privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்ஆட்டோ ஓட்டுனர்கள் கிள்ளுக்கீரைகளா - கருத்தரங்கம்

ஆட்டோ ஓட்டுனர்கள் கிள்ளுக்கீரைகளா – கருத்தரங்கம்

-

“ஆட்டோ ஓட்டுனர்களை கிள்ளுக்கீரைகளாக கருதும் அதிகார வர்க்கத்தினரை எதிர்கொள்வது எப்படி” என்ற தலைப்பில் 28.09.2014 அன்று மாலை திருச்சி உறையூரில் கைத்தறி நெசவாளர் மண்டபத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது. கூட்டத்தினை ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்டத் தலைவர் தோழர் கோபி தலைமை தாங்கி நடத்தினார். கூட்டத்தில் மனித உரிமை பாதுகாப்பு மைய திருச்சி மாவட்ட தலைவர் தோழர் காவேரிநாடான், தஞ்சை வழக்குரைஞர் சதீஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்க மாவட்ட பொருளாளர் தோழர் செல்வராஜ் நன்றியுரை கூறினார்.

இக்கூட்டத்தில், “மக்களை போதையில் மூழ்கடிக்கும் டாஸ்மாக்கை இழுத்து மூடு” என்ற தலைப்பில் பெண்கள் விடுதலை முன்னணி நாடகமும், மக்கள் கலை இலக்கியக் கழக மையக் கலைக்குழுவினரின் புரட்சிகர பாடல்களும் இடம்பெற்றன. இக்கூட்டத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள், தோழமை அரங்கினர், பெண்கள் உட்பட 150-க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் தலைமையுரையில் தோழர் கோபி பேசியது:

“ஆட்டோ டிரைவர் என்றால் அதிகார வர்க்கம், கேவலமாக பார்ப்பதும், இழிவுபடுத்துவதும் தொடர்ச்சியாக உள்ளது. முன்னாள் காவல்துறை ஆணையர் கருணாசாகர், இந்நாள் மாநகராட்சி ஆணையர் தண்டபாணி, ஆர்.டி.ஓ, டி.டி.சி போன்றோர் அனைவருமே தொழிலாளர்களுக்கான மரியாதையோ, அவர்களுக்கான உரிமையையோ கொடுப்பதில்லை. தமது எடுபிடிகள் போல நடத்துகின்றனர்.

மாநகராட்சி ஆணையர் ஆட்டோவை ஒழுங்குபடுத்தப் போவதாக தடாலடி அறிவிப்புகள் செய்து ஸ்டாண்டுகளை கலைப்பது, சங்கங்களை கலைப்பது, குழுவாக பிரிப்பது, சுய உதவிக்குழு மேற்பார்வையில் செயல்பட வைப்பது என தன்னிச்சையாகவும் சர்வாதிகாரியை போலவும் நடந்து கொள்கிறார். இது சங்கங்களையும் தொழிலாளர்களின் ஜனநாயக உரிமையையும் பறிக்கும் செயலாகும்.

இதனை எதிர்கொள்வதும் இந்த அடாவடித்தனத்திற்கு எதிராக போராடுவதும், நமது ஜனநாயக உரிமையாகும். இதுபோன்ற எண்ணற்ற வகையில் டிரைவர்கள் அன்றாடப் பிரச்சனைகளை சந்திக்கின்றனர். தவறு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வைக்க உறுதியாக போராடுவதின் மூலமே இத்தகைய மக்கள் விரோத செயலை தடுக்க முடியும்”

வழக்கறிஞர் சதீஷ், தஞ்சை பேசியதாவது:

“ஒவ்வொரு இந்திய குடிமக்களுக்கும் சமத்துவ உரிமை, சம உரிமை, சுதந்திர உரிமை, பண்பாட்டு உரிமை, பேச்சுரிமை, நடமாடும் உரிமை, கல்வி கற்கும் உரிமை, சமயம் சார்ந்த உரிமை, சங்கம் வைக்கும் உரிமை, தொழில் செய்யும் உரிமை உட்பட ஏராளமான உரிமைகள் சட்டப்புத்தகத்தில் உள்ளது. ஆனால் இவை நடைமுறையில் இல்லை. உதாரணமாக பால்தாக்கரே இறப்பினை ஒட்டி நடந்த கலவரம் தொடர்பாக ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்த மாணவி, அதை லைக்  செய்த மாணவி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட போது, பேச்சு உரிமை லட்சணத்தை அன்று நாடே பார்த்தது.

