்கும் அரசுகளும்தான்.

இந்தியாவை ஆளும் கட்சிகளைப் பொறுத்தவரை டாடா, அம்பானி, அதானி உள்ளிட்ட தரகு முதலாளிகள்தான் தேசம், அவர்களின் நலனே தேசத்தின் நலன், அவர்களின் கொள்ளையை உறுதிப்படுத்துவதே தேசப்பாதுகாப்பு. தேசம், தேசியம், தேசபக்தி அனைத்தும் முதலாளிகளும் ஆளும்வர்க்கமும் மக்களுக்கெதிரான தங்களுடைய சுரண்டலை மறைப்பதற்கு போட்டுக்கொள்ளும் திரைகள்.

முதலாளிகளின் சொத்துக்களைப் பாதுகாப்பதற்காகத்தான் ராணுவம் இருக்கிறது என்றால், இப்போது அந்த ராணுவத்திற்காக செலவிடப்படும் வரிப்பணத்திலும் கைநனைத்து லாபமீட்டுகிறது, முதலாளி வர்க்கம்.

இதற்கும் இந்தியாவுக்கு முன்னோடி அமெரிக்காதான். அமெரிக்காவில் அரசாங்கப் பதவிகளில் ஆயுதத் தளவாடக் கம்பெனிகளின் முதலாளிகள் நேரடியாக பங்குபெறுகின்றனர். ஜார்ஜ் புஷ் ஆட்சிக் காலத்தில் அமெரிக்க துணை ஜனாதிபதியாக இருந்த டிக் சென்னி பதவி ஏற்பதற்கு முன்பு ஹல்லிபர்டன் என்ற எண்ணெய் கம்பெனியின் CEO-ஆக இருந்தார். 2000-ம் ஆண்டுக்குப் பிறகு நடந்த ஈராக் போரின் போது அமெரிக்க ராணுவத்தின் முக்கிய ஒப்பந்தங்கள், LOGCAP என்னும் மறுசீரமைப்புப் பணிகள் உட்பட ஹல்லிபர்டன் நிறுவனத்திற்கும் அதன் துணை நிறுவனங்களுக்கும் (KBR) வழங்கப்பட்டு அமெரிக்கப் பொதுமக்களின் இலட்சக்கணக்கான டாலர் அள்ளி கொடுக்கப்பட்டது.

அமெரிக்க இராணுவத்தில் சண்டையிட தனியார் நிறுவனங்கள் ஆட்களை சப்ளை செய்வது அதிகரித்து 2003-ல் 2.4 இராணுவ வீரர்களுக்கு ஒருவர் என்ற விகிதத்தில் ஈராக் போரில் அமெரிக்க இராணுவ வீரர்களை விட தனியார் நிறுவனங்களின் ஆட்கள் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்தியாவைப் பொறுத்தவரையில், சொத்துடைமை வர்க்கங்களின் நலனுக்காக பராமரிக்கப்படும் ராணுவ செலவில், முதலாளிகள் லாபம் ஈட்டும் போது, அதிகார வர்க்க தரகர்கள் ஊழல் செய்து சம்பாதிக்கிறார்கள்.

உண்மையில் நாட்டைக் காக்க வேண்டும் என்ற தேசபக்தி புரட்சிகர கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்கும் தொழிலாளர், விவசாயிகள் உள்ளிட்ட உழைக்கும் வர்க்கத்திற்கே உரியது. இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரின் நாஜிப்படையை சோவியத் உழைக்கும் மக்கள் ஒன்று திரண்டு வீழ்த்தியதன் மூலம் தங்கள் தேசத்தை மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகையும் முதலாளித்துவ வேட்டையிலிருந்து காத்தனர். அதுபோல அனைத்துப் பிரிவு உழைக்கும் மக்களும் புரட்சிகர இயக்கங்களில் ஒன்று திரள்வதன் மூலம் தான் முதலாளி வர்க்கத்தை அம்பலப்படுத்தி வீழ்த்த முடியும்; நமது நாட்டையும், நாட்டு மக்களையும் காப்பாற்ற முடியும்.

செல்வம்
புதிய தொழிலாளி செப்டம்பர் 2018
நன்றி: new-democrats.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க