பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு உருளைகளின் வரலாறு காணாத விலையேற்றத்தின் காரணமாக மக்களிடையே ஏற்பட்டிருக்கும் கடும் அதிருப்தியை சமாளிப்பது எப்படி என தெரியாமல் வாய்க்கு வந்த பொய்யையெல்லம் அள்ளி வீசி வருகிறது பா.ஜ க. அரசு.

விலையுயர்வை குறைப்பதற்கான சாத்தியமில்லை என்று ஜேட்லியும், விலையுயர்வுக்கு காரணம் அமெரிக்காதான் என்று அமித்ஷாவும் மாறி மாறி அறிக்கை விடுகிறார்கள். இவர்கள் எத்தனை அறிக்கை விட்டாலும், என்ன விளக்கம் கொடுத்தாலும் மக்கள் இவர்களை நம்புவதில்லை.

அதேசமயம் இந்த விலையேற்றத்தையும் வேறு வழிதெரியாமல் சுமந்து கொண்டு அன்றாட பணியின் பொருட்டு மூலைமுடுக்கெங்கும் பயணிக்கிறார்கள். இந்த விலையேற்றம் எங்கள் முதுகின் மேல் வந்திறங்கிய கூடுதல் சுமை என்பதை விவரிக்கிறார்கள் சென்னை கோயம்பேட்டின் ஷேர் ஆட்டோ ஓட்டுனர்கள் சுரேஷ், ஜான்சன், சேகர்.

ஜான்சன் (ஓட்டுனர் சீட்டில் இருப்பவர்), சுரேஷ் (நீல சட்டை அணிந்திருப்பவர்)

“நாங்க பதினைந்து வருஷத்துக்கு மேல ஆட்டோ ஓட்டுறோம். டீசல் விலை 38 ரூபாய் இருக்கும்போது வண்டி ஓட்ட ஆரம்பிச்சது. இப்ப டீசல் 78 ரூபாய்க்கு வந்து நிக்குது. ஆனா எங்க டிக்கெட் ரேட் மட்டும் இன்னும் ஏறல. ஒரு ஸ்டாப்புன்னா ஐந்து ரூபா. அதுக்கப்புறம் பத்து, இருபதுன்னுதான் இப்ப வரைக்கும் இருக்கு. இன்னும் கூடுதலா விலையை ஏத்தினா ஜனங்க ஏறாது.

இப்படி ஓட்டியே ஒரு நாளைக்கு 1200, 1500 பாக்குறதுக்குள்ள எங்களுக்கு மூச்சி முட்டிடும். அதுல 500 ரூபா வாடகை.. 500 ரூபா டீசலு, பெட்ரோல் ஆட்டோன்னா இன்னும் கூட ஆகும். இந்த செலவு போக கையில 200,300 தான் நிக்கும்.

ஜாக்பாட்டா வாரத்துல இரண்டு நாள் 2,000 ரூபா கிடைக்கும். அதை வச்சிக்கினு கலக்சன் வராத நாளை ஓட்டனும். அப்படி இல்லையா, காலைல ஆறு மணிக்கு எடுத்தா சாயங்காலம் ஆறு மணிக்கு நிறுத்துற வண்டிய நைட்டு ஒன்பது, பத்து மணி வரைக்கும் ஓட்டுவோம். அப்படி கூடுதலா ஒழச்சா 300 லிருந்து 500 ரூபா வரைக்கும்  வரும். அப்பதான் வீட்டுக்கு கொடுக்க முடியும்.

ஒரு நாளைக்கு கொறஞ்சது 300 ரூபா கொடுக்கனும் பொண்டாட்டி கிட்ட. இல்லனா வீட்டுல சண்ட வரும். தண்டலுக்கு தெனமும் 200 ரூபா எடுத்து வைக்கனும். எங்க செலவு பாக்கு, சிகரெட்டுன்னு கொறஞ்சது 100 ரூபா ஆகும்.  இதையெல்லாம் சாமளிக்கனும்னா, லீவு போடாம வண்டி ஓட்டனும்.

நாங்க சொந்த வண்டி ஓட்டுறோம். இதுவே வாடகை வண்டி ஓட்டுறவங்களுக்கு பெரும்பாடு. வண்டி நிக்காம ஓடிகிட்டே இருந்தாத்தான் சமாளிக்க முடியும். இல்லனா வர காச வாடகை கொடுத்துட்டு சும்மா பேருக்கு வேலை பார்த்துட்டு போக வேண்டியதுதான்.