நடமாடும் உரிமை: 144 தடை உத்திரவு இல்லாத காலங்களிலும் இரவு 11 மணிக்குமேல் மனிதர்கள் தனியாக நடமாட முடியாது. சந்தேகம் என்னும் பெயரில் காவல்துறையினர் கொடுக்கும் தொல்லைகள் ஏராளம். சமீபத்தில் தஞ்சையில் ஆட்டோ டிரைவர் தமது வண்டி பஞ்சர் ஆனதால், இரவில் நடந்து சென்று ஸ்பேனர் வாங்கி வரும் வழியில் அவரை விசாரணை என்ற பெயரில் இரவு முழுவதும் அடைத்து வைத்து மறுநாள் காலை விடுவித்தனர். இது நடமாடும் உரிமையும் பறிபோகிறது என்பதை வெளிப்படுத்துகிறது.

சுதந்திர உரிமை, தொழில் செய்யும் உரிமை என எதுவும் இல்லை. கோடீஸ்வரர்கள் பல நூறு கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்தாலும் அவர்களை பாதுகாக்கும் அரசு மேற்கண்ட மோசடி பேர்வழிகளின் பெயரைக் கூட அரசோ, வங்கிகளோ அறிவிப்பதில்லை. ஆனால், அமைப்பு சாரா தொழிலாளர்களான ஆட்டோ, தரைக்கடை, தள்ளுவண்டி வியாபாரிகள் உள்ளிட்டோரை தொழில் செய்வதற்கு எந்தவித அடிப்படை உரிமையும் தராமல் விரட்டியடிக்கின்றனர்.

கல்வி கற்கும் உரிமை இன்று முழுவதும் பறிக்கப்பட்டு கல்வி கடைச் சரக்காக மாற்றப்பட்டுள்ளது. சங்கம் வைக்கும் உரிமை பறிக்கப்பட்டுள்ளது. தொழிற்சங்கத்தினரையும், நிர்வாகிகளையும், சமூக விரோதிகள் போல பார்க்கும் நிலைமை அதிகரித்து வருகின்றது. நாட்டில் முதலமைச்சர், பிரதமராவதற்கு இந்நாட்டில் கல்வித் தகுதி இல்லை. ஆனால், 30 ஆண்டுகள் ஆட்டோ ஓட்டிய ஆட்டோ டிரைவர்கள் இனிமேலும் தமது பணியை தொடர 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அரசு நிர்ப்பந்திக்கிறது.

சமயம் சார்ந்த உரிமை இன்று இல்லை. தில்லை நடராஜர் கோவில் வழக்கு முதல் அனைத்து சாதி அர்ச்சகர் ஆகலாம் என்ற உரிமை வரை இன்று பறிக்கப்பட்டு சாதிக்கொரு நீதி, சமயத்திற்கு ஒரு நீதி நீடித்து வருகிறது.

மக்களுக்கான இத்தகைய உரிமைகள் எல்லாம் ஏட்டளவு மட்டுமே இருந்து வருகிறது, தமிழகத்தில் 2.5 லட்சத்திற்கு மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் எந்தவிதமான உரிமையும் இல்லாமல் இந்த அரசினால் சமூக விரோதிகளை போல வஞ்சிக்கப்பட்டு வருகின்றனர். மக்கள் மத்தியில் இவர்கள் மீதான தவறான கண்ணோட்டத்தையும் ஏற்படுத்தி வருகின்றனர். இத்தகைய மனித உரிமை மீறல்களுக்கெதிராக தொடர்ச்சியாக கேள்வி எழுப்புவதும், எதிர்த்து போராட முன்வருவதும், புரட்சிகர சங்கமாக அணிதிரள்வதன் மூலமாகவே இந்த அநீதிகளை எதிர் கொள்ள முடியும் என சூளுரைத்தார்.