இதெல்லாம் அன்னைக்கு பொழப்புக்குத்தான். இதுபோக வண்டிக்கு டியூவ் (தவணை)கட்றதுக்கு, புள்ளைங்க படிக்கிற பீசு, சொந்தகாரங்க விஷேஷம் இதுக்கெல்லாம் தண்டல்தான். தண்டல் – வட்டி வாங்காத ஆட்டோகாரனே கெடையாது. அடிக்கடி தண்டல் வாங்குவோம். அதுதான் எங்களுக்கு இருக்க ஒரே விமோசனம்.

அது என்ன தண்டல்னு கேக்குறிங்களா…..?

இப்ப இருபதாயிரம் தண்டல் வாங்கினா 17,000 நம்ம கையில கொடுப்பன். நாம 20,000 க்கு  டெய்லியும் 200 ரூபா 100 நாள் கட்டணும். இது இல்லாத திடீர்னு பசங்களுக்கு உடம்பு சரியில்லனா வட்டிக்கு தான் வாங்குவோம். அதுவும் ஸ்பீடு வட்டி.

அதாவது, ஆயிரம் ரூபா நான் வட்டிக்கு வாங்குறேன்னு வையுங்க, அந்த அசல் பணம் ஆயிரபா கொடுக்கிர வரைக்கும், எனக்கு பணம் கொடுக்கிறவருக்கு நான் தினமும் நூறு ரூபா கொடுக்கனும். அஞ்சி நாள்னா ஐநூற், பத்து நாள்னா ஆயிரம்னு… போயிட்டே இருக்கும்.

அப்புறம் இன்னொரு கொடும இருக்கு…… கலக்சன் இல்லாத போது, இல்ல வந்த காசுக்கு வேற முக்கியமான செலவு வந்து இரண்டு மூனு நாள் வண்டி வாடகை கொடுக்க முடியாம போகும். அதுக்கும் வட்டி போட்டு தான் வாடகைய கொடுக்கனும். இப்படி வட்டி கொடுத்தே எங்க வாழ்க்கை அழிஞ்சி போயிடும்” என்கிறார் ஜான்சன்.

இதுக்கே டயர்ட் ஆனா எப்படி… இன்னும் இருக்கு என்று கிண்டால சொல்லிவிட்டு ஆரம்பிக்கிறார் சேகர், “சொந்த வண்டி ஓட்டினாலும் ஒரு முன்னேற்றமும் இல்ல. இந்த வண்டிக்கு எப்.சி பன்ன 30,000 இல்லாம நடக்காது. டிங்கரிங், பெயிண்டிங், ஆயில் சர்விஸ், டயர் மாத்துறது இப்படி செலவு இழுத்துக்குனே போவும். அறுபது ரூபா வித்த ஆயில் இப்ப  300 ரூபா விக்குது.  இன்னும் விலைவாசி எங்க போயி நிக்கும்னு தெரியல.

சேகர்

மாசம் முப்பது நாள், வருஷம் 365 நாள் நாங்க உழைக்கிறோம். ஆனாலும் கடன்ல இருந்து எங்களால மீள முடியல. உடம்பு சரியில்லானக் கூட நாங்க மாத்திரை போட்டுனு வண்டி ஓட்டுவோம். சொந்தகாரங்க யார்னா செத்தாதான் அரை நாள் லீவு போடுவோம். இப்படி உழச்சாலும், குழந்தைகளுக்கு அதுங்க கேக்குற நொறுக்கு தீனிகூட வாங்கி கொடுக்க முடியல. மிக்சர், கெஜரா, காராபூந்தின்னு எதாவது ஒன்னு கேட்பாங்க. பல நாள் நாங்க வெறும் கையோட தான் போயி நிப்போம்.

வாரத்துக்கு ஒரு நாள் கவிச்சி…… மீனோ, கோழியோ.. எதாவது வாங்கி போடலாம்னு நெனப்போம்…… பல நாள் அதுவும் முடியாது. இதனாலயே படுத்தா தூக்கம் வராது. ஒரு நாளைக்கு ஐந்து மணிநேரம் துங்குறதே அதிகம். இப்ப விலைவாசி உயர்வால சுத்தமா தூக்கம் இல்ல.

டீசல் விலையுயர்வுக்கு முன்னாடி 12 மணி நேரம் உழச்சோம். இப்ப 18 மணி நேரம் உழைக்கிறோம். அதிகமா உழைக்கிறதால அதிகமா பணம் வரும்னு நெனக்க வேணாம். பழைய வசூலுக்கே இப்ப ரெண்டு மடங்கு உழைக்க வேண்டியதா இருக்கு.

இப்ப நாங்க இரண்டு முறையில வண்டி ஓட்டிட்டு இருக்கோம். ஒன்னு லைன்ல போறோம். இன்னொன்னு டிரிப் அடிக்கிறோம். காலையில மாலையில ஆபிஸ் டைம்னு லைன்ல போறோம். விடிய காலை, மதிய நேரத்துல லைன்ல ஆளு இல்லாத போது ட்ரிப்பு அடிக்கிறோம்.

உடம்புக்கு ஓய்வு ஒழிச்சல் இல்ல. உடம்பு புண்ணா நோவுது. திரும்பவும்  வேலை செய்யனும்னா பாக்கு, சிகரெட்னு புடிக்கனும். எப்பனா தண்ணி அடிக்கனும். அந்த செலவு பன்றதா? பசங்க கேக்குறத வாங்கி கொடுக்கிறதா? தலையே வெடிச்சிடும் போல இருக்கு” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே  அந்தப் பக்கம் கடந்து சென்ற டாடா மேஜிக்கை காட்டி, “இந்த வெள்ள வண்டியால பொழப்பு போயிடுச்சி” என்றார்.

அங்கிருந்து அமைதியாக விடைபெறும் தருவாயில், சற்று தொலைவில்  சவாரிக்காக காத்திருந்தார் ஒரு டாடா மேஜிக் வண்டியின் ஓட்டுநரும், உரிமையாளருமான  சரவணன்.

“சார்……. நாங்க சொகுசு கார் ஓட்டுறோம்னு ஆட்டோகாரங்க எங்கள பார்த்தா எறிஞ்சி விழுறாங்க. எங்களால தான் அவுங்களுக்கு டிக்கெட் ஏறலன்னு. ஆனா எங்க லட்சணம் அதுக்கு மேல இருக்கு. நான் சொந்த வண்டிதான் வச்சிருக்கேன், வெத்தல, பாக்கு, பீடின்னு எந்த செலவும் செய்ய மாட்டேன். ஆனாலும் கடன்…. கடன்…. ஊரை சுத்தி கடன்..!

மாதிரிப் படம்

பெரிய வண்டி பெரிய செலவு. வருஷத்துக்கு எப்.சி பன்ன 80 ஆயிரம் இல்லாம வேலை நடக்காது. இன்சுரன்ஸ் 25,000, ரோடு டாக்ஸ் 12,000, டிங்கரிங் 6000, பெயிண்டிங் 6000, இஞ்சின் செலவு 5000, ஆர்.டி.ஓ – பிரேக் இன்ஸ்பெக்டர் செலவு 2500, ஸ்டிக்கர் 1500, பத்து நாள் வேலை இல்லாம அலையிறது, அதுக்காக கடன் வாங்குறதுன்னு ஒரு லட்சம் வரைக்கும் செலவு பன்னாதான் ரோட்டுல வண்டி ஓடும்.

சரி வண்டி ஓடினா இதையெல்லாம் சம்பாதிச்சிடலாமேன்னு நீங்க நெனக்கலாம். அதுதான் தப்பு… இந்த கடனை அடைக்கதான் வண்டியே ஓடும். அதுக்கப்புறம்தான் நம்ம செலவு.  ஒரு நாளைக்கு இரண்டாயிரம் சம்பாதிச்சா அது நல்ல நாள்னு அர்த்தம். அதுவும் 200 கிலோ மீட்டரு ஓட்டினா தான் கிடைக்கும். அதுக்கு  800 ரூபா டீசல் போடனும்.

டிராபிக்குல 15 கிலோ மீட்டர் போறதுக்கு ஒன்னரை மணி நேரம் ஆகும். கை எல்லாம் உட்டு போயி, கண்ணு பூத்து போயிடும். ஒவ்வொரு டிரிப்புக்கும் இறங்கி டீ, காபி சாப்பிட்டா தான் ஒரு தெம்பு வரும். இதுல சிகரெட், பான்பராக் போடுறவன் கதை மோசம். எனக்கு அந்த பழக்கம் இல்லாததால 700, 800 ரூபா நிக்கும். இல்லனா முதலுக்கு மோசமாயிடும்.

இதுல, டீசல் விலைய ஒரு நாளைக்கு ஒன்பது வாட்டி ஏத்துறானுங்க. நாங்க ஜனங்க கிட்ட இதை எப்படி சொல்லுறதுனு தெரியல. நாங்க இரண்டு ரூபா ஏத்தினாலும் ஜனங்க எங்கள புடிபுடின்னு புடிச்சிடுறாங்க. என்ன பன்றதுன்னு வழி தெரியல. இந்த தொழிலை விட்டு நாங்க இனிமே எங்க போறது? அத நெனச்சாதான் கலக்கமா இருக்கு!

-வினவு களச் செய்தியாளர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க