மனித உரிமை பாதுகாப்பு மையம், திருச்சி மாவட்டத் தலைவர் தோழர் காவேரி நாடான் பேசியதின் சுருக்கம்;

“ஆட்டோ ஓட்டுநர்களை கிள்ளுக்கீரையாக கருதும் அதிகார வர்க்கத்தினரை எதிர்கொள்வது எப்படி?” புரட்சிகர உணர்வு கொண்ட சங்கத்தால் மட்டுமே இத்தகைய தலைப்பில் கூட்டம் நடத்த முடியும். காவல்துறை ஆணையர் கருணாசாகரின் அடாவடித்தனத்தை அடக்கிய சங்கம் இது. நிச்சயம் மாநகராட்சி ஆணையர் தண்டபாணியின் அடாவடி செயலையும் எதிர்கொண்டு முறியடிப்போம். சங்கம் வைக்கும் உரிமை தொழில் செய்யும் உரிமை என அனைத்தையும் பறிப்பது, சுய உதவிக் குழு போன்ற தொண்டு நிறுவனத்தின் கீழ் ஆட்டோ ஓட்டுநர்களை இணைக்க முயற்சிப்பது, எந்தவித ஒழுங்குமுறைக்கும் ஆணையர் கட்டுப்படாமல் தன்னிச்சையாக செயல்படுவது கண்டிக்கதக்கது.

சுய உதவிக்குழுவினால் பாதிக்கப்படும் பெண்கள் இன்று ஏராளம். இவர்களின் அராஜகத்தால் தற்கொலை செய்வது முதல் மன உளைச்சலுக்கு உள்ளாகுபவர்கள் வரை பெருகி வருகின்றனர். இப்படிப்பட்ட நவீன கந்து வட்டி கும்பலான சுய உதவி குழுவினரின் பொறுப்பில் ஆயிரக்கணக்கான ஆட்டோ ஓட்டுநர்களை இணைப்பது என்பது அயோக்கியத்தனமானது.

போக்குவரத்தை ஒழுங்குபடுத்த கிளம்பியுள்ள இந்த ஒழுக்க சீலர் ஆணையர், சாரதாஸ், சென்னை சில்க், மங்கள் & மங்கள் உள்ளிட்ட பெரும் வணிக நிறுவனங்கள் பார்க்கிங் வசதி இல்லாமல் கட்டிடங்கள் கட்டி ரோட்டையே ஆக்கிரமித்து இருப்பதின் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? சென்னை சில்க் பார்க்கிங்கிற்காக ரோட்டின் ஒரு பகுதியை ஒதுக்கி தரப்பட்டுள்ளது. என்.எஸ்.பி ரோடு முழுவதும் சாரதாஸ் வளைத்து போட்டு வானுயர்ந்த கட்டிடம் கட்டியுள்ளது. இதனை ஏன் ஆணையர் தடுத்து நிறுத்தவில்லை.

மத்தியப் பேருந்து நிலையம் முழுவதும் ஆம்னி பேருந்துகள் ஆக்கிரமித்துள்ளன. அரசு நிர்ணயித்த தொகையை விட பல மடங்கு கட்டணம் வசூலிக்கின்றனர். அரசு பேருந்திற்கு போகும் பயணிகளை கட்டாயப்படுத்தி தனியார் பேருந்திற்கு அழைத்து செல்கின்றனர். ஏன் ஆணையர் இதனை கண்டு கொள்ளவில்லை.

என்.டி.எல் உள்ளிட்ட கால்டாக்சிகள் திருச்சியில் ஓட அனுமதி இல்லை. ஆனால், தமிழகம் முழுவதும் ஆக்கிரமித்துள்ளனர். பகிரங்கமாக விளம்பரம் செய்து சட்டவிரோதமாக தொழில் செய்து வருகின்றனர். அரசும், ஆணையரும் இதை வேடிக்கை பார்ப்பது ஏன்?

திருச்சி அரியமங்கலம் குப்பைக் கிடங்கு, காட்டுத்தீயை போல அவ்வப்போது எரிந்து கொண்டிருக்கிறது. இதனை ஒழுங்குபடுத்த துப்பில்லாத ஆணையர் ஆட்டோ டிரைவர்களை முறைப்படுத்த கிளம்பியுள்ளது கேலிக்கூத்தானது. ஆட்டோ டிரைவர் என்றால், இவர்களுக்கு கிள்ளுக்கீரையாகவே உள்ளது. ஆர்.டி.ஓ, போலீஸ், மாநகராட்சியினர் ஓட ஓட விரட்டுகின்றனர். இவர்களை எதிர்த்து குரல் கொடுப்பது, தமது உரிமைக்காக போராடுவது நமது சங்கம் மட்டுமே, பெட்ரோல் டீசல் விலையை அவ்வப்போது ஏற்றி வரும் தனியார் முதலாளிகளை தடுக்காத இவர்கள் ஆட்டோ டிரைவர்கள் அதிகப்படியாக கட்டணம் வசூலிக்கின்றனர் என பேசுவது பித்தலாட்டமானது.

இத்தகைய அதிகார வர்க்கத்தினருடன் இணைந்து நுகர்வோர் அமைப்பினரும் ஆட்டோ டிரைவருக்கு எதிரான அவதூறுகளை பரப்பி வருகின்றனர். இத்தகைய நுகர்வோர் அமைப்பினர் பணக்காரர்கள் நடுத்தர வர்க்கத்தினரின் 10 பைசா பிரச்சனைக்காக நீதிமன்றம் வரை சென்று வாதிடும் சூரப்புலிகள், கோடிக்கணக்கான மக்கள் வாங்கும் ரேசன் அரிசி, சுகாதாரமற்ற தண்ணீர், பொதுக்கழிப்பிடங்கள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும், உணவுப் பொருட்களும் அரசினாலும் மாநகராட்சியினாலும், அசுத்தமானவைகளாகவும் பயன்படுத்த முடியாதவைகளாகவும் உள்ளதை எதிர்த்து இந்த சட்ட வாத குழுக்கள் தமது சுண்டு விரலைக்கூட அசைத்ததில்லை. ஏன் என்றால், இவர்கள் அதிகார வர்க்கத்தின் எடுபிடிகள் என்பதே உண்மையாகும். சமீபத்தில் திருச்சியில் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தியது. இதில் பங்கேற்ற நுகர்வோர் அமைப்பினர் விவசாயிகள் மின்சாரத்தை திருடுகின்றனர் என இழிவுபடுத்தினர். இதனை விவசாயிகளும், புரட்சிகர அமைப்பினரும், தகுந்த பதிலடி கொடுத்து காரி உமிழ்ந்தது ஊரறிந்த செய்தி.

ஆகவே, உழைக்கும் மக்களின் துயர் துடைக்க சட்டமோ அதிகார வர்க்கமோ, நுகர்வோர் அமைப்பினரோ, வரப்போவதில்லை. நமக்கான உரிமைகளில் நாம்தான் போராடி பெற வேண்டும். அநீதிகளை எதிர்த்து குரல் கொடுப்பதும், அதிகாரிகளின் அடாவடித்தனத்திற்கு எதிராக துணிச்சலுடன் போராடுவது இவற்றின் மூலமே நமது உரிமைகளை பெற முடியும். இன்றைய உலக மயமாக்கலின் சூழலில் உழைக்கும் மக்களின் உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு அவர்களை நகரத்தை விட்டு விரட்டி அடிப்பதும், அவர்களின் வாழ்வாதாரங்களை பறிப்பதும் இன்றைய கார்ப்பரேட் கொள்ளையர்களின் கொள்கைக்கு அடியாட்களாக வேலை செய்யும் இந்த அதிகார வர்க்கத்தினரிடம் கெஞ்சுவதினால் எந்தவித பயனும் இல்லை. இவர்களை எதிர்த்து உறுதியுடன் போராடுவதின் மூலமே நமது வாழ்க்கையை வாழ்வாதாரங்களை பாதுகாக்க முடியும் என பேசினார்.

ஆணையர் மேற்கண்ட அறிவிப்பை செய்து பல நாட்கள் ஆகியும், அமைதி காத்த சி.ஐ.டி.யு போன்ற அமைப்பினரும் இந்த கருத்தரங்கம் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக போராட முன் வந்துள்ளனர். நமது உறுப்பினர்களின் உரிமைக்காக மட்டுமல்லாமல் பிற சங்கத்தினரையும் தட்டி எழுப்பும் வகையில் இந்த கருத்தரங்கம் அமைந்தது குறிப்பிடத்தக்கது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

செய்தி:
ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்பு சங்கம்,
திருச்சி.

இணைப்பு:
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி-தமிழ்நாடு.
அழைக்க:9791692512.